Part3

பாகம் 3

இதுதான் முதல் முறை,  பாரி தூக்கமின்றி பிரண்டு படுத்துக்கொண்டு இருப்பது. இனியாவின் சிரித்த முகம்தான், அவனது நினைவில் நிழலாடியது. செயற்கைத் தன்மை சிறிதும் இல்லாமல் இருந்தாள்,  அவள்.  தான் அழகாக இருக்கிறோம் என்ற அலட்டலும் அவளிடம் இல்லை,   தான் மிகப்பெரிய அறிவாளி என்ற ஆணவமும் அவளிடம் இருக்கவில்லை. மிக எளிமையாய் பழகினாள். அவளது சிரிப்பை பார்த்துக்கொண்டே,  முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடலாம். 

அவன் எண்ணியதை நினைத்து அவன் அதிர்ச்சியடைந்தான்.

*வாழ்ந்து விடுவதா?* அய்யோ,  என்ன இது,  இவனுக்கு இப்படிப்பட்ட எண்ணம் எப்படி ஏற்பட்டது? அவளுக்கு தெரிந்தால்,  இவனைப் பற்றி என்ன நினைப்பாள்? இவனும் மற்ற ஆண்களைப் போல தான்,  என்று எண்ணி,  அவனை வெறுக்க கூட செய்யலாம். அவள் அவனை வெறுக்கக்கூடும் என்ற எண்ணம்,  அவன் மனதை ஏதோ செய்தது. ஆனால்,  அவள் அவனை வெறுத்தால் என்ன இருக்கிறது?  அது ஏன் அவனுக்கு அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது?  அவன் கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டான். எதைப் பற்றியும் நினைக்க அவனுக்கு விருப்பமில்லை. முக்கியமாக இந்த *வெறுப்பு* சம்பந்தப்பட்டமான எதையும் அவன் யோசிக்க விரும்பவில்லை. ஆனால் தூக்கம் அவனுடன் கண்ணாமூச்சி விளையாடியது. தனது போனை எடுத்தான்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் இல்லாதவன் பாரி. எப்பொழுதாவது அவற்றை நோட்டமிடுவதோடு சரி. இன்றும் தூக்கம் வராததால்,  அவன் முகநூல் பக்கத்தை பார்வையிட்டான். அதில் ஏகப்பட்ட ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் இருந்தது. அவன் அதிகபட்சம் செய்யும் வேலை,  அனைத்தையும் டெலிட் செய்து விடுவது. அப்படி அழிக்க நினைத்த போது அவன் கை சற்று நின்றது, ஒரு குறிப்பிட்ட பெயரை பார்த்து. * இனியா சேதுராமன்* அதே இனியா  தான்... இன்று மாலை அவனிடம் பேசிவிட்டு,  அவன் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் அதே இனியா தான்.

எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளை தனது முகநூல் தோழியாக்கிக் கொண்டான். அவன் தனது தோழியாக ஏற்றுக் கொண்ட முதல் முகநூல் பெண் இனியா  தான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அவனுடைய நண்பர்கள் அல்லாத எவரையும்,  அவன் இதுவரை முகநூலில் நண்பராக ஏற்றுக் கொண்டதில்லை.

அவளுடைய முக நூல் பக்கத்தில் ஆர்வமாக நுழைந்தான். நேரில் பார்ப்பது போலவே,  அவள் அதிலிருந்த புகைப்படத்திலும் சிரித்துக் கொண்டிருந்தாள். அதில் அவளுடைய எண்ணற்ற புகைப்படங்கள் அணிவகுத்து நின்றன.

* இனியா* அவளுக்கு மிக பொருத்தமான பெயர்தான். அவள் பிறந்த தேதி 17 செப்டம்பர். படிப்பு கணிதத்தில் முதுகலை பட்டம்... ஆசிரியர் பயிற்சியில் இளங்கலையும் முடித்திருந்தாள்... அதைப் பார்த்து புருவம் உயர்த்தினான்  பாரி. இவ்வளவு படித்திருந்த போதிலும்,  வெகு இயல்பாய் இருந்தாள் அவள்.

