30
பாராத தே(நே)சம்
அவனை மீண்டும் ஏற்கலாமா வேண்டாமா என்று மஹிமா சிந்தித்துக் கொண்டிருந்த போது, அவள் தந்தை இந்தியாவிலிருந்து இங்கே நாராயணனை அழைத்திருந்தார். தன்னை அழைக்க முயன்று தான் எடுக்காததால் தான் அவனை அழைத்திருக்கிறார் என்று புரிந்தது அவளுக்கு.
விஷ்வாவின் அணைப்பிலிருந்து விலகி, அவசரமாக நாராயணனிடம் இருந்து கைபேசியை வாங்கினாள் அவள். அழைப்பை ஏற்று அதைக் காதில் வைத்தாள்.
"ஹலோ அப்பா... மஹி பேசறேன். நான் வந்துட்டேன் பா. ரீச் ஆகிட்டேன். உங்க ஆபிஸ் ஆளையும் பார்த்துட்டேன்."
"என்னடா... வந்ததும் ஃபோன் பண்ண மாட்டயா? எவ்ளோ பயந்துட்டோம் நாங்க?"
"இப்ப தான்ப்பா செக்யூரிட்டி செக் முடிச்சிட்டு வெளிய வந்தேன். உங்க ஸ்டாஃபையும் பார்த்தேன். நான் கூப்டலான்னு நெனைக்கும்போது நீங்களே இவருக்குக் கூப்டுட்டீங்க"
அவள் இயல்பாக நடிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றனர் இருவரும்.
"நல்லபடியா இறங்கிட்டல்ல மஹிம்மா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?"
"எதுவும் இல்ல அப்பா. நான் வில்லாவுக்குப் போய்ட்டு என் ஃபோன்ல கால் பண்றேன். வச்சிடுறேன்பா"
"சரிடா... வைக்கிறேன்"
அலைபேசியை நாராயணனிடம் தந்துவிட்டு, தன் பைகளை எடுத்து வைத்தாள் அவள். அவனோடு நகர முயன்றபோது, விஷ்வா அவளைப் பிடித்து நிறுத்தினான்.
"மஹிமா... நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலயே?"
"இல்ல விஷ்வா. என்னால இப்ப தெளிவா யோசிக்க முடியல. எங்கிட்ட எதுவும் கேட்காத"
"மஹிமா..."
"மேடம் லக்கேஜ்ஜை கார்லோ வச்சாச்சு.. போலாமா மேடம்?"
நேரம் புரியாமல் குறுக்கிட்டான் நாராயணன்.
அவள் நாராயணனிடம் திரும்பி,
"நீங்க கார்ல வெய்ட் பண்ணுங்க. நான் வந்துடறேன்" என்றாள்.
அவனோ, "லேது மேடம். எந்த கார்னு உங்கள்கு தெரியாதே" என்றான் போகாமல்.
"நீங்க நகரலேன்னா இவன் உங்கள என்ன செய்வான்னு தெரியாது. He will hit you for sure. நீங்க போங்க, வரேன்"
'செய்தாலும் செய்வான்' என்பதுபோல் பார்த்துவிட்டு அவன் நகர்ந்தான்.
விஷ்வாவின் முகத்தில் காயம்பட்ட உணர்வு.
"மஹி.. கண்டவங்களை அடிக்கற பொறுக்கி இல்லை நான்."
"என்னவோ.. உன்னைப் பத்தி எனக்கென்ன தெரியும்?"
"ப்ளீஸ் மஹிமா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நான் திருந்திட்டேன் மஹி. நான் பண்ணின தப்பையெல்லாம் புரிஞ்சுக்கிட்டேன். உன்னை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தான், வீட்டை விட்டு, நாட்டை விட்டு, உனக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கேன்.."
"அதுக்கு? என்ன செய்யணும் நான்? உன்னைக் கொஞ்சிக் குலவி காதலிக்கணுமா?"
"எனக்கு ஒரு பதில் சொல்லுன்னு தானே கேட்டேன்..."
"நீ வந்தது உங்க வீட்டில யாருக்காச்சும் தெரியுமா?"
இல்லை என்பதுபோல் அவன் தலையாட்ட, அவள் இன்னும் கோபப்பட்டாள்.
"நீ தப்பு மேல தப்பு பண்ற விஷ்வா. நீ இன்னும் மாறினதா எனக்குத் தோணல. எப்படி இவ்ளோ தூரம் வந்த? நான் இங்க இருப்பேன்னு யாரு சொன்னா?"
ஒருகணம் தயங்கினான் அவன்.
"எங்கிட்ட எதையும் மறைக்காத விஷ்வா. உண்மைய சொல்லு"
"உங்கிட்டப் பேசிட்டு ஜோஷி சொன்னான். பைக்கை வித்து பணம் சேர்த்து ஒரு கான்ஃபரன்ஸ் டீமோட apprenticeஆ வந்தேன் மஹி."
மஹிமாவுக்கு கண்கள் கலங்கியது. வார்த்தைகள் திக்கித் திணறியது.
"பைக்கை.. வித்துட்டியா?"
அந்த பைக் அவனுக்கு எவ்வளவு பிடிக்குமென மஹிமா நன்கு அறிவாள். கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஆசை ஆசையாக வாங்கினான் அதை. அவளை பைக்கில் ஏற்றிக்கொண்டு சுற்றாத இடமே இல்லை. மஹிமாவின் அளவுக்கே பைக்கின் மீதும் அன்பு வைத்திருந்தான் என்பதை அவளுமே அறிவாள்.
