24
நொடிமுள்
மஹிமா தன் உடைமைகளை பைகளில் அடைத்துக் கொண்டிருந்தாள். பங்கஜம் அம்மாள் அவளருகில் அமர்ந்து விசித்து விசித்து அழுதுகொண்டு இருந்தார். தனக்கும் அழுகை வந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு அவரை சமாதானப்படுத்தியபடி துணிகளை மடித்து வைத்தாள் மஹிமா.
"இன்னும் எத்தனை நேரம்தான் அழுதுட்டே இருக்கப் போறீங்க நீங்க?"
அவர் புலம்பினார் வெளிப்படையாகவே.
"என்ன பாப்பா இது? யாரோ ஒருத்தனுக்காக எங்க எல்லாரையும் விட்டுவிட்டுப் போறேங்கற.. உனக்கே நியாயமா இது?"
மஹிமா பெருமூச்சு விட்டாள்.
"எனக்கு மறக்க வேண்டியது நிறைய இருக்கும்மா.. நான் இங்க இருந்தா அது நடக்காது. உங்ககூட எல்லாம் நான் மறுபடியும் சகஜமா இருக்கணும்னா, எனக்கு அந்த டைமும் ஸ்பேசும் வேணும். புரிஞ்சுக்கோங்க.."
அவர் அத்தனை முறை கேட்டும் அவன் யாரென்று கூற மறுத்துவிட்டாள் அவள். அவனைப் பற்றிப் பேசவே வேண்டாம் என்றுவிட்டாள் தீர்க்கமாக.
இன்று அவளது டில்லி பயணம். அங்கே ஒரு வாரம் தங்கி Visa, Emigration certificate, University admission என வேலைகளை முடித்துவிட்டு பின் லண்டன்.
ஆம். London School of Commerceல் தான் அவளது மேற்படிப்பிற்க்கு விண்ணப்பித்திருந்தார் அவள் தந்தை ராஜகோபால். அவளது படிப்பில், திறமையில் அசாத்திய நம்பிக்கை இருந்தது அவருக்கு. எனவே, தேர்வு முடிவுகள் வரும் முன்னரே அங்கே நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பயண ஏற்பாடுகள் முடிந்ததும் வீட்டில் இருந்த அனைவரிடமும் விடைபெற்று, தந்தையுடன் காரில் விமான நிலையத்திற்குப் புறப்பட்டாள் மஹிமா. தானும் டில்லிக்கு அவளுடன் வருவதாக அவர் கூறியபோது, அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
டில்லி ஃப்ளைட்டில் அவளைப் பத்திரமாக ஏற்றிவிட்டு கனத்த மனதுடன் வீடுதிரும்பினார் அவர். வீடே களையிழந்து காணப்பட்டது. தாயில்லாத மகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்த்தவர் ஏனோ அந்தக் காதல் விஷயத்தால் ஒரு தந்தையாகத் தான் தோற்றுப் போனதைப் போல உணர்ந்தார். தன் மகளை இந்நிலைக்கு ஆளாக்கியவனைக் கண்டுபிடித்துக் கூறுபோட அவர் நெஞ்சம் துடித்தது.
ஏதோ முடிவெடுத்தவராக, அவளது கல்லூரிக்குச் சென்றார் ராஜகோபால்.
"ப்ரின்சிபாலை பாக்கணும்."
"வாங்க சார், இதான் அவர் ரூம்.."
"வாங்க சார், வாங்க வாங்க. நல்லா இருக்கீங்களா சார்? டேய் ஐயாக்கு சேர் எடுத்துப்போடு!"
அவரை அடையாளம் கண்டுகொண்ட கல்லூரி முதல்வரின் கவனிப்பு அதீதமாக இருந்தது.
"இருக்கட்டும். சார், எனக்கு ஒரு உதவி தேவை. அதுக்காகத் தான் வந்திருக்கேன்"
"ஜூஸ் சாப்டுட்டே பேசலாம் சார். டேய் ஜூஸ் கொண்டுவா ரெண்டு பேருக்கும்!"
"பரவால்ல சார். கொஞ்சம் அவசரமா போகணும். எனக்கு மஹிமா--"
"உங்க பொண்ணைப் பத்தி நானே பேசணும்னு நினைச்சேன் சார். மாடல் ஸ்டூடண்ட் சார் அவங்க. இந்த வருஷமும் மஹிமா தான் கேம்பஸ் டாப்பரா வருவாங்க. அவங்களுக்கு ஒரு விழா வைச்சு கௌரவிக்கணும்னு எங்க ஸ்டாஃப் எல்லாம் விரும்பறாங்க. அவங்க வரலையா சார்?"
எப்போதும் தானே பேசிப்பேசிப் பழகிப்போனதால், அவரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார் முதல்வர்.
ராஜகோபாலின் பொறுமை சற்றே குறைந்தது.
"மஹிமா வரல. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். மஹிமாவோட க்ளாஸ்ல படிக்கறவங்களோட ஃபோன் நம்பர் எல்லாம் எனக்கு வேணும். கொஞ்சம் எடுத்துத் தர்றீங்களா?"
"ஐயையோ... என்னாச்சு சார் ? ஏதும் பிரச்சனையா? மஹிமா எங்கயாச்சும்..."
