52
EPILOGUE
***********************
விஷ்வேஸ்வரன்
&
மஹிமா
***********************
என்ற ஆளுயர வரவேற்புப் பலகை முத்தாய்ப்பாக மண்டப வாசலில் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவனும் அவளும் சிரித்தவாறு நின்றிருந்தனர்.
ஆம். ஊரே மெச்சும்படி அவர்களது திருமணம் அன்று நடந்துகொண்டிருந்தது. இருவீட்டாரிடமும் சம்மதம் பெற்ற அவர்களது காதல், இன்று சமூகத்திலும் அங்கீகரிக்கப்பட இருந்தது திருமணமாய்.
கருநீல பனாரஸ் பட்டில் அவள் தேவதையாக ஜொலிக்க, பட்டு வேஷ்டி சட்டையில் அவனும் ஆணழகனாக ஒளிர்ந்தான். மணமேடையில் ஐயர் மந்திரங்கள் சொல்லச் சொல்ல அவனும் திருப்பிச் சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அண்ணனும் அண்ணியும் அருகில் நின்றிருந்தனர். முகில் அண்ணியின் கையில் இருந்தான். தன் மழலை மொழியில் ஏதோ பேசி தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தான்.
மண்டபத்திலேயே பரபரப்பாக சுற்றிக்கொண்டு இருந்தவன் ஜோஷி தான்! சாப்பாட்டுக் கூடத்திற்கும், வாசலுக்கும் மணவறைக்கும் ஸ்டோர்ரூமுக்கும் அலைந்து கொண்டிருந்தவனைப் பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு.
"நல்ல நேரம் தொடங்கியாச்சு, பொண்ணை அழைச்சுட்டு வாங்க" என்று அவர் ஆணையிட, தோழிகள் வேணியும் ஜபீனாவும் அவளை அழைத்து வந்தனர்.
மெல்ல அடியெடுத்து வைத்து நிலம்பார்த்தபடி அவள் நடந்து வர, அவளை முதன்முதலாகப் பள்ளியில் கண்டது முதல் கல்லூரியில், விமான நிலையத்தில், லண்டன் வீட்டில் என அத்தனை முகங்களும் நினைவுக்கு வந்தது அவனுக்கு. அப்போதெல்லாம் தென்படாத பெண்மையின் பேரழகு இன்று கல்யாணக் கோலத்தில் அவளிடம் தெரிந்தது. குழந்தை முகம் எல்லாம் மறைந்து, அவள் முழுப் பெண்ணாக மாறியிருந்ததுகண்டு வியந்தான் அவன்.
அப்போது அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க, கண்கள் நான்கும் சந்தித்தன. ஒருகணம் அங்கிருந்த அனைவரும் காணாமல் போயினர் அவர்களுக்கு. இந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு. அவன் கண்களில் வழியும் காதல் அவளை வேறேதோ உலகத்திற்குத் தூக்கிச் சென்றது. ஐயர் அழைக்கவும் சுயநினைவு வந்தவள், மெல்லச் சென்று அவையை வணங்கிவிட்டு அவனருகில், மணவறையில் அமர்ந்தாள்.
கெட்டிமேளம் ஒலிக்க, மங்கள வாத்தியம் முழங்க, மண்டபத்திலிருந்த அனைவரும் அட்சதை போட்ட ஆசிர்வதிக்க, அவனது காதலி ஊர்முன்னால் அவனுக்கு மனைவியானாள்.
ராஜகோபாலின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின. அன்னபூரணி-சிவராமன் தம்பதியரும் ஆனந்தத்தில் சிரித்தனர்.
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, சடங்குகள் அனைத்தும் முடித்து, வரவேற்பில் நிற்கும்போது மாலை நான்கு மணி. ஜோஷி இருவரையும் கேலி செய்தவாறே அருகில் நின்றிருந்தான். வேணியும் சேர்ந்துகொண்டு கிண்டல் செய்து அவளை வெட்கிச் சிவக்கச் செய்தாள்.
கண்ணை அகற்றாமல் தன்னை அவன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டவள், மெல்ல விழிகளால் வினவினாள். அவன் வியந்து பெருமூச்சு விட்டான்.
"கனவா நனவான்னு நம்ப முடியல..."
"நான் வேணா கிள்ளட்டுமா?"
குறும்போடு அவள் வினவினாள்.
"ஓ...தாராளமா!" எனக் கண்ணடித்தான் அவன்.
