Part7

பாகம்-7

இனியாவின் திருமண பத்திரிக்கையை பார்த்தபொழுது, உலகமே தனது காலடியில் இருந்து நழுவி, அதலபாதாளத்தில் தான் விழுவது போலிருந்தது பாரிக்கு. அவன் அதே அதிர்ச்சியுடன் இனியவை பார்த்த பொழுது,  அவள் மெலிதாய் புன்னகை புரிந்தாள். ஏதோ ஒரு முக்கியமான முடிவு எடுத்திருப்பதாக இதைப்பற்றித்தான் அன்று சத்யா கூறினானா? இதற்காகத்தான் அவள் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டாளா?

" கல்யாணமா?  என்ன திடீர்னு?"

என்று தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கேட்டே விட்டான் பாரி.

" சுபாஷ் என்னோட பிரண்ட் மட்டுமில்ல,  பிசினஸ் பார்ட்னரும் கூட.  அவனுக்கு இனியாவ ரொம்ப பிடிக்கும். அவளை  கல்யாணம் பண்ணிக்கனும்னு, அவனுக்கு,  ரொம்ப நாளாவே ஆசை. எனக்கும் என்னுடைய ஃப்ரெண்ட் என் சிஸ்டரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைதான். இன்னிக்கு நடந்து கொண்டிருக்கிற பிரச்சினைகள்,  இந்த முடிவை தாமதிக்காமல் எடுக்க வச்சிருக்கு. என்னால இனியாவுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன். அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தான்,  அவளை எல்லா பிரச்சனையில் இருந்தும் காப்பாத்தும்".

" நீங்க ராஜாவை பற்றி பேசுறீங்களா? " என்றான் பாரி.

" ராஜா மட்டும் இல்லை தம்பி,  நிறைய பேர் இருக்காங்க, சத்யாவை  எப்படி பழி தீக்கலாம்னு" என்றார் சேதுராமன்.

" ஓஹோ அதனாலதான் அவங்க லீவ்ல  இருக்காங்களா?" என்றான் அவள் வேலையை ராஜினாமா செய்ததை பற்றி தனக்கு எதுவும் தெரியாததைப் போல.

" இல்ல இல்ல அவள் வேலையை ரிசைன் பண்ணிட்டா" என்று அவசரமாய் கூறினான் சுபாஷ்.

" ஆனா,  எதுக்காக வேலையை ரிசைன் பண்ணனும்? "

" எங்க அம்மா அவ வேலைக்கு போகாம,  வீட்ல இருந்தா போதும்னு சொல்லிட்டாங்க."

" நீங்க என்ன சொன்னிங்க?"

" நான் எப்படி எங்க அம்மாவை எதிர்த்து பேச முடியும்?"

" ஆனா,  நீங்க உங்க அம்மாவுக்கு புரியவைக்கலாமே?  நீங்க இனியவை விரும்புறீங்க தானே?" என்றான்.

நீங்கள் அவளை *காதலிக்கிறீர்கள் தானே* என்று கூற அவனுக்கு மனமே வரவில்லை.

" எங்க அம்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கங்கறதே பெரிய விஷயம். அதைவிட வேறு என்ன வேணும்?"  என்றான்  ஏதோ சாதிக்க முடியாத ஒன்றை சாதித்து விட்டதைப் போல.

சுபாஷின் தற்பெருமை மிக்க பேச்சை கேட்டபொழுது, அவன் கழுத்தை நெறிக்க வேண்டும் என்று தோன்றியது பாரிக்கு.

" ஆனா,  எம்எஸ்சி,  பிஎட் படிச்சிருக்க ஒரு பெண்ணை,  கல்யாணத்துக்காக வேலையை விடச் சொல்றது,  சரியாவே படலையே" என்றான் தாங்கமுடியாமல்.

" அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. எங்களுக்கு  பிறக்கப் போற குழந்தைகளுக்கு,  அவங்க சொல்லி கொடுத்தா போதும்"  என்று சிரித்தான்  சுபாஷ் உறுத்தலே  இல்லாமல்.

அமைதியாக நின்ற இனியாவை பார்த்து, பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தான் பாரி, பொத்துக் கொண்டு வந்த தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு. எதற்காக இவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்  இந்த பெண்? ஒரு வேளை அவளும் அவனை காதலித்திருப்பாளோ? அப்படித்தான் இருக்கும். பின் எதற்காக இப்படி அமைதியாக நிற்கிறாள்?

