Part6
பாகம்-6
சத்யா தனது நண்பனுடன் பாரியின் வீட்டை வந்தடைந்தான். அவன் உள்ளே நுழைவதை பார்த்த இனியா, பாரியை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
"அண்ணா, இவர்தான் பாரி. "
பாரி, தன் கரத்தை சத்யாவை நோக்கி நீட்டினான். அவர்கள் இருவரும் நட்பாக கைகுலுக்கிக் கொண்டார்கள்.
"சரியான நேரத்தில என் தங்கைக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ். இது என்னோட ஃபிரண்ட் சுபாஷ். "
என்று தனது நண்பனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் சத்யா. அவர்களும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
இனியவை பார்த்து,
" போலாமா?" என்றான் சத்யா.
சரி என்று தலையசைத்துவிட்டு,
"பை" என்றாள் இனியா.
" பீ கேர்ஃபுல்" என்றான் பாரி.
" டோன்ட் ஒரி" என்ன செய்யணும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்" என்றான் சத்யா, தன் நண்பன் சுபாஷை பார்த்து சிரித்தபடி.
" அவங்க ரெண்டு பேரும் இப்படித்தான் பெரிசா பிளான் பண்ணுவாங்க. ஆனா ஒண்ணுமே உருப்படாது" என்று மெல்லிய குரலில் பாரிக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு, களுக்கென்று சிரித்தாள் இனியா.
அவளுடைய இரு சக்கர வாகனத்தை சுபாஷ் ஓட்டிச்செல்ல, சத்யாவுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு, அந்த சாலையின் வளைவில் திரும்பும் வரை, பாரியை நோக்கி கையசைத்தபடியே, அங்கிருந்து விடைபெற்றாள் இனியா.
அதுதான், பாரி இனியவை கடைசியாக பார்த்த நாள். அதன் பிறகு அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவனுக்கு கிடைக்கவே இல்லை. இனியாவும், அவனுக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும் அனுப்ப வில்லை. பரிதவித்து போனான் பாரி. இனியாவிடமிருந்து ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று, நொடிக்கு நொடி தனது போனை பார்த்து கொண்டே இருந்தான் பாரி. ஊஹும்... ஒன்றும் வரவில்லை. அவளுடைய போன், எப்பொழுதும் ஆஃப்- லைன் என்று காட்டியது. அவளுக்கு போன் செய்த பொழுது, அவளுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது.
இப்படியே பத்து நாட்கள் கழிந்து விட்டது. பாரி, தனது மொத்த பொருமையையும் ஒட்டுமொத்தமாக இழுந்து விட்டிருந்தான். தன் கண்முன் பார்ப்பதை எல்லாம், போட்டு உடைக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. அவளுக்கு என்னதான் ஆனது? ஏன் அவள் அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பவே இல்லை? அவனிடம் பேசவேண்டும் என்று, அவளுக்கு ஒருமுறை கூட தோன்றவே இல்லையா? திடீரென, அவள் என் அனைத்தையும் நிறுத்திகொண்டு விட்டாள்?
அந்த சந்தர்ப்பத்தில்தான், தனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தான் பாரி. இனியா இல்லாமல் வாழ்வது எவ்வளவு கடினமானது என்பதை காலம் அவனுக்கு உணர்த்தியது. நீரின்றி வறண்டு கிடக்கும் பாலைவனத்தில், தாகத்தால் துடிதுடிக்கும் உயிரைப் போல, தவித்தான் பாரி. அவளை இன்னும் ஒரு நாள் பார்க்காமல் போனால், அவன் செத்து விடுவான் போலிருந்தது.
வாழ்க்கை ஒரு வினோதமான ஆசிரியர். அது அமைதியின் அருமையை சத்தத்திலும், வெளிச்சத்தின் பெருமையை இருட்டிலும், காதலின் முக்கியத்துவத்தை வெறுப்பிலும், அருமையாய் புரிய வைத்து விடுகிறது. அதேபோல், இந்த இடைவெளி, அவனுக்கு இனியாவின் அருகாமையின் பூரணத்துவத்தை உணர்த்தியது.
