22

அழகிய தீயே

மஹிமா பற்பல யோசனைகளோடு அமர்ந்திருந்தாள்.

விஷ்வா வேண்டுமென்றே தான் அதையெல்லாம் செய்கிறானென அவளுக்குத் தெரியவில்லை.

அவன் தன்னைக் கடந்து போய்விட்டதாகவே தோன்றியது அவளுக்கு.

விஷ்வா தன்னிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வந்தது.
"ஏதோ கோபத்தில சொல்லிட்டேன்... அதுக்காக?"

'நம்மிடம் அவன் மன்னிப்புக் கோரவில்லை. தன் நிலையை மட்டுமே கூறினான். நாமாகப் புரிந்துகொண்டு அவனிடம் சேரவேண்டும் என்று நினைத்தான்.'

அவன் மாறவே இல்லை. மாறவும் போவதில்லை. அவனைக் காதலித்த பாவத்திற்கு நாம்தான் காயப்பட்டுக் காயப்பட்டு ரணமாகிறோம்.

ஏதேதோ கலக்கங்கள் மனதில் தோன்ற, கண்ணீர் அவளையறியாமல் கன்னங்களில் வழிந்தது.

" என்னாச்சு மஹிமா?"
ப்ரதிபா தான் பார்த்துக் கேட்டாள்.

"விஷ்வா."

ஒற்றை வார்த்தையே அவள் மனதைச் சொல்லியது.

"இன்னும் மறக்கலையா?"

"என்னிக்கும் மறக்க முடியாது ப்ரதி. ஃபர்ஸ்ட் லவ். ஃபர்ஸ்ட் லாஸ். "

"ப்ச், சரி... இவ்ளோ நாள் நல்லா தானே இருந்த? இப்ப திடீர்னு என்னாச்சு? இப்படி க்ளாஸ்ல உட்கார்ந்து அழுதுட்டு இருக்க?"

"இவ்ளோ நாள் எதுவும் பெருசா தோணல... இன்னிக்கு... அவன வேற ஒரு பொண்ணோட..."

"இதென்ன அநியாயம்...நீயும் பேச மாட்ட, அவனும் யாரோடவும் பேசக் கூடாதா?"

"சரி விடு... நான் எது பேசுனாலும் உனக்கு அநியாயமாத் தான் தெரியும்"

"அப்டி இல்ல மஹிமா. அவன்மேல அவ்ளோ கோபமா இருந்த, அவன் வேணான்னு நீதான சொன்ன...? அப்றம் அவன் எப்டிப் போனா என்ன? நீ ஏன் ஃபீல் பண்ற?"

"...."

"அவன் உன்கிட்ட பேச வந்தப்போ அறைஞ்சியாமே? அவன் என்னிக்காச்சும் உன்மேல கை வெச்சிருப்பானா?"

"வன்முறைன்றது வார்த்தையிலும் நடக்கலாம் ப்ரதிபா. உனக்கு சொன்னாப் புரியாது."

"...."

"என்னை தனியா விடேன், ப்ளீஸ்.."

"மஹி, அப்டி இருக்காதடீ. அவன்கிட்ட பேசிப் பாரேன். இல்ல நான் வேணா பேசட்டுமா?"

"வேணாம் ப்ரதிபா. எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும்தான் வேணும். என் வாழ்க்கையை நான் பாத்துக்கறேன். விடு."

----------------

அவள் வருவாள், தன்னிடம் ஏதாவது பேசுவாள் என்ற விஷ்வா காத்திருந்தது பத்து மாதங்கள்.

ஆம்.
அடிக்கடி அவள் கண்படும் தொலைவில் நின்று சாஷா, அனிதாவோடு அளவளாவுவான்; ஆர்ப்பரித்துச் சிரித்து அவளைத் தங்களைத் திரும்பிப் பார்க்க வைப்பான்.

தன்னை வருந்த வைக்க வேண்டும் என விஷ்வா அதை செய்வதாக நினைத்தாள் அவளும். கண்டும் காணாததுபோல் கடந்துவிட்டாலும், அவள் கண்ணீர் தினமும் தலையணையை நனைத்தது.

அப்பா ராஜகோபால் மகளது மாற்றங்களைக் கவனிக்கத் தவறவில்லை. எப்போதும் துறுத்துறுவென இருக்கும் மஹிமா இப்போதெல்லாம் இரண்டு வார்த்தைக்கு மேல் பேசுவதில்லை. சிரித்தாலும் அது மேலோட்டமாக மட்டுமே. முகம் எதையோ பறிகொடுத்ததைப் போல வாட்டத்துடன்.

அவரும் ஓரிரு முறை கேட்டுப் பார்த்தார்.

"அஸ்ஸைன்மென்ட் டென்ஷன் பா"

"தலைவலி பா"

"ட்ராஃபிக் தொந்தரவு பா"

எதாவது ஒன்றைச் சொல்லி சமாளித்தாள் அவள். அவரும் அதற்குமேல் கேட்பதில்லை. ஆனாலும் மனதுக்குள் வருந்தினார். தாய் இருந்திருந்தால் அவரிடம் மனம்விட்டுப் பேசியிருப்பாளோ என்றுகூட யோசித்துக் கலங்கினார்.

அவளுக்கு அவளது ஸ்கூட்டி மட்டுமே உற்ற நட்பாய் இருந்தது. மனம் உடைந்த நாட்களிலெல்லாம் அதை எடுத்துக்கொண்டு எங்காவது போய் வருவாள். கல்லூரிக்கும் ஸ்கூட்டியிலேயே சென்று வந்தாள்.

