3

தோழா

___________________________________________

2010

மஹிமா முதன்முதலாக அந்த ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் காலடி எடுத்து வைத்தாள். ஐந்தாம் வகுப்பு வரையில் வீட்டின் அருகில் இருந்த ICSC ஆரம்பப் பள்ளியில் படித்தது போதுமென, ஆறாம் வகுப்பிற்காக அவள் தந்தை தேர்ந்தெடுத்த பள்ளி அது. இங்கே படிப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய மருத்துவராகவும் பொறியாளராகவும் விளங்குவதாக நாளிதழ்கள் பிரகடனப்படுத்த, தன் மகளையும் வருங்காலத்தில் நாளிதழில் பார்க்க வேண்டுமென விரும்பினார் ராஜகோபால்.

"Welcome to St.Xaviers"என்று ஒரு பெரிய அறிவிப்புப் பலகை அவளை வரவேற்றது. அப்பாவுக்கு வேலை இருந்ததால் பங்கஜம் அம்மாள் தான் அவளைப் பள்ளி செல்ல அழைத்து வந்தார். அவரும் அந்த அறிவிப்புப் பலகை அருகில் அவளை விட்டுவிட்டு "நல்லாப் படி பாப்பா" என்று கூறிச் சென்றுவிட்டார். எல்லாப் பெற்றோர்களும் வாசலருகே தங்கள் பிள்ளைகளைக் கட்டியணைத்து வாழ்த்துக் கூறி, கைப்பிடித்து வகுப்பறையில் வந்து விட்டுச் செல்ல, மஹிமா மட்டும் தன்னந்தனியாக நின்றாள்.

எங்கே செல்வதென்று தெரியாமல் தவித்த அவளை ஆதரவாய்த் தொட்டது ஒரு அழகிய கை.

"Hi! Which class are you in?"

மஹிமா திரும்பிப் பார்த்தாள். அங்கே புத்தகப்பை முதுகிலும் சாப்பாட்டுப்பை கையிலும் வைத்துக் கொண்டு ஒரு சிறுவன். தன் வயதிற்கு சற்றே உயரமாக, அலைபாயும் கேசத்துடன், சிரிப்போடு நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களில் தெரிந்த கனிவு மஹிமாவின் மனதை இலேசாக்கியது.

"6 A" என்றுமட்டும் கூறினாள் அவள்.

"அட, நானும் அதே க்ளாஸ் தான்" உரிமையுடன் அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான் அச்சிறுவன்.

"க்ளாஸ்க்கு எப்படிப் போகணும்?" தயங்கித் தயங்கிக் கேட்டாள் அவள்.

"ஹாஹா.. நானும் new admission தான்... இரு, நான் போய் யார்கிட்டயாச்சும் கேட்டுட்டு வரேன்"

எங்கோ போய்விட்டு சிலநொடிகளில் திரும்பி வந்து,"நான் கேட்டுட்டேன். Second floor, first class on the left. வா போலாம்" என்றபடி முன்னே சென்றான், அவள் பின்தொடர.

மஹிமாவுக்கு அவனைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. 'நம் வயதை ஒத்தவன்தானே இவனும்? பின் எப்படி இவன்மட்டும் இத்துணை துடிப்புடன் இருக்கிறான்? எப்படி இவன் தயக்கமின்றி எல்லோரிடமும் பேசுகிறான்? இன்று இவனும் புதிதாய் வந்தவன் தானே? பிறகு ஏதோ நன்றாய் தெரிந்தவன் போல நடக்கிறான்? இவ்வளவு தைரியமான ஒரு பையனை எங்குமே பார்த்ததில்லையே இதற்கு முன்னால்..'

அவள் யோசனைகளைக் கலைக்குமாறு, அவன் நின்று திரும்பி, "இதுதான்னு நெனைக்கறேன்" என்றபடி வலதுபுறம் இருந்த ஒரு வகுப்பில் நுழைந்தான்.

