10
கவிதையே தெரியுமா
அன்று நடந்தவை யாவும் கனவு போலவே இருந்தது அவளுக்கு. பேருந்து வந்தவுடன் விஷ்வா சென்று பின்னால் ஏறிக் கொள்ள, அவள் ஏதும் கேட்க முடியாமல் போனது.
அவள் அமைதியாக வீட்டிற்கு வந்தாள். அதிகம் பேசாமல் உணவருந்தி விட்டுத் தன் அறையில் முடங்கினாள். அப்பா ராஜகோபால் அவரது வேலையில் மும்முரமாக இருந்ததால் அவளைக் கவனிக்கவில்லை. அவருக்கு நாளை அலுவலகத்தில் செயற்குழு போர்ட் மீட்டிங் இருந்தது.
மஹிமாவுக்கும் அது நல்லதாக அமைந்தது. ஏனெனில் அப்பா கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலையில் இப்போது அவள் இல்லை.
ஏன், அவளது மனதில் இருந்த கேள்விகளுக்கே அவளிடம் பதிலில்லையே..
'விஷ்வா....ஏன் விஷ்வா? ஏன் இப்படி செய்தாய்? உனக்குள் இத்தனை எண்ணங்கள் எப்போதிலிருந்து? வெறும் ஈர்ப்பு என்றால் இத்தனை வருடங்கள் எப்படி நிலைத்திருக்க முடியும்? நான் என்றால் உனக்கு அவ்வளவு இஷ்டமா? நீ சொல்லவேண்டிய காதலை அவன் சொல்லிவிட்டான் என்று அவனை அப்படி அடித்தாயே? அது சரியா தப்பா? இப்படித்தான் காதலிப்பதா?
இல்லை இது வெறும் ஈர்ப்பு தானா? நீ அதை சிந்திக்காமல் ஏதேதோ முடிவெடுத்திருந்தால்... காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டிருந்தால்?
ஐயோ... நான் ஏன் இப்படிப் புலம்பித் தவிக்கிறேன்? அவனிடம் பேசலாமா? அவனை அழைக்கலாமா? ஐயோ... அழைத்து என்ன பேசுவது? என்ன கேட்பது? ஒன்றும் வேண்டாம்.... அப்போது இப்படியே புலம்பித் தவிக்க வேண்டியதுதானா...'
மஹிமா அன்று முழுவதும் தூங்கவில்லை. அவளுக்கு முன்னர் புரியாததெல்லாம் இப்போது புரிந்ததுபோல் இருந்தது.
பள்ளியில் தனக்காகக் கூடுதலாக சப்பாத்திகள் கொண்டுவருவது... எதாவது நோட்டை அவள் மறந்து வந்தால், தன் நோட்டைத் தந்துவிட்டு அவன் வெளியே சென்று நிற்பது... நண்பர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தாலும் அவள் சிரிக்கும்போது அவன் முகத்தைப் பார்த்தே அவனும் சிரிப்பது... பேருந்தில் முதலில் அவளுக்கு இடம்பிடித்துவிட்டுத் தனக்காக இடம்தேடுவது...
இதெல்லாம் தான் காதலா? சிறுசிறு விஷயங்களில் அன்பை வெளிப்படுத்துவது தானா காதல்? நாம் என்னவோ கண்ணைப் பார்த்துக் காதல் வருமென்று நினைத்திருந்தோமே....
"அதுமட்டுமே காதல் இல்ல...ஆனா அதுவும் காதலில் ஒரு பார்ட்"
மீண்டும் விஷ்வாவின் வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது.
அவன் கவிதைகள் எல்லாம் தனக்காகத் தானா... மஹியின் மனது சட்டெனத் துள்ளிக் குதித்தது. விஷ்வாவின் காதல் கவிதைகளின் கண்ணூற்று அவள்தானா?அந்த ஒரு எண்ணம் போதுமே தன் முடிவுகளை அவள் எடுக்க!
அவன் வாழ்க்கையில் இருப்பதற்கும் முன்னதாகவே, அவன் வார்த்தைகளில் நீ இருக்கிறாய் மஹிமா!
என்னென்னவோ எண்ணங்கள்... ஏழு வண்ணங்களாகக் கனவுகள்...
