Part8
பாகம் 8
*இனியாவின் திருமண நாள்*
அன்று காலை முதலே, மிகவும் தொய்வாக காணப்பட்டான் பாரி. அவனால், ஒரு இடத்தில் ஐந்து நிமிடம் கூட சேர்ந்தாற்போல் அமர முடியவில்லை. திருமணத்திற்கு செல்லலாமா, வேண்டாமா என்று அவனுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது. இறுதியாக, சற்று சீக்கிரமே கிளம்பி சென்று, இறுதியாக ஒருமுறை இனியவை பார்த்துவிட்டு, முகூர்த்த நேரத்திற்கு முன்பாக அங்கிருந்து கிளம்பி விட தீர்மானித்தான். அதன்படி, சிறிது முன்னதாகவே கிளம்பி, திருமண மண்டபத்தை வந்தடைந்தான்.
அவன் திருமண மண்டபத்தை வந்து சேர்ந்த பொழுது, அந்த இடமே குழப்பத்துடன் காணப்பட்டது. தனது தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான் சுபாஷ். சீதா, ஒரு மூலையில் நின்று அழுது கொண்டிருந்தார். மக்களோ தங்களுக்குள் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு பெண், மக்களைப் பார்த்து, ஏதோ நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார். சேதுராமன், அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்று கொண்டு இருப்பது போல் தோன்றியது. அந்தப் பெண் வேறு யாருமல்ல சுபாஷின் அம்மாதான். அந்தப் பெண் மிகவும் கோபமாக காணப்பட்டார். ஒன்றுமே புரியாமல் நின்ற பாரியின் காதுகளில், மக்கள் பேசிக்கொண்டது விழுந்தது. * மணமகளை காணவில்லையாம்*
தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு நியாயம் கேட்டு, சுபாஷின் அம்மா ராதிகா, கண்டபடி கத்திக் கொண்டிருந்தார். சேதுராமன் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
" தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இருங்க, சத்யா எப்படியும் இனியாவை தேடி கண்டு பிடித்து விடுவான்"
" தேடி கண்டுபிடிக்கிறதுன்னா என்ன அர்த்தம்? எவன் கூடயோ ஓடிப்போனவள, எங்கிருந்து நீங்க தேடி கண்டுபிடிப்பீங்க?"
" என் பொண்ணு அப்படிப்பட்டவ இல்லம்மா. ஏதோ தப்பு நடந்திருக்கு. கண்டிப்பா சத்யா, அவளை தேடி கண்டுபிடிச்சிடுவான்"
" உங்க கனவுல மட்டும்தான் அது நடக்கும். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாணத்துல துளிக்கூட விருப்பமே இல்லை. என் பையனை கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பொண்ணுங்க கியூவில் நிக்கிறாங்க. என் பையன் ஆசைப்பட்டான்னு தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். எனக்கு ஆரம்பத்தில இருந்து உங்க பொண்ணு மேல சந்தேகம் தான், அவ இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா மாதிரி காட்டிகவே இல்லை. "
" நீங்க அப்படி எல்லாம் தப்பா நினைக்காதீங்க. ஒருவேளை, அவள் வேற யாரையாவது விரும்பி இருந்தால் நிச்சயம் எங்ககிட்ட சொல்லி இருப்பா. "
சேதுராமனை பார்க்கவே பாவமாக இருந்தது பாரிக்கு. ஒரு தந்தை, தன் மகளுக்காக இரந்து கொண்டிருக்கிறார், ஆனால் இந்த பெண்மணியோ அதை பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. அந்தப் பெண்ணின் நிலை புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால், பெண்ணின் பெற்றோரின் நிலை மட்டும் என்ன சும்மாவா? அவர்களுக்கு மட்டும் அவமானம் இல்லையா? அனைவரை விடவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவர்கள்தானே?
ராதிகா, சுபாஷின் தோளில், கோபமாக அடித்தாள்.
" அப்படி என்னத்தடா நீ அவகிட்ட கண்ட? என்னோட பேச்சை கூட மதிக்காம, அவ தான் வேணும்னு அடம் பிடிச்சியே, பாரு அவள் எவன் கூடயோ ஓடிப் போயி, நம்மள தலை குனிய வெச்சுட்டா. "
அதற்கு மேல் பாரியால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அவன் நேராக சுபாஷை நோக்கி சென்றான்.
