19
மன்னிப்பாயா
கல்லூரியில் அன்று விஷ்வாவைக் காணவில்லை. மஹிமாவிற்கு அதில் நிம்மதியா ஏமாற்றமா என்று புரியவில்லை. ஒருபுறம் அவனைப் பார்க்கவே கூடாதென்ற வைராக்கியம் இருந்தாலும், மறுபுறம் கொஞ்சமாக ஏக்கமும் இருந்தது.
அவன் வந்து தன்னிலையை விளக்க ஒரு வாய்ப்புத் தரலாமென்று கூட நினைத்திருந்தவள், அவன் கல்லூரிக்கே வராததைக் கண்டு இன்னும் இறுகிப் போனாள்.
தன்னை சந்திக்க மனமில்லாமல் தான் அவன் வரவில்லை என்று நினைத்துக்கொண்டாள். ஆத்திரம் வந்தது.
மஹிமா உடனே தன் மனதுக்கு சரியெனப் பட்டதை செய்தாள்.
அவனது குறுஞ்செய்திகளைத் திறக்காமலே அழித்தாள். அவனது எண்ணை block செய்தாள். அவன் புகைப்படங்கள் ஒன்றிரண்டையும் நீக்கினாள். சமூக வலைத்தளங்களிலிருந்தும் அவனது நட்பை நீக்கலானாள்.
அன்று முழுவதும் வகுப்புகள், நூலகம், கலையரங்கம் என்று எதாவது ஒரு வேலையை வைத்துக்கொண்டு யோசிக்க நேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டாள். மதியம் பூங்காவில் அமர்ந்து கொஞ்சம் காற்று வாங்கினாள். நிகழ்ந்தவற்றை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு, தனக்குத் தெரிந்தவர் யாருமில்லாத புதுக் கல்லூரியில் சேர்ந்ததாக நினைத்துக்கொண்டு இங்கே படிக்க முடிவெடுத்தாள்.
மனது லேசானதுபோல் இருந்தது. தெளிவாக வகுப்புக்கு வந்தவள் கவனத்தை படிப்பில் திருப்பினாள்.
அன்று மாலை சற்றே உற்சாகமாக வீட்டிற்கு வந்தவளைப் பார்த்ததும்தான் பங்கஜம் அம்மாள் நிம்மதியானார். அவரே வந்து அவளை அழைத்தார் சிற்றுண்டிக்காக.
"மஹிமா... உனக்குப் பிடிச்ச டிஃபன் செஞ்சிருக்கேன்... சீக்கிரம் முகம் கழுவிட்டு வாடா"
"என்ன செஞ்சிருக்கீங்க அப்டி?"
முகத்தைத் துடைத்துக் கொண்டே இறங்கி வந்தவள் ஆர்வமாகக் கேட்க, அதற்கு விடையளிக்குமாறு ஒரு கிண்ணத்தைக் கொண்டுவந்தார் அவர்.
"தேங்காய்ப்பால் கொழுக்கட்டை! அப்டியே திருநெல்வேலி மணம் மாறாம பனங்கருப்பட்டி போட்டு காய்ச்சியிருக்கேன். நீ கூட ஸ்கூல்ல உன் ஃப்ரெண்ட் விஷ்வா தந்தான்னு சொல்லி அதுமாதிரி வேணும்னு ஒருநாள் அடம்பிடிச்சியே... ஞாபகம் இருக்கா?"
ஞாபகம் இருப்பதுதானே பிரச்சனை.
பதில்பேசாமல் அவள் அமர்ந்திருந்தாள். கண்கள் மீண்டும் லேசாக எரிந்தது. அவர் அதுபுரியாமல் இன்னும் உற்சாகமாக இருந்தார்.
"பாத்துட்டே இருக்காத மஹி, சாப்பிடு. டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லு!"
