21
புரியாத பிரியம்
மஹிமா தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து சீக்கிரமே கிளம்பிவிட்டாள். அவள் தந்தை இந்த முறையும் முதல் மதிப்பெண் வாங்கினால் ஒரு ஸ்கூட்டி வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தார்.
அவர் அதைச் சொல்லாமலே வாங்கித் தந்திருக்கலாம். ஆனால் ஒரு சாதனைக்குப் பரிசாகக் கொடுத்தால் அதன் மதிப்பு அவளுக்குப் புரியும் என நினைத்தார்.
எனவே ஆர்வத்துடன் கல்லூரி அறிவிப்புப் பலகை நோக்கி விரைந்தாள் அவள். கூட்டம் சற்றுக் குறைவுதான்... ஆனாலும் இவள் நண்பர்கள் நிறையபேர் வந்திருந்தனர். இம்முறை தானாகத் தன் மதிப்பெண்ணைப் பார்த்துத் தெரிந்துகொண்டாள். அவள்தான் முதல் மார்க்.
"இதெல்லாம் பாக்கணுமா மஹிமா? உனக்கு எக்ஸாம் எழுதும்போதே தெரியும்ல?"
ஆதீஷ்தான் கேட்டது. அவள் புன்னகையுடன் மறுத்தாள்.
"அதெல்லாம் இல்ல. நான் எந்த predictionனும் பண்ணல"
"ஆனா நாங்க எல்லாரும் பண்ணியிருந்தோம். எங்க கணிப்பு கரெக்ட்தான். என்ன இருந்தாலும் டாப்பர் டாப்பர் தான்ல?"
"ரொம்ப கிண்டல் பண்ணாத ஆதி. எல்லாரும் நல்லா தானே பண்ணிருக்கோம்.."
"ஆனா பாரு, வருஷா வருஷம் நீயே ட்ரீட் வைக்கிறா மாதிரி ஆயிடுது"
"அவ்ளோதான? வச்சிடலாம் விடு"
"சூப்பர். இன்னிக்கு ஈவ்னிங், கேண்ட்டீன்ல!"
பேசிவிட்டு அவன் நகர, அடுத்து வந்தவர்களும் அவளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துச் சென்றனர். விஷ்வா சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தான். அவன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
விஷ்வாவைக் கண்டதும் மஹிமா பார்வையைத் திருப்பிக்கொண்டாள். எனினும் அனிச்சையாக சில நொடிகளில் அவன்புறம் பார்வை திரும்பியது. சென்ற வருடம் இதே நாள் நடந்தவை நினைவில் வந்தது.
கார்த்திக்.. விஷ்வா.. மோதல்.. காதல்..
கண்கள் லேசாகக் கரித்தன அவளுக்கு.
அவன் அவளைப் பார்த்தும் பாராமல் எதிர்த்திசையில் நடந்தான். யாரையோ எதிர்பார்த்து அவன் காத்திருந்ததுபோல் இருந்தது.
மாணவர் கூட்டம் கொஞ்ச கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. அப்போதுதான் மஹிமா அதைப் பார்த்தாள்.
விஷ்வா வேறொரு பெண்ணோடு...
அவளை அதற்குமுன் பார்த்ததாக நினைவில்லை மஹிமாவுக்கு. அவள் தோளோடு கைபோட்டு நீண்ட நாள் பழகியவர்கள் போலப் பேசிக்கொண்டிருந்தான் அவன்.
அவள் மனதில் மெல்லிய வலி.
'மஹிமா...ஏன் சோகம்? அவன் உனதல்லவே?'
'ஆனால் நான் அவனுடையவள்தானே?' தன் மனதிற்குச் சொன்ன பதிலில் அவளே அதிர்ந்து போனாள்.
