18

வைகாசி நிலவே

திருமணப் பர்சேஸ்கள் அமர்க்களமாக நடந்தன. திருநெல்வேலியில் திருமணம் என்றாலும், திருமண நகைகள், ஜவுளிகள், பாத்திர பண்டங்கள், இத்தியாதி இத்தியாதிகள் என அனைத்தையும் சென்னையில் தான் வாங்க வேண்டுமென நின்றார் அன்னபூரணி.

சர்வேஸ்வரன் சொன்னதால் விஷ்வா முன்வந்து தானே அனைத்து கடைகளுக்கும் அனைவரையும் அழைத்துச் செல்வதாகச் சொன்னபோது, எல்லாருமே கொஞ்சம் ஆச்சரியப்படத் தான் செய்தனர். விஷ்வா தனக்குள் புன்னகைத்துக்கொண்டான்.

விஷ்வா இயல்பாகவே துடுக்காகப் பேசுபவன் என்றதால் அவனுக்கு அனைவரிடமும் கலந்து பழகுவது எளிதாகவே இருந்தது. தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பென இதைக் கருதித் தன் முழுத் திறமையையும் இதில் காட்ட முனைந்தான்.

அனைவரையும் ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு கடைக்கும் பிரிவு பிரிவாக அழைத்துச் சென்று, அழகாக அனைவருக்கும் தேவையானவற்றை வாங்க வைத்து, அவர்களது தேவைக்கேற்ப ஆலோசனைகள் கூறி, அனைவரையும் நேரத்தில் சரியாக சாப்பிடவும் அழைத்துச் சென்று, அன்று தன் நிர்வாகத்தன்மை, ஆளுமைத்திறன், பொறுப்பு என அனைத்தையும் நுட்பமாக அவன் வெளிப்படுத்த, வாயடைத்துப்போயினர் அவனது அன்னையும் தந்தையும்.

"டே விஷ்வா.. நீயாடா இது? சாப்பிட்ட தட்டைக் கழுவாமப் போற பையன், இன்னிக்கு என்னடான்னா ஊரையே கூப்பிட்டு சாப்பிட வைக்கற, பில்லும் கட்டற.. கரெக்டா ஒவவொருத்தருக்கும் என்ன தேவைன்னு கவனிச்சு செய்யுற.. எப்டிடா?"

"அதெல்லாம் அப்படித்தான்!"

சந்தோஷமாக வீடு திரும்பி அண்ணனிடம் பேச ஓடிவந்தான் அவன்.

சர்ப்ரைஸ் என்று சத்தமெழுப்பாமல் அவரது அறைக்குள் நுழைய, அவரோ– யாரும் இல்லை என்ற தைரியம்போலும்– தன் வருங்கால மனைவியிடம் ஃபோனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார்.

"ம்ம்... ஆமா... அப்றம்... அப்போ... ஓ.. நான் தரட்டா? உம்--"

பேசிக்கொண்டே திரும்பியவர் தம்பியைப் பார்த்ததும் சட்டென்று நிறுத்தினார் - பேச்சையும், கைபேசியையும்.

கதவில் சாய்ந்து குறும்பாகச் சிரித்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

"அ...எப்போ வந்த விஷ்வா? கதவைத் தட்ட வேண்டியதுதான?"

"இந்தப் பூனையும் பால்குடிக்குமான்னு பாத்துட்டு இருந்தேன்"

"டேய்... உதைபடுவே! சரி, எப்படி இருந்தது உன்னோட shopping experience?"

"கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்துச்சு. அப்பப்ப பயங்கர டென்ஷன் ஆச்சு. ஆனா எல்லாம் சரியா நடந்ததைப் பாத்தப்போ திருப்தியா இருந்ததுண்ணா"

"கரெக்ட். அந்த satisfaction தான் விஷ்வா. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு ஒரு உத்வேகம்.. அது நடந்தவுடனே கிடைக்கற திருப்தி... இதெல்லாம்தான் விஷ்வா, பொறுப்பானவனா இருக்க என்னை motivate பண்ணும். அது உனக்கும் இப்போ வந்துடுச்சுடா"

"அதெல்லாம் சரிதான்.. ஆனா டக்குன்னு ப்ளேட்ட மாத்திட்டிங்க பாத்தியா? அண்ணி கூடத்தானே கடலை?"

