1
கூட்டம் கூட்டமாய் படர்ந்து விரிந்த மேகங்களுக்கு இடையே, பறந்த தங்கச்சிலைப் போல் பராமரிக்கப்பட்ட அந்த 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், வணிக வர்க்க மக்களுக்காகவே ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த்திருந்தான், சத்யன்.
பயணிகள் சிலர் மகிழ்வுடனும், சிலர் சோர்வுடனுடம் காணப்பட்டனர். வணிகர்கள் சிலர் மும்முரமாக தம் மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தனர். ஆனால், நம் சத்யனின் முகத்திலோ, பல குழப்பங்களுக்கான அறிகுறிகள் தென்பட்டன.
அவன் தன் இருக்கையில் தலையை சாய்த்துக்கொண்டுக் கண்களை மூடினான். கண்களை மூடிய அவனுக்கோ தூக்கம் என்பது சிறிதளவு கூட வரவில்லை. நினைவுகள் பல சூறாவளிப் போல் தாண்டவமாடியது.
தன் தாய் ஏன் அந்த வீட்டிற்கு செல்ல மறுத்தாள்? எதற்காக அந்த வீட்டை, அந்த அழகிய ஊரை விட்டு வெளியேறினாள்? எதற்காக இப்போது அதை விற்கச் சொல்கிறாள்? ஏன் என்னை என் அறைக்குள் செல்ல தடை செய்தாள்? இவ்வாறு பல கேள்விகள் அவன் மனதை குடைந்தெடுத்தன.
சத்யனின் அன்னை லக்ஷ்மிக்கு வயது முதிர்ந்தமையால், அவளை விட்டுவிட்டு தான் மட்டும் வீட்டை விற்க 'மாயவனத்திற்குச்' செல்கிறான். இவற்றை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கையில் விமானம் தரை இறங்கியது. தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு, விமான நிலையத்திலிருந்து வெளியேறினான் சத்யன்.
தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்டியில், அவன் தன் சொந்த ஊரான மாயவனத்திர்க்குச் சென்றான். 'மாயவனம் தங்களை அன்புடன் வரவேற்கிறது' என்று எழுதப்பட்ட வரவேற்ப்புப் பலகையை கண்டதும், இவனுக்கு முதலில் நினைவுக்கு வந்தது தன் கனவு மங்கையாகிய மைத்ரா.
சிறு புன்னகை தன் உதட்டில் மலர, அவன் நித்திரையில் முழ்கினான். அவன் தங்க போகும் விடுதி வந்ததும், அவன் வண்டியோட்டி அவனை எழுப்பி, பெட்டிகளை அவனின் அறைக்கு கொண்டுச் சென்றான். பயணக் களைப்பாலும், காலநேர வேறுப்பாட்டாலும் சோர்வடைந்த சத்யன் தன் அறைக்குள் சென்றதும் அயர்ந்து உறங்கினான்.
சிட்டுக்குருவிகள் வானில் பாட, பல வண்ணப் பறவைகள் இறகு விரித்து இங்கும் அங்கும் பறந்து செல்ல, சூரியன் தன் கதிரலைகளைக் கொண்டு சத்யனை கவர, கண்கள் கூசி சத்யன் துயில் எழுந்தான். அப்பொழுது, தூயக் காற்று அவனுக்கு புத்துணர்ச்சி ஊட்ட அக்காலைப் பொழுது அவனுக்கு இனிமையாக தொடங்கியது.
காலை உணவை முடித்துக்கொண்டு, இரு வேலை ஆட்களுடன், அவனுடைய வீட்டிற்குச் சென்றான். ஊரில் பல மாற்றங்கள் நேர்ந்திருந்தாலும், பத்து வருடங்களுக்கு முன் அவர்கள் விட்டுச் சென்ற அவர்களின் வீட்டில் இருந்த ஒரே மாற்றம் பாழடைந்து காணப்பட்டது மட்டும் தான்.