---------------
விஷ்வா விடுமுறையில் திருநெல்வேலி சென்றிருந்தான். அவன் அண்ணியின் வீட்டில் அனைவரும் அவர்களை விழுந்து விழுந்து உபசரித்தனர். தினமும் கறிசோறு, வாழையிலை விருந்து எனக் கவனிப்பு பலமாக இருந்தது. ஆனால் எதுவும் விஷ்வா மனதை மாற்றவில்லை. அவன் முகம் அதைக் காட்டிக் கொடுத்தது.
"சின்ன மாப்பிள்ளை ஏதோ டென்ஷன்ல சுத்துறார்போல?" என சொந்தக்காரர்களே கேட்குமளவிற்கு இருந்தான். அவன் அம்மா எவ்வளவோ கேட்டும் அவன் வாய்திறக்கவில்லை.
அன்று அண்ணனும் அண்ணியும் குற்றாலம் செல்லப் புறப்பட்டபோது அவனையும் அழைத்தனர்.
"நீங்க போங்க, உங்க ரொமேன்ஸ்ல நடுவுல நான் எதுக்கு?"
"ஐய... ரொம்ப பெரிய மனுஷன்னு நெனப்பு. எங்களுக்கு எடுபிடிக்கு ஒரு ஆள் வேணாமா?" வம்பிழுத்த அண்ணனை முறைத்தான்.
"கொழுந்தனாரே...அவர் எதாவது உளறுவாரு. நீங்க வாங்க...ஜாலியா இருக்கும். நான் கேரண்ட்டி"
அண்ணியிடம் இருந்த மரியாதையால் மறுக்கவில்லை. அவர்களுடன் கிளம்பினான்.
அண்ணி வார்த்தை தவறவில்லை. வழியெல்லாம் சிரிப்பும் கும்மாளமுமாய் அவர்கள் குற்றாலத்தை அடைந்தனர். அவனைத் தனியாக விடாமல் பார்த்துக் கொண்டாள் வசுந்தரா. ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறான் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அவனாகச் சொல்லுவான் என்று காத்திருந்தார் அவர்.
அருவியில் குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தனர் மூவரும். அண்ணனுக்கும் தம்பிக்கும் பரிமாறிவிட்டு, அவர்கள் சாப்பிடத் தொடங்கிய பின்னர் தானும் சாப்பிட்டாள் வசுந்தரா.
உணவின்போது அண்ணன் மெல்ல விஷ்வாவிடம் பேச்சுக் கொடுத்தார்.
"என்னடா...பரீட்சை சரியா பண்ணலையா?"
"இல்லயே.. நான் நல்லாதான எழுதினேன் அண்ணா... ஏன் கேக்கறீங்க?"
"அப்போ வேற என்ன பிரச்சனை? ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க?"
"ஒ..ஒண்ணுமில்லையே..."
அவன் முகமாற்றமே அவனைக் காட்டிக் கொடுத்தது.
"அதான் மூஞ்சில தெரியுதே...என்ன ஆச்சு விஷ்வா?"
அவன் மௌனமாக இருக்க, அண்ணி வசுந்தரா மெல்லக் கேட்டாள்,
"எதினாச்சும் லவ் மேட்டரா?"
அவன் சட்டென்று நிமிர்ந்ததில் அவள் கண்டுகொண்டாள்.
"பரவாயில்லை சொல்லுங்க கொழுந்தனாரே. நாங்க யார்ட்டையும் சொல்லமாட்டோம்"
மௌனத்தில் தலையசைத்தான் அவன்.
"உங்க காலேஜ் பொண்ணா, வேற காலேஜா?" இம்முறை அண்ணன்.
"மஹிமா தாண்ணா"
விஷ்வா சொன்னதைக் கேட்டு சர்வேஸ்வரன் திடுக்கிட்டார்.
"என்னடா சொல்ற... நம்ம மஹிமாவா?"
வசுந்தரா புரியாமல் பார்த்தார் இருவரையும்.
"யாரு மஹிமா? ஏன் ஷாக் ஆனிங்க?"