தானாகச் சிரித்துக் கொண்டாள் அவள். தனக்குள்ளும் இத்துணை சந்தோஷங்கள் பொங்குமென அன்றுதான் உணர முடிந்தது அவளால்.
எப்போடா விடியும் என்று காத்திருந்து தவித்தாள் மஹிமா.
---------------
மறுநாள் காலை...
கல்லூரிப் பூங்காவில் குல்மொஹர் பூக்கள் மரமெங்கும் அடர்ந்து பூத்திருந்தன. வானம் மேகங்களற்று நீலமாய் நீண்டது.
மஹிமா வழக்கமாக இவை எவற்றையும் கவனித்ததில்லை. ஆனால் இன்று ஏனோ அனைத்தும் புதிதாகக் தோன்றின. அவள் நடந்து செல்கையில் அவள் நட்புவட்டம் பூங்கா பெஞ்ச்களை ஆக்கிரமித்து அமர்ந்திருந்தது. எதிரெதிராகப் போடப்பட்டிருந்த பெஞ்ச்சுகள் அவர்கள் கதைபேச வாகாக இருந்தன.
"என்னடா சொல்ற விஷ்வா?"
"நீ மஹிமாவை லவ் பண்றயா?"
"அதனாலதான் கார்த்திக்க அடிச்சயா?"
"மஹிமா கிட்ட சொல்லிட்டயா?"
"அவ என்ன சொன்னா?"
"ஏன் ஒன்னும் சொல்லல?"
ஆளாளுக்குக் இவ்வாறு கத்திக் கொண்டே இருந்தனர். இவள் நடந்து வருவதைக் கண்டதும் அமைதியாயினர். விஷ்வா நிமிர்ந்து பார்த்தான்.
"தனியா பேசலாமா?" என்றாள் அவள்.
வழக்கமான மென்மை, இதம், கனப்பு எல்லாம் அதில் குறைவதாகத் தோன்றியது அவனுக்கு. கலக்கம் கனமாய்க் கூடியது மனதில்.
அவன் பதிலுக்குக் காத்திராமல் அவள் நடந்து செல்ல, வேறு வழியின்றி அவளைப் பின்தொடர்ந்தான் அவன். அவர்களது வகுப்பு இருக்கும் கட்டிடத்தின் பின்புறம் சென்று நின்றாள் அவள். தான் பேசப்போவதைத் தெளிவாகத் திட்டமிட்டிருந்தாள்.
அங்கிருந்த திட்டில் சாய்ந்து அமர்ந்து அவள் பேசுவதைக் கேட்கக் காத்திருந்தான் அவன்.
"நீ கார்த்திக்கை அடிச்சது தப்பு. அவன்கிட்ட சாரி கேளு. சின்சியரா."
"தப்புதான். பார்த்தா சாரி கேட்கறேன்."
"ஹ்ம். ஏன் இத்தனை வருஷமா எதுவும் சொல்லல?"
லேசாக சிரித்தான் அவன்.
"சொல்ல வேண்டிய அவசியம் வரலைங்கறது தான் உண்மை மஹி. நீ எப்போதும் என்னோடவே இருக்கணும்னு நெனச்சேன். நீயும் இருந்த. உன்கூட எப்போதும் பேசணும்னு நெனைப்பேன். நீயும் பேசுவ. நான் நெனைச்சதெல்லாம் நான் சொல்லாமலே நடக்கும்போது ஏன் சொல்லணும்?"
அவன் கேள்வியில் லேசாகத் திண்டாடிப்போனாள் அவள்.
"ஓ... இப்போ வேற ஒருத்தன் வந்ததால, எல்லாத்தையும் சொல்ல வேண்டியதாப் போச்சு இல்ல?"
"மஹி... அடிச்சது தப்புதான், ஆனா உன்னை விரும்புறேன்னு கேட்டது ஒன்னும் தப்பில்லையே.. நீயும் நானும் எவ்ளோ நல்ல ஃப்ரெண்ட்ஸ்...உன்னை நான் புரிஞ்சிக்குவேன்.. என்னை நீ புரிஞ்சிக்குவ... நமக்குள்ள நல்லா ஒத்துப்போகும்."
