1 மருத்துவர்கள்
1 மருத்துவர்கள்
விஸ்தாரமான சென்னை மாநகரில், விசாலமாய் இருக்கிறது அந்த வீடு. அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையைப் பார்க்கும் பொழுது, அது, வீடா அல்லது மருத்துவமனையா என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது. அந்த வீட்டில் ஐந்து மருத்துவர்கள் வசிப்பதாய் அந்த பெயர்ப் பலகைக் குறிப்பிடுகிறது. ஒரே வீட்டில் ஐந்து மருத்துவர்களா?
அந்த வீட்டில், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய பெண்ணின் உடல், நீல நிறமாக மாறியிருந்ததைப் பார்த்த
அவளது தாய் மதிவதனி, அவள் உடலை தொட்டுப் பார்த்து, அது சில்லிட்டு போனதை அறிந்து அலறினாள்.
"மமதி..." என்று பதற்றத்துடன் அந்த குழந்தையை எழுப்ப முயன்றார் அந்த பெண்.
அந்த வீட்டில் இருந்த அனைவரும் அங்குக் கூடினார்கள். அவர்களின் முக பாவங்களை பார்க்கும் பொழுது, அவர்கள் அனைவரும் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
திருமணம் ஆகி ஆறு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தவள் மதிவதனி. மமதி அவளின் ஒரே செல்ல குழந்தை. இப்பொழுது மமதியின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது.
துரதிஷ்டவசமாக, மமதி பிறக்கும் பொழுதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்தாள். அவள் வளர வளர அது தானாகவே மூடிக்கொள்ளும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். ஒருவேளை அப்படி நிகழாவிட்டால், இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.
இத்தனை மருத்துவர்களைக் கொண்ட அந்த குடும்பம் எதற்காக இவ்வளவு கவலை கொள்கிறது என்று கேள்வி எழலாம். மமதி ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை நோயாளியான, ஏழு வயதே ஆன சிறிய பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமான காரியம் அல்லவா?
"சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போகலாம்" என்ற மதிவதனியின் கணவன் மதுசூதனன், மமதியை தன் தோளில் தூக்கிக்கொண்டு நடந்தான்.
அவனுடன் நடந்தபடி, தனது தம்பியான யாழினியனுக்கு ஃபோன் செய்தாள் மதிவதனி.
*யாழினியன். எம்பிபிஎஸ்., எஃப்ஆர்சிஎஸ்., டீன் ஆஃப் யாழ் ஹாஸ்பிடல்* என்ற பெயர் பலகை கொண்ட அறையில் அமர்ந்திருந்த அவளுடைய தம்பி, அந்த அழைப்பை தாமதிக்காமல் ஏற்றான். மமதியின் உடல்நிலை குறித்து அவனுக்கும் ஏற்கனவே நன்றாய் தெரியும் என்பதால், தான் எவ்வளவு தான் வேலை நெருக்கடியில் இருந்தாலும் தனது அக்காவின் அழைப்பை மட்டும் அவன் ஏற்க தவறுவதில்லை.
"சொல்லுங்க, அக்கா"
"யாழ், மமதியோட உடம்பு ஜில்லுனு, ப்ளூ கலர்ல மாறிடுச்சு. அவ அன்கான்ஷியஸ் ஆயிட்டா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்றாள் அழுதபடி.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த யாழினியன், அந்த அதிர்ச்சியை குரலில் காட்டிக் கொள்ளாமல்,
"தைரியமா இருங்க. நான் இருக்கேன்ல? ஒன்னும் ஆகாது. என்னை நம்புங்க"
"ஹான்..."
அந்த அழைப்பை துண்டித்து விட்டு, அந்த மருத்துவமனையின் மற்றொரு மருத்துவனான, தன் நண்பன் மகேந்திரனுக்கு ஃபோன் செய்தான் யாழினியன்.