இந்த இடைவெளியை பாரியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவள் அவன் வீட்டிற்கு வந்திருந்த பொழுது, அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல்களை, திரும்ப திரும்ப அசை போட்டுக்கொண்டே இருந்தான். அந்த நாள் அவனுக்கு மறுபடியும் வேண்டும் என்று தோன்றியது. மறுபடியும் என்றால், ஒரு நாள் மட்டுமல்ல, அவன் வாழ்க்கை முழுவதற்கும்... எப்படியாவது அவளை பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தான். ஒருவேளை அவன் அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டு இருந்தால், அவள் என்ன செய்திருப்பாள்? அவனை பார்க்க ஓடோடி வந்து இருக்க மாட்டாளா? நிச்சயம் செய்திருப்பாள். நேரில் வந்து அவனை திட்டித் தீர்த்திருப்பாள். ஏன் அவனும் அதையே செய்யக்கூடாது? அவனுக்கு அந்த உரிமை இருக்கிறது. நண்பன் என்ற பெயரில், அவளை கேட்கும் உரிமை அவனுக்கு இருக்கிறது.
*லக்ஷ்மி நாராயணன் பள்ளி*
சென்றமுறை இனியாவிற்க்காக காத்திருந்த, அதே இடத்தில், இன்றும் காத்திருந்தான் பாரி. அவனை நன்றாக அறிந்திருந்த, இனியாவுடன் பணிபுரியும் ஆசிரியைகள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், தான் யாரை பார்க்க வந்தானோ, அந்த நபருக்காக காத்திருந்தான் பாரி. இறுதியாக, ஒரு ஆசிரியை, அவனை நோக்கி வந்தாள். இனியவை பற்றிய தகவலை தெரிவிப்பதற்காக அல்ல, பாரியுடன் பேச, தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக.
" நீங்க இனியாவுக்காக காத்திருக்கிங்களா?"
அவளுக்கு பதில் சொல்லாமல், அவளை பார்த்தான் பாரி.
" நீங்க அவளுடைய ஃபிரெண்டுனு சொன்னா...? அவ வேலையை ராஜினமா பண்ண விஷயத்தை கூட உங்க கிட்ட சொல்லலயா?" என்று கூறியபோது அவளுடைய குரலில் எகத்தாளம் தெரிந்தது.
பாரின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ராஜினாமா செய்துவிட்டாளா? அவளுக்கு, ஆசிரியை பணி என்றால் உயிர் ஆயிற்றே, பிறகு ஏன் அவள் ராஜினாமா செய்தாள்? என்ன ஆயிற்று அவளுக்கு?
" இவ எல்லாம் என்ன ஒரு நல்ல ஃபிரெண்ட்? இவ்வளவு பெரிய முடிவு எடுத்ததை கூட உங்க கிட்ட சொல்லலயே. அவ உண்மையிலேயே உங்களை ஒரு நல்ல ஃபிரண்டா நினைச்சிருந்தா..."
அந்த பெண்ணின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியாதவன் இல்லை பாரி. இனியாவை குறை கூறும் எந்த ஒரு வார்த்தையையும் கேட்க அவன் தயாராக இல்லை. அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாதவனாய், தனது இரு சக்கர வாகனத்தை ஒரு உதை உதைத்து, அங்கிருந்து சென்றான்.
" மிஸ்டர்... இனியா ஏன் வேலையை ராஜினாமா செய்தான்னு உங்களுக்கு தெரிஞ்சுக்க வேண்டாமா?"
என்று, அந்த பெண் கேட்டு முடித்த பொழுது, பாரி, அந்த பள்ளியின் எல்லையை கடந்து விட்டிருந்தான். அவன் குழப்பத்திற்கு ஒரு எல்லையே இல்லை. என்ன தவறாக போயிருக்கக் கூடும்? ஏதாவது அசம்பாவிதம் நடந்ததால், அவள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாளா? இதற்கு மேல், அவனால் வெறும் யூகத்துடனேயே நிற்கமுடியவில்லை. அவனுடைய வண்டியை, இனியாவின் இல்லம் இருக்கும் திசை நோக்கித் திருப்பினான்.