" சுபாஷும்,  அவர்களுடைய குடும்பமும்,  எங்களுக்கு ரொம்ப வருஷமா பரிச்சயமானவங்க. எங்களுக்கு வேண்டப்பட்ட குடும்பம் அப்படிங்கிறதால  இந்த கல்யாணத்த ஏற்பாடு பண்ணியிருக்கோம்" என்றார்  சேதுராமன்.

பாரியின் மனோநிலையை புரிந்து கொண்ட,  சேதுராமனின் மனைவி சீதா,  அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனெனில்,  அவர்களுக்கும் இனியா வேலையை விட்டுவிட வேண்டும் என்ற முடிவில் துளியும் உடன்பாடில்லை. பாரி சொல்வது சரிதான். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக,  தனது வாழ்க்கையின் கனவை எந்த ஒரு பெண்ணும் தொலைத்து விடக்கூடாது. ஆனால்,  தனது கணவன் மற்றும் மகனின் விருப்பத்திற்கு மாறாக சீதாவால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில், அவர்கள் இருவரும்,  இந்த நல்ல வரனை விடுவதற்கு தயாராக இல்லை.

அதற்கு மேல் அங்கிருக்க பாரிக்கு விருப்பமில்லை.

" நான் கிளம்புறேன் சார்,  எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு" என்று புறப்பட்டான் பாரி.

" கல்யாணத்துக்கு வந்துருவீங்கல்ல" என்றார் சேதுராமன்.

" இல்ல சார். எனக்கு அன்னைக்கு தாம்பரத்தில் இன்னொரு முக்கியமான கல்யாணத்திற்கு போக வேண்டி இருக்கு"

அவனை ஏமாற்றத்துடன் ஏரெடுத்து பார்த்தாள் இனியா.

" நீங்க முகூர்த்த நேரத்துக்கு வர முடியலனா, அதுக்கு  முன்னாடியோ,  அப்புறமாவோ  வந்துட்டு போங்களேன், நீங்க இனியாவோட ஃபிரண்ட் இல்லையா,  நீங்க வந்தீங்கன்னா நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படுவோம்" என்றார் சீதா. சீதாவிற்கு பாரியை மிகவும் பிடித்துப் போயிருந்தது.

" வர முயற்சிக்கிறேன்" என்று கூறிவிட்டு, தாளாத மன பாரத்துடன் அங்கிருந்து கிளம்பினான் பாரி.

பாரி கிளம்பிய சிறிது நேரம் கழித்து, தைக்க கொடுத்து இருந்த சுபாஷின் கல்யாண சட்டையை வாங்கி வருவதற்காக,  சத்யாவும் சுபாஷும் கிளம்பிச் சென்றார்கள். துணியை  வாங்கிக்கொண்டு, அவர்கள்  வெளியே வந்தார்கள். அந்தக் கடையின் வாசலில், ராஜா நின்று கொண்டிருந்தான். அவன் அவர்களைப் பார்த்து நக்கலாக சிரித்த பொழுது,  சுபாஷிற்கு வயிற்றைக் கலக்கியது.

" என்ன சத்யா எப்படி இருக்க?"

என்றவன்,  ஒரு பக்கமாக சாய்ந்து, சுபாஷை பார்த்து சல்யூட் அடித்து கொண்டு,

" வணக்கம் மாப்பிள்ளை" என்று களுக்கென்று சிரித்தான்.

சத்யாவின் முகம்,  வெட்டவெளிச்சமாக காட்டிக் கொடுத்தது,  அவன் எவ்வளவு பதட்டமாக இருந்தான் என்று. ஆனால்,  அவன் அதை சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,  தனது இரு சக்கர வாகனத்தை உதைத்து அங்கிருந்து கிளம்பினான்.

" கல்யாண வாழ்த்துக்கள்... உங்க ரெண்டு பேருக்கும்" என்று  பின்னாலிருந்து கேலியாக கத்தினான் ராஜா.

அவசரமாய் தனது வண்டியின் ஆக்சிலேட்டரை முடுக்கி,  அங்கிருந்து விரைந்தான் சத்யா.

"  அவனை பார்க்கும் போதெல்லாம்,  என்  வயிறு கலங்குது. அவன் ஏதாவது செய்யாமல் இருக்கணும்,  சத்தியா" என்று பயந்தபடி கூறினான் சுபாஷ்.

