part28
பாகம் 28
இனியா, குளித்து முடித்துவிட்டு, நல்ல உடை உடுத்தி, தயாராகிக் கொண்டிருப்பதை பார்த்தான் பாரி. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு,
" எங்க அம்மா வீட்டுக்கு போகலாம்ன்னு கிளம்புறேன்"
" என்ன திடீர்னு? "
" சும்மாதான். வேலையில் சேந்ததுக்கப்புறம் போக முடியாதில்லை"
" சரி நான் உன்ன ட்ராப் பண்றேன்"
" வேண்டாம்... நீங்க கடைக்கு கிளம்புங்க. நான் போயிட்டு வரேன்"
" உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் கடைக்கு போறேன்"
" பாரி... "
"நான் ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கேன், எனக்கு உன்னை விட வேற எதுவுமே முக்கியமில்லை"
" எங்க அம்மா வீட்டுக்கு நேர் எதிர் திசையில் கடை இருக்கு. நீங்க என்னை விட்டுட்டு வரணும்னா ரொம்ப லேட் ஆகும்."
" பரவாயில்லை... அரை மணி லேட்டா கடையை திறந்துகிறேன்"
என்று கூறிவிட்டு குளியலறைக்குள் சென்றான், வேறு எதுவுமே கேட்காமல்.
....
இனியாவை சேதுராமன் இல்லத்தில் இறக்கிவிட்டு, கடைக்குச் சென்றான் பாரி. இனியவை பார்த்தவுடன், சீதா சந்தோஷமாகி போனார். பெரும்பாலும் இனியா, இவர்கள் இல்லத்திற்கு வருவதே இல்லை. சத்யாவும் வீட்டில்தான் இருந்தான். இனியாவிற்கு காஃபி போடுவதற்கு, சீதா சமையலறையில் நுழைய, இனியாவும் அவரை பின்தொடர்ந்தாள்.
" நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லுங்க" என்றாள் இனியா.
" இங்க வர உனக்கு ஏதாவது ஒரு காரணம் வேணுமா? "
" நான் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்றதுக்காக வந்திருக்கேன்"
அந்த பக்கமாக சென்ற சத்யாவும், அவள் சொன்னதைக் கேட்டு அங்கேயே நின்றான்.
" குட் நியூஸா? நெஜமாவா? கன்ஃபார்ம் பண்ணிட்டியா? " என்றார் சீதா ஆவலாக.
" ஆமாம்மா கன்ஃபார்ம் தான்"
" எத்தனை மாசம்? "
" மாசமா?" என்றாள் குழப்பமாக.
" நீ முழுகாம இருக்கல்ல? "
அதைக் கேட்டு தன் கண்களை சுழற்றினாள் இனியா.
" அம்மா, அதை தவிர வேறு எதுவுமே குட் நியூஸா இருக்க முடியாதா? நான் மறுபடியும் வேலையில் சேரப் போறேன். "
" அப்படியா, நான் என்ன நெனச்சேன்னா... "
" நீங்க ஒன்னும் நினைக்க வேண்டாம்... அஞ்சு வருஷத்துக்கு அதைப்பற்றி எல்லாம் பேசாதீங்க. சரியா? "
சரி என்று சீதா தலையசைக்க, அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்தான் சத்யா.
" நீ மறுபடியும் வேலையில சேரபோறத நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை நான் எதிர்பார்த்தேன் தெரியுமா?"
" நெஜமாவா?"
" ஆமாம், பாரி உன்னை மறுபடி வேலைக்கு அனுப்புவார்ன்னு எனக்கு தெரியும்." என்று சீதா கூற, பெருமையாய் தலையசைத்தாள் இனியா, சீதா கொடுத்த காபியை குடித்தபடி.
சிறிது நேரம், அவளுடன் பேசிக்கொண்டிருந்த பின்,
" உன்னை பிக்அப் பண்ண பாரி வருவாரா, இல்ல உன்னை நான் ட்ராப் பண்ணவா? " என்றான் சத்யா.
" ஆமாண்ணா, கோயிலுக்கு போலாம்னு இருக்கேன். நீங்க அந்தப்பக்கம் போறதா இருந்தா, என்னை ட்ராப் பண்ணிடுங்க. அங்கிருந்து நான் அவர் கூட வீட்டுக்கு போயிக்குறேன்"
" சரி வா போகலாம்"
அவளை கோவிலில் இறக்கிவிட்டு, பாரியை பார்த்து கையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சத்யா.
