28
ஓடினேன்
இரண்டு நாட்களுக்குள் இவ்வளவு செய்ய முடியுமா என்று விஷ்வாவே அதிசயித்துப் போனான். நேரம் காலம் பார்க்காமல், அவன் ஓடி ஓடி எல்லாம் செய்ய, அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தது.
முதலில் தான் ஆசை ஆசையாய் வைத்திருந்த பைக்கை ஹார்ட்வேர் கடையில் விற்று செலவுக்குப் பணம் புரட்டினான். பின் வேலம்மாள் குழுவினரிடம் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பித்தான். ஏஜண்ட்டிற்குத் தர வேண்டியதைத் தந்தான். குழுவிடம் நேர்காணல் வாய்ப்புக் கிடைத்தது.
அவனிடம் அந்த குழுவின் தலைவர் பேசினார். முப்பது, முப்பத்தைந்து வயது இருக்கும் அவருக்கு. அவர் கேட்ட கேள்விகளுக்குத் தன்னால் இயன்றவரை பதிலளித்தான். அவனது நல்ல நேரம், அந்த வேலைக்கு வேறெவரும் வராததால் அவனே தேர்வானான்.
அந்தக் குழுவில் அவன் வயதொத்த ஒருவனிடம் நண்பனானான் விஷ்வா.
"ஹலோ பாஸ்... என் பேர் விஷ்வா. உங்க டீம்ல apprentice. நீங்க?"
"என்னைப் பார்த்தா மட்டும் என்ன லெக்ச்சரர் மாதிரியா இருக்கு, நானும் உன்ன மாதிரித் தான்டா. இவங்களுக்கு அஸிஸ்ட்டென்ட். ஐயாம் பரத். ஃப்ரம் பெங்களூர். "
"ஓ.. என்ன படிக்கறீங்க?"
"B.Com முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டு இருக்கேன். நீ?"
"BBM முடிச்சிருக்கேன். ரிசல்ட்டுக்கு வெய்ட் பண்றேன்"
"அதுக்குள்ள ஏன்டா இந்த வேலைக்கெல்லாம் வர்ற? எல்லா முந்திரிக் கொட்டையும் என்கிட்டவே வந்து கடுப்ப கெளப்பறீங்க! ஏன்டா இப்படி? Graduate ஆகறக்கு முன்னாடியே கான்ஃபரன்ஸா?"
"இல்ல பாஸ்... எனக்கு.. கொஞ்சம்.. அவசரமா லண்டன் போகணும்"
"ஆங்.. இவரு பெரிய ஃபினான்ஸ் மினிஸ்டர். அவசரமா லண்டன் போய் பத்து ஒப்பந்தம் போடணும் பாரு"
"அதில்ல பாஸ்.." என்றவாறு ஆயிரமாவது முறையாகத் தன் கதையைக் கூறினான்.
முழுதாகக் கேட்டுவிட்டு பரத் உச்சுக்கொட்டினான்.
"காலேஜ்ல சுத்தமா மெச்சூரிட்டி இருக்காதுன்றது கரெக்டு தான் போல! ஏன்டா, அப்படி என்னடா உங்களுக்குள்ள ஈகோ, வரட்டு கவுரவம்? ஜாலியா, ப்ரீயா லவ் பண்றதை விட்டுட்டு, தேவையில்லாம இப்டி காம்ப்ளிகேட் பண்ணிக்கறீங்க.."
"தப்புதான் பாஸ். ஆனா தப்பைப் புரிஞ்சுக்கிட்டு, அதை சரி செய்ய நினைக்கறேன் நான். எனக்கொரு வாய்ப்பை விதி தரக்கூடாதா?"
"டேய்.. moving on அப்டினு எதாச்சும் கேள்விப் பட்டிருக்கயா? அப்டினா, கடந்து போறதுன்னு அர்த்தம். ஒன்றரை வருஷம் சண்டை போட்டுட்டு ஒரே நாள்ல சமாதானம் ஆக முடியுமா என்ன?"
"என் மஹிமாவுக்காக எதுவேணா செய்யலாம்.."
"செரியான லூஸா இருக்கியே நீ... ஒரு பொண்ணு பின்னாடி இவ்ளோ தூரம் போகணுமா?"
அதிசயத்தில் கேட்டான் பரத்.
"அவ்ளோ புடிக்கும் அவள"
அவன் பதில் மஹிமாவுக்குக் கேட்டிருந்தால் நன்றாக இருக்குமே..
பரத் இன்னும் அவனைப் பைத்தியமாகவே பார்த்தான். தலையைக் குலுக்கிக்கொண்டான் ஆயாசமாக.
பரத்திடம் விடைபெற்று, லண்டன் எம்பஸிக்குச் சென்றான் விஷ்வா. தான் பயணிக்கப் போகும் குழுவின் ஆவணங்களையும் தன்னுடைய கடவுச்சீட்டையும் சமர்ப்பித்து டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பித்தான். அதற்கான தொகையையும் செலுத்திவிட்டு வந்தான்.
பத்து நாளில் விசா கிடைத்தது. அதை குழுவினரிடம் தெரிவித்தவுடன் அவர்கள் மறுநாளே கிளம்பலாம் என்றனர். தன் உடைகளையும், மற்ற உடைமைகளையும் எடுத்துவைத்துக் கொண்டு, வீட்டில் சொல்லாமல் நடுநிசியில் வெளியேறினான் விஷ்வா.