" நான் இருக்கும் போது நீ எதுக்காக பயப்படுற?  நான் நம்மளோட ப்ரண்ட்ஸ்ஸை,  அவனை கண்காணிக்கச் சொல்லி இருக்கேன். அதனால நீ  பயப்படாமல் இரு."

சத்யா ஆறுதல் கூறிய போதும்,  ராஜாவை அவ்வளவு சுலபமாக நினைத்துவிட சுபாஷால் முடியவில்லை.

* பாரி இல்லம்*

கடைக்கு செல்ல விருப்பம் இல்லாமல்,  நேரடியாக வீடு வந்து சேர்ந்தான் பாரி. சோபாவில் அமர்ந்து,  அதில் சாய்ந்து கொண்டு,  கண்களை மூடிக் கொண்டான். அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது. என்ன நடக்கிறது அவனுடைய வாழ்க்கையில்?

தனது தனிமையான வாழ்க்கையில்,  அவன் திருப்தியாக இருந்தான். ஒருநாள்,  திடீரென ஒரு பெண்,  தென்றலைப் போல் அவன் வாழ்வில் நுழைந்தாள். சில நாட்களிலேயே,  அவள்,  அவனுடைய சுவாசமானாள். இன்று,  ஒரேடியாக,  அவன் இதயத்தை சுக்குநூறாக உடைத்து விட்டு சென்று விட்டாள்.

இப்பொழுது அவனுக்கு ஒரு விஷயம் தெள்ள தெளிவானது... அவன் அவளுக்கு ஒரு நண்பன் மட்டும் தான்... நல்ல நண்பன்... அவ்வளவுதான். அதற்கு மேல் அவள் மனதில் எதுவுமே இருந்திருக்கவில்லை. இவன் தான்,  தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக் கொண்டு இருந்திருக்கிறான்.

இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால்,  அவள் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆண்,  அவளுடைய விருப்பத்திற்கு கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாதவன். அவனைப் பார்த்தால் எதையுமே தன்னிச்சையாக செய்பவன் போல தெரியவில்லை. அனைத்திற்கும் அவனுடைய அம்மாவின் பின்னால் நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் இனியா எப்படி சந்தோஷமாக வாழ போகிறாள்? அவன் அவளுக்கு உற்ற துணையாக இருப்பான் என்று நம்பவே முடியவில்லை.

ஆனால் அதையெல்லாம் யோசிப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?  யார் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுகிறது?  அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ள ஒரு ஆண் கிடைத்து விட்டான் அவ்வளவுதான். ஒரு பெண்ணின் விருப்பத்தையும் அவளுடைய கனவை பற்றி யாருக்கும் இங்கு  கவலை இல்லை. அனைத்தும் பகல் கனவாய் போய்விட வேண்டியதுதான். என்னவொரு மோசமான சமுதாய கட்டமைப்பு இது? பெண்களும் மனித பிறவிகள் தானே அவர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ உரிமையில்லையா?

இந்த இனிய விற்கு என்ன ஆகிவிட்டது? அவளுடைய அமைதியை பாரியால்  பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வரப்போகும் மாமியாருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக,  ஒரு பெண் தனது வேலையை ராஜினாமா செய்துவிட வேண்டுமா?  இது என்ன கொடுமை? ஆசிரியையாக பணி புரிவதை, அவள் எவ்வளவு பெரிய பாக்கியமாக நினைத்தாள்...?  அது ஒரு தொழில் என்பதற்கு மேலாக,  ஒரு சேவையாக அல்லவா மனமுவந்து செய்து வந்தாள்...? எப்படி அவளால் இவ்வளவு சுலபமாக அதை விட்டுக் கொடுத்து விட முடிந்தது? அவ்வளவு தகுதியானவனா சுபாஷ்? சுபாஷுக்கு அவ்வளவு மதிப்பு இருப்பதாக பாரிக்கு தெரியவில்லை.

எவ்வளவு அழகாக,  சிரித்த முகத்துடன் காணப்படுவாள்... அவளுக்கு வேலையை விடுவதில் விருப்பம் இல்லாதது போலத் தான் தெரிகிறது. அவனுக்கு தெரியாதா,  அவள் தனது வேலையை எவ்வளவு விரும்பி செய்திருந்தாள்  என்பது.

