34

வானாகி நின்றாய்

அந்தப் பேருந்திலிருந்து இருவரும் இறங்கியபோது, விஷ்வாவின் மனம் யோசனையில் மூழ்கியிருந்தது.

அவள் தன் தோளில் சாய்ந்து சொன்ன வார்த்தை, அந்தக் குரல், அதிலிருந்த ஏக்கம்...

மஹிமா அது எதுவும் நினைவின்றி நடந்துகொண்டிருந்தாள். அவள்தான் அழுகையின் உத்வேகத்தில் அதைக் கேட்டுவிட்டு, பின் உடனே தூங்கிவிட்டாளே!

Muswell Hill பகுதியின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தன் வீடு இருக்கும் Coniston streetஐ நோக்கி நடந்தாள் மஹிமா. பின்தொடர்ந்து விஷ்வா வந்தான்.

"விஷ்வா நீ லஞ்ச் சாப்ட்டியா? பசிக்குதா?"

தன் கேள்விக்கு பதில் வராததால் அவள் திரும்பினாள். ஏதோ யோசனையில் லயித்திருந்தான் அவன். அவன் முகத்தின் முன் கையசைத்து, அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தாள் அவள்.

"ஹே... என்னாச்சு?"

"ம்... என்ன கேட்ட?"

"சாப்டலாமான்னு கேட்டேன்"

"ஓ... சாப்டலாமே. எங்க?"

"நேரி என்னை நேத்து ஒரு ரெஸ்ட்டாரண்ட்டுக்கு கூட்டிட்டுப் போனான். டார்ச்சீ. அது சூப்பரா இருக்கும். பக்கத்துல தான் இருக்கு. அங்கயே போலாமா?"

சட்டென நின்றான் விஷ்வா.
"யாரு நேரி?"

அவன் குரலில் தொனித்த சிறு கோபமும் சந்தேகமும் மஹிமாவுக்குத் தெரிந்தது. அவள் இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

"யாரா இருந்தா என்ன?"

விஷ்வா சமாளித்து,
"இல்ல அதுக்குள்ள ஃப்ரெண்ட் பிடிச்சிட்டயான்னு கேட்டேன்..." என்றான்.

"ஆமா... நல்ல டைப். எனக்கு ரெஸ்ட்டாரண்ட்ல ஒரு சர்ப்ரைஸ் கூட தந்தான் தெரியுமா? Wow man...that was awesome!!"

அவள் பேசிக்கொண்டே போக, விஷ்வாவின் முகம் சுருங்கியது.

அவள் கவனிக்காமல் நடந்துபோக, அவன் அவளருகில் வந்தான்.

"என்மேல இன்னும் கோபமா மஹி?"

அவள் தோளைக் குலுக்கினாள்.

"பசிக்குது... சாப்டுட்டுப் பேசலாம்."

விஷ்வா முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை கண்டும் காணாமலும் மஹிமா சென்றாள். அமைதியாக அன்றைய லஞ்ச் முடிந்தது. விஷ்வா ஏதும் பேசாமல் நடந்தான். வெளியே வந்தவர்கள், அங்கேயே ஒரு நிமிடம் நின்றனர்.

மஹிமா தயக்கமாக அவனை அழைத்தாள்.
"வீட்டுக்கு வாயேன் விஷ்வா... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்"

"இல்ல பரவால்ல... நான் கிளம்பறேன். என்னோட things எல்லாம் எடுத்து வைக்கணும். நாளைக்குக் காலைல இந்தியாக்கு ஃப்ளைட்."

"ஓ...இப்பவே கிளம்பணுமா?"

முகம் சுருங்குதல் இப்போது மஹிமாவின் முறை.

விஷ்வாவுக்கு அதைக் கண்டு வலித்தாலும், ரோஷத்தோடு நின்றான்.

அவள் சற்றே சோர்ந்தாள்.

"சரி விஷ்வா... நாளைக்கு ஏர்ப்போர்ட்ல மீட் பண்ணலாம். எனக்கு அடுத்த வாரம் தான் காலேஜ் ஸ்டார்ட் ஆகுது."

"ம்...வரேன் மஹி"

இருவேறு திசையில் திரும்பிய நடந்தனர் அவர்கள். பிரிய மனமின்றி இருவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு நடந்தனர்.

மஹிமா வீட்டிற்கு வந்து சோஃபாவில் விழுந்தாள். அன்றைய நாளின் துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் அவளை அழுத்தியது. அப்பாவின் நினைவு வேறு அதீதமாக வந்தது. கைபேசியை எடுத்து தந்தைக்கு அழைத்தாள்.

"ஹலோ... சொல்லு மஹிம்மா. எப்டி இருக்க டா? குளிரெல்லாம் பரவாயில்லயா? கோட் வாங்கி அனுப்பினேனே.. கரெக்டா இருக்கா? வேற எதாவது வேணுமாடா?"

"அப்பா... நான் நல்லா இருக்கேன் பா. நீங்க?"

"என்னடா... குரல் டல்லா இருக்கு? என்னம்மா ஆச்சு?"