* சேதுராமன் இல்லம்*
இனியா வீட்டின் அழைப்பு மணியை, அழுத்திய பொழுது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், கதவை திறந்து, பாரியை யார் என்று புரியாமல் பார்த்தார்.
" யாருப்பா தம்பி நீங்க?"
அவருடைய குரலில் இருந்த அனுசரணை, பாரிக்கு ஒரு தைரியத்தை தந்தது.
" என் பேரு பாரி. *நூல்* புக்மார்ட்டோட ப்ரோபொரேட்டர். இனியாவோட ஃபிரண்ட்." என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
" அப்படின்னா, நீங்க அரவிந்தனோட மகனா?"
" ஆமாம் சார்"
" உள்ள வாங்க தம்பி. நான் சேதுராமன்... இனியவோட அப்பா. அன்னைக்கு, நீங்க தான் அவளப் காப்பாத்தினிங்கன்னு, இனியா என்கிட்ட சொன்னா. நானும், உங்க அப்பாவும், ஒரே ஸ்கூல்ல படிச்சவங்க. நாங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் இல்லனாலும், ஒருத்தர ஒருத்தர் நல்லா தெரியும். உங்க அப்பாவோட இறுதி ஊர்வலத்தில் கூட நான் கலந்துகிட்டேன். அப்ப நீங்க சின்ன பையன்."
அவரைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்தான் பாரி.
" உங்க கூட வேற யாரெல்லாம் இருக்காங்க?" என்று இயல்பாய் கேட்டார் சேதுராமன்.
" யாரும் இல்ல சார். நான் தனியா தான் இருக்கேன்."
" ஓ அப்படியா... சாரிப்பா... அரவிந்தன், ரொம்ப அருமையான மனிதர். அவருடன் நட்பாக இருக்கக்கூடிய கொடுப்பினை தான் எனக்கு கிடைக்காமல் போச்சு"
என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார் சேதுராமன். ஒருவேளை, இது வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால், பாரியும் கூட உணர்ச்சிவசப்பட தான் செய்து இருப்பான். ஆனால், இப்பொழுது, அவனுடைய கவனமும் எண்ணமும் இனியாவின் மீது இருந்தது. எங்கே அவளைக் கானோம்? அவள் வீட்டில் இல்லையா? அவனுடைய கண்கள் அந்த வீடு முழுவதும் துழாவின. அப்பொழுது ஒரு பெண் கையில் காபியுடன் வந்து, அதை பாரியை நோக்கி நீட்டினார் புன்னைகையுடன்.
" வாங்கிக்கோங்க பாரி. இவங்க என்னுடைய வைஃப் சீதா"
தனது மனைவியை, பாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார் சேதுராமன்.
" வணக்கம்மா"
" இவரைப் பற்றிதான் இனியா பேசிக்கிட்டு இருந்தா" என்றார் சேதுராமன்.
அதை கேட்ட பொழுது, பாரிக்கு குளுகுளுவென இருந்தது. இனியா, தன்னைப் பற்றி, அவள் பெற்றோரிடம் பேசி இருக்கிறாள். ஆனால், என்ன பேசினாள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.
" ரொம்ப நன்றி தம்பி. நல்ல நேரத்துக்கு வந்து நீங்க அவளுக்கு ஹெல்ப் பண்னிங்க. இல்லனா, என்ன நடந்திருக்குமோ தெரியல" என்று கவலையுடன் கூறினார் சீதா.
" பரவாயில்லை ஆன்ட்டி. அதெல்லாம் அவங்களுக்கு ஒன்னும் ஆயிருக்காது" என்று தைரியம் கூடறினான் பாரி.
அந்த நேரம் தனது ஈரமான கூந்தலை துவட்டியபடி, வரவேற்பறைக்கு வந்தாள் இனியா. அவள் குளியல் அறையில் இருந்து வருகிறாள் என்பது புரிந்தது. பாரியை பார்த்த மாத்திரத்தில், அவள் சிலை என்று நின்றாள்.
