49
உயிர்மெய்
வீட்டிற்குச் செல்ல இழுத்த மஹிமாவின் கையை மெதுவாக விடுவித்தான் அவன்.
"நான் வரல மஹிமா"
அவன் கூறிவிட்டு அப்படியே நிற்க, அவள் குழப்பத்தோடு அவனை திரும்பிப் பார்த்தாள்.
"நான் உன்னைக் காதலிக்கறதும் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறதும் உனக்கும் எனக்கும் வேணா சரியா இருக்கலாம். ஆனா நம்ம வீட்ல...?" என இழுத்தான் அவன்.
மஹிமாவுக்குக் குழப்பமும் கோபமும் வந்தது.
"என்ன பேச்சு இது விஷ்வா? ஏன் நீ இப்டிலாம் யோசிக்கற? எதுவா இருந்தாலும் வழியில பேசலாம். ப்ளீஸ் வா."
அவள் பதற்றம் கண்களில் தெரிந்தது. 'ஏன் இவன் இப்போது இதையெல்லாம் பேசுகிறான்' என்று மனதுக்குள் புலம்பினாள் அவள்.
அவன் கையைப் பிடித்து அவள் அழைக்க, மீண்டும் மெல்ல அதை விடுவித்துக்கொண்டு,
"நீ வீட்டுக்குப் போ.. நான் இப்ப வரல. வேலை தேடப் போறேன். உன்னைக் கட்டிக்கறதுக்கு எப்ப எனக்குத் தகுதியிருக்குன்னு தோணுதோ, அப்ப நான் வர்றேன்.." என்றவாறு தன் பையை எடுத்துக் கொண்டு நகர முயன்றான் அவன்.
அவள் அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.
"வி..விஷ்வா.. இப்படி திடீர்னு விட்டுட்டுப் போனா..நான் என்ன...நான் என்ன விஷ்வா பண்ணுவேன்?"
அவள் குரல் தழுதழுத்தது. ஆனாலும் அவன் பேச்சிலிருந்த நியாயம் அவளை வேறெதுவும் செய்யவிடாமல் தடுத்தது.
அவனது கண்களும் கலங்கியது. வேகமாக வந்து அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டான் அவன்.
"சாரி மஹி.. நான் இந்த முடிவை எப்பவோ எடுத்துட்டேன். கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா, உன்னைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஆனா அது ரெண்டு ஃபேமிலியோட சம்மதத்தோட நடக்கறதுதான் கரெக்ட். அதுக்கு நான் தகுதியானவனா இருக்கணும். என்னதான் காதல் இருந்தாலும், எனக்குன்னு ஒரு அடையாளம் இல்லாம கல்யாணம் செஞ்சா சரிவராது. இதை.நான் முதல்லயே சொல்லியிருந்தா நீ என்னை விட்டிருக்க மாட்ட... அதான் சொல்லலை. கவலைப்படாத மஹி. நீ போ. பத்தரமா போ. எப்பவும் உன்னைத் தனியா விடமாட்டேன் நான். உனக்காக நான் கண்டிப்பா வருவேன்"
அதோடு அவளை விட்டுவிட்டு அவன் நில்லாமல் நடந்தான். ஒருமுறை திரும்பிப் பார்த்து சிரித்தான். அவன் செல்வதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
வாய்பொத்தி அழுதவள் பின் மனதின்றி வந்து தன் விமானத்தில் ஏறிக்கொண்டாள். கண்கள் வழியெங்கும் அருவி பொழிந்தன.
அவளது விமானம் சென்னையில் தரையிறங்கியபோது மணி இரவு பத்தரை. சொந்த ஊர்க் காற்று முகத்தில் வீச, ஒரு நொடி கவலைகள் அனைத்தும் மறந்து குழந்தைபோல் சிரித்தாள் மஹிமா.