"மகா, மமதியோட நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு. அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு வராங்க. கார்டியாலஜிஸ்ட்டை கூப்பிட்டு, வேண்டிய அரேஞ்ச்மென்ட்டை செய்"
"உடனே ரெடி பண்றேன். இது சம்பந்தமா நான் உன்கிட்ட காலையிலேயே பேசணும்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி இப்படி ஆயிடுச்சு"
"பேசலாம். முதலில் மமதியை கவனி"
"சரி" அழைப்பை துண்டித்து விட்டு, அறுவை சிகிச்சை அறையை நோக்கி விரைந்தான் மகேந்திரன்.
சிறிது நேரத்திலேயே *யாழ்* மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் வந்து சேர்ந்து விட்டார். யாழ் குடும்பத்தினரும் மமதியுடன் வந்தார்கள். உடனடியாக அவளுக்கு சிகிச்சை ஆரம்பமானது.
மமதியின் இதயம், மெல்ல இயல்பு நிலையில் இயங்கத் துவங்கியது. அனைவருக்கும் சென்ற உயிர் திரும்பி வந்தது. ஆனால் அவர்களுக்கு தெரியும், இது நிலையானது அல்ல என்பது. மருத்துவ உதவி இல்லாமல் மமதி வாழ வேண்டும் என்றால், இதயமாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் வழி. ஏழு வயது குட்டி பெண்ணான மமதி, எப்படி இந்த ஆபத்திலிருந்து மீண்டு வரப் போகிறாள் என்பது தான் அவர்கள் அனைவரது கவலையும்.
சிறிது நேரத்திற்கு பிறகு, தன் அக்கா மதிவதனியுடன் மகேந்திரனின் அறைக்கு வந்த யாழினியன்,
"நீ என்கிட்ட என்ன பேச நினைச்ச, மகா?" என்றான்.
தனது மேஜையின் இழுவை அறையிலிருந்து ஒரு தினசரியை எடுத்து யாழினியனிடம் நீட்டினான் மகேந்திரன். மதிவதனியும் தன் பார்வையை அதில் ஓட்டினாள்.
*எட்டு மாத கை குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து, இந்திய டாக்டர் சினேகா சாதனை* என்ற செய்தி அதில் இருந்தது.
அதை பார்த்த அக்கா, தம்பியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
"இது இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல வந்த நியூஸ். டாக்டர் சினேகா இதை லண்டன்ல செஞ்சிருக்காங்க"
"நம்ம மமதிக்காக அவங்களை இங்க வர வச்சா என்ன?" என்றாள் மதிவதனி.
"எக்ஸாக்ட்லி..." - யாழினியன்.
"அதுல ஒரு பிரச்சனை இருக்கு" என்றான் மகேந்திரன்.
"என்ன பிரச்சனை?"
"இதுவரைக்கும் அவங்க லண்டனை விட்டு வேற எங்கேயும் போனதே இல்லயாம். முக்கியமா இந்தியாவுக்கு"
"ஏன்?" என்றாள் மதிவதனி கவலையுடன்.
"எனக்கு தெரியல. போன மாசம் டெல்லியில நடந்த டாக்டர்ஸ் கான்ஃபரன்ஸ்ல கலந்துக்க நான் போயிருந்தப்போ, டாக்டர் ரோஸை மீட் பண்ணேன். அவங்க, டாக்டர் சினேகா சர்வீஸ் பண்ற அதே ஹாஸ்பிடல்ல தான் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க நிறைய விஷயங்களை என்னோட டிஸ்கஸ் பண்ணாங்க. சினேகா இந்தியன், அதுவும் தமிழன் அப்படிங்கிறதால அவங்களைப் பத்தியும் பேச்சு வந்தது. நான் வேணும்னா ரோஸ் மூலமா சினேகாகிட்ட பேச ட்ரை பண்றேன்."
"அப்படின்னா முதல்ல அதை செய்" என்றான் யாழினியன்.