பத்து நாட்களுக்கு பிறகு, அவளை பார்த்த பொழுது, பாரியின் வயிற்றை எதோ செய்தது. *ஏன் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டாய்?* என்ற கேள்வி, அவன் தொண்டையில் இருந்து வெளியே வர துடித்தது. *நீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியவில்லை* என்ற உண்மையை, ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல், அவளிடம் கூறி விட வேண்டும் என்று, அவன் மனம் பதைபதைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளிடம் ஓடிச் சென்று, அவளை கட்டி அணைத்து, *நான் உன்னை காதலிக்கிறேன்* என்று அவன் மனதில் உள்ளதை கொட்டித் தீர்க்க வேண்டும் என்று, அவன் மனம் தவித்தது.
" பாரி, எப்படி இருக்கீங்க? நீங்க எங்க இங்க?" என்ற அவளுடைய மென்மையான குரல் அவனுடைய எண்ணத்தை வெட்டியது.
*உன்னை பார்க்காமல் நான் செத்து விட்டேன்* என்று அவன் மனம் கதறினாலும், *நன்றாக இருக்கிறேன்* என்று பொருள்படும்படி தலையை மட்டும் அசைத்தான் பாரி.
" நானே உங்க வீட்டுக்கு வரணும்னு இருந்தேன்" என்றாள் சிரித்தபடி.
அதைக் கேட்டு தன்னை தானே சாபித்துக் கொண்டான் பாரி. அவன் இங்கு வராமல் இருந்திருந்தால், அவள் அவன் வீட்டிற்கு வந்து இருப்பாள் அல்லவா. அவன் அவசரப்படாமல், ஓரிரு நாள் பொறுத்திருந்து இருக்கலாமோ? ஆனால், அவள் ஏன் அவன் வீட்டிற்கு வர நினைத்தாள்? ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்குமோ?
அப்பொழுது சத்யாவும், அவனுடைய நண்பன் சுபாஷும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.பாரியை பார்த்தவுடன் சம்பிரதாயமாக கைகுலுக்கிக் கொண்டார்கள். தன் கையில் இருந்த ஒரு பையை, இனியவை நோக்கி நீட்டினான் சுபாஷ்.
" இது சரியா இருக்கான்னு அம்மா பாக்க சொன்னாங்க" என்றான் புன்னகையுடன்.
" ஆமாம். சரியா இருக்கா, இல்லையான்னு, இப்பவே பார்த்திடு. அதுக்கப்புறம், எங்களை எதுவும் குறை சொல்லக்கூடாது" என்று சிரித்தான் சத்யா.
அவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டு நின்றான் பாரி. அவனுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாததால்.
" அவ அப்படியெல்லாம் யாரையும் குறை சொல்ல மாட்டா. அவளை பத்தி உனக்கு தெரியாதா?" என்றார் சீதா.
" அப்பா, பாரி தான் இங்க வந்துட்டார் இல்லையா, அவருக்கும் ஒரு இன்விடேஷன் கொடுத்துடுங்க" என்ற சத்யாவை,
" அறிவு கெட்டவனே, நம்ம வீட்டுக்கு வந்தவர்களுக்கு இன்விடென்ஷன் கொடுப்பாங்களா? நம்ம தான் அவர் வீட்டுக்கு போயி கொடுக்கணும். அதுதான் மரியாதை." என்றார் சேதுராமன்.
" அப்பா, பாரியை பாத்தா, அப்படி எல்லாம் ரொம்ப ஃபார்மாலிட்டீஸ் எதிர்பார்க்கிறவரா தெரியல. நான் சொல்றது சரிதானே பாரி?" என்றான் சத்யா.
*ஆமாம்* என்று தலையசைத்தான் பாரி, அவர்கள் பேசுவது எதைப்பற்றி என்றே தெரியாமல். மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அழைப்பிதழ்களில் இருந்து ஒன்றை எடுத்து, சேதுராமனின் நோக்கி நீட்டினார் சீதா. சேதுராமன் அதை பாரியிடம் கொடுக்க, பாரியின் முகம் வெளிறிப்போனது.
*சுபாஷ் வெட்ஸ் இனியா*
என்று இருந்ததை பார்த்து.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top