37

உனக்காக...

மஹிமாவுக்காக ஒத்துக்கொண்டாலும், அந்த முடிவின் நிகழ்தகவும் நிதர்சனமும் அவனைக் கவலைப்படுத்தின.

விஷ்வா முகத்தில் தெரிந்த கவலைகளை மஹிமா கவனிக்காமல் இல்லை. தனக்காக மட்டுமே அவன் தங்க சம்மதித்தான் என்பதை அவள் அறிவாள்.

"விஷ்வா... அண்ணன்கிட்ட பேசு விஷ்வா. அவங்ககிட்ட கோவிச்சுகிட்டு எப்படி நீ நிம்மதியா இங்க இருப்ப?"

"அண்ணன்கிட்ட என்னன்னு சொல்லறது? அண்ணி வேற. இன்னும் மூணு மாசத்துல அண்ணிக்கு டெலிவரி. நான் பேசினா அவங்க திட்டக் கூட மாட்டாங்க, வருத்தப்படுவாங்க மஹி"

"ஒருதடவை பேசித்தான் பாரேன் விஷ்வாபாய்..."

இன்னும் சில கெஞ்சல்களும் கொஞ்சல்களும் சேர்ந்து அவனை சம்மதிக்க வைத்தன. சரியென்று வீட்டிற்கு அழைத்தான் அவன்.

"ஹலோ..?"

அண்ணனில் குரல் கேட்டு கல்லாய் உறைந்திருந்தான் விஷ்வா.

'பேசு' மஹி அவன் தோளில் சாய்ந்துகொண்டு சைகை காட்டினாள்.

"அ... அண்ணா.."

மறுமுனையில் சிறு மௌனம். பின்னர் அதிர்ச்சியுடன் அவரது குரல் கேட்டது.

"விஷ்வா?!"

"அண்ணா!"

"விஷ்வா... எங்க இருக்க விஷ்வா? எப்டி இருக்க விஷ்வா? நாலு நாளாச்சு...நாங்க எல்லாம் எப்டி பயந்துட்டோம் தெரியுமா?"

"அண்ணா... நான் லண்டன்ல இருக்கேன் அண்ணா. மஹிமாவை பார்க்க வந்தேன்"

"நாங்க அவ்ளோ சொல்லியும் நீ கேக்கல... அவள பாத்தியா?"

"ம்.. பாத்தாச்சு, பேசியாச்சு, சமாதானமும் பண்ணியாச்சு."

"சரி. அப்றம் அங்க என்ன வேலை? சீக்கிரம் கிளம்பி வா. நான் அம்மாவையும் அப்பாவையும் சமாதானம் சொல்லி வச்சிருக்கேன். நீ உடனே வாடா இங்க"

"யாருங்க ஃபோன்ல? விஷ்வாவா?"

"இந்தா பேசு. அவன் நாம நினைச்ச மாதிரித்தான் லண்டன் போயிருக்கான்"

"விஷ்வா... கொழுந்தனாரே... ஹலோ?"

மீண்டும் பேச்சற்றுப் போனான் விஷ்வா. கஷ்டப்பட்டு வார்த்தைகளை வரவழைத்தான்.

"அண்ணி... எப்டி இருக்கீங்க?"

"விஷ்வா... எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டீங்களே"

"சாரி அண்ணி... ஏதோ அவசரத்தில"

"காதல் கண்ணை மறைச்சிடுச்சுன்னு சொல்லுங்க!"

ஒப்புகையாகச் சிரித்தான் அவன்.

"சரி, அந்தப் பொண்ணு ரொம்பக் குடுத்து வச்சவ. அவளுக்காக பாதி உலகத்தக் கடந்து ஒருத்தன் வந்திருக்கானே"

தன் அணைப்பில் அமர்ந்திருந்த அந்த அதிர்ஷ்டசாலியை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் விஷ்வா. பின் மெல்லிய புன்னகையுடன்,

"அவளை லவ் பண்ண நான்தான் குடுத்து வச்சிருக்கணும் அண்ணி" என்றான்.

மஹிமா புரிந்துகொண்டு அவன் இடுப்பில் இடித்தாள்.
'சும்மா சொல்லாத விஷ்வா'

"சரி, எப்போ திரும்பி வர்றீங்க விஷ்வா?"

"இல்ல அண்ணி... நான் இங்கயே... கொஞ்ச நாள்..."

"சரி, சுத்திப் பாத்துட்டு ஒரு வாரத்துல வந்துருங்க.."

"அது... நான் இங்கயே.."

"என்னடா விஷ்வா சொல்ற? உனக்கென்ன பைத்தியமா? உன்னோட டூரிஸ்ட் விசா ஆறு மாசம்தான் செல்லும். அதுக்குள்ள நீ இங்க வரலன்னா என்ன நடக்கும்னு தெரியுமா? அதுமட்டும் இல்ல...உன்னோட ஃப்யூச்சர், கரியர் எல்லாம் என்ன ஆகறது?"