" கோயிலுக்கு போயிட்டு வரேன்" என்று பரியிடம் சைகை செய்து விட்டு, கோயிலுக்குள் நுழைந்தாள் இனியா.
தன் கண்களை மூடி சாமி கும்பிட்டாள் இனியா. அவள் சாமி கும்பிட்டாள் என்று கூறுவதை விட, கடவுளுக்கு நன்றி கூறினாள் என்று தான் கூற வேண்டும். இருண்டு கிடந்த தன் வாழ்வில், விடிவெள்ளியாய் பாரியை அனுப்பியதற்காக அவள் கடவுளுக்கு நன்றி கூறினாள். தூணில் சாய்ந்தபடி, கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்தாள். அவள் கண்களைத் திறந்தபோது, அவள் எதிரில் சுபாஷ் நின்றிருந்தான். அவள் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த போது,
" இனியா, ஒரு நிமிஷம்... எப்படி இருக்க?"
" சந்தோஷமா இருக்கேன்" என்றாள் திடமாக.
" நான் செஞ்சது.... "
" நீங்க செஞ்சது பற்றியெல்லாம் யோசிக்க நான் தயாராக இல்லை. அதைப் பற்றிப் பேசவும் நான் விரும்பல. நான் என் புருஷனோட ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அவரை பற்றி மட்டும்தான் நான் இப்ப நினைக்கிறேன்"
" தயவு செய்து என்னை மன்னிச்சிடு"
" நீங்க எதுக்காக மன்னிப்பு கேக்கிறீங்க?"
"நம்ம கல்யாணத்தன்னிக்கு... "
"அந்த நாளுக்காக நான் உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்றேன். இல்லைன்னா, என்னோட வாழ்க்கையா நான் நினைக்கும் என்னோட பாரியை நான் தவறவிட்டிருப்பேன்."
என கூறி, அவள் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
தன்னைப் பற்றியும், நின்றுபோன தங்களது திருமணத்தைப் பற்றியும், அவளுடைய வாக்குமூலத்தைக் கேட்டு, சுபாஷ் நிலைகுலைந்து போனான். இனியாவிடமிருந்து இந்த வகை பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அவன் மீது "ஆர்வம் இல்லை" என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அவள், இன்று போல், முகத்தில் அடித்தது போல என்றும் அவள் பேசியதில்லை.
இனியா சுபாஷுடன் பேசுவதை, கண்ணாடி கதவு வழியாக பார்த்தான் பாரி. அந்த காட்சியைப் பார்த்ததும் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. இனியாவின் முகபாவம் கல்லாகத் தெரிந்தாலும், அவள் சுபாஷுடன் பேசுவதை அவன் விரும்பவில்லை.
இனியா கடையை நோக்கி வருவதை கண்டான் பாரி. பாலாவிடம் கடையை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு, இனியாவை அழைத்துக் கொண்டு, தனது வீட்டை நோக்கி கிளம்பினான்.
பாரி அவளுடன் எதுவும் பேசாமல் இருந்ததை பார்த்து, இனியாவின் தலைக்குள் அலாரம் அடித்தது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். அவன் தான் பொஸஸிவ்னெஸின் கடவுள் ஆயிற்றே. அவளுக்கு, இந்த பொறாமைக்கார பாரியை மிகவும் பிடிக்கும். அவன் கோபப்படும் போது, மிகவும் அழகாக வேறு இருப்பான். அவனை வம்பிழுத்து விளையாட ஆயத்தமானாள்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகும், தனது *அமைதிப் போராட்டத்தை* தொடர்ந்தான் பாரி.
" இன்னைக்கு நான் சுபாஷை கோவிலில் பார்த்தேன்" என்றவளை, எந்தவித உணர்ச்சியுமின்றி பார்த்தான் பாரி.
" பாவம், அவன் செஞ்ச தப்புக்காக ரொம்ப வருத்தப்பட்டான் பா. அவனும் உங்கள மாதிரியே, என்னை ரொம்ப சின்சியரா லவ் பண்ணான்"
அந்த வாக்கியம் பாரியின் உள்ளிருந்த மிருகத்தை தட்டி எழுப்பியது.
