13
காதலர் தினம்
"மொதல்ல உன் கோபத்தை குறைக்கணும்டா நீ.. எவ்ளோ சிரிக்கறயோ அவ்ளோ சீரியஸாவும் ஆயிடற.. என்ன இருந்தாலும் பதினெட்டு வயசுக்கு இத்தனை கோபம் ஆகாது உனக்கு.."
அவன் மார்பில் சாய்ந்தவாறு சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
கல்லூரி முடிந்த பிறகு வெளியில் போகாமல் அங்கேயே பூங்காவில் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
விஷ்வா புன்னகைக்கவில்லை.
"உன் ப்ராஜெக்ட், ஹோம்வர்க், அஸைன்மென்ட் எல்லாத்தையும் முடிச்சிட்டு வா, நான் வெய்ட் பண்றேன்.."
"ப்ச்.. விஷ்வா--"
"இல்ல மஹி, கோபம் இல்ல, நான் சந்தோஷமா தான் சொல்றேன். நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. காத்திருக்கறதுல கவலையில்ல."
வார்த்தையால் சொன்னாலும், குரலில் தொய்வு இருக்கத்தான் செய்தது.
****
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே...
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே...
பேருந்தில் ஒலித்த பாடல் மஹிமாவைக் கவரவில்லை.
விஷ்வா பைக் வாங்கிவிட்டதால் இப்போது அவள் மட்டும்தான் தனியாகப் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றாள். விஷ்வா அவளையும் தன்னோடு வர அழைத்தாலும், அப்பா முன்னால் அவனோடு பைக்கில் செல்வது ஆபத்து என மறுத்துவிட்டாள்.
மற்ற நாட்களில் இருந்த உற்சாகம் இப்போது ஏனோ குறைந்திருந்தது. தேர்வுகள் பாடங்கள் என மஹிமாவின் நாள்காட்டி நிறைந்திருந்தது.
கட்டிடங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டே ஜன்னலோரம் அமர்த்திருந்தவள், தங்கள் ஸ்டாப்பிங் வந்ததும் எழுந்தாள்.
கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிய மஹிமா, அங்கே நின்றிருந்த விஷ்வாவைக் கண்டு வியந்தாள்.
அவர்கள் சண்டை போட்டு, சமாதானமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது. இயல்பாக வாழ்க்கை சென்றாலும், அன்றிலிருந்து விஷ்வா அவளை எங்கேயும் அழைக்காதது உறுத்தியது. இன்று அவன் இவள் வரும்முன் பேருந்து நிறுத்தத்திலே நின்றிருந்தான்.
"ஹாய் மஹிமா, குட் மார்னிங்!"
"ம்.. குட் மார்னிங். என்ன விசேஷம்?"
"சரிதான்... இன்னிக்கு என்ன நாள்?"
அப்போது தான் கைபேசியை உயிர்ப்பித்துத் திரையை நோக்கினாள்.
பிப்ரவரி 14.
"ஓஹ்... சாரிப்பா... எனக்கு நேத்தெல்லாம் ஞாபகம் இருந்தது. காலைல அவசரத்தில.."
அவன் மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். ஏமாற்றம் அதில் சன்னமாய்த் தெரிந்தது.
"நிஜம்மா... இங்க பாரு!"
அவள் தன் பைக்குள் இருந்து ஒரு நீலக் கண்ணாடிக் காகிதம் சுற்றப்பட்ட டப்பாவை எடுத்துத் தந்தாள்.
"Happy Valentine's day விஷ்வா! நான் மட்டும் தானே உனக்கு விஷ் பண்ணனும். எப்போ பண்ணினா என்ன?"
அவள் யதார்த்தமாகச் சொல்ல, அவன் முகம் கன்றியது.
"ஹேய்.. சும்மா சொன்னேன்... உடனே மூட் ஆஃப் ஆகாத ப்ளீஸ். பாரு நீ இன்னும் எனக்கு விஷ் பண்ணல.."
முகத்தைக் குழந்தை போல அவள் பாவமாக வைத்துக் கொள்ள, அவள் விழிகளில் அவன் ஏமாற்றங்கள் தொலைந்தது.
அந்த கிப்ட்டை வாங்கிக்கொண்டு,
"Happy Valentine's day" என்று சொல்லிப் புன்னகைத்தான்.
"நம்மளோட முதல் காதலர் தினம் இல்லையா இது?"
"ஹ்ம்ம்.."
அவனிடம் ஆர்வமில்லை. மஹிமா துணுக்குற்றாள்.
"உன் கிஃப்ட்ட பிரிச்சுப் பாரேன்.."
"க்ளாஸுக்கு லேட் ஆகுது... வா உள்ள போய் பிரிச்சுப் பாக்கலாம்"
"ம்ஹூம்.... இன்னிக்கு எங்கயாச்சும் வெளிய போலாம்... let's celebrate!"
இன்று எப்படியேனும் பனிப்போரை உடைக்கவேண்டும் என முடிவில் இருந்தாள் மஹிமா.
"Really?"
"ஆமா. நானே சொல்றேன். வா போலாம்"
அவனுக்கு இருமுறை சொல்ல வேண்டியதில்லை. உடனே பைக்கை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினர். வழியெங்கும் காதலர் தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவன் நகரத்தை விட்டுத் தள்ளி, ஃபைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தான்.
"என்ன...ஏற்கனவே ப்ளான் பண்ணிட்டு கூட்டிப்போற மாதிரி இருக்கு?"
"ப்ளான்லாம் இல்ல... நீ வந்தா கூட்டிட்டுப் போலாம்னு நெனைச்சிருந்தேன்"
"ஓ.. சரி, எங்கே போறோம்?"