கதவில் இருந்த அச்சிறு துவாரத்தில், வீட்டின் சாவியை நுழைத்துத் திறந்தான். கிரீச் என்ற சத்தம் வீடு முழுதும் ஒலிக்க, கதவு திறந்தது. வீட்டினுள் குடி இருந்த வவ்வால்கள் வெளியேறியன. வீடெங்கும் சிலந்தி வலை அலங்கரித்தது. ஆங்காங்கே சிலந்திகள் சில சத்யனை நோட்டம் விட்டது.
இவனுடன் வந்த வேலை ஆட்கள் இருவரும், தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். சில மணி நேரத்தில் சிலந்தி வலைகள் அனைத்தையும் அகற்றினர். மேல் மாடத்தில் இருந்த அறை இவனை ஈர்த்தது.
தன் அன்னையின் சொல்லையும் மீறி, அவன் அந்த அறைக்குள் நுழைந்தான். அவன் நுழைந்த அறையில் ஒரு பழைய மரக்கட்டிலும், ஜன்னலின் கீழ் ஒரு மேசையும் நாற்காலியும் இருந்தன. ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்த சூரியக் கதிர்கள் மட்டுமே அவ்வறைக்கு வெளிச்சத்தை அளித்தது.
அம்மேசையின் மேல் அமர்ந்து அறையை நோட்டமிட்டான். சத்யனின் சிறுவயது அறை அது. அவன் தாய் கட்டிலில் அமர்ந்து, பல கதைகளைக் கூறி அவனை உறங்க வைப்பாள்.
அவர்களிடம் பல கதைப் புத்தகங்கள் இருந்தாலும், அவனுக்கு பிடித்தமானது ஒரே ஒரு புத்தகம் தான். அது மிகவும் பழமை வாய்ந்தது. அதிக பக்கங்களை கொண்ட பளுவான அப்புத்தகத்தின் மேலுறை பார்ப்பவரை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.
அதுவே அவன் தாய் அவனுக்கு இறுதியாக கூறியக் கதை. அக்கதையை முழுவதுமாக கூறி முடிக்கும் முன்னரே, லண்டனிற்கு சென்று விட்டார்கள். அப்புத்தகத்தைப் பற்றி கேட்கும் போதெல்லாம் லக்ஷ்மி ஏதாவது கூறி சமாளித்து விடுவாள்.
இன்று, இக்கணம் அவனை தடுக்க எவரும் இல்லை. அதைத் தேடும் வேட்டையில் இறங்கினான். அலமாரியில் இருந்த அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்து புத்தகங்களை ஒரு பெட்டியினுள் இட்டான். மூலை முடுக்கெல்லாம் விடாமல் தேடினான்.
எங்கு தேடியும் இவன் கண்ணிற்கு தென்படவில்லை அப்புத்தகம். துவண்டுபோய், கட்டிலில் படுத்தான். கட்டிலின் ஓர் இடத்தில் மட்டும் எதோ ஒன்று கடினமாக இருந்ததுப் போல் உணர்ந்தான்.
மெத்தையை உயர்த்தி நோக்கியதும் சத்யனுக்கு எல்லையில்லா ஆனந்தம். கண்கள் இன்பத்தில் மின்னின. அப்புத்தகத்தில் இருந்து தூசியை அகற்றிவிட்டு தன் மடியில் வைத்து அமர்ந்தான்.
பத்து வருடங்களுக்கு முன், ஒரு நாள் நிகழ்ந்த சம்பவம் இவன் நினைவிற்கு வந்தது. அச்சம்பவமே இவர்கள் வீடு மாறியதற்கு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்ற சந்தேகமும் சத்யனுக்கு அவ்வப்போது உதிக்கும். அவன் அன்னை அவனுக்கு கூறிய இறுதிக் கதை அவன் காதில் ஒலித்தது.
"பூவனக்காடுன்னு ஒரே ஓர் ஊர்ல, ரக்க்ஷன் மற்றும் ஊர்மிளானு ஒரு அழகான தம்பதி இருந்தாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த குழந்தை தான் மைத்ரா. அழகிய மீன் கண்கள், பஞ்சைப் போல் மென்மையான கன்னங்கள், முத்துப் போல் மின்னும் பற்கள், அதை கவர்ந்த ரோஜாப் பூப்போன்ற உதடுகள் கொண்டவள் மைத்ரா.
