Part16

பாகம் 16

பாரி கண் விழித்தபோது, இனியா அவன் அருகில் இருக்கவில்லை.  அவசரமாக வெளியே வந்து பார்த்த பொழுது, சுதாவும் ராஜுவும் அவர்களுடைய மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருந்தார்கள். இனியா  அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

"எங்க கிளம்பிட்டீங்க?" என்று கேட்டான் ஒன்றும் புரியாதவனாய்.

" உனக்கே தெரியும்,  நாங்க,  துவாரகையில் இருந்து நேரடியா இங்க  வந்துடோம். வீடு என்ன நிலைமையில் இருக்குன்னு தெரியலை" என்றாள் சுதா.

" ஆமாம் பாரி. எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சி. தயவுசெய்து எங்களை தப்பா நினைக்காதே. நாங்க இன்னொரு நாள் நிச்சயம் வறோம்" என்றார் ராஜு.

" சரின்னு சொல்லிட்டு,  அண்ணியுடன் ஜாலியா இரு" என்றான் பாலா கிண்டலாக.

" டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம்" என்றான் பாரி.

" அந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். இனியாவ கூட்டிக்கிட்டு ஒரு நாள் வீட்டுக்கு வா" என்றார் ராஜு.

சரி என்று தலை அசைத்தான் பாரி. பாரிடமிருந்தும், இனியா விடமிருந்தும் விடைபெற்று கொண்டு,  அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.

" நீங்க ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க,  நான் உங்களுக்கு காஃபி போட்டு வைக்கிறேன்" என்று சமையலறையை நோக்கி சென்றாள் இனியா,  பாரியின் பதிலுக்கு காத்திராமல்.

அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் பரபரவென்று வேலையை முடித்துக் கொண்டு வெளியில் வந்தான் பாரி. நேரே சமையலறைக்கு சென்றவன், இனியா காபி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து,  அப்படியே நின்றான். அவனுடைய கனவு நினைவாக விட்டதல்லவா... அவனைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்துவிட்டு,

" காபி எடுத்துக்கோங்க" என்றாள்,  அவனை நோக்கி காபி குவளையை நீட்டியபடி  இனியா.

அதை அவளிடமிருந்து வாங்கி, ட்ரேயில் வைத்தான்.

" என்ன செய்றீங்க? "

" வாங்க போகலாம்" என்றான் அந்த ட்ரேயை தன் கையில் எடுத்துக்கொண்டு.

" எங்க? "

" உங்களுக்கு பிடிச்ச ஒரு இடத்துக்கு".

அவளை அழைத்துக்கொண்டு,  காபியுடன் தோட்டத்திற்கு வந்தான். அங்கு,  ஒரு சிறிய தேநீர் மேஜையின் முன்பு,  இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

" வாவ்" என்று சந்தோஷமாய் ஒரு குவளையை தனது கையில் எடுத்துக்கொண்டு,  அந்த நாற்காலியில் அமர்ந்தாள் இனியா. பறவைகள் கிரீச்சிடும் சத்தம்,  அந்த காலைப்பொழுதை,  மிக இனிமையாக மாற்றிக் கொண்டிருந்தது. பூக்களின் நறுமணம் மேலும் அதை ரம்மியம் ஆக்கியது. அந்த ரம்மியம்,  அவள் குடித்த காப்பியின்  சுவையை மேலும் கூட்டியது. பாரியைப் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. இனியா அவனுடன் இருப்பதே,  அவனுக்கு இனிமையாக தானே இருக்கும்.

காபியை குடித்து,  முடித்து குவளையை கீழே வைத்தாள் இனியா. அதற்காகவே காத்திருந்தவனாய்..

" உங்க பின்னால திரும்பி பாருங்க இனியா" என்றான்.

அவன்,  அப்படி என்ன பார்க்க சொல்கிறான் என்று,  முகத்தை சுருக்கி,  திரும்பி பார்த்தவளின் கண்கள்,  ஆச்சரியத்தில் விரிந்தன. அவள் அன்று கூறியபடியே,  அங்கு இருந்த மாமரத்தில் அழகிய ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அதை நோக்கி, துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினாள் இனியா. அங்கு அமர்ந்த படியே அவள் உல்லாசமாய் ஊஞ்சல் ஆடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் பாரி.

சற்று நேரத்திற்குப்பின், இனியாவின் போன் ஒலிக்கத் தொடங்கியது. அதை எடுத்துக் கொண்டு அவள் அருகில் வந்தான் பாரி. இனியா ஊஞ்சல்  ஆடுவதை நிறுத்தினாள்.

" அத்தை பேசுறாங்க"

அவன் கையில் இருந்த போனை வாங்கிக்கொண்டு,  பதிலளித்தாள் இனியா.