"மஹிமா இவனோட பள்ளிக்கூடத்தில ஓண்ணாப் படிச்சவ. நல்லா படிப்பா, வசதியான வீட்டுப் பொண்ணு. ப்ளஸ் டூ படிச்சு முடிச்சிட்டு எங்கிட்டு வந்து, அவ சேர்ந்த காலேஜ்லயே நானும் சேரறேன்னு எங்கிட்ட கேட்டான். நான் தான் அவனை அங்கயே சேர்த்துவிட்டேன். ரெண்டு பேரும் பத்து வருஷ சினேகிதம்"
வசுந்தரா இப்போது புரிந்துகொண்டாள். ஆனாலும் கொழுந்தனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.
"இருக்கட்டுமே... அதனால என்ன? ஃப்ரெண்ட்ஸ்னா.. லவ் பண்ணக் கூடாதா?"
விஷ்வா குறுக்கிட்டான்.
"இல்ல அண்ணி, அவளும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்புனோம். நல்லாதான் போயிட்டிருந்தது. மூணு மாசத்துக்கு முன்னாடி சண்டை ஆயிடுச்சு"
"மூணு மாதத்துக்கு முன்னாடி சண்டைன்னா... அப்போ எப்பைல இருந்து காதலிக்கறீங்க?"
தயங்கித் தயங்கி விஷ்வா சொன்னான்.
"ஒரு வருஷம் ஆகப் போகுதுண்ணா"
அண்ணன் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. அண்ணியும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். தன் கொழுந்தனா இப்படி?
"ஒரு வருஷமாவா? ஏன்டா... எங்கிட்டக் கூட ஒன்னும் சொல்லல?"
"அது..."
"சரி விடு... சண்டை போட்டு மூணு மாசம் ஆச்சுனு சொல்ற... சமாதானம் பண்ணலயா?"
"அவளா வந்து பேசுவான்னு..."
"சரி...அப்றம் ஏன் சோகமா இருக்க? அதான் முடிவு பண்ணிட்டல்ல?"
"அவ வேற ஒருத்தன்கூட-" அதற்குமேல் பேச முடியவில்லை அவனால். நெஞ்சிலிருந்து எழுந்த அழுகையை தொண்டைக்குள் முழுங்கினான் அவன்.
தட்டை வைத்துவிட்டு கைகழுவ எழுந்தான். அவன் சென்றபின் சர்வேஸ்வரனும் வசுந்தராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவன் மனதைத் தெரிந்து கொண்டவர்கள் வரும்வழியில் ஏதும் பேசவில்லை. மாலையில் வீட்டை அடைந்தவுடன் அவன் தன்னறையில் சிறைபுகுந்தான். என்றுமில்லாத அளவிற்கு இன்று அவள் நினைவு வாட்டியது.
அவள் கண்கள், படபடக்கும் பேச்சு, கனிவான சிரிப்பு, வகுப்பில் வைக்கும் கவனம், அவனிடம் பேசும்போதெல்லாம் கண்ணில் மின்னும் காதல், அவளது அணைப்பில் அடையும் வெப்பம், முதல் முத்தம்...
அதுவே முதலும் கடைசியுமா?
அவள் நினைவுகளில் தன்னைத் தொலைத்திருந்தான் அவன். அண்ணன் உள்ளே நுழைந்து அவனருகில் அமரும்வரை அவனுக்கு உணர்வில்லை. தன் தோளில் அவர் கை வைத்ததும் தான் அவன் எண்ணங்களிலிருந்து மீண்டான்.
"விஷ்வா... உங்களுக்குள்ள என்ன சண்டைன்னு எனக்குத் தெரியாது. ஆனா எவ்ளோ நாள் சண்டை போட்டுட்டு இருப்பீங்க? யாராவது இறங்கி வர வேணாமா?"
"நான் போய் பேசுனேன் ஒருதடவை..."
"அப்றம்?"
