Part20

பாகம் 20

பாரியும் இனியாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது,  பாரிக்கு வழக்கமாக புத்தகங்களை வழங்கும்,  புத்தக நிறுவனத்தின் முகவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. ப்ளூடூத் மூலம் அந்த முகவருக்கு பதில் அளித்து விட்டு,  அந்த அழைப்பை துண்டித்தான் பாரி.

" ஸ்டாக் வந்திருக்கு. நான் கடைக்கு போறேன். நான் வர லேட்டாகும். எனக்காக காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுத்துக்க."

" அப்ப உங்களுடைய டின்னர்?"

" நான் பாத்துக்குறேன்"

சரி என்று இனியா தலையசைக்க,  அவளை வீட்டில் இறக்கி விட்டு,  அங்கிருந்து நேரடியாக கடையை நோக்கிச் சென்றான் பாரி.

அவன் கூறியது போலவே,  அவன் ஸ்டாக்-மஸ்டரை முடித்துக் கொண்டு,  வீடு வந்து சேர,  நடு இரவு ஆகிவிட்டது. அவன் வீடு வந்த பொழுது,  இனியா  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அன்று நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்த பொழுது,  அவன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. வேலை களைப்பினால் சோர்வாக இருந்ததால்,  படித்தவுடன் உறங்கிப் போனான்.

மறுநாள்

கண்ணாடியின் முன் அமர்ந்து,  தனது நீளமான,  பட்டுக் கூந்தலை சீவி கொண்டிருந்த இனியவை பார்த்த பொழுது,  ஒரு கணம் கண்ணை எடுக்க முடியாமல் தடுமாறினான் பாரி. கண்ணாடியின் வழியாக,  இனியா  அவனைப் பார்க்க,  தனது பார்வையை வேறுபக்கம் திருப்பிகொண்டான்.

" என்னுடைய ஹேர்,  உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல...?"

" ரொம்ப... "

" ரொம்பன்னா எவ்வளவு?"

" என்னுடைய கண்களை எடுக்காமல்,  ஒரு நாள் முழுக்க பார்த்துகிட்டு இருக்கிற அளவுக்கு. "

" உங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருந்தா,  பேசாம வெட்டி எடுத்துகோங்களேன். " கிண்டலாக கூறினாள்  இனியா.

" எனக்கு அதை ரொம்பப் பிடிச்சிருக்குறதுக்கு காரணமே,  அது உன்னுடையதுங்கிறதால தான்."

"ஓ... " என்றாள்  எனது புருவத்தை உயர்த்தி.

" நான் உன்னை ஒன்னு கேட்கலாமா? " என்றான் பாரி.

" நீங்க என்னை என்ன வேணா கேட்கலாம்" என்றாள்.

" எனக்கு உன்னுடைய ஹேர் பிடிக்கும்னு தெரிஞ்சி, அதை கட் பண்ணி எடுத்துக்க சொன்னே. அதே மாதிரி,  எனக்கு எது பிடிச்சாலும் கொடுத்திடுவியா? "

தலை சீவுவதை  நிறுத்திவிட்டு,  அவன் அமர்ந்திருந்த கட்டிலை நோக்கி வந்தாள். தன் முழங்காலில் கைகளை வைத்துக் கொண்டு,  அவளின் பட்டு கூந்தல்,  அவள் தோள்களில் சரிந்து விழ,  அவன் முன் குனிந்த படி நின்றாள்.

" அப்படி ஏதாவது இருக்கா என்ன?" என்றாள் விழிகளை விரித்தபடி, ஆர்வத்துடன்.

ஆமாம் என்று தலையசைத்தான்  பாரி.

" என்ன அது?" என்று கேட்ட இனியாவின் கண்களில் ஆவல்  கரைபுரண்டு ஓடியது.

"நீ தான்" என்றான் மென்று விழுங்கியபடி.

அதைக் கேட்டு அவள் அனிச்சையாக நிமிர்ந்து நின்றாள். இதை பேசுவது உண்மையிலேயே பாரி தானா? தான் அறிந்திராத இந்த பாரியை,  எப்படி கையாள்வது என்று அவளுக்கு புரியவில்லை. தான் உண்டு,  தன் வேலை உண்டு என்று இருந்த... நட்பு என்ற வரையறை கூட்டுக்குள் நின்றிருந்த பாரி அல்ல இவன்.

அவனுக்கு பதில் ஏதும் கூறாமல்,  வெளியே ஓடிச் சென்றாள் இனியா, அவளுக்கு பிடித்த இடத்தை நோக்கி. ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் தன் மனதுடன்,  ஊஞ்சலாட சென்றாள்  அவள்.