" உங்க அம்மா இனியாவை இன்ஸல்ட் பண்ணிட்டு இருக்காங்க, நீ அதைக் கேட்டுகிட்டு சும்மா இருக்க? உனக்கு இனியாவை பற்றி தெரியாதா? எதுக்காக இப்படி அமைதியா இருக்க?"
" தம்பி, அவ மேல இவ்வளவு அக்கறை காட்டுறீங்களே, நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று பாரியை பார்த்து கேட்டாள் ராதிகா.
" நான் இனியாவோட ஃபிரிண்ட்" என்று தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான் பாரி.
" உன்னை மாதிரி அவளுக்கு இன்னும் எத்தனை ஃப்ரெண்ட் இருக்காங்கன்னு தெரியல... அதுல எவன் கூட அவ ஓடி போனானும் தெரியல" என்று எகத்தாளமாக கேட்டாள் ராதிகா.
" சுபாஷ்... எதுக்காக இப்படி வாய மூடிட்டு இருக்க?" என்று தன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் பாரி.
" எங்க அம்மா கேட்கிறதுல ஒன்னும் தப்பில்லையே. அவங்க சொல்றது சரிதான். இனியாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. அவ என்கிட்ட ஒரு தடவை கூட பேசினதே இல்லை."
அதைக் கேட்ட போது, பாரிக்கு வியப்பாக இருந்தது. இனியாவிற்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லையா...? பிறகு எதற்காக இந்த முட்டாளை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்?
" அவளுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், எதுக்காக நீ அவளை கல்யாணம் பண்ணிக்க நெனச்ச?" என்று கேட்டே விட்டான் பாரி.
" அதைத்தான் நானும் கேட்கிறேன். அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா, எதற்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்? ஒத்துகிற மாதிரி நடிச்சுட்டு, எதற்காக ஊர் ஜனங்க முன்னாடி எங்களை அவமானப்படுத்தனும்? நாங்க எப்படி ரோட்டில் தலைநிமிர்ந்து நடப்போம்? போறவங்க வர்றவங்க எல்லாம் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கும்போது, நான் என்ன பதில் சொல்றது? இந்த ஒழுக்கம் கெட்ட பொண்ணால தான் எங்களுக்கு இந்த அவமானம்... "
ராதிகா பேசிக்கொண்டே போக... தாங்கமாட்டாமல் கத்தினான் பாரி.
" போதும் நிறுத்துங்க... அவங்க அம்மா அப்பாவுக்கு அவமானம் இல்லையா? அவங்கள மனுஷங்களா கூட மதிக்க மாட்டேங்கிறீங்க? நீங்க சொன்னதெல்லாம், அவங்களுக்கும் தானே நடக்கும்? ( சுபாஷை பார்த்து) நீ எல்லாம் என்ன மனுஷன்? நீ இனியவை காதலிக்கிறேன்னு சொல்ற... ஆனா அவ மேல நம்பிக்கை இல்லாம, உங்க அம்மா சொல்றதெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா இருக்க... என்ன காதல் உன்னோடது?"
" எல்லாரும் ஈசியா பேசிடலாம், ஆனா அவங்க நிலைமையில் இருந்து பார்த்தாதான் தெரியும்" என்றான் சுபாஷ்.
" ஆனால், என்ன நடந்ததுன்னே தெரியாம, ஒரு பொண்ணு மேல இப்படி அபாண்டமா பழி சுமத்துவது தப்பில்லையா? உன்னால கொஞ்ச நேரம் பொறுத்துக்க கூட முடியாதா? என்ன நடந்ததுன்னு தெரியாம, நீ எப்படி இனியாவை குத்தம் சொல்ல முடியும்?"
அவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான் சுபாஷ்.
" இது உனக்கு தேவையில்லாத விஷயம், எங்களுடைய சொந்த விஷயம்"
என்ற ராதிகாவை,
" அப்படின்னா, நீங்க உங்களுக்குள்ள... நாலு சுவத்துக்குள்ள... இத பேசித் தீர்த்திருக்கணும். எதற்காகப் மத்தவங்க எல்லாரும் பார்க்கிற மாதிரி, பப்ளிக்கா கத்திக்கிட்டு இருக்கீங்க?"