"ஏற்கனவே ட்ரை பண்ணிட்டேன். அவங்களோட ஃபோன், வாய்ஸ் மெயில்ல இருக்கு. விஷயத்தை மெசேஜ் பண்ணி இருக்கேன். அவங்க கூப்பிடுற வரைக்கும் வெயிட் பண்ணணும்"
அவன் கூறிக் கொண்டே இருந்த பொழுது, ரோஸிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரை ஆன் செய்தான் மகேந்திரன்.
"ஹலோ டாக்டர்..."
"ஹலோ டாக்டர் மகேந்திரன், உங்க வாய்ஸ் மெசேஜை கேட்டேன். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன். சினேகா இந்தியா வர விரும்ப மாட்டாங்க." என்றார் நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
"நீங்க ஏற்கனவே சொன்னிங்க தான். இங்க நிலைமை கொஞ்சம் சீரியஸ். ஒரு தடவை முயற்சி பண்ணி பார்க்கலாமே... எங்களை ஒரு தடவை அவங்க கிட்ட பேச வைங்க. ப்ளீஸ்"
சற்று யோசித்த ரோஸ்,
"சரி, ட்ரை பண்றேன்" என்று அழைப்பை துண்டித்தார்.
"அவங்க கிட்ட நான் பேசுறேன்... நிச்சயமா அவங்க என்னை மறுக்க மாட்டாங்கன்னு நம்புறேன். ப்ளீஸ் ப்ளீஸ்" கெஞ்சினாள் மதிவதனி.
"ரிலாக்ஸ் கா... முதல்ல நான் அவங்க கிட்ட பேசுறேன்... " என்றான் யாழினியன்.
"இல்ல யாழ், மதி பேசட்டும். ஒரு அம்மாவோட வேண்டுதலுக்கு சினேகா நிச்சயம் மனம் இறங்குவாங்கன்னு எனக்கு தோணுது"
சரி என்று தலையசைத்தான் யாழினியான்.
லண்டன், ஹோலி கிறிஸ்ட் மருத்துவமனை
டாக்டர் சினேகாவின் அறைக்கு சென்ற டாக்டர் ரோஸ், அவர் ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தார்.
"கங்கிராஜுலேஷன்ஸ், சினேகா"
"உலகத்தோட மூளை முடுக்கில் இருந்து எல்லாம் எனக்கு விஷஸ் குவிஞ்சுக்கிட்டு இருக்கு. ஆனா, இதே ஹாஸ்பிடல்ல இருக்கிற உனக்கு என்னை விஷ் பண்ண ஒரு நாள் தேவைப்பட்டிருக்கு" என்றாள் புன்னகையுடன் சினேகா.
"சாரி, டியர்..."
"ஹே, ஐ ஜஸ்ட் கிட்டிங். எனக்கு தெரியும், நேத்து உனக்கு ஒரு சர்ஜரி இருந்தது."
"ஆமாம். அது ஒரு ஹெக்டிக் சர்ஜரி. பை காட்ஸ் கிரேஸ், நல்லபடியா முடிச்சிட்டேன்." சற்று நிறுத்திய ரோஸ்,
"என்னோட ஃப்ரெண்ட் உன்கிட்ட பேசணுமாம். பேசுறீயா?"
"ஷ்யூர்..."
சினேகாவிடம் பேச விரும்பும் நபர், இந்தியாவில் இருக்கிறார் என்பதை ரோஸ் அவளிடம் கூறவில்லை. லண்டனில் இருக்கும் ரோஸின் நண்பர் யாரோ தான் பேசப் போகிறார் என்று எண்ணினாள் சினேகா.
மகேந்திரனின் எண்ணுக்கு ஃபோன் செய்தாள் ரோஸ். ரோஸின் அழைப்பை பார்த்த மகேந்திரன் பதட்டமானான். ஏனென்றால், அப்பொழுது தான் யாழினியனும், மதிவதனியும் அங்கிருந்து சென்றிருந்தார்கள். கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்த மகேந்திரன், மதிவதனி அவன் அறையின் அருகில் நின்று யாருடனோ கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.