"அதி---"
"ப்ளீஸ் மஹிமா... என்னை லவ் பண்ணுனு நான் கேட்கல... பழையபடி என்கூடவே இருன்னு தான் நான் சொல்றேன்"
"இல்---"
"நான் எவ்ளோ யோசிச்சு வச்சிருந்தேன்... எப்படியெல்லாம் உன்ன லவ் பண்ணனும்ணு... டக்குன்னு நீ கேட்கவும் நான் உளறிட்டேன். சே!"
நிறுத்தாமல் புலம்பிக் கொண்டிருந்தவனை அவளது ஒரு வார்த்தை நிறுத்தியது.
"இப்போ யார் உன்ன வேணாம்னு சொன்னா?"
திடுக்கிட்டு நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான் விஷ்வா.
கண்கள் மின்ன அவள் புன்னகைத்தாள்.
"எனக்குப் புரியுது விஷ்வா...உன் கவிதைகளுக்குக் காரணமா இருந்தது நான்தான்... இனியும் அப்படியே இருக்கணும்னு நெனைக்கிறேன்."
"நெ... நெஜமாவா..." அவனால் தன்னையே நம்பமுடியவில்லை. கண்களையும் வாயையும் திறந்து திறந்து மூடினான். தலையைத் திருப்பித் திருப்பி பார்த்தான்.
"உண்மைதான் விஷ்வா... நான் சொல்லிட்டேன். நீ இப்படியே நிக்கறதுன்னா நான் போறேன்" சிரித்துக் கொண்டே திரும்பிப் போகப் போனாள் அவள்.
"மஹி..."
நின்று திரும்பிப் பார்த்தாள்.
"I love you."
"Love you too!"
அவள் அவ்வார்த்தைகளை அவனுக்குத் திரும்பச் சொல்கையில் இரண்டு இதயங்களுமே இருகணங்கள் நின்று துடித்தன.
---------------
"என்டே ஏசப்பாவே!!! இது எந்தா மிரக்கிள்?! மஹியுடே விஷ்வா கமிட் ஆயோ? எங்ஙோட்டு? எந்நினானு?!!"
"ஏன்டா இப்படி கத்துற?!"
"என்டே சிறிய ஹ்ருதயத்தால் இங்கனையொரு ஷாக்கெத் தாங்கான் பாடில்லா... ஐயோ பகவானே!"
ஸ்பீக்கர் ஃபோனில் ஜோஷி அலறுவதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தாள் மஹி.
கல்லூரிப் பூங்காவில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
"ஜோஷி... முதல்முதலா உங்கிட்ட தான் சொல்றோம்... எங்கயும் உளறி வைக்காதடா... ப்ளீஸ்.. "
"அங்கனெயோ மஹி? நிண்ட அச்சனிடத்தில் ஞான் பறஞ்ஞால்?"
"ஹேய்... என்ன ப்ளாக்மெய்லா? நாங்களே சொல்லிடுவோம்... இன்னும் 2,3 வருஷத்தில"
"அது வளற காலமல்லே...ஞான் இப்பவே பறயான்"
"நீ பறயான்... ஞான் கறையான்!"
அவனது அரைகுறை மலையாளத்தில் விஷ்வா கெஞ்சியதும் ஜோஷிக்கே சிரிப்பு வந்தது.
"பேடிக்கண்டா மோனே! ஞான் அங்கனெ ஒன்னும் பறையில்லா... என்ஜோய்... happy love life. கோலேஜிலேயே உங்க லவ் ஸ்டோரியை நடத்துங்க!"
"தேங்க்ஸ் டா"
பேசிவிட்டு அலைபேசியை அணைத்தான் விஷ்வா. மஹிமா நேராகத் தொடுவானத்தைப் பார்த்திருந்தாள். தானாகச் சிரித்தாள்.
"என்ன மஹி?"
"புதுசா இருக்கு விஷ்வா... இவ்ளோ நாள் ஃப்ரெண்ட்ஸா இருந்தது சாதாரணமா இருந்துச்சு. இப்ப எதோ.. வினோதமா இருக்கற மாதிரி இருக்கு.."
பதில் பேசாததால் விஷ்வாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவனது முகம் கல்லாக இறுகியிருந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top