தனக்காக அதையே விற்றுவிட்டான் என்றால்..?
"எனக்காகவா விஷ்வா? பைக்கை வித்து, இவ்ளோ ரிஸ்க் எடுத்து, இவ்ளோ தூரம் வந்த? உனக்கு எதாச்சும் ஆகியிருந்தா?"
"ஒண்ணும் ஆகிடாது மஹி. உன்னைப் பார்த்துட்டேன்ல..?"
அவள் கண்கள் மேலும் குளமாகின. மனம் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தது.
"ஹே.. ஜோஷி மேல உனக்கு கோபம் இல்லயே? அவனா எதுவும் பண்ணல.. அவன் நான் சொல்லித் தான் செஞ்சான் மஹி.."
மஹிமா முதன்முறையாக லேசாக சிரித்தாள்.
"ஜோஷி மேல எப்டி என்னால கோபப்பட முடியும்?"
"அதானே...எல்லா கோவமும் எம்மேல தான்"
அவன் புலம்ப, மஹிமாவுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.
மனது கண்டித்தது.
'சிரிக்காதே மஹிமா.. இவன் உனக்குத் தந்த துன்பங்களை மறந்துவிட்டாயா?
மீண்டும் தன்னை சமன்படுத்திக்கொண்டு, இறுக்கமான முகத்துடன் அவனிடம் திரும்பினாள்.
"சரி, நீ வந்த வேலைய பாரு விஷ்வா. முடிச்சிட்டு பத்திரமா ஊருக்குப் போ. அப்ப நான் கிளம்பறேன்"
விஷ்வா விடவில்லை அவளை.
"மஹிமா.. நான் வந்தது உனக்காக."
"விஷ்வா, என்னால உனக்கு எதுவும் சொல்ல முடியாது இப்போதைக்கு. நீ இங்க வந்த அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல. ஐம் டையர்ட் அண்ட் எக்ஸாஸ்ட்டட். என்னை கொஞ்சம் தனியா விடு ப்ளீஸ்.."
"எத்தனை நாள் வேணா உனக்காக வெய்ட் பண்ண ரெடி நான். ஒரு ஃபோன் கால் போதும், உடனே வந்துடுவேன்"
அவள் சரியெனத் தலையசைக்க, எதிர்பாரா வண்ணம் அவள் கன்னத்தில் சின்னதென முத்தமிட்டுவிட்டு, குறும்புச் சிரிப்புடன் விலகிச்சென்றான் அவன்.
கையசைத்துக் கொண்டே அவன் தூரத்தில் செல்ல, கனவுபோல் பார்த்து நின்றாள் அவள். பின் சுயநினைவு வந்தவள் நாராயணனின் காரை நோக்கி நடந்தாள்.
அவன் ஏதோ கேட்க வர, அவள் கையயுர்த்தித் தடுத்தாள். "பர்சனல். பதில் சொல்ல முடியாது."
"சரி மேடம், உக்காருங்க"
அவள் பின்சீட்டில் அமர்ந்ததும் வண்டி கிளம்பியது.
வழியெங்கும் வேடிக்கை பார்த்தவாறே வந்தாள் அவள். அவளது ஆர்வத்திற்குத் தீனி போடுவது போல, நாராயணன் விடாமல் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினான்.
"மேடம், ஏர்ப்போர்ட்ல இருந்து சிட்டிக்கு இருபது கிலோமீட்டர் டிஸ்டென்ஸ், தெரியுமா? அப்பறம்.. மீரு தங்கப் போற இடம் பேரு Muswell hill. அது சிட்டில இருந்து மூணு கிலோமீட்டர் நார்த். உங்க காலேஜ் இருக்கறது White Hart Yard. அது சிட்டினு இருந்து ஒன்றரை மைல் வெஸ்ட். இப்ப உங்க வீட்ல இருந்து காலேஜ்க்கு கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் வரும் மேடம். தினமும் பஸ்ல போனா அரைமணி நேரம் ஆகும். டாக்சியும் கிடைக்கும்.. ஆனா செலவு ஜாஸ்தி.."
அவன் சொன்னதை எல்லாம் மனதில் வாங்கிக்கொண்டாள் அவள்.
'சாலிஸ்பரி, ஹெம்ஸ்ஃபோர்ட்,வெம்ப்ளி, க்ரீன்ஃபோர்ட்,ஹேங்கர்லேன்' என்று வழியில் வந்த ஊர்ப் பெயர்களை நினைவில் வைக்க முயன்றாள். ஊருக்கு வெளியே என்பதால், பச்சைப் புல்வெளிகளும், காடுகளும், மலைகளும் வழியெங்கும் நீண்டிருந்தன. குளிர்ந்த காற்று அவள் முகத்தை வருடியது.
பயணக்களைப்பும், குளிர்காற்றும் அவளை நித்திரைக்கு அழைத்துச் சென்றது. நாராயணன் அவள் தூங்கியதையும் கவனிக்காமல் பேசிக்கொண்டே வந்தான். கடைசியில் அவன் கேட்ட கேள்விக்கு பதில் வராததால் திரும்பியவன் அவள் தூங்கிவிட்டதைக் கண்டதும் தலையில் அடித்துக்கொண்டான் சிரிப்புடன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top