சிரித்துக் கொண்டே அவனை அவ்வறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்றார் சர்வேஸ்வரன். ஏனோ தம்பியிடம் அன்று மனம்விட்டுப் பேசவேண்டும்போல் இருந்தது அவருக்கு.

"விஷ்வா... இருபத்தெட்டு வயசான மாதிரியா இருக்கேன் நான்? பாக்குற எல்லோரும் முப்பது, முப்பத்தஞ்சு தானே சொல்வாங்க"

"அண்ணா--"

"நீ பொறந்தப்போ, அப்பா கவர்மென்ட் ஆஃபீஸ்ல குமாஸ்தா. மாசம் வெறும் எட்டாயிரம் சம்பளம். ஒரு TVS-50 இருந்தது. என்னை ஒரு கவர்மெண்ட் எய்டட் ஸ்கூல்ல தான் படிக்க வச்சாங்க. டிப்ளமோ வரை மட்டும் தான் படிக்க முடிஞ்சது. நீயும் அஞ்சாவது வரைக்கும் அந்த எய்டட் ஸ்கூல்ல தான படிச்ச.. நினைவிருக்கா?"

ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாலும், விஷ்வா மனதில் ஆயிரம் கேள்விகள். ஆயினும் சர்வேஸ்வரனே தொடர்ந்தார்.

"நான் படிக்கும்போதே, நம்ம அப்பா எனக்குத் தந்த வாழ்க்கைய விட, நான் அவருக்கும் உனக்கும் அதிகமா செய்யணும்னு முடிவெடுத்தேன். அதான்.. சீக்கிரம் பணம் வர்றா மாதிரி.. இந்த ரியல் எஸ்டேட் தொழில். அதைக் கையில எடுத்தேன்."

ஏதோ புரியத் தொடங்கியது அவனுக்கு. அமைதியாக அண்ணனையே பார்த்திருந்தான்.

"இந்தத் தொழில்ல நேர்மை மட்டும் பத்தாது விஷ்வா. கொஞ்சம்... சாமர்த்தியமும் வேணும். அதைத்தான் நான் செய்தேன். ஆனா என்னோட விஷயம் எதுவும் வீட்ட பாதிக்காமத்தான் இன்னிக்கு வரைக்கும் பாத்துக்கிட்டு வர்றேன். நம்ம கூட இருக்காங்களே... மணி, வாசு, ரங்கா எல்லாம்... வீட்டப் பொறுத்தவரை அவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ். கூட வேலை பாக்குற சினேகிதர்கள். ஆனா பிஸினஸ் வட்டத்துல எல்லாருக்கும் அவங்க என் அடியாட்கள்."

விஷ்வா முகத்தில் பதற்றம் தோன்றியதைப் பார்த்தவர் அவசரமாகத் தொடர்ந்தார்.

"நீ நினைக்கற அளவு பயங்கரமானவங்க இல்ல விஷ்வா நாங்க. இருந்தாலும், பாதுகாப்புக்காக. நான் இப்படியே பழகிட்டேன்... உன்ன ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்ததால, நீயும் ஜாலியா இருந்தே பழகிட்ட.. எந்தக் கவலையோ பாரமோ இல்லாம, உன் இஷ்டத்துக்கு இருப்ப. உன்னப் பாக்கறப்ப, நான் சின்ன வயசுல வாழாத வாழ்க்கை நீ வாழுறன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கும்"

விஷ்வா அண்ணன் முகத்தை உற்றுப் பார்த்தவாறே இருந்தான். அதில் இருந்த உணர்ச்சிகள் அவனைக் கண்கலங்க வைத்தன.