"சரிதான்...சும்மா நில்லு விஷ்வா.. ஊரே நம்மள தான் பாக்குது"
அவர்கள் வார்த்தைப் பரிமாற்றத்தை இடைமறித்த வேணி,
"விஷ்வாவா? என்ன இன்னும் பேர் சொல்லிக் கூப்டுக்கிட்டு? 'என்னங்க' , 'அத்தான்' , 'மாமா' அப்டி எதாவது கூப்பிடு மஹி!" என்றிட, உடன் நின்றிருந்த நண்பர்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.
மஹிமா விஷ்வாவின் தோளில் முகம்புதைத்துக் கொண்டாள். விடாமல் இன்னும் கேலி செய்தனர் நண்பர்கள்.
அப்படி இப்படி என்று வரவேற்பு முடிந்து, வழியனுப்பும் நேரம் வந்தது.
கண்ணீர்மல்க மகளுக்கு விடைகொடுத்து அனுப்பினார் ராஜகோபால். பங்கஜம் அம்மாளுக்கும் அழுகை வந்தது.
"பாத்துக்கோப்பா" அவன் கைகளைப் பிடித்து அவர் சொல்ல, அவன் தீர்க்கமாக அவரைப் பார்த்து, "பாத்துக்கறேன்" என உறுதி கூறினான்.
வீட்டிற்கு வந்தபோதும் வரவேற்பு, விளக்கேற்றல் என சம்பிரதாயங்கள் தொடர்ந்தன. விஷ்வாவை மாடிக்கு அனுப்பிவிட்டு மஹிமாவைத் தனியாக அழைத்துச் சென்றனர் அன்னபூரணியும் வத்சலாவும்.
அவனது அறை அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. அலங்காரங்கள் அனைத்தையும் பார்த்தபடி அவன் அமர்ந்திருக்க, கதவு திறந்தது. அவள் உடை மாற்றிவிட்டு வந்திருந்தாள். தயக்கத்துடன் காலடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். வெண்ணிற சில்க் காட்டன் புடவை அவளை முல்லைப் பூக்குவியலாகக் காட்டியது. புன்னகைத்தபடி அவளை அருகில் அழைத்தான் அவன்.
"உன் ரூம் ரொம்ப அழகா இருக்கு விஷ்வா..."
"இன்னும் 'விஷ்வா' தானா?" அவன் முகத்தை சோகமாக வைக்க முயன்று தோற்றான்.
"விஷ்வாவை விஷ்வான்னு கூப்டாம வேற எப்படி கூப்டணும் விஷ்வா...?"
அவனருகில் அமர்ந்து அவன் கன்னத்தைப் பிடித்திழுத்தாள் அவள்.
"அத்தான்னு கூப்புடேன்... எனக்கது ரொம்ப நாள் ஆசை. அஞ்சுமுழம் மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு அத்தான்னு பொண்டாட்டி கூப்டா, அதவிட வேறென்ன வேணும் திருநவேலிக்காரனுக்கு?"
அவளை சரித்து மெத்தையில் சாய்த்து அவள் கண்பார்த்து காதல் பேசினான் அவன்.
"திருநெல்வேலிக்காரனா...?நான் சென்னைப் பொண்ணு... உன் மெரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். முடிஞ்சா கூப்ட வை பாக்கலாம்!"
அவளது பேச்சே அவனுக்குக் கள்ளூற்றியது. அவளது சவாலை ஏற்றுக்கொண்டவன் அவளைக் காதல்செய்யத் தொடங்கினான். அவனது முத்தங்கள் தந்த கிறக்கத்தில் மூழ்கியவள் இன்னும் வேண்டும் என்பதுபோல் கெஞ்சல் பார்வைகள் தந்தாள். அவனது முகத்திலிருந்தே அவனது தேவையைத் தெரிந்துகொண்டவள் மெல்லிய குரலில், "அத்தான்..." என்றழைத்திட, வெற்றிக் களிப்போடு மீண்டும் அவளுக்குள் மீளாவண்ணம் மூழ்கினான் அவன்.
****
காலை, அவனது அமைதி ததும்பும் முகத்தில்தான் விழித்தாள் அவள். அவன் நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டு எழுந்து சென்றாள். குளித்து உடைமாற்றி வந்தபோது, அவன் தன் அலமாரியில் எதையோ எடுத்துக் கொண்டிருக்க, அவனருகில் சென்றாள்.