வீட்டில் அடுத்த நாள் இரவுதான் தெரிந்நது. அவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அண்ணன் சர்வேஸ்வரனுக்கு மெலிதாக சந்தேகம் வந்தது. இருப்பினும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி, நண்பர்களுடன் எங்காவது சென்றிருப்பான் என்று சொல்லி, அவர்களை நம்பவைத்தார். தன் ஆட்களை அனுப்பித் தேடச் சொன்னார். அவன் ஊரிலேயே இல்லையெனத் தகவல் வந்தது.
அவனது கைபேசிக்கு அவர் அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகக் கணினிக் குரல் சொன்னது. அவரது சந்தேகம் உறுதியானது.
-----------------
விஷ்வா விமானத்தில் வால்பகுதியில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தான். 'மஹிமாவைப் பார்க்கப் போகிறோம்' என்ற ஒரே சமாதானத்தை, தான் அடையும் அத்தனை கஷ்டத்திற்கும் சொல்லிக் கொண்டான். உணவு ஒவ்வாமை, air sickness, தனிமை என ஒவ்வொரு சிரமத்திற்கும் அவள் பெயரே மருந்தானது.
அதிகாலை ஆறு மணிக்கு அந்த விமானம் அவனது கனவு நகரத்தில் இறங்கியது. பாதுகாப்பு சோதனைகள் யாவும் முடிந்து, அவர்கள் வெளியே வந்தனர். வந்ததும் தன் அலைபேசியில் இருந்து வாட்ஸ்ஸாப்பில் ஜோஷியை அழைத்தான்.
"ஹலோ ஜோஷி... நான் லேண்ட் ஆயிட்டேன்டா"
"சூப்பர் விஷ்வா. நான் மஹியோடே லொக்கேஷன் பாத்தேன். அவள் இப்பம் தான் ப்ளைட் ஏறுறா"
"என்னது? இன்னிக்கா? இப்பவா? நான் இந்த டீமோட ஹோட்டல் போகணும். டேட்டா எல்லாம் பாக்கணும், கம்ப்பைல் பண்ணனும். என்னடா பண்றது?"
"நீ அவங்ககிட்ட பேசு. இப்ப விட்டா பின்னே மஹிமா இருக்கற இடம் கண்டுபிடிக்கவே முடியாது.. பட்டில்லா.."
"சரிடா.. ட்ரை பண்றேன். பை"
"ம்.. பாத்து இரு விஷ்வா.. வைக்கறேன்.. பை"
ஃபோனை வைத்ததும் அவனருகில் வந்தான் பரத். இப்போது அவனது காதலில் பரத்துக்கும் ஆர்வம் வந்திருந்தது.
"என்னடா, உன் ஆளை எப்டி கண்டுபிடிக்கப் போற?"
"பரத், நீ நம்ப மாட்ட, அவ இன்னும் நாலு மணிநேரத்துல, இதே ஏர்ப்போர்ட்ல இறங்குவா"
"பார்றா! டேய்.. சும்மா சொல்லக் கூடாது. நீயொரு லக்கி ஃபெல்லோ.. ஹ்ம்ம். சரி வா. லீடர் கிட்ட பேசி உனக்கு பர்மிஷன் வாங்கலாம்.."
அரைமணி நேரத்தில் குழுத் தலைவரிடம் கெஞ்சிக் கூத்தாடி அதற்கு அனுமதி பெற்றனர். அவனை விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் விடுதிக்குச் சென்றனர். அவனிடம் ஒரு 'all the best' சொல்லிவிட்டு பரத் நகர்ந்தான்.
விஷ்வா அருகிலிருந்த ரெஸ்ட் ரூமில் குளித்து உடைமாற்றிவிட்டு வந்து காத்திருந்தான். ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் இன்னும் செய்யாததால், இந்திய ரூபாய் தவிர அவனிடம் வேறு காசில்லை. ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் ரிசெப்ஷன் லவுஞ்ச்சில் தவமிருந்தான் அவன்.
மணி பதினொன்று ஆகியது. அப்போது மஹிமா என்று பெயர்தாங்கிய பலகையோடு ஒருவர் வந்து முன்னால் நிற்பதைக் கவனித்தான்.
அவன் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. முன்னர் தோன்றாத எண்ணங்கள் எல்லாம் மனதில் உதித்தன.
எந்த நம்பிக்கையில் இப்படி இத்துணை தூரம் வந்தேன்? அவளைப் பார்ப்பேனா?பார்த்து என்ன பேசப் போகிறேன்? என்ன செய்யப் போகிறேன்? அவள் மறுத்துவிட்டால்? அவள் அடித்துவிட்டால்? அவளுடன் பேசவே முடியாமல் போய்விட்டால்? அடுத்தது என்ன?
பதற்றத்தில் கைகள் நடுங்கின. மூச்சுக்களை இழுத்து நீளமாக விட்டான் அவன். அவளோடு தான் இருந்த நிமிடங்களை நினைத்துக் கொண்டான். நம்பிக்கையோடு எழுந்து நின்றான். தன் பைக்குள்ளிருந்து ஒரு தாளை எடுத்து அவள் பெயர் வரைந்தான்.
சற்றும் எதிர்பாராத விதமாக, தலைக்கு மேல் இருந்த ஒலிபெருக்கி, ஏர் இந்தியா விமானத்தின் வருகையை அறிவித்தது.
விஷ்வாவின் கைகால்கள் படபடத்தன.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top