" ஹலோ அம்மா... "

" இன்னைக்கு நம்ம வீட்ல ஒரு பூஜை வச்சிருக்கோம். வந்துட்டு போயிடேன்"

" இன்னைக்கே வந்தாகணுமா?  நாளைக்கு வறேனே..." என்றாள்  இனியா.

அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தான் பாரி.

" என்ன ஆச்சரியமா இருக்கு... ஒரே நாள்ல இங்க வர வேண்டாம்ன்னு  நினைக்கிற அளவுக்கு,  உன் வீட்டுக்காரர் உன்னை அப்படி என்னமா பாத்துக்கிட்டாரு?" என்று கிண்டலாக கேட்டாள் சீதா.

இனிவுக்கு சங்கடமாக போனது.

" நான் ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்கேன் மா"

அவள் தயக்கத்துடன் கூறியதை பார்த்து,  என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட பாரி,  போனை தன்னிடம் கொடுக்குமாறு கேட்க,  இனிய அவனிடம் போனை குடுத்தாள். அவன் ஏதும் கூறுவதற்கு முன்,

"என்ன?  ஊஞ்சலாடிக்கிட்டிருக்கியா? எங்களுக்கும் உன் புருஷனுக்கும் நடுவுலயா? என்னடி மாயம் இது?
" என்று கிண்டலாக கேட்டாள் சீதா.

அதைக் கேட்டு,  வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

" நான் இனியாவை அழைச்சிகிட்டு வறேன், அத்தை" என்றான்.

பாரியின் குரலை கேட்டு ஒரு நிமிடம் நின்றவள்,  சுதாகரித்துக் கொண்டாள்.

" உங்கள விட்டுட்டு வர, உங்க பொண்டாட்டிக்கு விருப்பம் இல்லனா,  நீங்க அவளை கட்டாயப்படுத்தி அழச்சிக்கிட்டு வரணும்னு அவசியம் இல்லை. நீங்க அவளை உங்க கூடயே வச்சுக்கலாம்" என்று களுக்கென்று சிரித்தாள்.

" நாங்க வரோம்,  அத்தை " என்றான் சிரித்தபடி.

"நிஜமாத்தான் சொல்றீங்களா?" என்றார் சீதா.

" நெஜமாத்தான் சொல்றேன்".

"அப்ப சரி" என்று போனை  துண்டித்தார் சீதா.

" கிளம்புங்க இனியா"

" இப்ப வேண்டாமே ப்ளீஸ் ப்ளீஸ்"

" இந்த ஊஞ்சல் எங்கேயும் போயிடாது.  நீங்க வாழ்நாளெல்லாம் விளையாட தானே போறீங்க?  இப்போ கிளம்புங்க. அத்தையும் மாமாவும் காத்திருப்பாங்க"

" நீங்க எதுக்காக இன்னிக்கு வறோம்னு ஒத்துக்கிட்டீங்க?"

" ஏன்னா,  நான் எதோ மந்திரம் பண்ணி உங்கள மயக்கிட்டேன்னு அத்தை நினைக்கிறாங்க" என்றான் புன்னகையுடன்.

" நீங்க.... என்னை... மயக்கிடீங்களா?  சரியா போச்சு போ" என்றாள்  களுக் என்று சிரித்தபடி.

இதை  எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை பாரிக்கு. இனியா ஊஞ்சலில் இருந்து குதித்து உள்ளே சென்றாள். ஒன்றும் புரியாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் பாரி.

சேதுராமன் இல்லம் செல்வதற்கு இனியா தயாராகிவிட்டாள். தன் வீட்டின்,  மற்றொரு சாவியை,  அவளை நோக்கி நீட்டினான் பாரி. இனி வரப்போகும் நாட்களில்,  அது அவளுக்கு நிச்சயம் தேவைப்படும் அல்லவா?  அதை பெற்று தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள் இனியா.

அவன் சில பரிசுப் பொருட்களை எடுத்து  வைப்பதை பார்த்து குழப்பம் அடைந்தாள் இனியா.

" இதெல்லாம் எதுக்கு? "

" முதல் தடவை உங்க வீட்டுக்கு போகும் போது,  உங்க அப்பா அம்மாவுக்கும்,  அண்ணனுக்கும் கிஃப்ட் குடுத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க இல்ல" என்றான்.

" இதெல்லாம் உங்களுக்கு எப்படி தோணுது? "

"புக்ஸ் படிக்கும் போது,  அதில் இருந்து இப்படி உபயோகமா ஏதாவது கிடைக்கும்" என்றான்  சிரித்தபடி.