"அண்ணா... நான் பாத்துக்கறேண்ணா. எனக்கு உங்க சப்போர்ட் மட்டும் போதும். அம்மா அப்பா கிட்ட இப்ப எதுவும் சொல்லவேணாம். நான் வெளியூருக்கு வேலைக்கு போயிருக்கேன்னு சொல்லிடுங்கண்ணா"

"கொழுந்தனாரே... இது உங்க வாழ்க்கை, உங்க முடிவு. பார்த்து முடிவெடுங்க"

"சரி அண்ணி... சரிண்ணா. வச்சிடறேன்"

"ம்.. ஜாக்கிரதைடா."

பெரிய பாரம் மனதிலிருந்து அகன்றதாக உணர்ந்தான் அவன். அதற்குக் காரணமாவளை ஆரத் தழுவிக்கொண்டான்.

"விஷ்வா... அண்ணன் கேட்ட கேள்வில எனக்கு கஷ்டமா இருக்கு. நான் உன்னோட ஃப்யூச்சர், கரியர் பத்தியெல்லாம் யோசிக்காம, ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்னு தோணுது"

"ஏன் அப்டி யோசிக்கற? ஒரு வருஷம் தானே. என்னோட கரியர் ஒண்ணும் ஆகிடாது."

"நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறேனா விஷ்வா?"

"நீ என்னை நம்புற மஹி. எனக்கு தான் முக்கியம். அதுபோதும் எனக்கு. உனக்காக இன்னும் எத்தனை வருஷம் வேணாலும் வெய்ட் பண்ணுவேன்"

விஷ்வாவின் வார்த்தைகளில் உருகிப் போனாள் அவள். அவனை அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தங்களை அழுத்திப் பதித்தாள்.

சந்தோஷத்தில் திளைத்திருந்தபோது மஹிமாவின் கைபேசி அடித்தது. இருவரும் அதைக் கண்டு முகம்மாறினர். ராஜகோபால் அழைத்திருந்தார்.

விஷ்வா பார்த்தவாறு நிற்க, மஹிமா தயங்கிக் கொண்டே அதை எடுத்தாள்.

"அப்பா... சொல்லுங்கப்பா."

"மஹிமா... என்ன, எழுந்திரிச்சாச்சா?"

"ஓ...அஞ்சு மணிக்கே எழுந்துட்டேனே"

"சரிடா... நீ லேட்டா எழுந்திருப்பனு தான் இப்ப கூப்டேன். உன் ஃப்ரெண்ட் வேணி கால் பண்ணிருந்தா மஹிம்மா."

"வேணியா? ஆமாப்பா அவகிட்ட என்னோட ஃபோன் நம்பர் இல்ல. அதான் வீட்டுக்கு கூப்டிருக்கா. என்னவாம் அவளுக்கு?"

"அவ பாரிஸ்ல படிச்சிட்டு இருந்தால்ல? இப்போ படிப்ப முடிச்சாச்சாம். அவ எல்லாரையும் மீட் பண்ண வர்றாளாம். அதான் உன்கிட்ட சொல்றதுக்காக கூப்டிருக்கா"

"ஓ..."

"நீ லண்டன்ல இருக்கன்னு சொல்லி உன்னோட நம்பர் குடுத்துருக்கேன்டா. வேணி உன்ன கூப்டாலும் கூப்பிடுவா"

"அ.. அப்டியாப்பா? சரிப்பா. நான் பாத்துக்கறேன்."

"மஹிம்மா.. உனக்கு அங்க எதும் பிரச்சனை இல்லையே?"

"அதெல்லாம எதுவும் இல்லப்பா. நீங்க உடம்பப் பாத்துக்கோங்க. நான் அப்றம் பேசறேன்."

அவள் அலைபேசியை வைத்தவுடன், அங்கே அவள் தந்தை ராஜகோபால் அலுத்துக்கொண்டார்.

'இங்க இருக்கும்போது கூட ஒரு நாளைக்கு நாலு மணிநேரம் பேசுவோம். லண்டன் போய் நம்ம ஞாபகமே வர்றதில்ல போல. பத்து நிமிஷம் பேசறதுக்குக் காசு கேப்பா போல. என்னவோ...'

அருகில் நின்ற விஷ்வாவிடம் விஷயத்தைச்  சொன்னாள் மஹிமா. அவன் பயம் நீங்கி ஒரு பெருமூச்சு விட்டான்.
"அவ்ளோ தானா?"

அதற்குள் மீண்டும் அவனது கைபேசி அடித்தது.

பரத் அழைத்தான்.

"சொல்லு பரத்.... நான் வரல பரத்... நான் இங்கயே மஹியோட...அது... சரி ஓகே... அ.. நான் பாத்துக்கறேன். நீங்க பத்திரமா  ஊருக்குப் போங்க. பை"

பேசிவிட்டு சோர்வாக சோஃபாவில் அமர்ந்தவனை ஏறிட்டாள் அவள்.