பாரின் கோபம்,  அவளுடைய பெற்றோர்களின் மீது திரும்பியது. என்ன பெற்றோர்கள் இவர்கள்?  அவர்களுக்கு தெரியாதா தன் மகளுடைய விருப்பமும் ஆர்வமும்? ஒரு நண்பனான தன்னிடமே அவள் தன்னுடைய எண்ணங்களை அவ்வளவு தூரம் பகிர்ந்திருக்கிறாள்  என்றால்,  அவள் பெற்றோரிடம் கூறியிருக்க மாட்டாளா  என்ன? இனியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதை பாரியால்  ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நல்லவேளை,  அவன் வேறு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டி இருப்பதாக பொய் கூறி விட்டான். அவளுடைய அம்மா அவனை திருமணத்திற்கு வருமாறு கேட்கவில்லையா? ஆனால் இனியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதை எப்படி இவனால் பார்க்க முடியும்? நிச்சயம் முடியாது.

இனியா வேறு ஒருவருக்கு மனைவியாக போகிறாள் என்பதை நினைத்த பொழுது,  பாரிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. *அவள் எங்களுடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கடும்* என்று சுபாஷ் கூறியதை,  நினைத்த போதெல்லாம் அவன் உடல் பற்றி எரிந்தது. அவன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவா,  அவள் எம்எஸ்சி பிஎட் படித்து முடித்தாள்? எவ்வளவு சுயநலம். சுபாஷ் மட்டும் தனியாக கையில் கிடைத்தால்,  அவனை வெளுத்து கட்டி விடுவான் போல, பாரி. சுபாஷுக்கு, அவனுடைய சுயநலத்தை காட்ட இனியாவை தவிர வேறு எவரும் கிடைக்கவில்லையா? இதற்குப் பெயர் காதலா? காதலித்த பெண்ணின் சிறகுகளை வெட்டி,  கூண்டிற்குள் அடைப்பதற்கு பெயரா காதல்? இந்த உலகமே நரகத்தை போல் தெரிந்தது பாரிக்கு. இந்த உலகத்தை விட்டு எங்காவது ஓடிவிட முடியாதா என்று அவன் தத்தளித்தான். துரதிஷ்டவசமாக அதற்கு அவனுக்கு வாய்ப்பில்லாமல் போனது.

*திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்*

தனக்கு வந்த போன் காலை பேசி முடித்து,  கோபமாக துண்டித்த சத்யாவை *என்ன* என்பது போல் பார்த்தான் சுபாஷ்.

" என்ன ஆச்சி சத்யா?"

" ராஜா கோயம்புத்தூர் போகிறானாம்"

" இது சந்தோஷமான விஷயம் தானே?"

" இல்ல. இது சந்தோஷப்பட கூடிய விஷயம் இல்லை. அவன்  நம்ம கண்ணுல இருந்து தூரமாக போறது,  நமக்கு நல்லதில்லை. நம்ம அவன்  மேல ஒரு கண்ணு வச்சிருக்கோம்னு,  அவன் தெரிஞ்சிருப்பான். ஏதோ எனக்கு தப்பா படுத்து."

" அய்யய்யோ... என்ன இப்படி சொல்ற?" என்று கவலையாய்  கேட்டான் சுபாஷ்.

" அவன் எதற்காகவும்  சென்னையை விட்டு போனதே கிடையாது... முக்கியமா வியாபார விஷயமா... தன்கிட்ட இருக்கிறதவச்சி,  தான் சந்தோஷமாக இருக்கிறதா சொல்லுவான். அப்படியிருக்கும் போது,  அவன் எதற்காக திடீரென்று கோயம்புத்தூர் போகணும்?"

" அப்போ நான் ஜாக்கிரதையாக இருக்கணும்னு  சொல்றியா?" என்று கேட்ட சுபாஷின் குரலில் பதட்டமும் நடுக்கமும் தெரிந்தது.

" ஆமாம். நீ ஜாக்கிரதையா தான் இருக்கணும். இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள்தான் இருக்கு. ஒருவேளை அவன் நமக்கு தெரியாம மறுபடியும் சென்னைக்கு  வர வாய்ப்பு இருக்கு. அவன் வேணும்னே,  நம்முடைய கவனத்தை திசை திருப்புறான்னு  நினைக்கிறேன்."

" இவன் நமக்கு ஒரு பெரிய தலைவலி" என்று அலுத்துக் கொண்டான் சுபாஷ்.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவனை பார்த்தான் சத்யா. சுபாஷோ,  பயத்தால் செத்துக் கொண்டிருந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top