அங்கே முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மலையாளிப் பையனிடம் "ஹாய்.. This is 6th A right?" என வினவினான் அவன். அந்தப் பையனும் பிரகாசமாகச் சிரித்து "Yes, welcome" என்றான். அவன் திரும்பி மஹிமாவிடம் "இதுதான்" என்று உறுதிப்படுத்தினான். அவள் தலையசைத்துவிட்டு பின்னால் செல்ல எத்தனித்தாள். அவளைத் தடுத்து "இங்கயே உட்காரலாமே" என்று மிக சாவதானமாகச் சொல்லிவிட்டு அந்த மலையாளிப் பையனருகிலேயே அவளை அமர்த்தித் தானும் அமர்ந்தான்.

"ம்ம்ம்...சரி, கேக்க மறந்துட்டேன்... What is your name?"

மஹிமா தயக்கம் மாறாத புன்னகையுடன் கைநீட்டினாள்.

"I'm Mahima"

அச்சிறுவன் இயல்பாக அவள் கையைக் குலுக்கினான்.
"I'm Vishwa"

இருவருக்கும் இடையில் வந்த மலையாளிப் பையனும், அவர்கள் கைகளில் தன் கையை இணைத்துக்கொண்டான்.
"I'm Joshi"

......................................................................


அன்று தொடங்கியது ஒரு அழகான உறவு. மிக மிக துறுதுறுவான விஷ்வா. எப்போதும் இரண்டு இஞ்ச் அளவுக்கு சிரித்துக் கொண்டே இருக்கும் ஜோஷி. இவர்கள் இருவரும் மஹிமாவை ரொம்பவே ஈர்த்தனர்.

அம்மாவை இழந்ததிலிருந்து ஒருவித பயந்த சுபாவமாகவே இருந்த மஹிமா கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போனாள். ஆனாலும் அவளது sincerity, seriousness, எல்லாம் ஒரு ஓரமாக இருந்தன. கூடவே வாழ்க்கையை ரசிக்கவும் கற்றுக்கொண்டதாக சொல்லலாம்.

ஆறு வருட நட்பு... அழகழகாய் நிறையக் குறும்புகள், சண்டைகள், சேட்டைகள், திட்டுக்கள்... ஆனாலும் எப்போதும் ஒரு பிரச்சனை என்றால் ஒருவருக்கொருவர் துணை நிற்பர். யாருக்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுத் தந்ததில்லை.

ஜோஷியின் வீடுதான் இவர்கள் அடிக்கடி கூடும் இடம். எப்போதும் இன்முகத்துடன் வரவேற்கும் ஜோஷியின் பெற்றோர், அழகான, அமைதியான சிறிய வீடு, இவர்களைக் கண்டதும் துள்ளிக் குதிக்கும் ஜோஷியின் செல்ல நாய் போக்கோ...

ஜோஷியின் வீடு ஒரு கவிதை மாதிரி. அப்பா ஜோசப்-அம்மா ஷீலா. காதல் திருமணம். இருவரின் முதலெழுத்துக்களும் இணைந்துதான் இருவரின் உயிரிணைந்த ஜோஷியின் பெயர். அவனுக்கு செல்லம் தருவதில் இருவருக்கும் எப்போதும் போட்டி. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் மஹிமாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களின் அன்பின் குடை மஹிமாவையும் விஷ்வாவையும் அணைக்கத் தவறியதில்லை.

வேணி வந்தது பதினொன்றாம் வகுப்பில்.

வேறு பள்ளியிலிருந்து வந்தாலும், அனைவரிடமும் சகஜமாகப் பழகினாள். அவளது படிப்புத் திறமையினால், மஹியின் ஆதர்சத் தோழியாக சீக்கிரமே மாறிப்போனாள். ஆனால் ஏனோ அவளுக்கு விஷ்வாவைப் பிடிக்கவில்லை. தன்னைவிட விஷ்வாவை மஹி அதிகமாக நேசிக்கிறாள் என்று நினைத்ததாலோ என்னவோ...

எனினும் மஹிமா அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் பார்த்ததில்லை. மேலும், ஆண்களிடம் பேச முடியாத பல விஷயங்களை வேணியுடன் தான் அவள் பகிர்ந்துகொள்வாள்.