அவள் விசும்பல்களை கைபேசி கேட்காமல் அடக்கினாள். காதிலிருந்து அதை தூரப் பிடித்துக் கொண்டு, கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"ஒண்ணும் இல்லயே பா. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க என்னை நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க. அங்கே ஜாலியா இருங்க!"

"ஹிஹி.. சரிடா... சாப்டாச்சா?"

"ம்... இப்பத் தான்ப்பா, பக்கத்துல இருந்த ஹோட்டல்ல.. நீங்க சாப்ட்டீங்களா?"

"ஆச்சுடா. தோசை சுட்டுருந்தாங்க பங்கஜம்மா."

"ஓஹ்... நைட் டின்னர் இல்ல... நான் இங்க இப்பதான் லஞ்ச் சாப்ட்டேன்"
நேர மண்டலத்தை மறந்துவிட்டதால் தலையில் தட்டிக்கொண்டாள் அவள்.

"ம்... அஞ்சரை மணி நேர வித்தியாசம்...நீ லஞ்ச் சாப்டா, நாங்க டின்னர் சாப்டுவோம்"

"ஹ்ம்.. சரிப்பா... குட்நைட்... நான் நாளைக்குக் கூப்டறேன்"

"பாத்துக்கடா... வைக்கறேன்"

வீட்டை ஒருமுறை வாக்யும் க்ளீனர் கொண்டு கூட்டிவிட்டு, தூசி தட்டினாள். கிச்சனுக்குச் சென்று தனக்கு ஒரு காபி போட்டு எடுத்துக் கொண்டு, பால்கனியில் அமர்ந்தாள். குளிர்காற்று அந்த மதிய நேரத்திலும் சில்லென்று வீசியது. அந்தக் குளிருக்கு காபி இதமாக இருந்தது.

'விஷ்வாவின் மனதைக் காயப்படுத்திவிட்டேனா? அவனுக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே? என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லையே? அவனும் அதைக் கேட்கவில்லையே?  ஏன்? மறந்துவிட்டானா? இல்லை கைவிட்டுவிட்டானா? கைவிட்டால் இன்று ஏன் வந்து கைகொடுத்தான்? நான் கஷ்டப்படும்போது அவன் வருகிறான்... எப்படி? அவனால் நாம் கஷ்டப்பட்டோம், அதற்காக இப்போது நாம் அவனைப் போய் கஷ்டப்படுத்தலாமா? அவனை அழைக்கலாமா? பேசலாமா? ஏன் பேச வேண்டும்? அவன் குணம் தெரியுமல்லவா? அவன் மாறிவிட்டதாக சொல்கிறானே? அவனை நம்பலாமா? மீண்டும் ஒரு வாய்ப்புக் கேட்கிறானே? எந்த நம்பிக்கையில் அதைத் தருவது?'

எண்ணங்கள் ஏதேதோ வழியில் அலைய, தன்னைத் தானே நொந்துகொண்டாள் அவள்.

***

விஷ்வா தன்னறையில் தனிமையில்  கிடந்தான்.

'மஹிமாவை மீண்டும் எப்படிக் கேட்பது? கேட்டால் என்ன சொல்லுவாள்? நம்மீது காதல் இருக்கிறதா? உண்மையைச் சொல்வாளா? அல்லது மறைப்பாளா? ஒருவேளை உண்மையே அதுதானோ??'

அவனது மனதிலும் ஆயிரம் எண்ணங்கள். அப்போது பரத் அறைக்குள் வந்தான்.

"என்ன ஆச்சுடா அந்தப் பொண்ணுக்கு? எல்லாம் ஓகே தானே?"

"அவளுக்கு காலேஜ்ல ஒரு ப்ரச்சனை... அதான்."
நடந்ததை சுருக்கமாகச் சொன்னான் அவனிடம்.

"சரியாச்சா?"

"அவளுக்கு சரியாயிடுச்சு..."

"ஏன்... உனக்கு என்ன?"

"எனக்கு இன்னும் அவ பதில சொல்லல பரத்."

"ப்ச், நீ இதயம் முரளி மாதிரி வெய்ட் பண்ணியே செத்துருவ போல இருக்கு. நேரா அவளைப் பார்த்து ஆமாவா இல்லையான்னு கேளு. நல்லா நச்சுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க"

"விடு, பாத்துக்கலாம்... ஊருக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சாச்சா?"

"நான் எல்லாமே எடுத்து வச்சாச்சுடா. நீதான் காதல் தோல்வியில தாடி வளர்க்காத குறையா அப்டியே விழுந்து கிடக்க. தேவதாஸ் தோத்துடுவான் உன்கிட்ட! போய் கண்டதை யோசிக்காம ஊருக்குக் கிளம்புற வழியைப் பாரு. அவ என்ன பதில் சொன்னாலும் நாளன்னைக்குப் பொழுது நமக்கு இந்தியாவுல தான் விடியும்!"

அவன் பேச்சிலிருந்த நிதர்சனம் புரிந்து எழுந்தான் அவன்.

இப்போது அதைவிடப் பெரிய கவலை வந்தது.

ஊருக்குப் போய் மீண்டும் அண்ணன் முகத்தில் எப்படி முழிப்பது?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top