*இரண்டு நாட்களுக்கு பிறகு*

தனது புத்தக கடையில் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டிருந்தான் பாரி. வெகு நாட்களாகியும் விற்கப்படாமல் இருந்த புத்தகங்களை அவன் பட்டியலிட்டுக் கொண்டிருந்தான். அவற்றில் சிலவற்றை,  உள்ளூர் நூலகங்களுக்கு கொடுத்துவிடுவது அவன் வழக்கம்.

செய்து கொண்டிருந்த வேளையில்,  மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், தன் பின்னால் யாரோ நிற்பதை அவன் கவனிக்கவில்லை, அந்த நபர் அவன் தோளை  தட்டும் வரை. திரும்பிப் பார்த்தவன் அப்படியே பிரமித்து நின்றான்.

*இனியா சேதுராமன்* அவன் முன் நின்று புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவள் உண்மையிலேயே இங்கு,  அவன் முன் நிற்கிறாளா,  இல்லை,  இவன் கற்பனை செய்து கொண்டிருக்கிறானா,  என்று அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

" ஹாப்பி பர்த்டே" என்று அவள் கூறிய போது,  அவனால் மேலும் நம்ப முடியவில்லை.

இன்று அவனுடைய பிறந்தநாளா?  அவனுடைய கண்கள்,  சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டிருந்த நாள்காட்டியின் மீது விழுந்தது. ஆம் இன்று ஆகஸ்ட் 21. இன்று அவன் பிறந்த நாள் தான். நம்பமுடியாமல் அவளைப் பார்த்தான் பாரி. வெகு நாட்களுக்கு பிறகு, அவனுடைய பிறந்தநாளை, அவனுக்கு அவள் ஞாபகப்படுத்தி இருக்கிறாள்.

" ஃபேஸ்புக்ல பார்த்தேன்,  இன்னைக்கு உங்க பர்த்டேன்னு.  அதான் விஷ் பண்ணலாம்னு வந்தேன்"

" தேங்க்ஸ்" என்று மெலிதாய் சிரித்தான் பாரி.

" அவ்வளவுதானா,  ஒரு ஸ்வீட்... சாக்லேட்... எதுவுமே இல்லையா?" என்ற அவள் உதட்டைப் பிதுக்கினாள்.

அதற்கு பாரி எதுவும் பதில் கூறவில்லை. ஒருவேளை,  அவள் வருவாள் என்று தெரிந்திருந்தால்,  ஒரு கடையையே கூட வாங்கி வைத்து இருப்பான். ஆனால்,  இப்பொழுது அதை செய்தால், மிகையாக தோன்றலாம்.

" சரி,  நான் போறேன். அடுத்த பர்த்டேவுக்காவது,  ஏதாவது வாங்கி தரீங்களா ன்னு பார்க்கிறேன்"

அவள் அங்கிருந்து சென்றாள். 

அடுத்த பிறந்த நாளைக்கும்,  அவள் அவனுக்கு வாழ்த்து கூறுவாள் என்பதே அவனுக்கு அலாதியாக இருந்தது. உள்ளூர புன்னகைத்துக் கொண்டான் பாரி. அப்போது அவள்,  அவசர அவசரமாக மறுபடி வருவதைக் கண்டான்.

அவன் கையில் ஒரு பார் சாக்லேட்டை திணித்துவிட்டு,

"ஒன்ஸ் அகைன் ஹாப்பி பர்த்டே. எனக்கு லேட் ஆயிடுச்சு. பை..."

என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். இந்த முறை,  அவள் சென்றுதான் விட்டாள்.

ஏதோ,  காற்றில் மிதப்பது போல உணர்ந்தான் பாரி. எவ்வளவு அருமையான பெண்,  இந்த பெண்... அவனை அவளுக்கு வெகு சில நாட்களாகத்தான் தெரியும். ஆனாலும்,  நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்ற,  அவளது உயர்ந்த உள்ளம் பாராட்டப்பட வேண்டியது. இனியா என்னும் பெயருக்கு ஏற்ப அவள் இனிமையானவள் தான். எத்தனை  பேருக்கு இதை செய்ய வேண்டுமென்று தோன்றும்...?  அவள் தனித்துவமானவளும் கூட.

