Part14

பாகம் 14

திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக எல்லா சடங்குகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ராஜுவும்,  சுதாவும் சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். சுதாவிற்கு இனியாவை பார்க்க நேரமே கிடைக்கவில்லை. பாரியிடம் அவளுடைய புகைப்படம் இருந்த போதிலும்,  அவன் அதை சுதாவிடம் காட்டவில்லை. கடைசியில்,  பாலாதான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

" பாரு,  எப்பதான் நீ அண்ணியை கண்ணில் கட்ட போற?" என்றான்.

" ஆமாம் பாரி,  நானும் இன்னும் என் மருமகளை பார்க்காமலே இருக்கேனே" என்றாள் சுதா.

" அவங்க வீட்டுக்கு போறதுக்கு,  பாரிக்கு தயக்கமா இருக்கோ என்னமோ". என்றார் ராஜு.

" இருக்காதா பின்னே?  நமக்கு தெரியாது,  பாரி எவ்வளவு கூச்ச சுபாவம் உள்ளவன்னு?" என்றார் சுதா.

" அப்படின்னா, இதப்பத்தி,  சேதுராமன் கிட்ட நம்மளே பேசிட வேண்டியதுதான்."
என்றார்.

பாரி தலையசைத்தான்,  தன்னுடைய சந்தோஷத்தை ஒளித்துக் கொண்டு. அவனுக்கு தெரியும் சேதுராமன் எந்த தடையும் சொல்ல மாட்டார் என்று. ஆனால்... ஒருவேளை திருமண சடங்குகள் ஆரம்பித்துவிட்டதால்,  மணமகன்,  மணமகளை பார்க்க கூடாது என்று கூறி விடுவார்களோ என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. ஒரே மணியில்,  போனை எடுத்து பேசினார் சேதுராமன்.

" என்னங்க மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க?"

" நான் நல்லா இருக்கேன் மாமா. என்னுடைய சித்தப்பா உங்க கிட்ட பேசணும் னு சொன்னாரு."

" அப்படியா,  போனை குடுங்களேன்."

பாரி, ராஜுவிடம் போனை கொடுத்தான்.

"வணக்கங்க... பாரி உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காரு. அவரு உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காரு. நீங்க எல்லாரும் எங்க  வீட்டுக்கு வந்து என் மகளை ஆசிர்வாதம் பண்ணனும்."

என்று,  ராஜூ எதுவும் கேட்கும் முன்னரே,  அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்தார் சேதுராமன். அவருடைய பேச்சில் அகமகிழ்ந்து போனார் ராஜு.

" நானே அதை பத்தி உங்ககிட்ட பேச தான் போன் செய்ய சொன்னேன். என்னோட  மனைவி,  உங்க மகளை பார்க்க,  ரொம்ப ஆர்வமா இருக்காங்க."

" நாளைக்கு இனியாவுக்கு நலங்கு வச்சிருக்கோம். நீங்களும் வந்து கலந்துகோங்களேன்."

" எங்க சார்பா,  நாங்களும் இனியாவுக்கு நலங்கு வைக்கணும்னு,  என் மனைவியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இங்க பாரிக்கு,  நலங்கு வைச்சி முடிச்ச கையோட,  நாங்க கிளம்பி அங்க வறோம்"

" ரொம்ப சந்தோஷம்.  நாங்க காத்திருக்கோம்."

இருவரும் போனை துண்டித்து கொண்டார்கள்.

" சேதுராமன் சார் பேசுறத பாத்தா,  அவங்க ரொம்ப நல்ல மாதிரியா தெரியுது." என்றான் ராஜு.

" பின்னே,  நம்ம பாரியோட செலக்ஷன்னா சும்மாவா?" என்று அவனுடைய பெருமை பேசினார் சுதா.

அவர்கள் பாரியை பார்த்த பொழுது,  அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாளை நலங்கு வைக்க, இனியா வீட்டிற்கு,  தன்னையும் இவர்கள் அழைத்து செல்வார்களா,  இல்லையா என்ற சிந்தனை தான் அது. அவனைப்பார்த்து களுக்கென்று சிரித்தான்  பாலா.

" பாரு,  என்ன உன்னோட ஆசை எல்லாத்தையும் கனவிலேயே தீர்த்து விடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? நிஜ வாழ்க்கைக்கும் கொஞ்சநஞ்சம் விட்டு வைப்பா..." என்று கிண்டல் அடித்தான்.

அதைக்கேட்டு,  ராஜுவும் சுதாவும் சிரிக்க,  தனது சங்கடத்தை ஒளிக்க வழி தெரியாமல் திணறினான் பாரி. அவன் இனியாவை  பார்த்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகி விட்டது. இந்த பெரியவர்கள்,  ஏதாவது சம்பிரதாயம் என்று கூறி, அவன் சேதுராமன் இல்லத்திற்கு வருவதை தவிர்த்து விடுவார்களோ? அவனுடைய ஆவலை  வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க,  பெரும்பாடு பட்டான் பாரி.