சேதுராமனும், சீதாவும், யாரோ ஒருவன் தங்கள் பக்க நியாயத்தை பேசுவதைப் பார்த்து சிறிது ஆறுதல் அடைந்தார்கள். சீதா, இனியாவின் தோழி ப்ரீத்தியை, தனியாக அழைத்து சென்றாள். அவள்தான் இனியா காணாமல் போன பொழுது அவளுடன் இருந்தவள்.
" இங்க பாரு பிரீத்தி, உனக்கு ஏதாவது விஷயம் தெரியுமா? அவ யாரையாவது விரும்பினாளா? உங்கிட்ட ஏதாவது சொல்லி இருந்தாளா?"
" என்ன ஆன்ட்டி இப்படி கேக்கறீங்க... உங்களுக்கு அவளை பத்தி தெரியாதா?"
" எனக்கு தெரியும். ஆனால் நீ பாத்த இல்ல, சுபாஷோட அம்மா அவளை பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசிக்கிட்டு இருக்காங்கன்னு... அவளை எப்படி எல்லாம் அவமான படுத்துராங்கன்னு... அத என்னால தங்க முடியலை" என்று கூறிவிட்டு ஓவென்று அழுதார்.
" ப்ளீஸ் அழாதீங்க ஆன்ட்டி. நானும் இனியாவும், வீட்ல சத்யா அண்ணனுக்காக காத்திருந்தோம். சத்யா அண்ணன் போன் பண்ணி, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடறேன்ன்னு சொன்னார். நான் பாத்ரூம் போயிட்டு வந்து பார்த்தா, அங்க இனியா இல்லை. எனக்கு ஒண்ணுமே புரியல. அந்த சின்ன கேப்ல அவ எங்க போய் இருக்க முடியும்னு தெரியல. ஆனா, நிச்சயமா இதுல அவளுடைய தப்பு இருக்க வாய்ப்பு இல்லை ஆண்ட்டி. என்னை நம்புங்க."
" என்ன பிரயோஜனம் இருக்கு? நம்மளால அவ மேல தப்பு இல்லன்னு நிரூபிக்க முடியுமா? யார் அவளை இனிமே நம்பவா?"
" நீங்க நம்புரிங்க இல்ல ஆன்ட்டி? நான் என்னோட ஃபிரண்ட நம்பறேன். அதோ அங்க நிற்கிறாரே பாரி, அவரும் அவளை நம்பறாரு. நல்லவங்க நல்லவங்களை பத்தி நல்லா தான் நினைப்பாங்க. சத்தியமா சொல்றேன், இனியாவால நிச்சயமா சுபாஷ் கூட சந்தோஷமா இருக்கவே முடியாது. அவங்க அம்மா அவளை சந்தோஷமாக இருக்க விடவே மாட்டாங்க. மாட்டாங்க."
*ஆமாம்* என்று தலையசைத்தார் சீதா. அவர்கள் சத்யா தொங்கிய முகத்துடன் உள்ளே நுழைவதை கண்டார்கள். அவனை பார்த்தவுடன் அவனை நோக்கி ஓடினான் சுபாஷ்.
" இனியவை பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?" சுபாஷ் எதிர்ப்பார்ப்புடன் கேட்டான்.
இல்லை என்று தலையசைத்தான் தலையை குனிந்தபடி. மறுபடியும் ராதிகா ஆரம்பித்து கொண்டார், மக்களைப் பார்த்து,
" நீங்க எல்லாம் இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க? எல்லாம் முடிஞ்சு போச்சு... அவ வரமாட்டா... எல்லாரும் கிளம்பி போங்க"
எல்லோரும் மெல்ல தலைய ஆரம்பித்தார்கள். சீதா வாயைப் பொத்திக் கொண்டு அழுதார். சேதுராமன், விஷயம் கைநழுவி விட்டதை உணர்ந்து சிலையாய் நின்றார்.
" சுபாஷ் போகாதே" என்று கெஞ்சினான் சத்யா.