அந்த தனித்துவமான பெண்ணைப் பற்றி,  ஒரு தனித்துவமான எண்ணம்,  அவன் மனதில் தோன்றியது. அறிமுகமாகி சில நாட்களிலேயே,  அவன் சந்தோஷத்திற்காக அவள் இவ்வளவு தூரம் மெனக்கெடுகிறாள்  என்றால்,  அவள் தன்னை  சேர்ந்தவர்களை சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்வாள்? அப்படிப்பட்ட ஒருவனாக,  இவன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அவள் அவனை வாழ்த்தினாள் என்றவுடன்,  அவன் எண்ணம் எங்கெல்லாம் பறக்கிறது...?  இதனால்தான் நல்ல பெண்கள்,  ஆண்களிடம் தள்ளி நின்றே பழகுகிறார்கள் போலும். தனது செயலை எண்ணி தானே நொந்து கொண்டான்.

அவளுடன் இருக்கும்  நட்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது. தன்னைத்தானே கண்டித்து கொண்டான்.

ஆனால், இனியாவின் நினைவிலிருந்து அவனால் மீளவே முடியவில்லை.

அப்பொழுது அவன் கடையில் போன் மணி அடித்து, அவனுடைய எண்ண சங்கிலியை அறுத்தது.

" ஹாய்,  பர்த்டே பாய்"

அது இனியா தான். வேறு யாரும்,  அவனிடம் இப்படி பேச மாட்டார்கள்.

" ஹாய்" என்றான்.

" என்ன ஃப்ரண்டு நீங்க?  நான் புக்கை வாங்க மறந்துட்டேன். நீங்களாவது அத எனக்கு கொடுத்திருக்கக் கூடாதா?" என்றாள்.

அவள் இப்படி மிக சகஜமாக பேசுவதை பார்த்த பொழுது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன்,  எங்கே இருந்து அந்தப் புத்தகத்தைப் பற்றி நினைக்க?  அவன் தான் இந்த உலகத்திலேயே இல்லையே.

" நான் வேற வேலைல பிஸியாக இருந்தேன். அதனாலதான்,  எனக்கு ஞாபகம் வரல" என்றான் தன்மையாக.

" சரி,  நான் நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்"

" சரி"

" உங்க பர்சனல் நம்பர எனக்கு கொடுக்க மாட்டீங்களா?  உங்களுக்கு விருப்பம் இல்லனா வேண்டாம்" என்றாள்.

அவன் அவனுடைய பர்சனல் நம்பரை கொடுத்தான்.

" தேங்க்யூ பை"

அவள் போனை துண்டித்தாள். அடுத்த நிமிடம்,  பாரியின் பர்சனல் போன் நம்பருக்கு,  தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

" யார் பேசுறீங்க?"

" இது என்னோட நம்பர். நீங்க இத சேவ் பண்ணிக்குவீங்கன்னு  நினைக்கிறேன்" என்றாள்.

"ஷ்யூர்"

" சரி,  நான் நாளைக்கு வரேன்" என்று கூறிவிட்டு துண்டித்தாள்.

பாரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. வரிசையாக அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது, அதுவும்,  அவனுக்கு பிடித்த ஒரு நபரிடமிருந்து. இன்றைய நாள்,  ஒரு சிறப்பான நாளாக அமையும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த பிறந்தநாள், அவனுக்கு மறக்க முடியாத ஒரு இனிய பிறந்தநாள்.

அடுத்த நாள்

பாரி தன்னை முழுவதும் தயார் படுத்திக் கொண்டான்,  எக்காரணத்தைக் கொண்டும் இனியாவின் வரவுக்காக எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது என்று. தன்னை நண்பனாக ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணை பற்றி,  நினைக்கக் கூடாது என்று அவன் நினைத்தான். அவன் அவளுடைய வரவை எதிர் பார்த்திருக்கவில்லை,  ஆனால்,  அவன் கண்களோ,  நிமிடத்திற்கு நிமிடம்,  வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது. அவள் பள்ளி நேரம் முடிந்த பிறகு,  மாலை தான் அவன் கடைக்கு வருவாள் என்பது அவனுக்கு தெரிந்திருந்தும் கூட,  அந்தப் பாழும் மனது, நன்கு தெரிந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவன் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நாள்,  அவன் வாழ்நாளில் மிக நீளமான நாளாக தோன்றியது.