" கல்யாணத்தன்னிக்கு அவன் எனக்கு சப்போர்ட் பண்ணாதுக்காக நீங்க அவனுக்கு நன்றி சொல்லனும். இல்லனா, உங்க இடத்தில இன்னிக்கி அவன்தான் இருந்திருப்பான். இன்னிக்கி நீங்க பிடிச்சிருக்கிறது அவனுடைய இடத்தை தானே?"
தான் என்ன செய்கிறோம் என்பதை உணராமல், சிங்கத்தை சுரண்டிப் பார்த்தாள் இனியா. அவளுடைய சிரித்த முகம் இருளடைந்து போனது, தரையில் சில இரத்தத் துளிகளைப் பார்த்தபோது. அவளுக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருந்த பாரியின் முன் வந்து நின்றவளின் முகம் பேயறைந்தது போல் மாறியது, பாரி தன் கையில் ஒரு கத்தியை அழுந்த பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்த பொழுது. அந்த ரத்த துளிகள் அவன் கையிலிருந்து கசிந்தது தான். கத்தியை பற்றியிருந்த, அவனது கையை பிடித்துக் கொண்டு,
" என்ன செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க? விடுங்க" பதறினாள் இனியா.
கத்தியை பற்றியிருந்த, நரம்புகள் முறுக்கேறிய, அவனது கை மேலும் இறுகியதே தவிர இலகவில்லை.
" என் மேல சத்தியம்... விடுங்க அந்த கத்தியை" அவனுடைய சட்டை காலரை பிடித்தபடி கத்தினாள் இனியா.
அதைக் கேட்டு தன் பிடியை தளர்த்தினான், அவள் முகத்தைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் பாரி. அப்போதுதானே அவள் அவனுக்காக வடிக்கும் கண்ணீரை அவன் பார்க்காமல் இருக்க முடியும்.
இனியா, படுக்கை அறைக்கு ஓடிச்சென்று, முதலுதவி பெட்டியைக் கொண்டு வந்தாள். அவன் கையில் ரத்தத்தைக் கண்டு துடித்து போனாள் இனியா. ரத்தத்தை சுத்தம் செய்யும் போது அவள் கைகள் நடுங்கின. அந்த காயம், ஒரு வாரம் வரை பாரியை வேதனைபடுத்த கூடிய அளவிற்கு ஆழமாக இருந்தது. கட்டு போட்டு முடிக்கும் வரை அவள் எதுவும் பேசவில்லை...பாரியும் இன்னும் அவளைப் பார்க்கவில்லை. அவன் முகம் கல்லை போல இறுகிஇருந்தது. கட்டு கட்டி முடித்து, அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள் இனியா. அவன் முகத்தில், அவள் மிகவும் புதியதான ஒன்றைக் கண்டாள்.... அது அவளது அதிகபிரசங்க பேச்சுக்களால் ஏற்பட்ட வலி. அவன் இதயத்தை அறிந்திருந்த பிறகும், அவள் தன் எல்லை மீறி பேசயிருக்க கூடாது. "அவன் சுபாஷின் இடத்தைப் பிடித்துள்ளான்" என்று கூறி, அவனுடைய உணர்வை சுண்டிவிட்டாள். பாரியின் இந்த பக்கத்தை அவள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. உண்மையில் அவன் தன்னைதானே இப்படி காயப்படுத்திகொள்வான் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.
"இதெல்லாம் என்ன பாரி? நான் கிண்டலுக்காக தான் அப்படி சொன்னேன். எனக்கு தான் தண்டனை கிடைக்கணும். நான் தான் தண்டனைக்கு தகுதியானவ. நீங்க ஏன் உங்களை காயப்படுத்திகிட்டீங்க? சொல்லுங்க?"
அவள் அவனுடைய காலரைப் பிடித்து உலுக்கினாள். அவளை வலி நிறைந்த பார்வை பார்த்தான், பாரி.
"நான் உன்னை எப்படி காயப்படுத்த முடியும்? நான் உன்னை அளவுக்கு அதிகமா நேசிக்கும்போது.... நான் உன்னை எப்படி காயப்படுத்த முடியும்? உண்மையில் இந்த காயம் வலிக்கல்ல. ஆனால், உனக்கு வலிச்சா, எனக்கு வலிக்கும்."
சற்றே நிறுத்தியவன்,
"நீ என் காதலை வேற ஒருதரோட ஒப்பிடும் போது அது ரொம்ப வலிக்கும்."