அவளுடைய கருணை உள்ளம், அவளுடைய அழகை இன்னும் அதிகமாக்கியது. அவளை அந்த ஊரில் இருக்கின்ற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல அளவில்லா குறும்புத்தனம். அதே சமயம் பொறுப்பும் உணர்ந்து நடந்துக்கிட்டவள். யார் மனசையும் புண் படுத்த மாட்டாள். ஆனால், அவளுக்கு என்னவோ யார் கூடவும் ரொம்ப நெருங்கி பழக பிடிக்காது. இதனாலே அவளுக்கு நண்பர்கள் யாருமில்லை. அதை மாத்த அந்த ஊருக்கு வந்தான் ஒருத்தன். அவன் பேரு கூட சத்யன் தான். ஆனால், அதுவும் ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை.
இப்போ நேரம் ஆச்சு, நாம தூங்குவோமா??? மிச்ச கதைய அம்மா உனக்கு நாளைக்கு சொல்வேனாம். இப்போ என் பட்டுக்குட்டி தூங்குமாம்." என்று அவன் தாய் லக்ஷ்மி கூறினாள்.
அன்று இரவு அவன் அறையில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும் இவன் நினைவில் வந்தது. அது இவன் கற்பனையா இல்லை உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றா என்பது சத்யனுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.
அன்று இரவு, சத்யன் மைத்ராவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். லக்ஷ்மி அக்கதையில் மைத்ராவின் அழகை வர்ணிக்கையில், சத்யனின் கனவு உலகில் ஒரு அழகிய உருவமாய் அவளை சித்தரித்தான். அவளுக்கு நண்பனாய், அவளுக்கு அனைத்து வித இன்பங்களையும் தர வேண்டும் என்றெண்ணினான்.
அவளுடன் சேர்ந்து விளையாட ஆசைப்பட்டான். அந்த ஊருக்கு வந்த சத்யன் என்ற பையன் தானாகவே இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் இவனுக்கு இருந்தது. அவன் அன்னை கூறியதுப் போல் இல்லாமல், அவர்களது நட்பு நீண்ட நாள் தொடர வேண்டும் என்றெண்ணினான்.
அவளை நினைத்துக் கொண்டே சத்யன் நித்திரையில் ஆழ்ந்தான். சிறிது நேரத்திற்குப் பின், அவன் அறையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதைப் உணர்ந்தான். காற்று வீசும் சப்தம் கேட்டது. அவன் அறை குளிர்ச்சியாய் இருப்பதையும் உணர்ந்தான்.
என்ன நடக்கிறது என்பதைக் காண அவன் கண்களை மெதுவாகத் திறந்தான். கண் திறந்தவனுக்கு எதிர் பாராத அதிர்ச் சி. கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிந்தன. அவனின் உதடுகளோ, நேர்மாறாய் மகிழ்ச்சியில் புன்னகைத்தன.
அவன் தாய் கூறிய கதைப்புத்தகத்தில் இருந்து மின்னலை ஒத்த ஒளி வீசியது. சிறு நட்சத்திரங்கள் சுழல, ஓர் உருவம் அதிலிருந்து வெளியேறியது. அறையெங்கும் ஒரு சிறுப் பெண்ணின் சிரிப்பொலி எதிரொலித்தது.
ஒளி சற்று மங்கியதும் அவன் வயதுடைய ஒரு பெண் அங்கு நிற்பதைக் கண்டான். அதே மீன் கண்கள், செம்பஞ்சு கன்னங்கள், முத்துப் பற்கள், அதே புன்னகை. அவன் நினைத்தவை யாவும் அவன் முன்னால் நிஜமாய் நின்றது.
"மைத்ரா...," என்று மெல்லிய குரலில் அவள் பெயர் உச்சரித்தான்.
அவள் அழகிய புன்னகையுடன், தன் கைகளை நீட்டி, "என்னுடன் வா" என்றழைத்தாள்.
தன்னைச் சுற்றிக் கவர்ந்திருந்த போர்வையை எடுத்தெறிந்து விட்டு அவள் அருகில் ஓடினான். அவள் கைகளோடு இவன் கை சேர, இருவரும் அவ்விடத்தில் இருந்து மாயமாய் மறைந்து போனார்கள்.