* காத்திருத்தல்* என்பது இவ்வளவு கடினமானதா?  எப்படியும்,  நாலரை மணிக்கு முன்பாக அவள் வரப்போவதில்லை. அதிலும்,  அவள் பன்னிரண்டாம் வகுப்பு டீச்சர் வேறு. சிறப்பு வகுப்புகள் இருக்கும்,  அவள் வர இன்னும் கூட நேரமாகலாம்....

ஒருவழியாக,  அவள் அவன் கடைக்கு வந்த பொழுது மணி 5 50. ஆரஞ்சும்,  மஞ்சள் நிறமும் கலந்த புடவையில் அழகாக இருந்தாள். அவள் முகத்தில்,  சிறிதளவுகூட சோர்வு இருக்கவில்லை. புன்னகை மாறாமல் இருந்தாள்  அவள்.

" ஹாய் பாரி"

" ஹாய்"

" எங்க என்னோட புக்?"

அந்தப் புத்தகத்தை எடுத்து மேஜையின் மீது வைத்தான்,  அதை எடுத்துக்கொண்டு அவள் கிளம்பி விடுவாள்,  என்ற எண்ணத்துடன். ஆனால்,  அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில்,  அங்கிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அவன் எதிரில் அமர்ந்தாள். தனது கைப்பையிலிருந்து,  அந்த புத்தகத்திற்கு உரிய பணத்தை எடுத்து,  பாரியை நோக்கி நீட்டினாள். அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளாமல்,  அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பாரி. அவனுடைய பார்வையை புரிந்து கொண்டவளாய்,

" பெட்ரோலுக்கு காசு வாங்குறதும்,  இதுவும் ஒண்ணு  இல்ல. நான் பெட்ரோல் செல்லர்  இல்ல,  ஆனா நீங்க,  புக்செல்லர் தான்" என்றாள்.

" அப்போ,  நான் எப்படி அதை ஈடு கட்டுவது?" என்றான்.

" எனக்கு நீங்க டீ வாங்கிக் கொடுக்கலாமே" என்றாள்  புன்னகையுடன்.

தொலைபேசியை எடுத்து அருகில் இருந்த கடைக்கு போன் செய்து,  இரண்டு தேநீர் மற்றும் சாண்ட்விச்கான அனுப்பானையை பதிவு செய்தான்.

" சான்விச்சா...? நாட் பேட். ஆக்சுவலா,  எங்க வீட்ல யாரும் இல்ல. எல்லாரும் ஷாப்பிங் போயிருக்காங்க. வரதுக்கு லேட்டாகும். இங்கேயே என்னுடைய ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸை முடிச்சிட்டு போய்டலாம்" என்று களுக்கென்று சிரித்தாள்.

" இதுதான் நீங்க வழக்கமா வீட்டுக்கு திரும்பும் நேரமா?"  என்றான் பாரி.

" ஆமாம்
டுவல்த் ஹான்டில் பண்றதால, கோச்சிங் கிளாஸ் இருக்கும்."

" உங்களுக்கு,  இவ்வளவு நேரமா பாடம் நடத்த போரடிக்கலையா?"

" போரடிக்குதுரதாவது... எனக்கு டீச் பண்றதுனா ரொம்ப பிடிக்கும். பாடம் நடத்த சொன்னா,  ஒரு நாள் எல்லாம் நடத்திக்கிட்டே இருப்பேன்."

இவ்வளவு அழகான டீச்சர் பாடம் நடத்தினால்,  நிச்சயம் மாணவர்களுக்கு போரடிக்காது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

" டீச்சிங் ஒரு தொழில் இல்லை. அது ஒரு சேவை. அதை முழுமனதோடும் விருப்பத்தோடும்  செய்யணும். ஏன்னா,  ஆசிரியர்கள் தான்,  அடுத்த தலைமுறையை உருவாக்கும்  பொறுப்பு உடையவங்க."

" இப்ப இருக்கிற எந்த டீச்சரும்,  நீங்க நினைக்கிற மாதிரி நினைக்கிறதா எனக்கு தோணல. அப்படிப்பட்ட டீச்சர் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தாங்க. அவ்வளவுதான்."

" அது தான் எனக்கும் வேணும். என்னுடைய ஸ்டுடென்ட்ஸ் என்னை எப்பவுமே மறக்கக்கூடாது.  கடினமான படத்தை எளிமையா புரிய வச்சிட்டாலே போதும். மாணவர்களுக்கு நம்மை பிடிச்சிடும்"

ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.