அவன் சோபாவிலிருந்து எழுந்து, அவளிடமிருந்து இரண்டு அடிகள் விலகி, தன் வலியை அடக்கி, கண்களை மூடி நின்றான். இனியாவாள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓடிச்சென்று, பின்னாலிருந்து அவனை கட்டிப்பிடித்துகொண்டாள் .
"என்னை மன்னிச்சிடுங்க. நான் அறிவுகெட்ட தனமா நடந்துகிட்டேன். உங்க மனசை புரிஞ்சிக்காம உங்க உணர்ச்சிகளோட விளையாடிட்டேன். ஐம் சாரி."
"இதைத்தான் நான் வெறுக்கிறேன்... உன்னோட கண்ணீர்... கொஞ்ச நேரத்துல நான் நார்மல் ஆயிடுவேன்." தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு சொன்னான் பாரி.
"நீங்க நார்மலாக நான் என்ன செய்யனும்?"
"ஒன்னும் செய்ய வேண்டாம். நீ போ. கொஞ்ச நேரம் தனியா இருந்தா, நான் நார்மல் ஆயிடுவேன்"
"இல்லை. நான் உங்களை தனியா விடமாட்டேன். என்னை அனுப்பாதிங்க. ப்ளீஸ்." அவள் கெஞ்ச, ஏதும் செய்ய இயலாதவனாய்,
"இனியா... " என்றான்.
"நான் உங்க கூட இருக்குறதை நீங்க விரும்பலயா? நீங்க என்னை விரும்பலயா?"
தன் கண்களை சுழற்றினான் பாரி. இனியா, வேண்டுமென்று தான் அப்படி கூறினாள் என்பது அவனுக்குத் தெரியும். அப்போது தானே, அவன் அவளை அங்கிருந்து அனுப்பமாட்டான்.
"உன்னை காயப்படுத்த நான் விரும்பல. அதனால்தான் இங்கிருந்து உன்னை போக சொன்னேன்".
"நான் உங்கள விட்டு போனா, நிம்மதியா இருக்க மாட்டேன். நீங்க என்னை அனுப்பினா, நீங்க செஞ்சதைப் போலவே, நானும் என்னை தண்டிச்சிகுவேன்"
அதை கேட்டு, பாரிக்கு கோபம் தலைக்கேறியது. பற்களை கடித்தபடி, அவள் கையை பற்றினான்.
"அந்த மாதிரி ஏதாவது செஞ்சா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்."
"அப்போ, என்னை உங்களோட இருக்க விடுங்க. "
ஒரு நொடி யோசித்தவன், சோபாவின் மீது அமர்ந்து, அவளை வரச் சொல்லி தலையசைத்து, தன் கைகளை விரித்தான். ஓடி சென்று அவன் மடியில் அமர்ந்து, அவன் கழுத்தை கட்டிகொண்டாள். கண்களை மூடி, அவளை மென்மையாய் அணைத்துக்கொண்டான், பாரி.
"ரொம்ப வலிக்குதா?"என்றாள் அவன் தோளில் கண்ணீரை சிந்தியபடி.
இல்லை என்று தலையசைத்தான், பாரி.
"நீங்க பொய் சொல்றீங்க." என்றாள் தேம்பியபடி.
ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.
அவன் முகத்தை தன் கையில் ஏந்தியபடி,
"இந்த மாதிரி எப்பவும் செய்யாதிங்க. ப்ளீஸ்ஸ்ஸ்". மீண்டும் தேம்பினாள்.
சரி என்று தலையசைத்த பாரி, அவள் ஏதோ சொல்ல வேண்டுமென்று எதிர்பார்த்து அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"நானும் இந்த மாதிரி மறுபடி செய்ய மாட்டேன்".
அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்தது இதைத்தான். ஆனால், அவள் அதை உச்சரித்த விதம், பாரியின் மனதை தொட்டது. அவள் குழந்தையைப் போல, தன் காதுகளைப் பிடித்துக் கொண்டு அதை சொன்னாள். அவள் காதுகளில் இருந்து, அவள் கைகளை அகற்றினான் பாரி. அவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
"ஐம் சாரி.... நான் அப்படி செஞ்சிருக்கக்கூடாது." என்றாள் வருத்தத்துடன்.