அங்கு வந்த பாரி,  ஏதும் நடக்காதது போல,  ஊஞ்சலை பிடித்து,  தள்ளிவிட ஆரம்பித்தான். அதன் மூலம் இனியாவும் சகஜமாகி போனாள். அவளுக்கு,  ஊஞ்சலாடுவது அவ்வளவு பிடித்திருந்தது. அது பாரிக்கும் தெரியும்.

சிறிது நேரத்திற்கு பிறகு,

" போதும் பாரி,  நிறுத்துங்க" என்றாள்.

" விளையாடினது போதுமா? "

" நீங்க ஆட மாட்டிங்களா? "

இல்லை என்று தலையசைத்தான்,  தன் உதடை மடித்துக்கொண்டு.

" உங்களுக்கு ஊஞ்சலாட பிடிக்காதா? "

" அப்படி ஒன்னும் இல்ல... "

" அப்ப நீங்களும் ஒரு தடவை விளையாடி பாருங்க. ரொம்ப ஜாலியா இருக்கும்

ஊஞ்சலில் இருந்து இறங்கி விட்டு, அவன் கையை பிடித்து இழுத்து அமர வைத்தாள். அவள் ஊஞ்சலை தள்ளிவிட எத்தனித்தபோது, அவள் கரத்தை பற்றி நிறுத்தினான் பாரி. முகத்தை அவன் பக்கம் திருப்பி, *என்ன?* என்று கேள்விக்குறியுடன் அவனை பார்த்தாள் இனியா. அவளை மென்மையாய் இழுத்து,  தன் மடியின் மீது அமர வைத்து,  அவள் இடையைச் சுற்றி வளைத்தான்,  பாரி, தன் உடலில் மின்னல் பாய்ந்தால்,  எப்படி இருக்குமோ, அப்படி ஒரு உணர்வை இனியா விற்கு அளித்து. தாளாத உணர்வுடன்,  அவன் கண்களை பார்த்தபடி,  ஊஞ்சலின் சங்கிலியை கெட்டியாக பற்றினாள்  இனியா, தடுமாறி விழுந்து விடாமல் இருக்க. தன் கால் விரல்களால் அழுத்தம் கொடுத்து,  ஊஞ்சலை தள்ளிவிட்டான் பாரி. மெல்லிய தென்றலின் இதமான ஸ்பரிசம்,  சூடேறி போன,  அவர்களின் உடலை குளிர்விக்க முயற்சித்தது. ஆனால் அது,  தென்றலினால் தணிந்துவிடும் சூடு  அல்லவே...

அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியானது,  கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு கொண்டிருந்தது. ஒருவருக்கான,  மற்றொருவரின் தேவை அதிகரித்துக் கொண்டிருந்தது. அவர்களின் மனமும்,  புத்தியும்,  முழுதாய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி ஓடியது. அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட நெருக்கம்,  இவ்வளவு நாளாக,  அவர்கள் செய்யத் தயங்கிய பல செயல்களை செய்யத் தூண்டியது. அவர்களின் இதழ்களுக்கு இடையில் இருந்த,  கடைசி ஒரு அங்குல இடைவெளியை அழிக்கும் தைரியம்,  அவர்களுக்கு பிறந்தது. ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சல்,  எப்போது நின்றது என்பது கூட அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. கண்களை மூடி, முதல் முத்தத்திற்கு அவர்கள் தயாரானபோது, பாழாய்ப்போன அழைப்பு மணி ஒலித்து, அவர்களை திடுக்கிட செய்தது.

இனியா வாசல் பக்கம் தனது முகத்தை திருப்பி, பாரின் மடியில் இருந்து,  இறங்க முற்பட்டபோது, அவள் இடையை சுற்றி வளைத்திருந்த அவனது பிடி,  இறுகியது. அவள் பாரியை திரும்பி பார்த்த பொழுது, அவன் முகத்திலிருந்த நரம்புகள் வெடித்து விடும்போல்,  இருக்கமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்திலிருந்து கண்ணை எடுக்காமல்,  மெதுவாய் அவன் கரத்திலிருந்து தன் இடையை விடுவித்துக்கொண்டு, அங்கிருந்து அவசரமாய் கதவை திறக்க ஓடினாள். கண்களை மூடி,  தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,  சூடேறிய ரத்தத்தை குளிர்வித்துக்கொண்டான்,  பாரி.