எனவே விஷ்வாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆம். மஹிமாவின் மிகப்பெரிய ஆசை... அழகாக ஒரு காதல் கதை எழுத வேண்டும்.


விஷ்வா அளவிற்கு மஹிமாவுக்கு எழுதத் தெரியாது. அவன் 'வானம், மேகம், நிலா, மழை, மரம், கிளை, பூ, பூச்சி' என ஏதேதோ சொல்வான். இலக்கணம் வேறு முக்கியம் என்பான். எனவே கவிதைகளை விட்டு மஹிமா சற்றுத் தள்ளியே இருந்தாள். விஷ்வா எழுதுவதைப் படித்து ரசிப்பது மட்டுமே அவளுக்கும் கவிதைகளுக்குமான தொடர்பு.

கதைகள் அப்படி அல்லவே.

மனதில் தோன்றுவதை உள்ளவாறே சொல்லலாம், எழுதலாம். மிகைப்படுத்தி அலங்கரிக்க வேண்டாம். சொற்களைச் சாயம்பூச வேண்டாம்.
(கவிதைகள் பிடிக்காமல் இல்லை. எழுத வராது அவளுக்கு. அவ்வளவே)

எழுதலாம்..... அழகான கதை. காதல்.

ஏன் காதல்?

ஏன் அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தாள் என அவளுக்கே தெரியவில்லை. எப்போதும் எட்டாத வானத்தை ஒரு ஏக்கத்துடன் பார்ப்போமே...  அதுபோல அனுபவிக்காத உணர்வான காதலால் கவரப்பட்டாளோ என்னவோ...

அதை விஷ்வாவிடம் சொல்ல அவள் தயங்கினாள். அவன் சிரிப்பான்... வேணி கூட அவள் சொன்னபோது சிரிக்கத்தானே செய்தாள். மேலும் இந்தக் கதைக்கு அவளுக்கு ஒரு சிறு knot கூடக் கிடைக்கவில்லை. அதற்குள் விஷ்வாவிடம் சொன்னால், அவன் உதவி பண்ணுகிறேன் என்று ஏதாவது சொல்வான்.

வேண்டாம்... இது முழுக்க முழுக்க எனக்கானது. நான் எழுதி, நானே படித்து, நானே ரசிப்பதற்கு. வேறு யாருக்கும் இல்லை.

காதலிக்க ஆசை இருந்தாலும், தனக்கென நிறைய கடமைகள் இருப்பதை உணர்ந்ததால், அவளுக்கு காதலிக்கத் தோன்றவில்லை. காதல் பற்றிய புரிதலும் ஏதோ பனிமூடிய பாதைபோல் மங்கலாகத்தான் இருந்தது. அவள் படித்த கதைகளிலும், பார்த்த படங்களிலும் இருந்து கிடைத்ததுதான் அதுவும்.

விஷ்வாவின் கவிதைகளில் கூட காதல் பற்றி நிறைய இருக்கும். ஆனால் அது வேறு பரிமாணத்தைச் சேர்ந்ததாக இருக்கும்.

இரவின் நிசப்தத்தில்
ஓசையின்றி ஓர் பாடல்.
குழந்தை கலைத்த கோலமாய்
அதில் சிறிதொரு சோகப்புன்னகை.
என் பெயர் சொன்னதாய்
மனதில் ஒரு பிரம்மை.
ஆனால் அக்குரல் உண்மை.
மௌனம் சப்திக்க,
மனது என்னைக் கெஞ்சியது.
அதன் வேண்டலுக்கிணங்கி
ஒருமுறை சொன்னேன்
உன்பெயர்.
இரவின் மௌனம் தீர்ந்தது
கூடப் போனது என் தூக்கமும்.

இக்கவிதையில் காதல் பெருக்கெடுத்து ஓடுவதாய் விஷ்வா சாதித்தான். ஆனால் மஹிமாவுக்குத் தெரிந்தது எல்லாம் ஒரு இனம்புரியா கவலை தான்.

.......

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top