"ஷட் அப். அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் கேட்ட டீடெய்ல்ஸ் கிடைக்குமா கிடைக்காதா?"
அவர் கோபம் உச்சத்தைத் தொட்டு வார்த்தைகளில் வெடித்தது. அதைக் கேட்டு அரண்ட முதல்வர், அவர் கேட்பதை எடுத்துத் தருமாறு வேலையாளைப் பணித்தார்.
----------------
விஷ்வா வீட்டின் கூடத்தில் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்தான். அவன் அண்ணி வசுந்தராவுக்கு இன்று வளைகாப்பு ஆயிற்றே!
மொத்த வேலைகளையும் அண்ணனும் தம்பியும் போட்டிபோட்டு பார்த்துக் கொண்டனர். அவர்கள் செய்யும் சேட்டைகளை ரசித்தவாறு குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வசுந்தராவை ஆசீர்வதித்து, வளையல் போட்டு நலங்கு வைக்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லிக் கைப்பிடித்துக் குலுக்கினார் சர்வேஸ்வரன்.
ஆதர்சத் தம்பதியாக மிளிரும் சர்வேஸ்வரன்-வசுந்தராவைக் கண்டு ஊரே கண் வைத்தது. அதைக் கழிக்க, அவர்கள் இருவரையும் நிற்கவைத்து திருஷ்டி சுற்றினார் அன்னபூரணி. அன்றைய நாள் அழகாகச் சென்றது. விருந்தினர்களைச் சாப்பிட வைத்துத் தாம்பூலம் கொடுப்பது விஷ்வாவின் பொறுப்பு. அதைச் சிறப்பாக முடித்துவிட்டு அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிய பின்னர்தான் ஓய்ந்தனர் இருவரும்.
"காலைல இருந்து அந்த வேலை, இந்த வேலைன்னு ரெண்டு பேரும் கால்ல சக்கரத்தக் கட்டிட்டுப் பறக்கறீங்க. கொஞ்சமாவது ரெஸ்ட் எடுங்க" என்று அவர்களைப் பிடித்து நிறுத்தினாள் வசுந்தரா. அவள் முகம் மசக்கைக் களையும் சந்தனமும் சேர்ந்து தங்கமாய் மின்னியது. பெருமைப் பூரிப்பும் அதில் தெரிந்தது.
"நீங்க ஹேப்பியா இருக்கீங்களா அண்ணி? எல்லாம் நல்லா நடந்ததா?"
"பெரிய மனுஷரே... எல்லாம் நல்லபடியா நடந்தது. நான் ஹேப்பிதான். நீங்க தான் வெளிய சிரிச்சுட்டு உள்ள சோகமா இருக்கீங்க"
அவர் பட்டென்று கேட்டதும் அவனுக்கு வியப்பாக இருந்தது.
"என்ன பாக்குறீங்க? நீங்களா வந்து நல்ல சேதி சொல்லுவீங்கன்னு பார்த்தோம். ஆனா நீங்க ஒரு முயற்சியும் செய்யற மாதிரித் தெரியலையே? என்ன ஆச்சு உங்க லவ்வு? மஹிமா தானே பேர் சொன்னீங்க? அவ என்ன ஆனா? நீங்க திரும்ப பேசலையா? போனாப் போகட்டும்னு விட்டுட்டீங்களோ?"
"இல்லை அண்ணி. எவ்வளவோ ட்ரை பண்ணிப் பாத்தேன். ஆனா அவ பேசவே இல்ல. அவளுக்கான டைமும் ஸ்பேஸும் தரணும்னு நானும் ஒதுங்கியே இருந்தேன். மறுபடி பேசப் போயி பிரச்சனை ஆகுமோன்னு பயம்.."
"காலேஜே முடிஞ்சு போச்சு, இனியும் பயமா?"
"அதான் முடிஞ்சிருச்சே.. ஒரு வேலையத் தேடிக்கிட்டு, அதுக்கு அப்பறம் முறையா வீட்டுல போய் பொண்ணுக் கேக்கலாம்னு இருக்கேன்"
"சரிதான். அப்போ மட்டும் உன்ன அடிக்க மாட்டாளா என்ன?" என்றவாறு வந்தார் சர்வேஸ்வரன்.
"எல்லாம் ஒரு நம்பிக்கை தான்"
அவன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
அண்ணனும் அண்ணியும் சேர்ந்து சிரித்தனர். அதற்குள் அம்மா அப்பா வந்துவிட, அந்த சம்பாஷனை அத்தோடு முடிந்தது. விஷ்வா எழுந்து அறைக்கு வந்தான்.
அவனது எண்ணம் நல்லதுதான். வேலை, பின் வீட்டினர் சம்மதம், அதன்பின் திருமணம். அதைத்தான் காதலிக்கும்போது மஹிமாவும் சொல்வாள்.
ஆனால் மஹிமாவைப் பற்றி விஷ்வா நன்கு அறிந்திருந்தான். அவளிடம் இப்போது கல்யாணப் பேச்செல்லாம் எடுபடாது... முதலில் எப்படியாவது அவளை சமாதானப்படுத்திப் பேச வைக்க வேண்டும்.
ஒன்றரை வருடப் பிரிவை எப்படி சரி செய்வது? எப்படி மீண்டும் அவளை அணுகுவது?
அப்போது திடீரென்று அவன் கைபேசி அடித்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top