"என்னை விட அதிகமா ஒருதருக்கு நீ முக்கியத்துவம் குடுத்தா, என்னால அதை பொறுத்துக்க முடியாது. நீ அப்படி செஞ்சப்போ, என்னை நான் உதவாகரையை போல உணர்ந்தேன். நான் உன்னை நம்பலன்னு நினைக்க வேண்டாம். இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயமில்ல. எனக்குன்னு இருக்குறது நீ மட்டும் தான். உனக்கு நான் எல்லாமுமா இருக்கணும்னு நினைக்கிறேன். நம்ம குழந்தைகளுக்கு கூட, உன்னோட மனசுல இருக்கும் என் இடத்தை என்னால விட்டுகுடுக்க முடியாது. நான் ரொம்ப பொஸசிவ்....உன் விஷத்தில் ரொம்ம்மப."
தலையைத் தூக்கி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் இனியா. அவர்களின் குழந்தைகளுக்காக கூட அவன் இடத்தை விட்டுகொடுக்க முடியாதா? அப்படி என்றால், அதைப் பற்றி விவாதிக்க, அதற்கு மேல் என்ன இருக்கிறது? அவள் பாலாவின் வார்த்தைகளை எண்ணி பார்த்தாள். "அவன் பொசெஸிவ்நெஸ்ஸின் கடவுள்".
"நம்ம குழந்தைகள் கூடவா?" என்றாள் நடுக்கத்துடன்.
ஆமாம் என்று தலையசைதான் பாரி.
"நீங்க என்னை அவ்வளவு நேசிக்கிறீங்களா?"
"உனக்கு தெரியாதா?"
"எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, என்ன செய்வீங்க?" அவள் கவலையுடன் கேட்டாள்.
"நான் செத்துடுவேன்."
அவன் வாயை பொத்தினாள் இனியா.
"நீங்க என்னை பயமுறுத்துறீங்க."
"உனக்குப் பிறகு எனக்கு இந்த உலகத்துல என்ன இருக்கு?"
அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துகொண்டு,
"நீங்க வாழுற வரைக்கும் நானும் வாழ்வேன். உங்களுக்காக நான் வாழ விரும்புறேன். உங்களுக்காக மட்டும்."
ஒருவர் கைகளில் ஒருவர் கட்டுண்டு கிடக்க, நேரம் கழிந்து கொண்டிருந்தது... நொடிகள், நிமிடங்களாயின... இன்று இனியா, அவள் கற்பனைக்கு எட்டாத ஒன்றைக் கண்டாள். பாரியின் காதல் அவளுக்கு கவலையளித்தது. அதே நேரம், அவன் மீதான மரியாதை பெருகியது. இன்று அவள் அவனிடம் கண்டது, உலகத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.
அவன், தனது அன்பை, தனது சொந்த குழந்தைகளுடன் கூட, பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை. இது என்ன வகையான காதல்? தன்னை தானே துன்புறுத்திகொள்ளும் வன்முறை காதல்..? அவள் அவனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள, தெரிந்துகொள்ள, அவனை மேலும் மேலும் காதலிக்க தான் செய்கிறாள், அவன் அவனுடைய வன்முறைப் பக்கத்தைக் காட்டினாலும் கூட.
அவள் அவனை கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, அவனை அரவணைத்து கொள்ளவே விரும்பினாள். ஏனென்றால், அவன் தன் இதயத்தில், சேமித்து வைத்ததிருக்கும் அன்பு, அவளுக்கு மட்டும் சொந்தமானது. அவள் அவனது அன்பின் ஒரே உரிமையாளர். அவள் பெருமையாக உணர்ந்தாள், மிகவும் பெருமையாக உணர்ந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து, தன்னை அவன் அணைபிலிருந்து விடுவித்து கொண்டாள் இனியா.
"எனக்கு பசிக்குது. உங்களுக்கு?" என்றாள்.
ஆம் என்று தலையசைத்தான் பாரி.
"நான் உங்களுக்கு ஊட்டிவிடுறேன்."
அவள் அவன் மடியில் இருந்து இறங்கி நின்று அவனை நோக்கி திரும்பினாள் ...
" நீங்க எப்போ விரும்பினாலும் உங்களுக்கு நான் ஊட்டிவிடுவேன். நான் ஊட்டி விடுனும்ங்கறதுக்காக, உங்க கையை வெட்டிக்க நினைக்காதிங்க"
கண்ணீருக்கிடையில் புன்னகையுடன் சொன்னாள் இனியா.
சந்தேகமில்லாமல், அது பாரியின் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தது. அவன் என்ன செய்ய கூடும் என்பதை, அவள் சரியாக புரிந்துகொண்டுவிட்டாள் இல்லையா....?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top