விஷ்வாவின் வீட்டில் அண்ணன் அவ்வப்போது அவனிடம் ஏதாவது விசாரிப்பார். அவன் மழுப்பிவிடுவான். அண்ணிக்கும் அதே. அவர்களும் அவன் பார்த்துக் கொள்வான் என அமைதியாக இருந்துவிட்டனர்.

இறுதியாண்டுத் தேர்வுகள் வந்தன. விஷ்வா அனிதா, சாஷாவை விட்டுவிட்டு அல்லைட் சைன்ஸ்சுக்கு மாறினான். ஆம், பாடங்கள் அதிகமென்பதால் முயற்சியும் அதிகம் தேவைப்பட்டது. மும்முரமாக அனைவரும் படிக்கத் தொடங்கினர். மஹிமா அவளது கனவுகளுக்காக உழைத்தாள்.

இம்முறை தந்தை ராஜகோபால் அவளுடன் சேர்ந்து உழைத்தார். தனது அலுவல்களை ஒதுக்கிவிட்டு, மகளுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து செய்தார். அவளுக்கு வரும் சந்தேகங்களுக்கு விடைசொல்ல அவரது கம்பெனியின் Managing executivesஐ அழைப்பார். அவளது ஒவ்வொரு தேவைக்கும் பணியாளர்களை நியமித்தார்.

தேர்வுகள் ஒவ்வொன்றும் அவளது திறமைக்குச் சவாலாக அமைந்தன. அவற்றை ஒவ்வொன்றாக பக்குவமாய் எதிர்கொண்டாள் மஹிமா. முந்தைய உற்சாகம் இல்லை என்றாலும், தன் கடமையாக நினைத்து முழுக்கவனத்துடன் தேர்வெழுதினாள்.

அவ்வப்போது அவன் ஞாபகம் வந்தது என்றாலும், அதனைக் கட்டுப்படுத்தத் தெரிந்தது அவளுக்கு. அழுவதற்கு நேரம் ஒதுக்கினாள் தன் அட்டவணையில்.

ஒருநாள் ராஜகோபால் அவளிடம் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாள் எனக் கேட்டபோது, தங்கள் நிறுவனத்திலேயே ஒரு கடைநிலை வேலையை எடுத்துக் கொண்டு படிப்படியாகக் கற்றுக் கொள்வதாகச் சொன்னாள் அவள். தந்தை வெளிநாட்டில் படிக்கச் சொன்னபோது பிடிவாதமாக மறுத்தாள்.

ராஜகோபாலுக்கு ஆற்றாமையாக இருந்தது.

"ஏன் மஹிம்மா? ஒண்ணு ரெண்டு வருஷம் ஃபாரின்ல படிச்சா நேரா வந்து MD சீட்லயே உட்கார்ந்துக்கலாம்.. எனக்கும் கவலையில்லாம இருக்கும்.."

"வேணாம் பா. நான் கீழ இருந்து ஆரம்பிச்சே மேல வர்றேன். அதுதான் முறை. டைரெக்டா மேல உட்கார்ந்தா, திடீர்னு என்னிக்காவது கீழ விழுந்துட்டா எப்டி மறுபடி மேல வருவேன்?"

"ஏன்டா அப்டிலாம் பேசற? உனக்கு என்னடா குறை? நீ எதுக்கு கீழ வரப்போற?"

"யாரும் நாளுக்கு என்ன நடக்கும்னு சொல்ல முடியாதுப்பா. என் முடிவு இதுதான். அதை நீங்களும் ஒத்துக்கணும்னு ஆசைப்படறேன்ப்பா.."

"உன் இஷ்டம் மஹிம்மா"

"தேங்க்ஸ்ப்பா."

-----------------

கடைசித் தேர்வு நாள்.

அன்றுடன் அனைவரும் பிரியப் போவதால் அவள் வகுப்பினர் அனைவரும் சேர்ந்து அவர்களுக்காக Farewell party ஏற்பாடு செய்திருந்தனர்.

தேர்வெழுதி முடித்துவிட்டு மாணவர்கள் அனைவரும் கலையரங்கத்தில் ஆட்டம் பாட்டம் என மகிழ்ந்தனர். இவர்களது நண்பர் கூட்டம் மட்டும் அருகிலிருந்த உணவகத்தில் கூடினர். பேசி, சிரித்து, நினைவுகள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டு, பின்னர் உணவருந்திவிட்டு, group photoக்களும் நூற்றுக்கணக்கில் எடுத்துக்கொண்டு, பிரியாவிடை பெற்று அங்கிருந்து கிளம்பினர்.

"எல்லாரும் டச்லயே இருங்கடா!"

"ஆமாடா.. வாட்சப் பக்கம் அடிக்கடி வாங்க!"

"ஹேய்.. சென்னைல இருக்கறவங்க எல்லாம் மாசம் ஒருதடவையாச்சும் மீட் பண்ணனும், சொல்லிட்டேன்!"

"கண்டிப்பா! காலேஜ்ல வருஷா வருஷம் பங்ஷன் நடத்தணும்!"

சோகமே உருவாக அனைவரும் இருக்க, இருதுருவங்களாக மஹிமாவும் விஷ்வாவும். ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல்.

நண்பர்கள் அனைவருக்கும் பிரியாவிடை அளித்துவிட்டு, அவர்களிடம் விடைபெற்று வந்து மஹிமா தன் வண்டியை எடுத்தபோது மணி ஏழாகியிருந்தது. அப்பாவிடம் சொல்ல மறந்து வெகுநேரம் இப்படி வெளியில் இருந்ததால் அவர் பதற்றப்படுவாரே என அவசரமாக வண்டியை எடுக்கும்போது, யாரோ அவளருகில் வந்து நின்றதுபோல் இருந்தது.

இதயம் ஒருமுறை நின்று துடித்தது அவளுக்கு.

விஷ்வாவா?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top