27
வானம்
விஷ்வா அண்ணனிடம் ஒடினான். அண்ணியிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார் அவர். அவர்களைப் பிரிக்கக் கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியின்றி, தைரியத்தைத் திரட்டிக்கொண்டு
"அண்ணா" என்றழைத்தான்.
அவர் நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
"வா விஷ்வா"
"வாங்க கொழுந்தனாரே"
"அண்ணா, அண்ணி, அவ லண்டன் கிளம்பறாளாம்!"
யாரென்று அவனது பதற்றத்தில் புரிந்தது இருவருக்கும். சர்வேஸ்வரன் முகம் இறுக்கமானது.
"எதுக்காக?"
"என்னை மறக்கவாம்"
"அச்சோ.. இப்ப என்ன பண்றது?"
அண்ணியின் குரலில் தெரிந்த கரிசனம் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தந்தது.
"நானும் போறேன் அண்ணி"
சர்வேஸ்வரன் சிடுசிடுத்தார்.
"டேய்! என்ன விளையாடுறியா? ஏதோ பக்கத்து ஊருக்குப் போற மாதிரி, அவ போனா இவரும் போவாராம்"
"அண்ணா ப்ளீஸ்... அண்ணி நீங்களாச்சும்..."
"விஷ்வா, நீங்க வேற எது கேட்டிருந்தாலும் நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணிருப்பேன். நீங்க இன்னும் சின்னக் குழந்தை மாதிரி இப்டி இருக்கீங்களே!"
"டேய்... இங்க ஒரு வருஷமா தீர்க்க முடியாத சண்டைய, லண்டன்ல வச்சுத் தீர்க்கப் போறயா? இதெல்லாம் நடக்குமான்னு யோசிடா..."
"....."
"உன்னை ஆரம்பத்துலயே கொஞ்சம் கண்டிச்சு வளர்த்தியிருக்கணும். ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்ததால நீ என்ன சொன்னாலும் நாங்க செய்வோம்ணு உனக்குத் திமிராகிப் போச்சு"
"அப்டிலாம் சொல்லாதீங்க...பாவம் அவர் மனசு கஷ்டப்படும். விஷ்வா, நீங்களே யோசிங்க, லண்டனுக்குப் போக, விசா வேணும். விசா வாங்க, எதாவது valid reason வேணும். நீங்க என்ன சொல்லி வாங்குவீங்க? இது என்ன சினிமாவா, காதலிய பார்க்க போறேன்னு சொன்னா சிரிச்சுகிட்டே விசா தர்றதுக்கு?"
"உங்க அண்ணிக்கு பதில் சொல்லுடா? என்ன காரணம் சொல்லி விசா வாங்குவ? மொதல்ல உனக்கு பாஸ்போர்ட் எடுத்ததே தப்புப் போல."
"விஷ்வா, லண்டனுக்குப் போக, ஒரு டிக்கட் அம்பதாயிரம் ரூபா. அது டிக்கட் செலவு மட்டும்தான். அதுக்கப்றம் டாக்குமெண்ட்ஸ், தங்கற இடம், சாப்பாடு எல்லாத்துக்கும் தனித்தனியா. இதெல்லாம் எப்டி சமாளிக்கறது? அதை யோசிச்சீங்களா?"
"அப்றம் உன்கூட யாருடா வர்றது? நான் அண்ணிய பாத்துக்கணும், அம்மா அப்பா கிட்ட பாஸ்போர்ட் கிடையாது. உன்னைத் தெரியாத நாட்டுக்கு தனியா அனுப்ப நாங்க என்ன பைத்தியமா?"
"உங்க படிப்பு, கரியர் எல்லாம் என்ன ஆகறது? அந்தப் பொண்ணு அதில தெளிவா இருக்கா. நீங்க?"
ஆளாளுக்குக் கேள்விகள் கேட்க, விஷ்வாவின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தளர்ந்தது. கண்கள் கண்ணீரின் அறிகுறிகள் காட்ட, அதை மறைத்தவாறு தன் அறைக்கு வந்தான்.
அவ்வளவுதானா மஹிமா? என்னை விட்டு எட்டாத தொலைவு போய்விட்டாயா? இனி நீ எனக்கில்லையா? நான் என்ன செய்வேன்? உன்னிடம் ஒருமுறை மன்னிப்புக் கேட்க வேண்டும்... அதுகூட என்னால் முடியாதா இனிமேல்?
செத்துவிடலாம் என்று இருந்தது அவனுக்கு. தான் வீணாக்கிய காலம் எல்லாம் அவன் கண்முன் வந்து நகையாடின. உடலிலிருந்து உயிர் பிரிந்தது போல் வலித்தது. தலை சுற்றியது. தோல்விகளைப் பார்த்திராத செல்லப் பையனுக்கு, வாழ்க்கை தன் தலையில் சம்மட்டியால் அடித்துப் புரியவைத்தது போல் இருந்தது.
மனதில் கடைசிச் சொட்டு நம்பிக்கையும் உலர்ந்துவிடும் நேரத்தில், ஆபத்பாந்தவனாய் அவனது கைபேசி அடித்தது.
'ஜோஷி'
சற்றே கலக்கத்துடன் அதை எடுத்தான் அவன்.
"சொல்லு ஜோஷி"
"ஹலோ...விஷ்வா தன்னே சம்சாரிக்கின்னது? எந்தடா வாய்ஸ் மாறி இருக்கின்னது?"