மறைந்த அடுத்த நொடி அவர்கள் ஒரு பூங்காவில் இருந்தனர். சிறுப்பிள்ளையான சத்யனுக்கோ ஏதும் புரியாமல் ஆச்சர்யத்துடன் சுற்றும் முற்றும் நோக்கினான்.
மைத்ரா, "என்னுடன் விளையாடுவாயா, சத்யா?" என்று வினவினாள்.
சத்யனும் தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டினான்.
"நான் உன்னுடன் தினமும் விளையாடுவேன். உன்னை விட்டு எங்கும் செல்லமாட்டேன். உன்னுடன் என்றும் உன் தோழனாய் இருப்பேன்," என்ற சத்தியத்தை செய்தான்.
இருவரும் சிரித்துக்கொண்டே பூங்காவை சுற்றி, ஓடி பிடித்தும், கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடியும் மகிழ்ந்தார்கள். சோர்வடைந்த பின்னர், அமைதியாய் மரத்தினடியில் அமர்ந்தார்கள். நேரம் வேகமாய் சென்றது.
மைத்ரா சத்யனை நோக்கி, "உனக்கு நேரமாகி விட்டது, நான் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன், வா," என்றாள்.
சத்யனுக்கோ அவளை விட்டு பிரிய மனதில்லை. பாவமாக முகத்தை வைய்துக்கொண்டு அவளை நோக்கினான். அவள் தன் கைகளை நீட்டி, "மீண்டும் உன்னை தேடி வருவேன். கவலைக் கொள்ளாமல் செல்," என்றாள்.
மீண்டும் இருவரின் கை சேர்ந்த நொடி அங்கிருந்து மறைந்தார்கள். இம்முறை சத்யன் தன் அன்னையின் குரல் கேட்டு நித்திரையிலிருந்து எழுந்தான். நடந்தது வெறும் கனவா இல்லை நிஜத்தில் நடந்த மாயாஜாலமா, என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.
எதுவாக இருந்தாலும் சரி, தனது ஆசை நிறைவேறிய ஆனந்தத்தில் இருந்தான். போர்வையை அகற்றி, மெத்தையில் குதித்துக்கொண்டே லக்ஷ்மியிடம் முழு கதையையும் கூறினான்.
தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சுதாரித்துக் கொண்டு சத்யனை பள்ளிக்கு அனுப்பிவைத்தாள். இரண்டு நாட்களுக்குப் பின் இருவரும் மாயவனத்தை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டார்கள்.
சத்யனுக்கு அதன் பின், அக்கதையை லக்ஷ்மி சொல்லவில்லை. நாட்கள் நகர்ந்தன, சத்யனும் வளர்ந்தான். லக்ஷ்மியிடம் அக்கதையை பற்றி கேட்பதை சத்யன் நிறுத்தினாலும், மைத்ரா நினைவிலே இருந்தாள்.
இன்று, இக்கணம், அப்புத்தகம் இவன் கையில். சத்யனை தடுக்க எவருமில்லை. அவனின் உணர்வுகள் தண்டவாளத்தில் ஓடும் இரயிலைப் போல் ஓடியது. புத்தகத்தின் மேலுறையை விரல்களால் வருடினான்.
மைத்ரா இத்துனை வருடங்களிக்குப்பின் எப்படி இருப்பாள்? என்னை இன்னும் நினைவில் வைத்திருப்பாளா? என்பதை யோசித்துக்கொண்டே பக்கங்களை திருப்பினான். முதலிருந்து கதையை படித்தான்.
இளம் வயதில் மைத்ராவின் அழகு பல மடங்கு அதிகரித்ததாய் படித்தான். தன் சிந்தையில் மேலும் அவளை அழகாக வர்ணிக்க துவங்கினான். மேலும் கதையை படிக்க படிக்க அவளை நேசிக்க துவங்கினான். ஒவ்வொரு வரியும் அவளைப்பற்றி படிக்கும் பொழுது அவள் மேல் இவன் கொண்ட காதல் அதிகரித்தது.
