12
காதல் கசக்குதய்யா
எல்லாக் காதலும் கதைகளில் வருவதுபோல் டூயட் பாடுவது, வசனம் பேசுவது, கட்டியணைத்து முத்தம் தருவது என்று மட்டுமே இருப்பதில்லையே...
நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தெரிந்தால் மட்டுமே காதலிக்க முடியும். அது இன்றி, தாம் எதிர்பார்த்தவை மட்டுமே காதலில் நிகழவேண்டும் என்று எண்ணினால்?? என்ன நடக்கும்?? முதிர்ச்சி இல்லாத காதல் சாத்தியமா??
கனவு போல சென்று கொண்டிருந்தது மஹிமா-விஷ்வா காதல் வாழ்க்கை. ஆனால் கனவுகள் வருவதும் காலையில் கலைவதும் தவிர்க்க முடியாததாயிற்றே!
"மஹி... இன்னிக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு நாம ரெண்டு பேரும் Phoenix mall போறோம். ஓகே தானே?"
முதல் பாடவேளை முடிந்த இடைவேளையில் அவளருகில் வந்து அமர்ந்திருந்தான் விஷ்வா.
"ஹேய்... போன க்ளாஸ் என்னத்த கவனிச்ச? இன்னும் மூணு நாள்ல அந்த projectஅ முடிச்சு சம்மிட் பண்ணனும்னு சார் சொன்னரே... கேக்கல?"
புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் கேட்டாள் அவள்.
"Come on... Projects வரும் போகும் மஹி.. நம்ம டைம் திரும்ப வருமா?"
"Outings கூட அடிக்கடி வரும் போகும் விஷ்வாபாய்!"
அவன் கன்னத்தை வருடிவிட்டு அவள் மீண்டும் பாடப் புத்தகத்தில் மூழ்கினாள்.
"ப்ச்.. கமான் மஹி."
"புரிஞ்சுக்க விஷ்வா. இது முக்கியம்"
"நீ வர்றயா இல்லயா? இப்ப முடிவா என்ன சொல்ற?" அவன் சற்றே குரலை உயர்த்த, சத்தத்தில் வகுப்பறையில் இருந்தவர்கள் அவர்களை நோக்கித் திரும்பினர்.
சற்றே திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டவள் தீர்க்கமான பார்வை பார்த்தாள் அவனை.
"நீ நெனைக்கறது மட்டும்தான் நடக்கணுமா விஷ்வா? ஒருதடவை நான் சொல்றத கேட்கக் கூடாதா? லவ்னா ரெண்டு பேரோட வார்த்தைக்கும் மதிப்பு இருக்கணும்ல? நீ போகலாம்னு சொல்ற, நான் வேணாம்னு சொல்றேன். இப்ப யார் சொல்றதை யார் கேட்கறது?"
பதில் பேசாமல் பட்டென்று எழுந்து சென்றுவிட்டான் அவன். மனதில் தவிப்பு இருந்தாலும் லேசான கோபமும் இருந்ததால் மஹிமா அவனைத் தடுக்கவில்லை. இதுவரை நான்கு முறை க்ளாஸ் கட் அடித்துவிட்டு அவனோடு வெளியே சென்றிருந்தாள். வகுப்பில் அட்டெண்டென்ஸ் குறைந்திருந்தது. ஒரு அஸ்ஸைன்மென்ட் வேறு முடிக்கப்படாமல் இருந்தது. பாடங்கள் படிக்கப்படாமல் சேர்ந்துகொண்டிருந்தன.
விஷ்வாவுக்கு அதெல்லாம் கவலையில்லை. கல்லூரி மாணவர்களுக்கே உண்டா அலட்சியம். காதலிக்கும் இளைஞர்களுக்கே உண்டான பிடிவாதம்.
அவனுக்கு எப்போதும் அவளோடு இருக்கவேண்டும். பள்ளியில் இருந்ததுபோல் அவள் படிக்கும்போது அருகே அமர்ந்து பார்த்திருப்பது அவனுக்குச் சலித்துவிட்டது போலும். இப்போது சிறகு முளைத்ததுபோல் பைக்கும் வந்துவிட, அவனைக் கையிலே பிடிக்க முடியவில்லை. தினமும் எங்கேயாவது வெளியில் வரச் சொல்லி இழுப்பான்.
மஹிமா நிறைய தடவை அவனுக்காக வெளியே போக ஒத்துக்கொண்டாலும், முழுமனதாக அவனுடன் நேரம் செலவிட முடியவில்லை அவளால். அவளது மனசாட்சி, பொறுப்பு, கடமையுணர்ச்சி எல்லாம் அவனுடன் வீணாக்கும் நேரத்தில் அவளைத் தாக்கின.
அவனிடம் அதைப் பற்றிப் பேசினால் சிரிப்பான்.
"இதெல்லாம் ஓரு பிரச்சனையா? வீட்டில ஃப்ரீயா இருக்கும்போது எழுது, படி, ப்ராஜெக்ட் பண்ணு, என்னவோ பண்ணு... காலேஜ்ல என்கூட ஜாலியா இரு. அவ்ளோ தான?"
அவனுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. அவளுக்குத் தெரிந்தது. இன்று அது பெரிதாக வெடித்தது.
இருவரும் கோபித்துக் கொண்டாலும், மஹிமாவின் மனதுதான் இளகியது முதலில். நமக்காகத் தானே இதெல்லாம் செய்கிறான் என நியாயம் பேச முயன்றது.