சிவன் பூஜையில் புகுந்த கரடி யார் என்பதை பார்க்க,  அவன் உள்ளே வந்தான். அந்த வில்லன்,  வேறு யாருமல்ல,  இனியாவின் அண்ணன் சத்யா தான். இனியா,  பாரியை பார்ப்பதையே சுத்தமாக தவிர்த்தாள். அதை பாரியும் புரிந்துகொண்டான்.

" வாங்க சத்யா... எப்படி இருக்கீங்க?"

" நான் நல்லா இருக்கேன். அம்மா கேரட் அல்வா செஞ்சாங்க. அதை இனியாவுக்கு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் வந்தேன்.

" என்னது,  கேரட் அல்வாவா? வாவ்.. "

சத்யாவின் கையிலிருந்த டப்பாவை,  பிடுங்க மாட்டாத குறையாய்,  வாங்கி கேரட் அல்வாவை சுவைத்தாள்  இனியா. கேரட் அல்வாவை பார்த்தவுடன்,  சட்டென்று மாறிவிட்ட அவளது மனோபாவத்தை பார்த்து வியந்து போனான்,  பாரி. இதெல்லாம் ஏன் அவனுக்கு மட்டும் சாத்தியப்படவில்லை?

அவளைப்பார்த்து களுக்கென்று சிரித்தான்  சத்யா.

" இதுக்காகத்தான்,  அம்மா உனக்கு கொடுத்து அனுப்பினாங்க." என்றான் சிரித்தபடி.

அதைக் கேட்டு பாரியும் சிரித்து வைத்தான்.

" சரி நான் கிளம்புறேன்" என்றான் சத்யா.

" காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்" என்றான் பாரி.

" இல்லங்க பாரி,  இங்க வர்றதுக்கு முன்னாடி கேரட் அல்வா சாப்பிட்டுட்டு வந்தேன். இப்போ எனக்கு காபி வேண்டாம்" என்றான்.

சரி என்று, பாரி  தலையசைக்க,  சத்யா அவர்களிடமிருந்து விடை பெற்றான். அவனை வழி அனுப்பிவிட்டு உள்ளே நுழையும் பொழுது, அவன் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.

" அட கேரட் அல்வா வா?"

அந்த குரலுக்கு சொந்தக்காரன் வேறு யாருமல்ல நமது அருமை நண்பன் பாலா தான். பாரியை பொறுத்தவரை,  *அடுத்த வில்லன்*. அவனை நோக்கி, கேரட் அல்வா இருந்த டப்பாவை நீட்டினாள் இனியா.

" தேங்க்ஸ் அண்ணி" என்றபடி,  அவள் கையிலிருந்த  டப்பாவை பெற்றுக்கொண்டான் பாலா.

" எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றான் பாலா.

" உங்களுக்குமா?" என்றாள் இனியா.

" ஆமாம்,  நாங்க சின்ன வயசுல இருக்கும்போது,  எங்க பாட்டி எங்களுக்கு இத செஞ்சு கொடுத்து இருக்காங்க. ஆமாம் தானே,  பாரு?" என்றான் பாலா.

" நீ இங்க எதுக்கு வந்த?" என்றான் பாரி அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்.

அவன் முகத்தில் இருந்த சிடுசிடுப்பை பார்த்தபொழுது,  இனியாவுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஆனால்,  பாலாவோ,  அவன் சகோதரனின் தவிப்பை புரிந்து கொள்பவனாக தெரியவில்லை. அவன் இனியாவுடன்,  அவர்களது பால்யகால நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளத் துவங்கி விட்டான்.

" நீ இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போய் சேர்வது நல்லது" என்றான் பாரி.

' ஆமாம் பாரு, நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம்."

பாலா அங்கிருந்து கிளம்பி சென்றபின்,  இனியா பாரியின் முன்னால் வரவே இல்லை. உண்மையை சொல்லப்போனால்,  அவர்கள் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தார்கள். இனியா ஒளிந்து கொள்வதும்  பாரி தேடி  பிடிப்பதுமாக இருந்தார்கள். அவள் அவனை தவறாக எடுத்துக்கொண்டு விட்டாளோ? இவன் அவசரப்பட்டு விட்டானோ?
இறுதியாக,  அவளிடம் பேசி தீர்த்துவிடுவது என்று தீர்மானித்தான்.

அவள் குளியல் அறைக்குள் செல்வதைப் பார்த்தான் பாரி. அவள்  குளித்து முடித்து வெளியே வந்ததைப் பார்த்தபோது அவனுக்கு குழப்பமாய் இருந்தது. இந்த இரண்டும் கெட்டான் நேரத்தில் ஏன் அவள் குளித்தாள் என்பது அவனுக்கு புரியவில்லை. நேரே சமையலறைக்கு சென்றவள்,  இரவு உணவை தயாரிக்க துவங்கிவிட்டாள். ஆனால்,  அவள் இயல்பாய் பேச தொடங்கிவிட்டவுடன்,  அவனுக்கு *அப்பாடா* என்றிருந்தது. ஆனால் இதைப் பற்றி பேசிவிடுவது என்று தீர்மானித்தான். இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தார்கள்.