" இதுக்கெல்லாம் காரணம் நீதான். நீ உன்னுடைய பிசினஸை, பெருசா விரிவாக்கம் பண்ண நினைச்சு, உன்னோட ஓடுகாலி தங்கச்சிய எங்க தலையில கட்ட பார்த்த... "
" இல்லாங்க ஆண்ட்டி, இது நிச்சயமா எனக்கு வேண்டாதவங்க யாரோ செய்த சதிதான்" சத்யா கெஞ்சினான்.
" அப்படியே இருந்தா கூட, அதை பத்தி எல்லாம் எங்களுக்கு என்ன கவலை? எவனோ கடத்திக்கிட்டு போன ஒரு பொண்ண, நான் என் வீட்டு மருமகளா ஏத்துக்குவேன்னு நீ நினைக்கிறாயா? அப்படி திரும்பி வர்றவ, கன்னித் தன்மையோட இருப்பான்னு என்ன நிச்சயம்? கன்னித் தன்மை இழந்த ஒருத்தியை மருமகளாக்கிக்க நான் ஒன்னும் வேறு வழியில்லாதவள் இல்லை"
இனியாவின் தோழி ப்ரீத்தி உட்பட, அங்கு இருந்தவர்கள் அனைவருமே தங்கள் பொறுமை இழந்தார்கள், ராதிகாவின் பேச்சைக் கேட்டு. என்றால், நாம் பாரியின் நிலை பற்றிக் கூற வேண்டிய அவசியம் இல்லை.
" போதும் நிறுத்துங்க( கையெடுத்துக் கும்பிட்டார் சேதுராமன்) நடந்தது என்னவா வேணா இருக்கட்டும். அதுக்கெல்லாம், என் பொண்ணு காரணமா இருந்தாலும், இல்லைனாலும், உங்க கிட்ட நான் அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். தயவுசெய்து எங்களை மன்னிச்சிட்டு இங்கிருந்து கிளம்பி போங்க."
ராதிகா சுபாஷின் கையை பற்றி, அவனை தரதரவென தன்னுடன் இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். ஒரு வார்த்தையும் பேசாமல் சுபாஷ் அமைதியாக அவளுடன் சென்றான்.
" இதுக்கெல்லாம் யார் காரணம்னு எனக்கு தெரியும்" என்று கோபமாக கத்தினான் சத்யா.
" யாரு?" என்றார் சேதுராமன்.
" ராஜா தான்... அவன் வீட்ல இல்ல. என்னை பழிவாங்குவதற்காக அவன்தான் இதை செஞ்சிருக்கணும்"
" நான் உன்கிட்ட தல தலயா அடிச்சுக்கிட்டேனேடா... அடுத்தவங்க விஷயத்துல போய் உன்னோட மூக்கை நுழைக்காதேன்னு. இப்ப பாரு என்ன ஆச்சுன்னு.. உன்னுடைய தேவையில்லாத பிரச்சனையால, என்னோட பொண்ணு தான் பாதிக்கப்பட்டிருக்கா. அவ எங்க இருக்காளோ... என்ன ஆனாளோ... என்ன கஷ்டப்படுறாளோ... "
என்று புலம்பித் தீர்த்தார் சேதுராமன்.
கனத்த இதயத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டு நின்றான் பாரி. இதில் இவர்களுடைய தவறு என்ன இருக்கிறது. அவர்களுடைய இப்போதைய நிலைமை, அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அதே நேரம், இருதயமற்ற
தாய் மற்றும் மகனிடமிருந்து, இனியா தப்பித்துக் கொண்டாள் என்பதை நினைக்கும்போது, அவனுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.
வேறுவழியின்றி, சேதுராமன் குடும்பத்தினர், திருமண மண்டபத்தை விட்டு, அரைமனதுடன் கிளம்பினார்கள். இதன் பிறகு அங்கு காத்திருப்பதில் என்ன பலன் இருக்கிறது? எல்லாமே முடிந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என்பது அவர்களுக்கு புரியவில்லை. சத்யா, தனது நண்பர்களுடன் இனியாவை தேடுவதில் தீவிரமாக இருந்தான். சேது ராமனையும், சீதாவையும் தனியாக விட்டு செல்ல மனமில்லாமல், இனியாவின் தோழி ப்ரீத்தி, அவர்களுடனேயே அவர்கள் வீடு வந்தாள்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்த பொழுது, அவர்கள் வீட்டின் தாழ்வாரத்தில் இனியா, மயங்கிக் கிடந்தாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top