வகுப்பிற்கிடையில் வாட்ஸ்ஸாப்பில் அவனுக்கு அவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாம் 'blue tick' காட்டியது. ஆனால் அவனிடமிருந்து பதில்கள் வர மறுத்தன. மதியம் உணவு இடைவேளையில் வலுக்கட்டாயமாக அவனருகில் சென்று அமர்ந்தாள். அவன் எழுந்து போக முயன்றான்.
"விஷ்வா! நில்லு விஷ்வா..."
"தேவையில்ல"
"நான் என்ன சொன்னேன்னு இப்போ கோவப்படற?" அவன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள் அவள்.
"நீ ஒன்னும் சொல்லல. விடு"
"உட்கார்ந்து பேசினா எல்லா பிரச்சினைகளும் தீரும்--"
"நீ உட்கார்ந்து பேசு. நான் போறேன்"
"விஷ்வா... எதுக்கு விஷ்வா இவ்ளோ கோபம்? அதுவும் என்மேல?"
"ஆள் பாத்து கோவப்படத் தெரியாது எனக்கு. கோபம் ஒண்ணும் ப்ளான் பண்ணி வர்றதில்லை."
"கோவப்படற சரி. அதைத் தீர்க்க வேணாமா?"
"நீதான் வர மாட்டல்ல. நான் தனியா போயி தீர்த்துக்கறேன்"
"விஷ்வா.. நான் காரணத்த சொல்லிட்டேன். புரிஞ்சுக்காம நீ இப்படி விட்டேத்தியா பேசினா எப்படி விஷ்வா?"
பட்டென அவள்முன்னால் அமர்ந்தான் அவன். தீர்க்கமாக அவளைப் பார்த்தான்.
"உனக்கு assignment முக்கியமா, இல்ல நான் முக்கியமா?"
"இதென்ன கேள்வி.. ரெண்டுமே தான் முக்கியம் விஷ்வா.."
"நல்லது. அசைண்மென்ட்டை வச்சுக்கோ. நான் கிளம்பறேன்"
அவள் கைகளை உதறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் அவன்.
விக்கித்து அமர்ந்திருந்தாள் மஹிமா.
தான் என்ன தப்பு செய்தோம் என இன்னும் புரியவில்லை அவளுக்கு.
———————————————
விஷ்வாவாலும் அதிக நேரம் அவள்மேல் கோபம் காட்ட முடியவில்லை. தினமும் ஆயிரம் முறை பேசும் ஒருத்தியிடம் எப்படி அன்று முழுவதும் பேசாமல் இருப்பது?
அவளும்தான் இறங்கி வரக் கூடாதா? ஒரு ஆறுதலுக்காகவாவது தான்தான் முக்கியம் என்று சொல்லக்கூடாதா? இரண்டுமே முக்கியம் என்றால்... ஒரு assignment அளவுதான் அவனுக்கு மரியாதை, முக்கியத்துவமா?
மீண்டும் அவனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான மணி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான்.
அவள்தான்.
"I thought you know me better. For me, commitments are very much important in life. But you are my life. How could you not understand that? I really want you with me always. If you want the same, talk to me Vishwa."
விஷ்வா பார்த்ததாக blue tick காட்டியது மஹிமாவின் அலைபேசி. மாலை ஐந்து மணியாக ஐந்து நிமிடங்கள் இருந்தது. ஐந்து மணிக்கு அவன் கிளம்புவதாகச் சொல்லியிருந்தான். பதற்றத்துடனே பார்த்திருந்தாள் மஹிமா.
திரையில் 'typing' என்று வந்ததும் மஹிமா உற்சாகமானாள். இரண்டு நிமிடங்கள் யுகங்காகக் கடந்தன.
'டிங்' என்று கைபேசி சப்தித்தது.
"Even I want the same. And I try to understand. But give importance to your life also"
ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல முகம் பிரகாசித்தது அவளுக்கு. அவள் நிமிரவும் பாடவேளை முடிந்து மணியடிக்கவும் சரியாக இருந்தது.
அனைவரும் வகுப்பறையை விட்டு ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். அவளும் விஷ்வாவும் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவள் சென்று அவனிடம் நின்றாள்.
"விஷ்வா.."
"சொல்லு" குரலை வைத்து எதுவும் அறியமுடியாத வண்ணம் இருந்தது அவனது தொனி.
"நம்ம லைஃப்ல இதுபோல எத்தனையோ தருணங்கள் வரும்.. 'நான் முக்கியமா அது முக்கியமா'ன்னு ரெண்டு பேருக்குமே கேள்வி வரும்.. ஒண்ணு மாறாது விஷ்வா. அதெல்லாம் வரும், போகும்.. ஆனா நாம எப்பவும் ஒண்ணா தான் இருப்போம்."
"ஹ்ம்ம்"
"You understand, right?"
"I try to"
"தேங்க்ஸ் விஷ்வா... எனக்கு அதுவே போதும்."
"சரி வா போலாம்"
"விஷ்வா...."
"வீட்டுக்கு தான்மா! வா ட்ராப் பண்றேன். சீக்கிரம் assignment, project எல்லாம் முடிச்சிட்டு, அப்றம் வெளியே போலாம்"
"விஷ்வா!"
அவனை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டாள் அவள்.
"That's my boy!!"
அவளை பதிலுக்கு அவனும் அணைத்துக்கொண்டு நின்றான். அவன் நெஞ்சில் சாய்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அவள்.
அவன் முகத்தின் சோகரேகைகள் அவளுக்குத் தெரியவில்லை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top