39
வீசு பூங்காற்றே
வேணி அடுத்த நாள் காலையிலேயே இருவரிடமும் விடைபெற்று பாரிஸ் சென்றுவிட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மீறிய கூட்டம் லண்டன் சாலைகளில் தென்பட்டது. வேணியை விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு, மஹிமாவையும் விஷ்வாவையும் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தது கால்-டாக்சி.
மஹிமா விஷ்வாவைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தாள்.
"விஷ்வா... நீ இன்னும் அத மறக்கலையா?"
"ம்..என்ன?"
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா ஓசைகேட்டுத் திரும்பினான். "எதை மறக்கலையா?"
"நடிக்காத... நாம ஸ்கூல்ல படிச்சப்ப நான் கதை எழுதினத உங்கிட்ட சொல்லல..அதை நீ மறந்துட்டன்னு நெனைச்சேன்"
"அத உன்ன குத்திக் காட்டணும்னு நான் சொல்லல மஹி... அவளுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்னு சொன்னேன். நீதான சொல்லுவ, வாழ்க்கைல சில பக்கங்கள் பர்சனல்னு.. அதைத்தான் மீன் பண்ணேன். அவ்ளோதான்."
"என்மேல கோபம் இல்லயே?"
"என்ன மஹி, இதுக்கு எதுக்கு நான் கோபப்படப் போறேன்?"
அவன் புன்னகைக்க, அவள் நிம்மதிப் பெருமூச்சுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
"எனக்கு நாளைல இருந்து காலேஜ் ஸ்டார்ட் ஆகுது விஷ்வா... ஆமா, நான் காலேஜ் போயிட்டா நீ என்ன பண்ணுவ?"
"என்ன பண்ணுவேன்? ம்... நல்லா ஊர்சுத்துவேன்... லண்டன்ல நிறைய நைட் க்ளப் இருக்காமே.. சரக்கும் சைட்டும் தான் இனி!"
அவன் கையில் ஓங்கிக் குத்தினாள் அவள்.
"புத்திய பாரு! விஷ்வா.. ஒழுங்கா நான் க்ளாஸ் போயிட்டு வர்ற வரைக்கும் வீட்டில சமர்த்தா இருக்கணும். எங்கயாச்சும் அந்த மாதிரி எடத்துக்குப் போனன்னு தெரிஞ்சது..."
"ஏ... சும்மா சொன்னேன். சரி, காலேஜ்க்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டயா?"
"ம்.. வாங்கியாச்சு. இன்னிக்கு ஃபுல்லா ஃப்ரீ தான். எங்கயாச்சும் வெளிய ஊர் சுத்தப் போலாமா?"
"காலேஜ்ல இருந்த மாதிரியா?" எனக் கேட்டுச் சிரித்தான் அவன்.
விஷ்வாவின் யோசனை பேரில் இருவரும் Madam Tussauds museum என்னும் மெழுகுச் சிலைக் காட்சியகத்துக்குச் சென்றனர். நேரம் போவது தெரியாமல் இருவரும் அங்கே உயிருள்ள மனிதர்கள் போலவே இருந்த மெழுகுச் சிலைகளைப் பார்த்து வியந்தனர்.
ஆபிரகாம் லிங்கன் முதல் நம்மூர் தீபிகா படுகோன் வரையில் அனைத்துப் பிரபலங்களில் சிலைகளும் அங்கே இருந்தன.
அவளுக்குப் பிடித்த சிலைகளுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாள் மஹி. விஷ்வாவும் ஓரிரு சிலைகளைத் தனியாக புகைப்படம் எடுத்தான். இருவருமாக நின்று நிறையவே புகைப்படங்கள் எடுத்தனர். மதியம் மூன்று மணிக்கு இருவரும் வெளியே வர, அப்போது தான் இருவருக்கும் மதிய நேரமானது தெரிந்தது.
அப்போது வரை தெரியாத பசி இப்போது வயிற்றைக் கிள்ள, இருவரும் சாலையின் எதிரிலிருந்த ஒரு இத்தாலியன் உணவகத்திற்குச் சென்றனர். பாஸ்தா, லசான்யா என தாராளமாக ஆர்டர் செய்தாள் மஹிமா.
ஆசைதீர சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவர்கள் கண்ணில் பட்டது H&M. சென்னையில் பார்த்திருந்தாலும், அதன் தாயகத்தில் அந்த உயர்தர ஆடையகத்தைக் கண்டதும் உள்ளே செல்ல விரும்பினர் இருவரும். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும் அவர்களுக்கு எண்ணம் புரிந்தது. உள்ளே சென்று வியப்போடு அங்கிருந்த ஆடை அணிவகுப்பை ரசித்தனர் இருவரும்.
வெளியே வரும்போது மஹிமா கையில் எட்டு பைகள், விஷ்வாவிடம் மூன்று. மணி ஐந்துக்கும் மேலாகியிருந்து. நகராட்சி அலுவலகம் சென்று விஷ்வாவுக்கு travel card ஒன்று வாங்கிக்கொண்டு, அவனது விசா எக்ஸ்டென்ஷனுக்கு விண்ணப்பித்து விட்டு, இருவரும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து Muswell hill செல்லும் பேருந்தில் ஏறினர். தங்களது நிறுத்தம் வந்ததும் பைகளை எடுத்துக்கொண்டு இறங்கி நடக்கத் தொடங்கினர்.
நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு அரை கிலோமீட்டர் தூரம் இருந்தது. ஏற்கனவே காட்சியகத்திலும், கடைகளிலும் சுற்றியலைந்ததால் மஹிமாவின் கால்கள் சோர்ந்து இருந்தன. நாலெட்டு வைத்ததும், அதற்குமேல் நகர மறுத்தன.