"இன்னிக்கு என்ன ஓரே ஃபோன் காலா வருது?"

அவள் சொல்லி முடிக்கும்முன், அவளது கைபேசி அடித்தது.

'இப்ப யாரு?'
கேள்வியோடு அவன் பார்க்க, மஹிமா அதை எடுத்துக் காட்டினாள். புது எண்ணாக இருந்தது.

"ஹலோ!"

"ஹெல்லோ மஹிமா! வேணி பேசறேன்"

"ஹாய் வேணி...எப்டி இருக்கடா?"

"ஐம் ஃபைன். நீ எங்க திடீர்னு லண்டனுக்கு?"

"ஒரு ACCOUNTANCY course , LSCல.. இங்க தான் ஒரு வருஷம் இருப்பேன்"

"ஓ.. உங்க வீட்டு நம்பர்க்கு கூப்டேன். அவங்கதான் இந்த நம்பர் குடுத்தாங்க"

"ம்...அப்பா சொன்னார்..."
பேசிக்கொண்டே திரும்பியவள் விஷ்வா அவளைப் பார்த்துக்கொண்டே இருந்ததைப் பார்த்தாள்.

'என்ன' என்பதுபோல் புருவங்களைத் தூக்கிக் காட்டினாள்.

'ஒன்றுமில்லை' எனத் தலையசைத்துவிட்டு அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் பேசிவிட்டு, அலைபேசியை வைத்தாள் அவள்.

"விஷ்வா... இன்னிக்கு சாயங்காலம் வேணி இங்க வர்றாளாம்"

"வேணியா... ஏன்?"

"அவ பாரிஸ்ல தான படிச்சா.. இப்ப படிப்பு முடிஞ்சதாம். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி நம்மள பாத்துட்டுப் போலான்னு..."

"நான் இங்க இருக்கறது அவளுக்குத் தெரியுமா?"

"ஸர்ப்ரைசா இருக்கும்னு சொல்லல"

"அட, சரி... நம்ம விஷயமாவது தெரியுமா?"

"ம்ஹூம்..."

"என்ன மஹி?" என சலித்துக்கொண்டான் அவன். அவள் வினோதமாகப் பார்த்தாள்.

"உனக்கு ஏன் அவ மேல பயம்?"

"எனக்கு அவமேல பயமா? யார் சொன்னா?"

"அப்றம் ஏன் இப்படி டென்ஷன் ஆகற? அவளுக்குத் தெரிஞ்சா என்ன? அவளும் நம்ம ஃப்ரெண்ட் தானே?"

விஷ்வா அதிருப்தியாகத் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றான்.

————————————————

மஹிமாவும் விஷ்வாவும் தமிழை தேர்வுமொழியாகப் படித்தபோது, ஜோஷியும் வேணியும் ப்ரெஞ்ச் மொழி படித்தனர். அவர்களது தயவால் மஹிமா கூட ஓரிரு வார்த்தைகள் ப்ரெஞ்ச்சில் கற்றுக்கொண்டாள்.

பள்ளியில் படித்த ப்ரெஞ்சை வைத்தே மூன்று ஆண்டுகள் பாரிஸ்ஸில் பிழைத்துவிட்டாள் வேணி. அவர்களது குடும்பமும் அடிக்கடி வந்து அவளைப் பார்த்துக் கொள்வதால், கஷ்டமின்றிப் படித்து முடித்துவிட்டாள் அவள்.

தன் தோழி இங்கிருந்து இரண்டு மணிநேரத் தொலைவில் இருப்பது தெரிந்தவுடன் உடனே அவளைக் காணத் தயாரானாள். அன்று மாலை ஒரு விமானம் இருந்தது. London City Airportக்கே நேராகச் செல்லும் அந்த AirFrance விமானத்தில் தனக்கொரு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டாள்.

மாலை ஆறரை மணிக்கு LCR டெர்மினலில் விமானம் வந்திறங்கியது. வேணி தன் கைப்பை மட்டுமே வைத்திருந்ததால், கன்வேயர் பெல்ட்டை நோக்கி ஓடாமல், ப்ரான்ஸ் தேசம் தந்த ஒயிலான நடையோடு வரவேற்புப் பகுதியை அடைந்தாள். மஹிமாவை எளிதாக அடையாளம் கண்டுகொண்டவள் அவளை நோக்கிக் கையசைத்தபடி நடந்தாள்.

அங்கு அவளருகில் வேறொரு முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள் அவள்.

விஷ்வாவா அது?

முகம் சட்டென்று மாறியது அவளுக்கு. மஹிமாவை அடைந்து அவளைக் கட்டிப்பிடித்து குசலம் விசாரித்தவள்,  விஷ்வாவை அறவே ஒதுக்கிவிட்டாள். விஷ்வாவும் வேறெங்கோ பார்த்தவாறு நின்றான். மஹிமா அதைக் கண்டு குழம்பினாள்.

என்னவாயிற்று இவர்களுக்கு?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top