"அறைஞ்சுட்டா"
முகத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அவன் கூற, அண்ணன் சர்வேஸ்வரன் அதிர்ந்தார்.
தன் அம்மாவைக் கூட இவனை அடிக்கவிட்டதில்லை அவர். அப்படிப் பார்த்துப் பார்த்து வளர்த்த தம்பியை, அவன் விரும்புகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு பெண் அடித்துவிட்டாளா??
"விஷ்வா... நீ போய் அவகிட்ட பேசணும்னு சொல்லல. அவளா வந்து பேசுணும்னா நீயும் ஏதாவது செய்யணும்ல?"
"ம்..பாக்கலாம்ணா."
"மனசைக் குழப்பிக்காம அமைதியாத் தூங்கு விஷ்வா. எல்லாம் சீக்கரமே சரியாகும்"
ஆனால் அன்றிரவு அவன் தூங்கவில்லை. நன்றாக மூளையைக் கசக்கினான்.
நெடுநேரம் யோசித்தபிறகு ஒரு வழி கிடைத்தது. அது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்காமல் அதைச் செயல்படுத்துவதில் முனைந்தான் அவனும்.
--------------
அவனது அந்த சொதப்பலான யோசனைதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
விடுமுறை முடிந்து ஒருவாரம் முன்னதாகவே கல்லூரிக்கு வந்தான் அவன். அவர்கள் ஜூனியர் வகுப்பில் பேச்சுக் கொடுத்தான்.
"Hello people. என் பேர் விஷ்வா. உங்க சீனியர். தெரியும்னு நினைக்கறேன். உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் எங்கிட்டக் கேக்கலாம். Consider me your friend. உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்டக் கேட்கலாம். "
ஒரு கை உயர்ந்தது.
"Yes..?"
"சார். இது எங்களோட லஞ்ச் ப்ரேக். நாங்க சாப்பிடப் போலாமா?"
கொல்லென்று சிரித்தனர் அனைவரும். கோபம் வந்தாலும் சிரித்து மறைத்தான் அவன்.
"உங்களை தொந்தரவு பண்ணதுக்கு ஸாரி. அதனால, இன்னிக்கு எல்லாருக்கும் என்னோட ட்ரீட். வாங்க"
இருபது பேரையும் அழைத்து கேண்ட்டீனில் ட்ரீட் தந்தான் அவன். அவன் நினைத்ததுபோல் நாலைந்து பேர் அவனுக்கு நண்பர்கள் ஆகினர். அதில் இரண்டு பெண்களும் அடக்கம்.
சாஷா, அனிதா இருவரும் மும்பையில் படித்தவர்கள். முற்போக்கு மனப்பான்மை கொண்டு கல்லூரியிலும் ஜீன்ஸ் டாப்ஸில் வலம் வருபவர்கள். எவரிடமும் சகஜமாகப் பழகுபவர்கள். அவர்களுக்கு விஷ்வாவை உடனே பிடித்துவிட்டது. ஒரே வாரத்தில் நெருங்கிய நட்பாகினர்.
சாஷாவோடுதான் அன்று அவன் பேசிக்கொண்டிருந்தான். அவன் அவள்மீது கைபோட்டாலும் அவள் ஏதும் சொல்வதில்லை. உடன் அனிதாவும் நின்றுகொண்டு இருந்ததால் அவன் கிட்டத்தட்ட ப்ளேபாய் பிம்பத்தில் இருந்தான்.
மஹிமா பார்த்தது தெரிந்தாலும் அவன் காட்டிக் கொள்ளவில்லை. தன் திட்டம் நடப்பதாக நினைத்தான் அவன்.
அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் வகுப்பறை நோக்கி விரைந்தாள். விஷ்வா ஏமாந்தான்.
ஆனால் அவன் முட்டாள்தனம் அவளை வேறுவிதத்தில் பாதித்ததை அவன் அறியாது போனான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top