"உனக்காக நான் எழுதின கவிதைகள் இதெல்லாம்... நம்ம ஸ்கூல் படிக்கும் போது இருந்து இப்ப, உன்னைப் பிரிஞ்சு இருந்த நாட்கள் வரை, நேத்து எழுதினது வரைக்கும்கூட... இனி உனக்கு தான்" என்றபடி ஒரு பெரிய குறிப்பேட்டை அவள் கையில் தந்தான் அவன்.
"என் கவிதைகள் எல்லாம் எப்போதும் உனக்காக மட்டும் தான்"
வியப்போடு அதை வாங்கித் திருப்பிப் பார்த்தாள் அவள். ஒவ்வொரு கவிதையும் அவளுக்காகவே செதுக்கப்பட்டிருந்தது.
'காணும்போதெல்லாம் இன்பம் தரும்,
உன் முகம் மட்டுமல்ல, உனக்காக
நான் எழுதும் கவிதைகள் கூட'
'மறைந்தாலும் வெப்பம் குறைவதில்லை,
மாலைச் சூரியனும், காதலி முகமும்'
'விண்ணிலிருந்து விழுந்துவிட்டாள்போல,
இத்தனை அழகோடு மண்ணில் எப்படிப் பிறந்திருப்பாள் இவள்?'
ஒவ்வொன்றாகப் படித்துப் பூரித்தாள் அவள்.
"நானும் உனக்கு ஒன்னு தரணும்" என்றவாறு தன் துணிகளுக்கிடையிலிருந்து ஒரு நோட்டை எடுத்துத் தந்தாள்.
"உனக்கு ஞாபகம் இருக்கா? நான் காதல் கதைன்னு ஒண்ணு எழுத ஆரம்பிச்சேனே.."
அவள் பேச்சைக் கேட்டுத் தலையாட்டிக்கொண்டே அதைத் திறந்து படித்தான் அவன்.
எத்தனை நாள் ஒரு காதல் கதை எழுத ஆசைப்பட்டிருப்பேன்... என்னை என் காதல் கதையையே எழுத வைத்தாய் நீ. அழகான காதலை எழுதப் பார்த்தேன். அதற்காக உலகைத் தேடிப் பார்த்தேன். மாந்தர் பார்த்தேன், மரம் செடிகொடி பார்த்தேன், புள்ளினங்கள் பார்த்தேன், பூமியும் பார்த்தேன். இறுதியில் உன்னைப் பார்த்தேன், என் நெஞ்சின் ஆழத்தில்.
நம்மைவிட அழகான காதல்தான் எங்கும் உண்டா விஷ்வா? என்னோடு நீயிருந்த நாட்கள், நீளும் இரவுகள், விடிந்தும் விலகாத மயக்கங்கள், யாவும் அழகல்லவா? ஊடலும் கூடலும் ஒருசேர நிகழ்த்தும் காதலல்லவா நமது? ஒரு கண்ணில் கோபப் பார்வை, மறுகண்ணில் காதல் பார்வை. உன்னை உணர்ந்த நிமிடம் உலகமே காதல் மயம் எனக்கு.
விஷ்வா.. காதலிக்கத் தெரியாத எனக்குக் காதல் பாடங்கள் சொன்னவன் நீதான். அன்பின் பேராற்றலை உணரச் செய்தவனும் நீதான். காதலால் பூமியில் மாற்றங்கள் நேருமென்றால், முன்னால் சிரித்திருப்பேன்.. இப்போது உணர்கிறேன் உண்மையென.
காதலில் விழுந்த நாள் நினைவில்லை எனக்கு. நினைவில் உள்ளதெல்லாம் உன்னைக் கண்ட முதல் தினம்தான். நீயற்ற வாழ்வை நினைத்தும் பார்த்ததில்லை. நினைக்கவும் போவதில்லை. என் ஆவி நீ, ஆயுள் நீ, ஆதியும் நீ, அந்தமும் நீ. ஒவ்வொரு நாளும் உன் ஒரு வார்த்தைகக்காகக் காத்திருந்த நிமிடங்கள் கடந்து, இன்று வாழ்வெல்லாம் உன்னோடுதான் என்ற நாள் வந்தபோது, வார்த்தையில்லை என்னிடம்...
வாழ்நாள் எல்லாம் இன்பம் இன்பம் இன்பம் மட்டும் வேண்டும். நீ மட்டும் வேண்டும். நம் உலகத்தில் நாம் மட்டும் வேண்டும். இருப்போமா?
கண்களில் காதல் மின்ன, அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான் அவன்.
அவனது அணைப்பில் மெய்மறந்து நின்றிருந்தாள் அவள்.
*
*
*
முற்றும்.
With love,
Madhu_dr_cool
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top