வேண்டாம் என்று சொல்லி அவரைக் காயப்படுத்த விரும்பாமல், அதை அரைகுறையாக அருந்திவிட்டு எழுந்து சென்றாள். மீண்டும் சில மணி நேரங்கள் தனிமையில் அழுது தீர்த்தாள்.
மறக்கமுடியாது போலும். மறைக்கவாவது பார்ப்போம்.
-----------------
இயல்பு நிலை திரும்பிவிட்டது என நிம்மதியாக மறுநாள் கல்லூரிக்கு வந்தாள் அவள். வழியில் ப்ரதிபாவும் ஆதீஷும் சேர்ந்துகொள்ள, அவர்களுடன் பேசிக்கொண்டே நடந்தாள். வந்தவள் வகுப்பறை வாசலில் மின்சாரம் தாக்கியதுபோல் நின்றாள்.
வாசலில் நின்றுகொண்டு இருந்தது அவனல்லவா?
விஷ்வாவைப் பார்த்ததும் அவள் மன உறுதி எல்லாம் காற்றில் கரைந்து போக, கால்கள் தள்ளாடின. அவனைப் பார்த்ததும் ஆதீஷ் ப்ரதிபாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அவள் தனியாக நின்றாள், ஒரு நொடி மட்டுமே.
அடுத்த நொடி, அவள் எதிர்ப்புறம் திரும்பி ஓடத் தொடங்கியிருந்தாள் யோசிக்காமல்.
அப்போது வேறெந்த நினைவும் இல்லை அவளுக்கு. அவனிடமிருந்து தூரப் போனால் போதுமென்று மட்டுமே தோன்றியது. கோபம் கண்ணை மறைத்தது.
"மஹிமா... நில்லு ப்ளீஸ்... ஒரு நிமிஷம் மஹி.. ஒரே நிமிஷம்.." என்று கத்தியவாறே அவள் பின்னால் ஓடினான் அவன்.
கல்லூரியில் கலைவிழாவோ என்னவோ, ஜூனியர் மாணவர்கள், மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், வெளியாட்கள், அனைவரும் அங்கங்கே கூட்டங்களாக நின்றிருந்தனர். அவர்களைத் தாண்டிக் கொண்டு மஹிமா ஓட, விஷ்வா பின்தொடர, அவர்களிடையே சலசலப்பு அதிகமானது.
எப்படியோ ஓடி வந்து புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்தின் உள்ளே நுழைந்தாள் மஹிமா. ஆளற்ற அரங்கம் அவளுக்கு நிம்மதியைத் தந்தது. ஓடிக் களைத்தவள் ஒரு மூலையில் சென்று அமர்ந்தாள். தன்னை சிரமப்பட்டு ஆசுவாசப் படுத்திக்கொண்டாள். வலுக்கட்டாயமாகக் கண்ணீரை அடக்கியதால் மூச்சுமுட்டியது. வழிந்த இருதுளி ஈரத்தை துப்பட்டாவின் ஓரத்தில் துடைத்துக் கொண்டு, சிறிது நேரம் சென்றபின்று மெதுவாக வெளியே வந்தாள்.
வகுப்பு ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தது. அவசரமாகத் தனது வகுப்பறை நோக்கி அவள் நடக்கையில், கட்டிடத்தின் அருகே காத்திருந்த அவனது கண்ணில் பட்டுவிட்டாள் அவள்.
"மஹிமா!"
சத்தமாக அவளை அழைத்தபடி நெருங்கி வர முயன்றான் அவன்.
அவள் இம்முறை திடமாக இருந்தாள். அவனது கத்தல்களைக் கண்டுகொள்ளாமல் சாதாரணமாக நடந்து எதிர்வழியில் சென்றாள்.
அதற்குள் விஷ்வா ஓடி வந்து அவள் தோளைப் பிடித்து நிறுத்தினான். அவன் முகத்தைப் பாராமல் ஒதுங்கி நடக்க எத்தனித்தாள் அவள்.
"ஹே மஹிமா... என்ன இது? நான் ஏதோ கோபத்தில சொன்னா--"
"விடு என்னை."