இனியா, தனக்கான படுக்கையை,  சோபாவில் விரித்து கொண்டிருப்பதைப் பார்த்து போது,  அதிர்ந்து போனான் பாரி. அவள் அவன் மீது,  வருத்தத்தில் இருக்கிறாள் என்பது உறுதியானது பாரிக்கு. இதற்கு மேல் பொருக்க அவன் தயாராக இல்லை. பதட்டமாக அவளை நெருங்கினான்.

" ஐ அம் சாரி, நான் தப்பு பண்ணி இருந்தா... "

அவனை மேலே  பேச விடாமல்,

" இது,  வெறும் மூன்று நாளைக்கு மட்டும் தான்." என்றாள்.

" ஆனால்...."  ஏதோ சொல்ல போனவன்,  அப்படியே நிறுத்தினான்,  அவள் சொன்ன *மூன்று நாட்களுக்கான* அர்த்தத்தைப் புரிந்துகொண்டு.

" நான் இங்கே படுத்துகிறேன்"

" ஆனால் ஏன்?"

" அது அப்படித்தான். "

" என் மேல கோவமா இருக்கியா? " என்றான் தயங்கியபடி.

" எதுக்கு கோபம்?" என்றாள்  தலையணையை சரிசெய்தபடி.

" அது...வந்து... ஊஞ்சல்... "

" நான் கோவமா இல்லை"

"உண்மையா தான் சொல்றியா? "

" நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா? "

கேள்வியை பதிலாய் பெற்றான் பாரி.

" நீ கட்டில்ல படுத்துக்கோ. நான் வேணும்னா சோபாவில் படுத்துகிறேன்."

"வேண்டாம்பா...கட்டிலுக்கு சொந்தக்காரரை,  விரட்டி விட்டேன் என்ற பாவம் எனக்கு வேண்டாம்."

" நீ கட்டிலுக்கு சொந்தக்காரனுடைய பார்ட்னர் இல்லையா?"

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றுவிட்டு,  தட்டுத்தடுமாறி,

" ஆமாம். ஆனால்..."

" போதும் ஆர்கிவ் பண்ணாத" என்றான் புருவத்தை உயர்த்தி.

தனது கைகளை கட்டிக்கொண்டு,

"ஆர்கிவ் பண்ணா என்ன செய்வீங்க?" என்றாள்.

" தூக்கிக்கிட்டு போய்,  கட்டிலில் படுக்க வைப்பேன்."

அதைக்கேட்டு புருவத்தை உயர்த்தி,  நக்களாக சிரித்தாள் இனியா.

" துக்கிகிட்டு போவீங்களா?  நீங்களா....?"
அவளுடைய கிண்டல் சிரிப்பு,  தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. சட்டென்று,  பாரி அவளை தன் கைகளில் தூக்கி கொண்டபோது. கட்டிலுக்கும் சோபா விற்கும் இடையில் இருந்த தூரம் என்னவோ பத்தடி தான். ஆனால்,  கட்டிலை நெருங்க, போதுமான நிதானம் காட்டினான் பாரி. இனியாவும்  எந்த அவசரமும் காட்டவில்லை ஏனெனில்,  இந்த அனுபவம் அவளுக்கு மிக அற்புதமாய் இருந்தது. அவளுடைய சிறிய வயது புகைப்படத்தில்,  அவளுடைய அம்மா சீதா,  அவளை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பதை,  அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு நினைவு தெரிந்து,  அவளை யாருமே தூக்கி கொண்டது கிடையாது. அவள் உடல் உறைந்து போவது போல் உணர்ந்தாள், பாரி அவளுடைய கண்களையே பார்த்துக் கொண்டு,  கட்டிலை நெருங்கியதைப் பார்த்த பொழுது. மெல்ல அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு,

" குட் நைட்" என்றான் மெல்லிய புன்னகையுடன்.

சோபாவிற்க்கு சென்று அமர்ந்து, அவனுடைய மடிக்கணினியை உயிர்பித்தான். அவனுடைய கண்கள் என்னவோ மடிக்கணினியின் திரையில் இருந்தபோதிலும், அவனுடைய மனைவி,  அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் உணராமல் இல்லை.

தொடரும்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top