வரவேற்புப் பகுதியில் அப்பா ராஜகோபாலனும் பங்கஜம் அம்மாளும் நின்றிருந்தனர். அவர்களை ஓடிச்சென்று கட்டித் தழுவிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் அவள். அவள் தலையை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தார் அப்பா. கண்ணில் பெருமிதமும் பாசமும் தெரிந்தது.
"ஓரு வருஷத்தில ஆளே மாறிட்ட டா" பங்கஜம் அவளுக்கு கையாலேயே திருஷ்டி சுற்றினார். வழியெல்லாம் வாய் ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தனர் இருவரும். அவர்களுக்கு சுருக்கமாகவே பதில் கூறினாள். வீட்டுக்கு வந்ததும் ஆரத்தி எடுத்து அவளை வரவேற்றனர்.
"இதெல்லாம் எதுக்கு" என்று அவள் மெல்லிய மறுப்புத் தெரிவித்ததை யாரும் பொருட்படுத்தாமல் அவள் திரும்ப வந்ததை ஏதோ விழா போல சிறப்பித்தனர்.
வரவேற்பெல்லாம் முடித்து உள்ளே சென்றதும் அவர்களுக்கு வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைப் பிரித்து எடுத்துக் கொடுத்தாள். அப்பாவுக்கு Hamilton கைக்கடிகாரம், பங்கஜம் அம்மாவுக்கு ரோஸ் கோல்டில் வளையல், வீட்டில் மாட்ட டவர்பிரிட்ஜ் படங்கள் எனப் பார்த்துப் பார்த்து வாங்கியிருந்தாள் அவள். பொருட்களைப் பிரிக்கும்போது உள்ளிருந்து மர நகைப்பெட்டி வந்து விழுந்தது.
*
"Will you marry me, Vishwa?"
*
தன் கையில் மாட்டியிருந்த மோதிரத்தை வாஞ்சையாகத் தடவிப் பார்த்தாள் அவள். கண்கள் பனித்தன. அவனது நினைவு அகலாமல் வாட்டியது அவளை.
'I miss you' என்று குறுஞ்செய்தி அனுப்பினாள் அவனுக்கு. உடனே அவனிடமிருந்து பதிலும் வந்தது.
'Me more. I love you. Take care'.
லேசான விசும்பலாகத் தொடங்கி அழுகையாகப் பிரவாகம் எடுத்தது கண்ணீர். அப்போது அறைக்கு பங்கஜம் அம்மாள் வர, அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினாள்.
"இந்தா பாப்பா... ஸ்வீட் சாப்பிடு. உனக்காக பார்த்துப் பார்த்து செஞ்சேன் நான். சாப்பிட்டு சீக்கிரம் தூங்கு. மணி பன்னெண்டு ஆச்சு... உனக்குத் தூக்கம் வரல?"
"இல்ல.. ஜெட்லாக் மா. அதான்"
"ஜெட்டு லாகா...அப்படின்னா?"
"லண்டன்ல இப்ப மணி ஆறரை. இந்நேரம் டிவி பாத்துட்டு கதை பேசிட்டு இருப்போம்."
"கதை பேசிட்டா? யாரோட?"
நாக்கைக் கடித்துக் கொண்டாள் அவள்.
'உளறாதே மஹிமா'
"அ..அது, பக்கத்து வீட்டு குட்டீஸ்கூட.."
"ஓ.. சரிமா நீ ரெஸ்ட் எடு. நாங்க போறோம்"
அவர் சென்றதும் அப்பாவின் அறைக்குச் சென்றாள் அவள்.
"அப்பா.."
கட்டில் அருகில் நின்றிருந்தவர் அவள் குரல்கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
"வா மஹிம்மா. என்னடா?"
"இல்லை...நான் வீட்டுக்கு வந்துட்டேன். இன்னும் நீங்க அடுத்து என்னன்னு எங்கிட்ட பேசலலயே?"
"அதுக்கென்னடா அவசரம்? காலைல பேசலாம். நீ டையர்டா இருப்பனு தான் எதுவும் பேசல. உனக்கு எங்கிட்ட எதாவது சொல்லணுமா டா?"
