14 பதற்றம்
14 பதற்றம்
மைதிலியின் முகம், புன்னகையுடன் மலர்ந்தது, ரோஜா பூவுடன் நிலவன் வந்த போது. அதை, ஆர்த்தியிடம் நீட்டி, அவளுக்கு ஏமாற்றம் அளித்தான் நிலவன். ஆனால் அவனது அடுத்த வார்த்தைகள், அவள் இழந்த புன்னகையை மீட்டுக் கொடுத்தது.
"ஹாப்பி மதர்ஸ் டே, ஆர்த்தி"
"எனக்கு மதர்ஸ் டே விஷஸா? ஏன்?" என்றாள் ஆர்த்தி.
"ஆமாம்... ஏன் உனக்கு மதர்ஸ் டே விஷஸ் சொல்றேனா, நம்ம எல்லாரும், ஃபர்ஸ்ட் நார்மல் டெலிவரி கேஸை அட்டென்ட் பண்ண அன்னைக்கு நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"
"என்ன சொன்னேன்?"
"நீ மறந்திருந்தா, உனக்கு நான் ஞாபகப்படுத்துறேன்"
அன்று நடந்ததை அவளுக்கு நினைவூட்டினான் நிலவன்.
அன்று...
அவர்கள் தங்களது முதல் சுகப்பிரசவ செயல்முறை படத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். யாழினியன், மகேந்திரன், மற்றும் கதிரவன் ஒரு குழுவிலும், ஆர்த்தியும், மைதிலியும் ஒரு குழுவிலும், நிலவன் வேறு குழுவிலும், வானதி மற்றும் ஒரு குழுவிலும் பிரிக்கப்பட்டு இருந்தார்கள்.
யாழினியன், மகேந்திரன் மற்றும் கதிரவன் மூவரும் முதல் குழுவில் இருந்ததால், ஏற்கனவே சென்று விட்டிருந்தார்கள். ஆர்த்தியும், மைதிலியும் தங்கள் முறைக்காக அழைக்கப்பட்டார்கள்.
முக கவசமும், கையுறையும் அணிந்து கொண்டு இருவரும் பிரசவ அறைக்குள் நுழைந்தார்கள். இது தான் முதல் முறை, குழந்தையை பெற்றெடுக்க, ஒரு தாய் படும் பாட்டை அவர்கள் நேரில் காண்பது. உலகத்தின் மிகக் கொடுமையான வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த அம்மாவை பார்த்த போது, அவர்களுக்கு கண்கள் கலங்கியது. அவர்கள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களது குழுவை வழிநடத்திய தலைமை மருத்துவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறி, அதை ஆரத்தியை செய்யுமாறு உத்தரவிட்டார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மெல்லிய கத்தியை பற்றிய ஆரத்தியின் கரம் நடுங்கியது. சரியாக குழந்தையின் தலை தென்படும் நேரம், அவள் அம்மாவின் சதையை கத்தியால் கிழித்துவிட்டு, குழந்தை சிரமமின்றி வெளியில் வர, வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவள் அப்படி செய்யும் போது, குழந்தைக்கு எந்த காயமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது மிக முக்கியம். ஏற்கனவே வலியால் கதறி துடித்துக் கொண்டிருக்கும் அந்த அம்மாவிற்கு மேலும் வலியை ஏற்படுத்த வேண்டியது, தவிர்க்க முடியாத ஒன்று. ஆர்த்தியின் கண்களில் கட்டிய கண்ணீர், அனைத்தையும் மங்கலாக காட்டியது. கண்களை கசக்கி பிழிந்து, கண்ணீரை ஓட விட்டு, பார்வையை தெளிவு படுத்திக் கொண்டு தயாரானாள். அம்மாவின் சதையை கிழித்து, வெளியே வந்து விழுந்த, அந்த குழந்தையை தன் கரங்களில் ஏந்தினாள். தன் அம்மாவின் ரத்தத்தை போர்வையாய் போர்த்திக் கொண்டிருந்த இளம் உயிரை பார்த்த போது அவள் மனம் கனத்துப் போனது. பத்து மாதம் அந்த குழந்தைக்கு உயிரூட்டி வளர்த்த, தொப்புள் கொடியை கத்தரித்து, குழந்தையை அம்மாவிடமிருந்து பிரித்தெடுத்தாள்.