"மதி, ரோஸ் கால் பண்றாங்க சீக்கிரமா வாங்க"
அந்த அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு முன் அதை ஏற்றான் மகேந்திரன்.
"ஹாய், டாக்டர் சினேகா இங்க இருக்காங்க. அவங்ககிட்ட பேசுங்க" தன் கைபேசியை சினேகாவிடம் நீட்டினாள் ரோஸ்.
அதே நேரம் தன் கைபேசியை மதிவதனியிடம் கொடுத்தான் மகேந்திரன்.
"சினேகா லைன்ல இருக்காங்க"
சினேகா எதுவும் பேச துவங்கும் முன் அழ துவங்கினாள் மதிவதனி.
"ப்ளீஸ் டாக்டர், என் மேல கருணை காட்டுங்க. என் குழந்தையோட உயிரை காப்பாத்துங்க. அவ எனக்கு ஒரே குழந்தை. அவ இல்லாமல் எனக்கு வாழ்கையே இல்ல. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்" கெஞ்சினாள் மதிவதனி.
தன் எதிரில் நின்றிருந்த ரோஸை பார்த்தாள் சினேகா. ரோஸும் கண்களால் கெஞ்சினாள். மென்று முழுங்கினாள் சினேகா. ஏனென்றால், அந்தப் பக்கம் பேசிய பெண், தமிழில் பேசினாள். அப்படி என்றால் அவள் இந்தியாவை சேர்ந்தவளாக இருக்க வாய்ப்புள்ளது.
"என் குழந்தைக்காக ஒரே ஒரு தடவை இந்தியாவுக்கு வாங்க. அவ இன்னும் வாழவே ஆரம்பிக்கல. என் குழந்தைக்கு வாழ்க்கை கொடுங்க. ப்ளீஸ் டாக்டர்"
சினேகாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்தியாவுக்கு செல்வதில்லை என்ற தனது முடிவில் உறுதியாய் இருப்பதா? அல்லது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய குழந்தையின் உயிரை காப்பதா?
"மேடம் கொஞ்சம் அமைதியா இருங்க"
அந்த குரலைக் கேட்டவுடன், மதிவதனிக்கு ஏதோ பொறி தட்டியது. அந்த குரல் அவளுக்கு மிகவும் பழக்கப்பட்டது போல் தோன்றியது.
"எனக்கு யோசிக்க டைம் கொடுங்க"
"டாக்டர் ப்ளீஸ், எப்படியாவது முயற்சி செய்யுங்க"
"இங்க பாருங்க, எனக்கு இங்க நிறைய ஷெட்யூல் இருக்கு. அப்படியெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு என்னால வர முடியாது. நிறைய அரேஞ்ச்மெண்ட்ஸ் தேவைப்படும்"
"சரிங்க, டாக்டர்"
மதிவதனியின் குரலில் இருந்த ஏமாற்றத்தை சினேகாவால் உணர முடிந்தது. அழைப்பை துண்டித்தாள் சினேகா, மதிவதனிக்கு கலக்கத்தை அளித்து.
தனது நாற்காலியில் கையை பிசைந்தபடி அமர்ந்திருந்தாள் சினேகா. என்ன இக்கட்டான சூழ்நிலை இது? மதிவதனியின் கெஞ்சல் அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. ஒரு தாயின் வேதனை நிரம்பிய கெஞ்சல்...! ஒரு மருத்துவராய், ஒரு குழந்தையின் உயிரை காக்கும் தன் கடமையை செய்வதா? அல்லது தனது சொந்த பிரச்சனைக்காக இந்தியா செல்வதில்லை என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருப்பதா? அவளுக்கு புரியவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top