"ஒ...ஒன்னும் இல்ல"
"விஷ்வா...நீ கரஞ்ஞுனுண்டோ விஷ்வா?"
அவன் கேட்டதும் அதுவரை அடங்கியிருந்த கண்ணீர் வெள்ளமாக வந்து கைபேசி வரையில் நனைத்தது.
"போய்ட்டா ஜோஷி... என் மஹிமா என்னை விட்டுட்டுப் போய்ட்டா..."
முதல்முறையாகக் கண்ணீருடன் நண்பனின் குரல் ஒலிக்க, ஆறுதல் கூற வார்த்தையின்றி மௌனமானான் ஜோஷி.
"சரி சொல்லுடா... எதுக்கு கூப்ட?"
"நீ எப்டி இருக்கன்னு கேக்கலான்னு விளிச்சன். சரி நீ நாளைக்கு காலைல கிளம்பி எங்க வீட்டுக்கு வா. நாம பேசலாம். என்னால முடிஞ்சவரெ ஞான் ஹெல்ப் பண்றேன். இப்போ உறங்கு விஷ்வா"
"எப்--"
"நீ எதுவும் பரயண்டா... காலைல சம்சாரிக்கலாம். என்னை நம்பினா, இப்ப தூங்கு"
அவன் பதிலுக்குக் காத்திராமல், ஜோஷி வைத்துவிட்டான்.
விஷ்வாவின் நம்பிக்கை லேசாகத் துளிர்த்தது. 'உன்ன நம்பித்தான்டா இருக்கேன்' என்று மனதில் சொல்லிக்கொண்டு உறங்கிப் போனான்.
மறுநாள் காலை ஜோஷியின் வீட்டிற்குச் சென்றான். வழக்கத்தை விட உற்சாகத்தோடு அவனை வரவேற்று உள்ளே அமர வைத்தான் ஜோஷி. அவனது முகத்திலிருந்தே ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறான் என்று தெரிந்தது.
அவன் செல்ல நாய் போக்கோவும் அவனது உற்சாகத்தில் பங்குகொண்டு குதித்துக் கொண்டிருந்தது.
"சாப்டியா விஷ்வா...ஏதும் களிக்குவோ" அவனை வம்பிழுக்க வேண்டுமென்றே சொல்ல வந்த விசயத்தை விடுத்து வேறு ஏதேதோ பேசினான் ஜோஷி.
"ஜோஷி ப்ளீஸ்டா... எதாவது வழி கிடைச்சுதா? அத சொல்லுடா?"
"ம்... இதுக்கு மட்டும் ஃப்ரெண்ட்ஸ் வேணும்... சரி கேளு. இங்க Velammal institute ல இருந்து ஒரு டீம் லண்டனுக்கு ஒரு கான்ஃபரன்ஸ் அட்டெண்ட் பண்ண போறாங்க. அவங்களுக்கு ஒரு apprentice வேணும். நீ BBM படிச்சிருக்க இல்லயா? இந்த statistics, deals, facts எல்லாம் compile பண்ற வேலை உனக்கு. Institute செலவில லண்டன் போய்டலாம். ஆனா உன்னெ அவங்களோடெ ஜாயின் பண்ண நீ ஒரு ஏஜண்டுக்கு கமிஷன் தரணம். சுமார் அம்பதாயிரம். கூட, விசா எல்லாம் உன்னோட செலவு. எவ்ளோ சீக்கிரம் ஏற்பாடு பண்றயோ அவ்ளோ சீக்கிரம் போலாம்.."
விஷ்வாவுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. தன் நண்பனை ஆரத் தழுவிக்கொண்டான்.
"தேங்க்ஸ் டா ஜோஷி! என் நண்பா... அச்சோ! நீதான்டா என்னோட best friend!!" என்று அவனை மூச்சுமுட்ட இறுக்கினான்.
"டே டே... விடடா.. ப்ராந்து. இதெல்லாம் மஹிமா கிட்ட வச்சுக்கோ. இப்ப கிளம்பு. பணம் ஏற்பாடு பண்ணு"
"பணமா..." என்று தவிப்போடு ஏறிட்டான் விஷ்வா.
யாரைக் கேட்பது? கடனாக என்றாலும், நம்மை நம்பி யார் தருவார்? அண்ணனிடம் எப்படி வாங்குவது?
குழப்பத்தோடு ஜன்னல் வழியே எதேச்சையாகப் பார்த்தபோது, அவன் கண்ணில் விழுந்தது அவனது பைக்.
ஆசை ஆசையாய் மஹிமாவுக்காக, அவளுடன் நேரம் செலவிட வேண்டுமென வாங்கிய வண்டி...
"சரிடா.. ஏற்பாடு பண்றேன். வரேன்"
"ம்ம், டேக் கேர்டா.."
-----------------------
விஷ்வா அடிக்கடி எங்கெங்கோ சென்று வருவதும், தன் அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே எதோ செய்வதுமாக இருப்பதை அண்ணன் சர்வேஸ்வரன் கவனித்தார். அவனிடம் பேச முயன்றபோதெல்லாம் அவன் நழுவிவிடுவான். வசுந்தராவும் அதைக் கண்டு கவலைப்பட்டார்.
சரியாக அன்றிலிருந்து பத்தாவது நாள், விஷ்வா காணாமல் போனான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top