அவ்வளவு நேரம் உயிர் போகும் அவஸ்தையில் கதறி கொண்டிருந்த அந்த அம்மா, குழந்தையை கண்டவுடன் அனைத்தையும் மறந்து கண்ணீருடன் புன்னகை புரிந்தார். அவரது உடலை துளைத்தெடுத்த அத்தனை வலியும் எங்கு தான் பறந்து சென்றதோ...! அவர் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்...!
அந்த பிரசவ அறையை விட்டு வெளியே வந்தார்கள் ஆர்த்தியும் மைதிலியும். இன்னும் கூட அவர்களது கண்கள், கண்ணீர் சிந்துவதை நிறுத்தவில்லை. வழக்கமாய் தங்கள் நண்பர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள் இருவரும்.
ஏற்கனவே அங்கு வந்துவிட்டிருந்த யாழினியன், மகேந்திரன் மற்றும் கதிரவனும், அவர்கள் முடித்துவிட்டு வந்த பிரசவத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"நார்மல் டெலிவரி இவ்வளவு கொடுமையா இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்றான் யாழினியன்.
"இந்த பொம்பளைங்க எப்படித் தான் இப்படிப்பட்ட வலியை தாங்குறாங்கன்னு எனக்கு புரியவேயில்ல" என்று வியந்தான் மகேந்திரன்.
"அதாவது பரவாயில்ல, இந்த வலி இப்படித் தான் இருக்கும்னு தெரிஞ்சதுக்கு பிறகு, அவங்க இரண்டாவது குழந்தையை பெத்துக்க துணியுறாங்க பாரு, அதைத் தான் என்னால நம்ப முடியல. நம்ம நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு பொம்பளைங்க தைரியமானவங்க..." என்றான் கதிரவன்.
"தைரியமானவங்க தான், ஆனா அவங்களுடைய வலிமை என்னன்னு அவங்களுக்கே தெரியறது இல்ல. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் முனுக்கு முனுக்குன்னு அழறாங்க." என்றான் மகேந்திரன்.
"உண்மை தான்... நான் பொம்பளைங்கள ரொம்ப பலவீனமானவங்கன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... ஆனா அவங்க அசாத்தியமான தைரியசாலிங்க." என்றான் கதிரவன்.
"சந்தேகமே இல்ல... அவங்க தைரியத்துக்கு முன்னாடி ஆம்பளைங்களால நிக்க கூட முடியாது" என்றான் மகேந்திரன்.
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த நிலவன், திகில் அடைந்தான். அடுத்த குழுவில் செல்ல வேண்டியது அவன் தான்.
"எதுக்கு என்னை இப்படி பயம் காட்டுறீங்க? எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு" என்றான் நிலவன்.
அப்போது அவர்கள், ஆரத்தியும், மைதிலியும் வருவதை பார்த்தார்கள். அவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது பார்த்தவுடன் புரிந்து போனது. ஆண்களான அவர்களுக்கே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமேயானால், அவர்கள் இருவரும் பெண் பிள்ளைகள் ஆயிற்றே...! அவர்களிடம் ஒன்றும் கேட்காமல் அவர்களை சற்று நேரம் அமைதியாய் இருக்கவிட்டார்கள். முதலில் பேசியவள் மைதிலி தான்.
"நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன். நான் பீடியாட்ரிஷியன் ஆக போறேன். ஒரு குழந்தையை பெத்தெடுக்கிறது எவ்வளவு கஷ்டம்... கடவுளே... அப்படி பெத்த குழந்தையை இழக்கிறது ரொம்ப பெரிய கொடுமை... அப்படி நடக்காம செய்யறது தான் பீடியாட்ரிஷியனோட வேலை. அதைத் தான் நான் செய்யப் போறேன்"
"நீ என்ன யோசிக்கிற ஆர்த்தி? நீயும் கார்டியாலஜிஸ்ட் ஆசையை விட்டுட்டு
பீடியாட்ரிஷியன் ஆகப் போறியா?" என்றான் நிலவன்.