" ஆமாம். நான் மறந்தே போயிட்டேன்,  நீங்க தான்  புத்தகப்புழுவாச்சே... "

" கணக்கு டீச்சரைவிட ஒன்னும் பெரிய புத்தகப்புழு இல்லை. "

" நான் கணக்கு சம்பந்தமான புத்தகம் மட்டும் தான் படிப்பேன். உங்கள மாதிரி,  கிடைத்ததையெல்லாம் படிக்கிற பழக்கம் எனக்கு இல்லை"

" நான் வேற எப்படி என் பொழுதைப் போக்குறது?  அதனால தான் எல்லாத்தையும் படுச்சிகிட்டு இருக்கேன்."

" இதுக்கப்புறம் அந்த பழக்கம் குறச்சிடும்ன்னு நம்புகிறேன்"

" நான் இதுக்கு அப்புறம்,  ஒரு புது புத்தகத்தை படிக்கலாம்னு இருக்கேன்."

அவன் உள்ளர்த்தம் வைத்து,  கள்ள புன்னகையுடன் கூற,  அதன் அர்த்தம் புரிந்தாலும்,  புரியாதவள் போல,

" நீங்க அப்படி புதுசு புதுசா எதையாவது படிச்சிக்கிட்டே இருந்தா,  எனக்கு தான் போரடிக்க போகுது" என்றாள்  சோகமாக.

" நான் அந்த புக்கை படிக்க தொடங்கினா,  உங்களுக்கு போரே அடிக்காது" என்றான்.

அவள் தன் உடலில் ஒரு நடுக்கத்தை உணர்ந்தாள். உண்மையிலேயே அவன் புத்தகத்தை பற்றி தான் பேசுகிறான்?

" நமக்கு நேரமாச்சு. சீக்கிரம் போலாம்"

பாரிக்குத் தெரியும் அவள் வேண்டுமென்றே பேச்சை மாற்றினாள் என்று. மேலும் அவளை சங்கட படுத்த வேண்டாம் என்று,  கார் சாவியை கையில் எடுத்தான்.

" எதற்காக கார்  சாவிய எடுக்குறீங்க? "

" உங்க அம்மா வீட்ல உங்கள விடுறதுக்கு தான்"

" வேண்டாம். நம்ம பைக்ல போகலாம். எல்லாரும் நம்மளை பார்க்கட்டும்" என்றால் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக.

" நிஜமாத்தான் சொல்றீங்களா? "

" ஆமாம்... அது இருக்கட்டும், நீங்க என் கூட எங்க அம்மா வீட்டுல இருக்க போறதில்லையா?"

" இல்லை"

" ஏன்? "

" ஏதோ பூஜை தானே? "

" நீங்க இருக்கிறத யாரும் வேண்டான்னு தடுக்க போறது இல்ல. நீங்க தனியா இருந்து என்ன பண்ண போறீங்க?"

" நான் பல வருஷமா தனியா தானே இருக்கேன்?"

" ஆனா,  இனிமே அப்படி இருக்கணும்ன்னு  எந்த அவசியமும் இல்லை."

" அதனால் என்ன... நம்ம இன்னொரு நாள் நிச்சயம் போகலாம். "

சோகமாக உதட்டை சுழித்தாள் இனியா.

" ஏற்கனவே உங்க அம்மா நான் உங்கள மயக்கிட்டதா  நினைக்கிறாங்க. அத நிச்சய படுத்துற மாதிரி நடந்துக்காதீங்க" என்று சிரித்தான்.

"அவங்க அப்படி  நெனச்சா மட்டும் இப்ப என்ன?"

" அத பத்தி உங்களுக்கு கவலை இல்லையா? "

" இதுல கவலைப்பட என்ன இருக்கு?  நீங்க என்னோட ஹஸ்பண்ட். நான் உங்ககிட்ட மயங்கினா  என்ன தப்பு?"

ஒரு வேகத்தில் படபடவென பேசிவிட்டு உதட்டை கடித்தாள் இனியா, அவள் பேசியதற்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு.

" யாரோ ஃபிரின்ட்ல இருந்து, மனைவிக்கு கட்சி மாறிட்ட மாதிரி தெரியுது?" என்றான் சிரித்தபடி.

ஏதாவது பேசி, உளறிக் கொட்ட வேண்டாமென்று,  அங்கிருந்து விரைவாக வெளியே சென்றாள் இனியா.

தனது இரு சக்கர வாகனத்தை உதைத்து,  இன்ஜினை ஓடவிட்டான் பாரி. அவன் பின்னால் அமர்ந்து, அவன் தோளில் அவள் கையை வைத்துக் கொண்டாள் இனியா. அவள் கையை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ரியர் வியூ மிரர் மூலம்  அவளை பார்க்க,  அவள் அவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள். அவர்கள் இருவரும் செல்வதைப் பார்த்தவர்கள், ஒரு நொடி நின்று,  அவர்களை நோட்டம் விட்டார்கள்.

அவர்கள் இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்த ஒருவன்,

" அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்கள்... நல்ல வேளை,  இந்த பெண் சுபாஷிடம் இருந்து தப்பித்துக் கொண்டாள். இல்லாவிட்டால், குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக போல ஆகி இருக்கும் அவளுடைய வாழ்க்கை" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அவன் வேறு யாருமல்ல, சத்யாவின் விரோதி ராஜாதான்.