"அது.. ப்ச், இல்லப்பா... காலைலயே பேசிக்கலாம். குட்நைட்"
"குட்நைட் மஹிம்மா"
------------
மஹிமாவைப் பிரிந்தவன் கனத்த மனதுடன் பெங்களூர் விமானத்தைத் தேடிச் சென்றான். ஏற்கனவே தனது நண்பனான பரத்திடம் இதுபற்றி பேசியிருந்தான். பெங்களூரில் இறங்கி ரிசெப்ஷனை அடைந்தபோது, அவனுக்காகக் காத்திருந்ததுபோல வந்து அணைத்துக்கொண்டான் அவன்.
"காதலுக்காக எவ்ளோ பெரிய தியாகத்தை பண்ணியிருக்கடா நீ! நினைச்சா புல்லரிக்குது எனக்கு! அந்தப் பொண்ணு லக்கி தான் ரொம்பவே!"
"மஹிமாவை லவ் பண்ணதுக்கு, நான்தான் லக்கி பரத். அவ என் பொக்கிஷம்."
"சரி, ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரிதான். இப்ப என்ன, கல்யாணத்துக்கு முன்னால நல்ல வேலை ஒண்ணு வேணும், அவ்ளோதான? என் ஃப்ரெண்டு கிட்ட உன்னைப் பத்தி சொன்னேன். உன் கதையை கேட்டு பயங்கரமா இம்ப்ரெஸ் ஆகிட்டாரு மனுஷன். நீ லண்டன் கான்ஃபரன்ஸ்ல கூட ஏதோ சாஃப்ட்வேர் ட்ரிக்ஸெல்லாம் செஞ்சியே.. அதையும் சொன்னேன். உனக்கு பூனாவுல வேலை தர்றார் அவரு.."
நாத்தழுதழுக்க அவனை அணைத்துக்கொண்டான் விஷ்வா.
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பரத்! உன்னோட இந்த உதவியை மறக்கவே மாட்டேன்!"
"இருக்கட்டும்டா.. நீ உடனே பூனாவுக்கு கிளம்பு."
"அ.. பரத்.. நான்.. உடனே போகணுமா?"
"என்னடா, என்னாச்சு?"
"இல்ல.. வீட்டைப் பார்த்தே.. மாசக்கணக்காச்சு.. அண்ணாவை.. அம்மாவை.."
"அச்சோ.. சரி பரவால்லடா, நீ வீட்டுக்குப் போயிட்டு, அப்புறமாவே கிளம்பு. நான் சொல்லிக்கறேன். டேக் கேர்."
***
அடுத்துக் கிடைத்த விமானத்தில் சென்னைக்கு வந்தான் அவன். வீட்டை அடைந்த போது நடுநிசி ஆகியிருந்தது. அவனது வீதி இரவிலும் வெளிச்சமாகவே இருந்தது.
'ஒரு வருஷத்தில எதுவுமே மாறல..' தனக்குள் பேசிக்கொண்டே வீட்டை அடைந்தான் அவன்.
கேட் பூட்டியிருந்தது. தான் வருவதை அண்ணனிடம் சொல்லவில்லை அவன். இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்திருந்தான்.
ஆனால் இப்போது எப்படி உள்ளே போவது?
ஒரு யோசனை வந்தது அவனுக்கு. பைகளை பத்திரமாக எடுத்து மதில்மேல் வைத்துவிட்டு, காம்ப்பவுன்ட் சுவரைத் தாண்டிக் குதித்தான். உற்சாகமாக வாசல் வரை வந்தவன், கதவைத் தட்ட கையெடுத்து, அதைப் பாதியில் நிறுத்தினான்.
'இந்த நேரத்தில்... எப்படிக் கதவைத் தட்டி அழைப்பது?'
அவன் தயங்கித் திரும்ப, கேட்டில் பளீரென்ற வெளிச்சத்தோடு வந்து நின்றிருந்தது ஒரு ஸ்கார்ப்பியோ கார்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top