"நான் என்ன ஆக விரும்பறேன்னு சொன்னா நீ சிரிப்ப..."
"அப்படி என்ன ஆகப் போற?"
"அம்மாவாகணும் "
நிச்சயம் அது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை தான் அளித்தது.
"அந்த குழந்தையை பெத்து எடுக்குறதுக்குள்ள அந்த அம்மா, வலியில எவ்வளவு துடிச்சாங்க தெரியுமா...! ஆனா, அவங்க குழந்தையோட முகத்தை பார்த்த உடனே, அவங்க வலியெல்லாம் மறந்து சிரிச்சாங்க... கோடி ரூபாய் கொட்டி கொடுத்தா கூட அந்த சிரிப்புக்கு ஈடு ஆகவே ஆகாது.( அவளுக்கு தொண்டை அடைத்தது) அவங்க முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்துக்கு விலைமதிப்பே இல்ல... அவ்வளவு வலியையும் மறக்க வச்ச அந்த சந்தோஷம் எப்படிப்பட்டதுன்னு அனுபவிச்சு பாக்கணும்..."
ஆர்த்தி எப்போதும் வித்தியாசமாக யோசிப்பவள் என்பது அவளது நண்பர்கள் அறிந்தது தான். அவர்களுள் ஒருவனின் முகம், பெருமைமிகு புன்னகை அணிந்தது. சந்தேகம் இல்லாமல், அது யாழினியன் தான். அவனுக்கும் கூட, அப்படிப்பட்ட சந்தோஷத்தை அவளுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.
"நீ உண்மையிலேயே, ஒரு தனி ரகம் ஆரத்தி. இதுக்கு அப்புறம் நீங்க குழந்தையே பெத்துக்க கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வருவீங்கன்னு நெனச்சேன்" என்றான் மகேந்திரன்.
"ஆமாம்... பொம்பளைங்கள புரிஞ்சுக்கவே முடியல" என்றான் கதிரவன்.
தன் பக்கத்தில் நின்றிருந்த யாழினியனை, கிண்டலாய் சீண்டினான் நிலவன். பெருமை மாறாமல் புன்னகைத்தான் யாழினியன்.
அவர்கள் அந்த நினைவை விட்டு வெளியே வந்தார்கள்.
"கல்யாணத்துக்கு முன்னாடியே, எதிர்காலத்துல நல்ல அம்மாவா இருக்கணும்னு முடிவு பண்ணவ நீ. அதனால தான் உனக்கு விஷ் பண்ணேன். ஹாப்பி மதர்ஸ் டே" என்றான் நிலவன்.
சிரித்தபடி அவனிடமிருந்து அந்த ரோஜாவை பெற்றுக் கொண்டாள் ஆர்த்தி.
சில மாதங்களுக்குப் பிறகு,
தனது காரை விட்டு கீழே இறங்கிய ரோஷன், வெங்கட்ரராகவனை பார்த்து வியந்து நின்றான். அவனது முகம் பிரகாசம் அடைந்தது. ஓடி சென்று, அவர் முன் புன்னகையுடன் நின்றான்.
"ஹலோ, அங்கிள்"
அவன் யார் என்று அடையாளம் தெரியாத அவர், முகம் சுருக்கினார்.
"நான் ரோஷன்... நீங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்திருக்கீங்க. எங்க அப்பா ராமநாதன்"
"ஓ... நீ ராமநாதன் மகனா...? நீ ரொம்ப பெரிய பையனா ஆயிட்ட. அதனால உன்னை எனக்கு அடையாளம் தெரியல" என்றார் வெங்கட்ராகவன்.
"பரவாயில்ல, அங்கிள். ஆனா, நீங்க எப்படி இங்க?"