அடுத்த நாள்

பாரிக்கு நலங்கு வைத்தாகிவிட்டது. இனியாவின் வீட்டிற்கு செல்ல எல்லோரும் தயாரானார்கள். ராஜு பாரியையும் தங்களுடன் வருமாறு அழைத்தார்.

" ஆனா,  இனியாவோட அப்பா,  உங்களை மட்டும் தானே வர சொல்லி இருக்காரு... மாப்பிள்ளை,  பொண்ணு வீட்டுக்கு வரலாமான்னு தெரியலையே." என்று இழுத்தான்.

" பாருங்க,  எவ்வளவு பொறுப்பா,  இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்திருக்கான் நம்ம பாரி" என்று சிலாகித்தார் சுதா.

" அவனுக்கு என்ன,  நேரம் போகலன்னா,  எப்ப பார்த்தாலும்,  ஏதாவது ஒரு புக்கை வச்சு பிடிச்சுக்கிட்டு இருப்பான். சரிதானே பாரு?" என்றான் பாலா.

பாரி அவனிடம் கூறவில்லை,  உண்மையில்,  அவன் இதைப் பற்றியெல்லாம்,  இன்டர்நெட்டில் தேடி பிடித்து தெரிந்து கொண்டான் என்பதை.

" எனக்கு என்னமோ உன்னோட மாமனார்,  இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்குவார்ன்னு  தோணல்லை. ஒன்னு பண்னேன்,  எங்களுக்கு  அவங்க வீடு தெரியாது. அதனால நீ எங்க கூட வந்து,  காரிலேயே இரு. உள்ள வர வேண்டாம்" என்றார் ராஜு.

" சரி. நான் வெளியில,  கார்லயே காத்திருக்கேன்" என்றான் பாரி.

பாலா அவன் அருகில் வந்து,  மெதுவாக அவன் காதுகளில் கிசுகிசுத்தான்.

" உன் மனசாட்சியை தொட்டு சொல்லு,  உண்மையிலேயே உனக்கு அண்ணியை பாக்கணும்னு ஆசை இல்லையா?" என்றான்.

அவனுக்கு பதில் சொல்லாமல்,  அவனை ஒரு பார்வை பார்த்தான் பாரி. பாரியின் மனதில் இருப்பதை புரிந்து கொள்ள,  அந்த ஒரு பார்வை போதுமானதாக இருந்தது பாலாவிற்கு. பாரியின் தோளை தட்டி விட்டு,  அங்கிருந்து சிரித்தபடி சென்றான் பாலா.

*சேதுராமன் இல்லம்*

சேதுராமனும்  சீதாவும் அவர்களை வரவேற்றார்கள். பார்த்த மாத்திரத்திலேயே,  இரு தரப்பினருக்கும்,  மற்றவரை பிடித்துப் போனது.

" அடக் கடவுளே,  நான் மறந்தே போயிட்டேன். யாராவது ஒரு கிளாஸ் தண்ணீ கொண்டு போய்,  காரில் இருக்கிற பாரிக்கு கொடுங்களேன்." என்று வேண்டுமென்றே சத்தமாக கூறினான் பாலா.

" பாரியா? எங்க இருக்காரு பாரி?" என்ற கேட்டார் சேதுராமன்.

" கார்ல தான் உட்கார்ந்து இருக்கான்" என்றான் பாலா.

" என்ன கார்லையா?  எதுக்காக?  ஏன் அவர் உள்ள வரல?"

" எல்லாம் சம்பிரதாயதிற்காக தான்" என்று இழுத்தார் ராஜு.

வெளியே ஓடினார் சேதுராமன். பாரி, காரின்  சீட்டில்  சாய்ந்து,  கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்ததைக் கண்டார். ஜன்னலை யாரோ தட்டும் சத்தம் கேட்டு,  கண்ணை திறந்தான் பாரி. சேதுராமன் நிற்பதை கண்டதும்,  அவசரமாக காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான்.

" எதுக்காக கார்ல உட்கார்ந்திருக்கீங்க பாரி?"

" அது வந்து மாமா... "

" அட, வீணா போன சம்பிரதாயத்தை தூக்கி குப்பையில் போடுங்க. உள்ள வாங்க நீங்க." என்று அவன் கையை பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு வந்தார்.

பாரியின் மூச்சு அவன் நுரையீரலை விட்டு வெளியேற மறுத்தது, மெல்லிய மெஜந்தா நிற பார்டர் கொண்ட சந்தன நிற பட்டுப் புடவையில் இனியவை பார்த்தபொழுது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மெல்லிய பூவை போல் காட்சி அளித்தாள் இனியா. அவளே ஒரு பூ... பூவுக்கு,  பூ அலங்காரமா?  என்று தோன்றியது பாரிக்கு.

புன்னகை என்னும் பெயரில்,  பாரியை நோக்கி,  ஒரு அம்பை எய்து விட்டு,  அங்கிருந்து அழகாய் நகர்ந்து சென்றாள்  இனியா.