அதற்குள் டீயும் சாண்ட்விச்சும் வந்துவிடவே,  அதை இனியாவிடம் கொடுத்தான் பாரி.  சாண்ட்விச்சை ஒரு கடி கடித்துகொண்டு டீயை ஒரு வாய் குடித்தாள் இனியா. அதைப் பார்த்து பாரி ஆச்சரியம் அடைந்தான். ஏனெனில்,  அவனும் கிட்டத்தட்ட அதே பழக்கத்தைக் கொண்டிருந்தான்.

பாரியை,  ஒரு பெண்ணுடன் பார்ப்பது என்பது மிகவும் வினோதமானது. அவன் கடைக்கு வந்திருந்த பல பெண்கள்,  ஏதோ கொம்பு முளைத்த குதிரையை பார்ப்பதுபோல, அதிசயமாய் பார்த்தார்கள். அதேநேரம் பொறாமை கொள்ளவும் செய்தார்கள்... ஏனெனில் அவனுடன் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்,  மிகவும் அழகாக இருந்தாளே...  மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டது போல அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால்,  யாராலும் சாதிக்க முடியாததை,  இந்த பெண் மட்டும் எப்படி சாதித்தாள்?

தங்களை சுற்றி உள்ள பெண்களின்,  குறுகுறு பார்வையை உணர்ந்த இனியா,  புன்னகை புரிந்தாள். அவள் சிரிப்பதைப் பார்த்து,  தன் புருவத்தை உயர்த்தி,  *என்ன?* என்பது போல கேட்டான் பாரி.

" நம்மள சுத்தி,  ஏதோ  தீயிர மாதிரி தெரியல?" என்று களுக்கென்று சிரித்தாள்.

அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்று புரிந்திருந்தபொழுதும்,  அவளுக்கு எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் பாரி.

" நீங்க எந்த பொண்ணு கூடயும் பேச மாட்டீங்களாமே?  உண்மையாகவா?" என்றாள்.

அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல்,  அவளையே பார்த்துக்கொண்டு தேநீரை பருகினான்  பாரி.

" என்னோட வேலை பாக்குறவங்க கூட அதையே தான் சொன்னாங்க. ஏன் அப்படி?" என்றாள்.

" அவர்களுடைய பார்வை எனக்கு பிடிக்கல" என்றான்.

" அப்போ நான் பரவாயில்லையா?"

" நீங்க அவங்கள மாதிரி எல்லாம் இல்ல"

" உங்களுடைய ஃபிரண்டா இருக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவத்தை எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி."

அவள் தன்னை ஃப்ரண்ட் என்று கூறிக்கொண்ட பொழுது,  அவன் மனதில் ஏதோ செய்தது.

" நான்,  உங்களுக்கு,  *பிரண்ட் மட்டும்தான்* அப்படிங்கறத நீங்க வெளிப்படையா சொல்லிட்டா நல்லதுன்னு நான் நினைக்கிறேன். இல்லன்னா நான் உயிரோட வீடு போய் சேர மாட்டேன் போலிருக்கு" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள்.

* மட்டும்தான்* என்ற வார்த்தை அவனுக்கு உறுத்தலாக இருந்தது.

" ஓகே பாரி, நான் கிளம்புறேன்."

சரி என்று தலையசைத்தான் பாரி. கதவை திறந்தவள்,  சற்று நின்றாள்.

" பாரி சிரிச்சிகிட்டே இருங்க. நீங்க சிரிக்கும்போது,  ரொம்ப நல்லா இருக்கீங்க. இதை,  அன்னைக்கு ஹைவேஸ்லியே சொல்லனும்னு நினைச்சேன். பெட்ரோலை கொடுத்துட்டு,  அறுக்கிறாளேன்னு நீங்க நினைக்க போறீங்கன்னு  தான் சொல்லல." என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

அதைக்கேட்டு அழகாய்ச் சிரித்தான்  பாரி.

" அதேதான்... பை"

அவனை புன்னகைக்க செய்துவிட்டு, மாறாத புன்னகையுடன்,  அவன் இதயத்தை கொள்ளையடித்து சென்றாள்  இனியா.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top