"ஹே... நான்தான் கோபத்தில சொன்னேன்னு சொல்றேன்ல..."
"கோபத்திலயோ சோகத்திலயோ... அதான் சொல்லிட்டல்ல?? எவ்வளவு சொன்னேன், அமைதியா பேசு, எல்லாரும் பாக்கறாங்கனு!? சும்மா வானத்துக்கும் பூமிக்குமா கத்துனியே? இப்போவே காரணம் இல்லாம போக சொல்லி கத்துற நீ, நாளைக்கும் இதுமாதிரி நடுவழியில கழட்டி விட்டுட்டு போகமாட்டேனு என்ன நிச்சயம்? ப்ச், மொதல்ல இதெல்லாம் எதுக்கு நான் உங்கிட்ட சொல்றேன்? விடு என்னை."
"மஹி.. கமான்.."
விஷ்வா அவள் பொய்க் கோபத்தில் இருப்பதாக நினைத்து அவளை அணைக்க முயன்று நெருங்கினான்.
பளார்!
விஷ்வா நம்பமுடியாமல் சிலையாக நின்றான். இடது கன்னம் பழுத்துச் சிவந்திருந்தது.
"மஹி--"
அவள் நிற்கவில்லை. தன் முடிவை அழுத்தி அறைந்து காட்டிவிட்டு விறுவிறுவென நடந்து வகுப்பிற்குச் சென்றாள்.
'இதுதான் நீ சொல்லும் காதலா மஹிமா? ஒருநிமிடம் நின்று பேசக்கூட வலிக்கிறதா உனக்கு? அவ்வளவுதானா அன்பெல்லாம்? உன்னைக் காயப்படுத்தினால் பதிலுக்குப் பழிவாங்கிவிட்டு விலகிவிடுவாய், அதுதான் நீயா?'
விஷ்வாவிற்குத் தெளிவாகவே புரிந்தது. அவன் அதற்குமேல் அவளைத் தொடரவில்லை.
அங்கிருந்த ஜூனியர் மாணவர்கள் அவனைப் பார்த்தவாறு தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அதற்குமேல் அவர்கள் முன்னிலையில் அங்கு நிற்க மனமின்றி அகன்றான். வகுப்பறைக்குள் அவன் நுழையுமுன் பேராசிரியர் வந்துவிட்டார். எனவே வாசலில் நின்று அவரை அழைத்தான் அவன்.
"Excuse me, sir."
முகத்தில் சுரத்தின்றி, குரலில் உயிரின்றி, கண்ணில் ஒளியின்றி, ஏதோ துக்க வீட்டுக்கு வந்ததுபோல் நின்றிருந்த விஷ்வாவை மொத்த வகுப்பும் திரும்பிப் பார்த்தது.
"ஏ விஷ்வா..! என்ன மேன்?! ஆளு செம்ம ட்ராஜிக்கா இருக்க? எதாச்சும் ப்ராப்ளமா?"
வியப்போடு கேட்டவர் அவர்களுக்கு Corporate accounting பாடப் பேராசிரியர். மாணவர்களோடு சகஜமாய்ப் பழகும் ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
"Nothing sir. May I come in?"
"சரி... சார் எங்ககிட்டல்லாம் சொல்லமாட்டீங்க. Get in"
கடந்து செல்லும்போது மஹிமாவைக் கடைக்கண்ணால் பார்த்தான் அவன்.
அவளோ முகத்தை நேராக வைத்துக்கொண்டு கரும்பலகையில் கண்ணைப் பொருத்தியிருந்தாள். எவ்வித பாதிப்பும் அவளிடம் தெரியவில்லை.
அவனது மனமெல்லாம் ரணமாகி இருந்தது.
'பேசினால் எல்லாம் சரியாகும் என்பாயே மஹிமா...ஏன் எனக்குப் பேச ஒரு வாய்ப்பு தரவில்லை? நான் வேண்டாமா உனக்கு? '
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top