"விஷ்வா... முடியலப்பா"
பைகளைத் தரையில் வைத்துவிட்டு முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்துகொண்டாள் அவள்.
"இன்னும் கொஞ்ச தூரம்தான் மஹி, வா. சீக்கிரம் நடந்தா சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்"
"ம்ஹூம்... கால் ரொம்ப வலிக்குது... ஊபர் கார் கூப்டலாமா?"
"இந்த தூரத்துக்கு ஊபர் கூப்டா ஊரே சிரிக்கும். பத்தே ஸ்டெப் தான். பல்ல கடிச்சிட்டு நடயேன்.."
"உனக்கு மட்டும் டயர்டே ஆகாதா.."
அவள் சிணுங்க, ஒருநொடி யோசித்தவன், நெருங்கி வந்து அவளை அப்படியே தூக்கிக் கொண்டு நடந்தான்.
வியப்பில் வாய்பேசாமல் அவனையே பார்த்தாள் அவள். வீடு வந்ததும் அவளை இறக்கிவிட்டுவிட்டு, ஏதுமறியாதவன் போல நின்றான் அவன். அவளும் புன்னகையுடன் ஏதும் பேசாமல் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
வாங்கிய உடைகளை எல்லாம் சரிபார்த்து எடுத்து வைத்தாள் அவள். விஷ்வாவும் தனக்கு வாங்கியதை அலமாரியில் அடுக்கினான். எத்தனை நாள்தான் அவன் கொண்டுவந்த நான்கு சட்டைகளையே மாற்றி மாற்றி அணிவது!
வரவேற்பரை சோஃபாவில் மஹிமா அமர்ந்திருந்தாள். அங்கு விஷ்வா வர, அவனையும் அமரும்படி சைகை காட்டினாள் அவள்.
"இன்னும் டயர்டா இருக்கா?" என்றவாறு அவளெதிரே அமர்ந்தான் விஷ்வா.
"ஆமாப்பா.. கால்தான் பயங்கர வலி! இவ்ளோ நடந்ததே இல்லை நான்.. எப்டிதான் நீ டயர்டாகாம நடக்கறயோ.."
"கால நீட்டு... நான் அமுக்கி விடறேன். கொஞ்சம் நல்லா இருக்கும்"
"ஏ.. சேச்சே.. அதெல்லாம் எதுக்கு நீ செய்ற.."
"பரவால்ல மஹி.. இதுல என்ன இருக்கு.. சும்மா நீட்டு."
அவனை அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்து பிடித்துவிடத் தொடங்கினான். இதமாக இருந்தாலும், அவன் தீண்டும்போது புல்லரித்தது அவளுக்கு. அதை முகத்தில் காட்டாமல் கண்மூடி அமர்ந்திருந்தாள் அவள்.
சில நிமிடங்கள் கழித்து,
"இப்ப பரவால்லயா?"
அவன் குரலில் டக்கென்று விழித்தாள் அவள்.
"ம்..பெட்டர். தேங்க்யூ"
"ம்... நைட் டின்னருக்கு என்ன பண்ணப் போறோம்?"
"நான் சமைக்கறேன் விஷ்வா"
"எது, பாலும் ப்ரெட்டுமா? எப்டிதான் அதுமட்டும் சாப்டு உயிர் வாழறயோ! மனுஷன் சாப்பிடுவானா அத?"
"சரி, வேற என்ன பண்ணலாம்?"
"அரிசி உப்புமா தெரியுமா?"
"என்னது?"
"எங்க அம்மா செய்வாங்க. ஈஸியா அஞ்சு நிமிஷத்துல செய்லாம். நான் போய் தேவையான பொருட்கள் மட்டும் வாங்கிட்டு வர்றேன்"
விஷ்வா சொல்லிவிட்டுச் சென்ற பத்தாவது நிமிடம் திரும்பி வந்தான்.
அன்றைய இரவு உணவு எளிமையாக விஷ்வாவின் கைவண்ணத்தில் ருசித்தது.
"ம்... ஆஹா.. சும்மா சொல்லக்கூடாது.. நளபாகம் தான்"
"ஐயே... நீயே உன்ன புகழ்ந்துக்கற! நான் சொல்லணும் அதை!"
"நீதான் சொல்ல மாட்டயே.. "
சிரித்ததில் புரையேறியது அவளுக்கு. தலையில் தட்டிவிட்டு தண்ணீரைக் கொண்டுவந்து தந்தான் அவன்.
உணவருந்திவிட்டு, சிறிதுநேரம் இருவரும் தொலைக்காட்சியில் ஓடிய ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். விளக்குகளை அணைத்து theatre effect கொடுத்தான் அவன். தொலைக்காட்சி வெளிச்சம் மட்டுமே இருவர் மீதும் விழ, விஷ்வா அவளருகில் நெருங்கி அமர்ந்திருந்தது அவளுக்குப் புதுமையாக இருந்தது. எப்போதும் அப்படி அமர்ந்தாலும், இன்று ஏனோ மந்த வெளிச்சத்தில், ஆளற்ற வீட்டில் தனியாக அவனருகில் இருப்பது உறுத்தியது. எண்ணங்களை கலைக்க முயன்றவாறு படத்தைப் பார்த்தாள் அவள்.
திரையில் கதாநாயகி நாயகனை அணைத்துக் கொண்டு முத்தமிடத் தொடங்கினாள்.
விஷ்வா அவளைக் குறும்பாகத் திரும்பிப் பார்த்தான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top