இனியாவை,  சேதுராமன் இல்லத்தில் சேர்பித்தான் பாரி. சீதாவிடம் சென்று,  அவளுடைய காதில் ஏதோ ரகசியம் உரைத்தாள்  இனியா.

" மதிய சாப்பாட்டுக்கு, இங்க வந்திடுங்க மாப்பிள்ளை." என்றாள் சீதா.

சீதாவின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இனியாவின் மீது பாரியின் பார்வை விழுந்தது. அவனுக்கு தெரியும்,  இது இனியாவின் வேலைதான் என்று. அவளுடன் இங்கே தான் இருக்கப் போவதில்லை என்று கூறியதற்காக,  இப்பொழுது அவள் அம்மாவை பயன்படுத்தி இங்கே வரவழைக்க பார்க்கிறாள்.

" எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. பாலா கடைக்கு புதுசு. நான் அவனுக்கு கொஞ்சம் வேலை சொல்லிக் கொடுக்கணும்"

" அம்மா,  உங்கள சாப்பிட  வர சொன்னாங்க. நீங்க என்ன வேலை செய்றீங்கன்னு  கேட்கல." என்றாள்  இனியா.

" நீங்க பாலாவையும் உங்ககூட அழைச்சுக்கிட்டு வரலாம்" என்றார் சேதுராமன்.

" உங்க வைஃப் நீங்க எங்களுடன் சேர்ந்து சாப்பிடனும்னு ஆசைபடுறா. அவ மனச கஷ்டப்படுத்தாதீங்க" என்றார் சீதா சிரிப்புடன்.

பாரி இனியவை பார்க்க,  அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.

" சரி வரேன். ஆனா பாலா வருவான்னு தெரியல. அவன் எப்பயுமே லஞ்ச் எடுத்துட்டு வந்துருவான்"

அதைக் கேட்டு இனியாவின் முகம் மலர்ந்தது. அது பாரிக்கும் பிடித்திருந்தது. தன்னை பற்றி பெரிதும் கவலைப்பட,  அவனுக்கு ஒருத்தி கிடைத்துவிட்டாள் அல்லவா.

" நான் கிளம்புறேன்" என்றான் பாரி.

" நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் மாப்பிள்ளை" என்ற சீதா.

சரி என்று தலையை அசைத்தபடி அங்கிருந்து கிளம்பினான் பாரி. இனியா அவனை வழியனுப்ப, அவனை பின் தொடர்ந்தாள்.

" எதுக்காக அத்தையை  இப்படி தொந்தரவு பண்றீங்க?"

" இதுல என்ன தொந்தரவு இருக்கு? சமைக்கிறதை,  கொஞ்சம் கூட சேர்த்து சமைக்க போறாங்க அவ்வளவுதானே... "

" நீங்க என்னை  பத்தி கவலைப்பட வேண்டாம். நான் சமாளிச்சுக்குவேன்"

" இதுக்கப்புறம் நீங்க ஒன்னும் தனியா சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. அது என்ன,  நான் உங்கள பத்தி கவலைப்பட வேண்டாம்னு  ஈசியா சொல்றீங்க? உங்களை பற்றி கவலைப்படுவது என்னோட ரைட்ஸ். தெரிஞ்சுக்கோங்க"

அதைக் கேட்க பாரிக்கு  மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால்,  அவள் இது என்னுடைய கடமை என்று கூறவில்லை... அவளுடைய உரிமை என்று கூறினாள். அப்படியென்றால் அவள் இதை கடமைக்கென்று செய்யவில்லை. அவனை கவனித்துக் கொள்வது அவருடைய உரிமை என்று நினைக்கிறாள்.

" நீங்க பேசுறதை  பார்த்தா,  நான் உங்க பேச்சை கேக்கலைனா,  என்னை பெஞ்சு மேல நிக்க வைப்பிங்க போல இருக்கு?" என்றான் சிரிப்புடன்.

" வரப்போற நாள்ல,  நீங்களே தெரிஞ்சுக்குவீங்க,  டீச்சரால இன்னும் என்னெல்லாம் பனிஷ்மென்ட் கொடுக்க முடியும்ன்னு" என்றாள்  பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

" காத்திருக்கேன்"

சிரித்தபடி தனது இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தான் பாரி. அவனை நோக்கி கையசைத்து கொண்டு,  அங்கேயே நின்றிருந்தாள், இனியா,   மாறிவிட்ட தனது வாழ்க்கையையும்,  தனக்கும் பாரிக்கும் இடையில் இருந்த,  மாறிவிட்ட உறவு முறையை பற்றியும் சிந்தித்து கொண்டு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top