"சொல்றேன். பத்து நிமிஷம் பொறு.."
சில நிமிடங்களிலேயே பைக் தார் சாலையை விடுத்து மண்ரோட்டில், காட்டு வழியில் இறங்கியது.
"விஷ்வா...எங்கே போறோம்?"
"பயமா இருக்கா?"
"பயமா? எனக்கு எதுக்கு பயம்? ஆர்வமா தான் இருக்கு"
"ரெண்டே நிமிஷம்.. இடம் வந்தாச்சு"
அவன் வண்டியை நிறுத்த, அவள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக இறங்கினாள்.
ஏதோ தோப்புபோல இருந்தது அந்த இடம். நடுவில் பெரிய வீடு. சுற்றி பனையோலைகள் கொண்டு சின்ன குடில்கள் போல் அமைத்திருந்தனர். சுற்றிலும் மரம் ,செடிகொடிகள் என்று நகரத்தில் காணக்கிடைக்காத காட்சிகள். வானிலை கூட இங்கே வேறுபட்டது. சென்னையில் கொளுத்திய வெய்யில் இங்கே குளிர்ந்தது. காற்று இதமாகத் தழுவிச் சென்றது. ஓடையின் சலசலப்பு கூட பிண்ணனியில் கேட்டது.
"என்ன இடம் இது? எதாவது ரிசார்ட்டா?" லேசாக சந்தேகம் வந்தது அவளுக்கு.
"இல்ல...இது அண்ணாக்கு சொந்தமான ஃபார்ம் ஹவுஸ். வாங்கி ஒரு மாசம் தான் ஆச்சு"
"ஓ.. இடம் ரொம்ப அழகா இருக்கு விஷ்வா "
"ஹ்ம்ம்... அங்கே உட்கார்ந்திரு.. நான் கேர்டேக்கர் கிட்ட பேசிட்டு வந்துடறேன்"
"உங்க அண்ணாக்குத் தெரியுமா நாம வந்தது?"
"அதையும் சொல்லிடறேன். Will be back in ten minutes."
அவளை ஒரு நாற்காலியில் அமரச் செய்துவிட்டு அவன் உள்ளே சென்றான்.
பத்து... இருபது... முப்பது நிமிடங்கள் ஆனது.
மஹிமா அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவ்வப்போது கைக்கடிகாரத்தையும் பார்த்திருந்தாள்.
முக்கால் மணிநேரம் ஆனது. பொறுமையிழந்து, அவனுக்கு அழைக்க அலைபேசியை எடுத்தாள். அதில் டவர் சுத்தமாக இல்லை என்று காட்டியது. அப்போதுதான் மனதில் லேசாகப் பயம் வந்தது. அவன் பெயரைக் கத்திக் கூப்பிட்டும் பலனில்லை. என்னவெனப் புரியாமல் இறுதியில் கண்ணீரின் விளிம்பில் அவள் இருக்கும்போது சரியாக அவன் திரும்பி வந்தான்.
"ஹேய்... சாரி, லேட்டாயிடுச்சா?"
அவன் மார்பில் சரமாரியாக அடித்தாள் அவள்.
"அறிவிருக்கா விஷ்வா உனக்கு? தனியா விட்டுட்டு போயிட்ட? எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?"
"சரி..அதான் வந்துட்டன்ல? Happy Valentine's day!"
இத்தனை நேரம் கையில் மறைத்துப் பிடித்திருந்த பூச்செண்டை அவளிடம் தந்தான்.
அத்தனையும் காட்டு மலர்கள். அவற்றை அழகாகச் சேர்த்திருந்தான் அவன். பூங்கொத்து அவன் காதலை அழகாகத் தெளிவாகக் காட்டியது. மஹியின் முகம் மலர்ந்தது. ஆனாலும் கோபத்தைக் கொஞ்சம் கண்ணில் வைத்திருந்தாள்.
"கொஞ்சம்தான் சிரியேன்.." என அவள் கன்னத்தைக் கிள்ளினான் அவன்.
"நீ பேசாத... போ!"
"ஹேய்... இங்க பாரு மஹி... ப்ளீஸ். அதான் ஸாரி கேட்டுட்டேன்ல?"
அவனைப் பொருட்படுத்தாமல் அவள் நடக்கத் தொடங்க, அவள் கையைப் பிடித்து இழுத்தான் அவன்.
"இன்னும் ஒரு surprise இருக்கு. அதைப் பார்த்துட்டுப் போயேன்.."
என்ன என்பதைப் போல் அவள் நோக்கினாள். அவன் சொல்லாமல் அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அந்த பண்ணை வீட்டின் பின்புறம் சலசலத்தது ஒரு சிற்றோடை. ஓடையில் கால்களை நனைத்தவாறு சென்று அமர்ந்தான் அவன். அவளையும் கீழே இழுத்து அமரவைத்தான் தனக்கு அருகே.
சில்லெனத் தனது காலைத் தழுவிச் செல்லும் நீர் உடலெங்கும் சிலிர்க்கவைக்க, நீளமாக மூச்சிழுத்தாள் அவள்.
"என்ன சர்ப்ரைஸ்?"
அவள் கேட்கவும் பின்னால் ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்தது. திடுக்கிட்டவள் அவனை இறுக்கப் பற்றிக்கொண்டாள். அவன் சிரித்தான்.
"மேல பாரு!"
அவள் நிமிர்ந்து பார்க்க, வானத்தில் ஆயிரம் சிவப்புப் பலூன்கள் பறந்துகொண்டிருந்தன.
நடுவில் 'Vishwa ♡ Mahima' என வரையப்பட்ட பெரிய காத்தாடி ஒன்றும்!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top