கதையை ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்த பொழுது அவன் அலைப்பேசி ஒலித்தது. எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தான். அழைத்தது வேறு எவருமில்லை, அவன் அன்னையே. அவளிடம் இன்று காரணத்தைக் கேட்டாக வேண்டும் என்ற முடிவில், பேசினான்.
வீட்டில் நடக்கும் வேலைகள் பற்றி அவளுக்கு தகவல் கொடுத்தான். அலைப்பேசி வைக்கும் சமயத்தில், பல வருடங்களாய் அவனை நெருடிய கேள்வியை கேட்டான். அவளோ, அமைதி காத்தாள்.
சில நிமிட மௌனத்திற்குப்பின் லக்ஷ்மி தொடர்ந்தாள், "இப்பொழுது அதைப்பற்றி பேசி என்ன செய்ய போகிறாய்? அதை விட்டுவிடு."
"இல்லை அம்மா. எனக்கு இப்போது உண்மை தெரிந்தாக வேண்டும். நீங்கள் சொல்லாமல் போனால் நான் உங்களிடம் பேச மாட்டேன்," என்றான் உறுதியாய்.
அவள் யோசிதப்பின் தொடர்ந்தாள், "நான் மாயவனத்திற்கு வந்த புதிதில், அனைவரும் என்னிடம், கதைப்புத்தகங்களிடம் இருந்து விலகியே இருக்க எச்சரித்தார்கள். ஏனென்று வினவியபோது, சிறுப்பிள்ளை முதல் .முதியவர்கள் வரை, கதையை படித்தால் பித்து பிடித்தவர்கள் போல் மாறிவிடுகிறார்கள். சிலர் காணாமலும் போய் விடுகிறார்கள் என்று சொன்னார்கள். நான் அதை எதும் நம்பாமல் உனக்கு கதைகளை வாசித்தேன். பல கதைகள் கூறிய பின்னரும் ஏதும் நடக்காததால், மற்றவர்கள் கூறியது பொய் என்றெண்ணி, மேலும் கதைகள் கூறினேன். ஆனால்..."
சத்யன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தான், "ஆனால்? என்ன ஆயிற்று அம்மா? தொடருங்கள்," என்றான்.
"அனால், அன்று காலை நீ மைத்ராவை பற்றி கூறியதும் பயந்தேன். எனக்கென்று சொல்லிக்கொள்ள நீ மட்டும் தான் உள்ளாய். உன்னையும் இழக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அந்த ஊரை விட்டு வந்தோம். அதே காரணத்தால் தான், உன்னை நான் அக்கதையை படிக்க தடுத்தேன்," என்று சொல்லி முடித்தாள் லக்ஷ்மி.
சத்யனுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும், மறு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது. ஒரு பக்கம் அவன் அன்னையை விட்டு செல்ல அவன் மனம் விரும்பவில்லை, மறுபக்கம் அவனின் இதையமோ மைத்ராவை பற்றியே நினைத்தது.
புத்தகம் திறந்து கதையின் இறுதியை படித்தான். அதில், 'மைத்ரா அவன் ஆசைக் காதலனுக்காக காத்திருந்தாள், அவன் ஒரு நாள் மீண்டும் வருவானென்ற நம்பிக்கையில்' என்று முடிக்கப்பட்டிருந்தது.
அன்று வீட்டின் வேலை பாடுகள் எல்லாம் இனிதே நடந்து முடிந்தன. மாயவனத்தை இறுதியாக ஒரு முறை பார்த்தான். 'நன்றி மீண்டும் வருக' என்னும் பலகை அவன் கண்ணில் தென்பட, கைப்பையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை தடவி, "உனக்காக நான் என்றும் காத்திருப்பேன் மைத்ரா. நீ வருவாயென நம்பிக்கையில்." என்று மெல்லிய குரலில் கூறி, மாயவனத்திலிருந்து விடைபெற்றான்.
******முற்றும்*******
கதை பிடித்ததா?? இக்கதையை பற்றி உங்களின் கருத்து???
இம்மாதிரியான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
ஏதேனும் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் மீது காதல் வந்ததுண்டா?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top