அவர் மீண்டும் தொடர்ந்தார்.

"விஷ்வா... இத்தனை வருஷம் நான் மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருந்தேன். உனக்கு நல்ல வாழ்க்கை, அம்மாவுக்கு நல்ல வசதி, அப்பாவுக்கு நல்ல மரியாதை. இப்படி நம்ம குடும்பத்துக்காக தான் உழைச்சேன். எனக்குன்னு எதுவும் செய்துக்கத் தோணலை. இந்த காதல், கல்யாணம், இதுங்க மேல எல்லாம் ஆர்வமும் இருந்ததில்லை. அம்மா பொண்ணுப் பாக்கறேன்னு சொன்னப்ப கூட எனக்கு பெரிசா அதில ஆர்வம் இல்ல. ஆனா... வசுந்தராவ பாத்ததும் எல்லாம் மாறிடுச்சுடா..."

மௌனமாய்ப் பார்த்தான் விஷ்வா.

"வேஷ்டி சட்டை, பேண்ட் ஷர்ட் ஆனது. வார் செருப்பு 'பாட்டா' ஆனது. என்னை இன்னும் கவனமா கவனிக்க ஆரம்பிச்சேன். தினமும் கண்ணாடியப் பார்த்து தலையக் கோதிக்கறேன், என்ன நானே புதுசா பாக்குறேன்டா... ம்ஹூம்.. அவ பாக்க வச்சிட்டா. எல்லோரும் மரியாதையோடவும், பயத்தோடவும் என்னோட பேசும்போது தனிச்சு இருந்தேன. ஆனா திடீர்னு அன்போட ஒருத்தி என்கிட்ட பேசவும், என் வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சுடா."

சிரித்துக் கொண்டே தொடர்ந்தார் அவர்.

"காதல் வினோதமானது விஷ்வா. எனக்கெல்லாம் காதல் வருமான்னு நானே எத்தனை தடவை யோசிச்சிருப்பேன்! ஆனா பாரு... நானும் கிறுக்கு மாதிரி ஒரு பொண்ணுகிட்ட ஃபோன்ல வழிஞ்சிட்டு இருந்தேன்... தம்பி உங்கிட்டயும் மாட்டிக்கிட்டேன்!"

விஷ்வாவுக்கு என்னவோ செய்தது.

"விஷ்வா, அங்க பாரேன். பௌர்ணமி நிலா... வானம்... மேகம்... இதையெல்லாம் ஒருநாள் கூட நின்னு நான் ரசிச்சதில்ல. இன்னிக்கு அதைப் பார்க்கும்போது, என் நிலாவோட முகம் தெரியுதுடா."

நிமிர்ந்து வானத்தை ஏறிட்டான் விஷ்வா.  வெள்ளி நிலவு மேகங்களுக்கிடையில் மிதந்துகொண்டிருந்தது. அவன் அதைப் பார்த்தபோது, அவனுக்கும் ஒரு முகம் தெரிந்தது.

அவனது வைகாசி நிலவு.

விஷ்வாவின் மனமெங்கும் அவளே இருந்தாள்.

அவளைக் காண மனம் கிடந்து தவித்தது. அண்ணனிடம் விடைபெற்றுத் தன்னறைக்கு வந்தவன் நினைவெல்லாம் அவளே. காலையிலிருந்து ஷாப்பிங் வேலைகளில் மும்முரமாக இருந்ததால் அவளை நினைக்க நேரமில்லை. இப்போது மறந்ததற்கும் சேர்த்தே அவளது நினைவு வாட்டியது.

எத்தனை முறை அழைத்தாலும் உடனே உடனே துண்டிக்கப்பட்டது இணைப்பு.

'Block பண்ணிட்டாளோ..'

'சரி..காலையில் நேரிலேயே சென்று பேசுவோம்' என ஒருவழியாக சமாதானமாகி, கனவுகளுடன் தூங்கிப் போனான் அவன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top