"நான் என் டாட்டரை பார்க்க வந்தேன்"
"உங்க டாட்டர் இங்க தான் படிக்கிறாங்களா?"
"ஆமாம் ஃபைனல் இயர் படிக்கிறா. ஆர்த்தி..."
"ஆர்த்தி உங்க பொண்ணா?" என்றான் ரோஷன் நம்ப முடியாமல்.
"உனக்கு அவளை தெரியுமா?"
"நாங்க பேட்ச்மெட்ஸ்"
"அப்படியா?"
"வாங்க அங்கிள். நான் உங்களை ஆர்த்திகிட்ட கூட்டிக்கிட்டு போறேன்"
சரி என்று அவனுடன் நடந்தார் வெங்கட்ரராகவன்.
"உங்க ஸ்டடிஸ் எல்லாம் எப்படி போகுது?"
"ரொம்ப கிராஜுவலா போகுது அங்கிள். ஆனா ஆர்த்தி பில்லியன்ட் ஸ்டூடன்ட். எங்க காலேஜ்ல அவ ரொம்ப ஃபேமஸ். அவ கொடுத்த செமினார் எல்லாமே ரொம்ப பிரமாதமா இருந்தது"
ஆர்த்தி தன் நண்பர்களுடன் தேநீர் பருகி கொண்டிருப்பதை பார்த்தார்கள் அவர்கள். தனது கல்லூரியில், தன் அப்பாவை பார்த்த ஆர்த்தி, மகிழ்ச்சி அடைந்தாள். சந்தோஷமாய் ஓடி சென்று அவரை அணைத்துக் கொண்டாள். அவளது நண்பர்களும் அங்கு வந்தார்கள்.
"எப்படி இருக்கீங்க, டாட்?"
"எப்பவும் போல தான்"
"இன்னைக்காவது என்னை பார்க்க வந்தீங்களே"
"நான் இந்தியாவை விட்டு போறதுக்கு முன்னாடி உன்னை பார்க்கணும்னு நினைச்சேன். அதனால தான் வந்தேன்"
"ஓ... நீங்க ஃபாரின் ட்ரிப் போறீங்களா? எப்போ திரும்ப வருவீங்க?"
"நான் ஒரு அம்பாசிடரா போறேன்... ரெண்டு வருஷத்துக்கு" என்றார் தயக்கத்துடன்.
அதைக் கேட்ட ஆர்த்தியின் முகம் வாடிப்போனது.
"அப்படின்னா என்னோட கான்வகேஷனுக்கு நீங்க வர மாட்டீங்களா?"
"வர முடியாதுன்னு தான் டா நினைக்கிறேன்... நிச்சயம் நான் ட்ரை பண்றேன்"
"எந்த கண்ட்ரிக்கு போறீங்க?"
"பிரேசில்..."
"ம்ம்ம்"
"நீ உன்னோட ஹவுஸ் சர்ஜனை முடிக்கப் போற. கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள நாள் ஓடிப் போயிடும். அதுக்கப்புறம் நீயும் பிரேசில்ல வந்துடு."
"எப்ப போக போறீங்க?"
"இன்னும் ரெண்டு நாள்ல"
"சரி" என்று பெருமூச்சு விட்டாள் ஆரத்தி.
அனைவரும் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். யாழினியனின் கண்கள் மட்டும், ஆர்த்தியை பார்வையால் விழுங்கி கொண்டிருந்த ரோஷன் மீது இருந்தது.
ஆர்த்தியின் நண்பர்களை பார்த்து புன்னகை புரிந்தார் வெங்கட்ரகவன்.
"எப்படி இருக்க, யாழ்?"
"நல்லா இருக்கேன், அங்கிள்"
"என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"நானா?"
"ஆமாம்... ஜர்னலிஸ்ட் ஆகணும் என்கிற ஆசையை உனக்காக தானே ஆர்த்தி விட்டா...! அதை அவ செய்யாம இருந்திருந்தா, நான் செய்யுற சின்ன தப்பை எல்லாம் கூட கிழிச்சி, தொங்க விட்டிருப்பா" என்று சிரித்தார்.
அதைக் கேட்கவே பெருமையாய் இருந்தது யாழினியனக்கு. முக்கியமாய், ரோஷனுக்கு முன்னால், அவர்களுடைய காதல் விவகாரத்தை பற்றி அவர் பேசியது அவனுக்கு எல்லை இல்லா சந்தோஷத்தை தந்தது.
"ஆர்த்தி, உனக்கு ரோஷனை தெரியுமா?" என்றார் வெங்கட் ராகவன்.
பதில் கூறாமல் ரோஷனை பார்த்தாள் ஆர்த்தி.
"ஐஏஎஸ் ராமநாதனோட சன் தான் அவன். நாங்க ரெண்டு பேரும் ஒன்னா ட்ரெய்னிங் பண்ணவங்க"
"ஒ..."
"அப்பா வீட்ல தான் இருக்காரு, அங்கிள். நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்" என்றான் ரோஷன்.
"இல்ல ரோஷன், நான் கிளம்பணும்"
"அப்படி சொல்லாதீங்க, அங்கிள். உங்களைப் பார்த்தா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாரு. ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லாதீங்க"
"சரி வரேன்"
"ஆர்த்தி, நீயும் அங்கிளோட வாயேன்"
அவள் எதுவும் கூறுவதற்கு முன்,
"ஓ எஸ், அவ நிச்சயம் வருவா" என்றார் வெங்கட்ரராகவன்.
வேறு வழியின்றி சரியென தலையசைத்த ஆர்த்தி, யாழினியனின் முகம் வாடிப்போனதை கவனித்தாள்.
"சரி, நாங்க கிளம்பறோம். ஆர்த்தியை பார்த்துக்கோங்க" என்றார் வெங்கட்ராகவன்.
ஆர்த்தியின் நண்பர்கள் எதுவும் கூறுவதற்கு முன்,
"நீங்க ஆர்த்தியை பத்தி கவலைப் படாதீங்க அங்கிள். நானும் என்னோட அம்மாவும் அவளை நல்லா பாத்துக்குவோம்" என்றான் ரோஷன் அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி.
"ரொம்ப சந்தோஷம். ஆனா, அவளோட ஃபிரண்ட்ஸ் அவளை ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க... முக்கியமா யாழ்... இந்த மாதிரி ஃபிரண்ட்ஸ் கிடைக்க ஆரத்தி ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்" என்றார் வெங்கட்ராகவன்.
பொய்யாய் ஒரு புன்னகை உதிர்த்தான் ரோஷன்.
"போகலாமா, ஆரத்தி?" என்றார் வெங்கட்ரகவன்.
"நாளைக்கு மீட் பண்ணலாம்" என்று தன் நண்பர்களை பார்த்து கூறிவிட்டு அவருடன் நடந்தாள் ஆர்த்தி.
அன்று முழுவதும் யாழினியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆர்த்தியின் கைபேசி அழைப்புக்காக காத்திருந்தான். வெங்கட்ராகவன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தது அவனுக்கு தெரியும். இந்நேரம் அவள் பெண்கள் விடுதிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஏன் இன்னும் அவள் அவனை அழைக்கவில்லை? ஆர்த்தியை ரோஷன் பார்த்த பார்வை, அவனுக்கு பதட்டத்தை தந்தது. அவன் ஆர்த்தியை நம்பவில்லை என்று அர்த்தமல்ல. அவனுக்கு ரோஷன் மீது நம்பிக்கை இல்லை. அவன் ஆரத்தியை காதலிப்பது தெரிந்த விஷயம் தானே. அவனது அப்பாவுக்கும் வெங்கட்ரகவனுக்கும் இடையில் இருக்கும் நட்பை, இந்த சூழ்நிலையில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்வான் ரோஷன். அந்த எண்ணம் அவனது பதற்றத்தை அதிகரித்தது. ஆர்த்தி அவனுக்கு ஃபோன் செய்யாமல் இருந்தது அவனது பதற்றத்தை தாறுமாறாய் எகிற செய்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top