இனியாவிற்கு நலங்கு வைக்கத் தொடங்கினார்கள். சற்றே தூரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் பாரி. ஆனால்,  இனியா அவனது நேரடி பார்வையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். அவனுடைய கண்களை இனியாவின் மீது இருந்து நகர்த்தவே முடியவில்லை பாரியால். அதை விட கடினமாக இருந்தது,  அவன் இனியாவின் அழகால் எந்த பாதிப்பும் அடையவில்லை என்பது போல நடிப்பதற்கு.

வானத்து தேவதை மண்ணில் இறங்கி வந்தது போல் இருந்தாள்  இனியா. ஒரு மெல்லிய புன்னகையே போதும், அவளை அழகாக காட்ட. இன்று,  கூடுதலாக ஏகப்பட்ட விஷயங்கள்,  அவளுக்கு மெருகூட்டி  கொண்டிருந்தன.

நலங்கு வைத்து முடிந்துவிட்டது. இனியா,  அவளுடைய தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். திடீரென,  தனது கன்னத்தில் ஏதோ குளுமையாக உணர்ந்தான் பாரி. அவன் கன்னத்தில் சந்தனத்தை பூசி விட்டு,  கலகலவென சிரித்தாள் ப்ரீத்தி.

" இப்பதான் நீங்க மாப்பிள்ளை மாதிரி தெரியுறீங்க,  அண்ணா. இப்போ, எல்லாரும் சொல்லாமலே தெரிஞ்சுக்குவாங்க,  நீங்க தான் மாப்பிள்ளைன்னு. நான் சொல்றது சரிதானே இனியா?"

இன்று அவள் இனியவை பார்த்து கேட்க, அவள் காதோரத்தில் அணிந்திருந்த ரோஜாவை விட,  அவள் கன்னம் சிவந்து போனது.

ப்ரீத்தியின் தோளில் தட்டினார் சீதா.

" என்னடி விளையாட்டு இது?... நீங்க,  உங்க முகத்தை கழுவிக்கோங்க மாப்பிள்ளை" என்றாள் சீதா பாரியை பார்த்து.

" எல்லா ரூம்லயும் விருந்தாளிங்க தங்கி இருக்கீங்க ஆன்ட்டி. இனியா ரூம் மட்டும் தான் ஃப்ரீ" என்று பாரியைப் பார்த்து சிரித்தபடி கூறினாள் பிரீத்தி.

" அதனால் என்ன?  நீங்க அவ ரூம்லேயே முகத்தை கழுவிக்கோங்க." என்றார் சீதா.

இனியாவின் அறைக்குள் நுழைந்தான் பாரி.  அவன் ஏற்கனவே இங்கு ஒரு முறை வந்திருக்கிறான் என்றாலும்,  இந்த முறை,  அவனுடைய வருகை சிறப்பு வாய்ந்தது. சென்ற முறை வந்த பொழுது,  அவன் அவளுடைய நண்பன். ஆனால் இன்று,  அவன் அவளுக்கு பாதி சொந்தம். குளியலறைக்குள் சென்று இனியாவின் சோப்பை கொண்டு முகம் கழுவினான். அது அவனுக்கு ஏதோ ஒரு பெயர் கூறமுடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது. புன்னகையுடன் குளியலறையை விட்டு வெளியே வந்தான்.

அங்கு இனியா,  புன்னகையுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த புன்னகை... அவனை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் அதே புன்னகை... இப்பொழுதும் கூட எந்த வித்தியாசமும் இல்லை. அவன் எல்லாவற்றையும் மறந்தான்... அவனுடைய சொந்த இருப்பையும் கூட... அவன் மெல்ல மெல்ல இனியவை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவன் தன்னை நெருங்கி வருவதை பார்த்து, ஏதும் செய்யாமல்,  ஸ்தம்பித்து நின்றாள் இனியா. அவன் மெல்ல அவள் கண்ணங்களை தொட,  தன் கண்களை மூடினாள் இனியா.

அவன் விரல்கள் மெதுவாக அவள் கன்னத்தை வருட,  அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளி குறைந்து கொண்டே சென்றது. அவர்களுடைய மூச்சுக்காற்று ஒன்றாய் கலந்தது. இனியா என்னும் நெருப்பில் மெழுகாய் உருகிக் கொண்டிருந்தான் பாரி.

சட்டென்று தனது பெயரை  சொல்லி, தன்னை இனியா அழைப்பதை கேட்டு, திடுக்கிட்டான் பாரி. கண்ணை திறந்தவன்,  இனியா  கதவருகில் நின்று கொண்டு,  தன்னை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,  இவ்வளவு நேரம் தான் கண்டது பகல் கனவு என்பதை புரிந்து கொண்டான்.

" என்ன ஆச்சு பாரி?  உங்களுக்கு ஒன்னும் இல்லையே? ஏன்,  முகத்தை கூட துடைக்காமல் நின்னுகிட்டு இருக்கீங்க?"

என்று கேட்டபடி அவனிடம் ஒரு துவாலையை நீட்டினாள். அவள் கையிலிருந்து  அதை பெற்றுக்கொண்டு,  தனது முகத்தைப் துடைத்துக்கொண்டான். அவன் முகத்தை துடைத்தானா,  அல்லது இனியாவிடமிருந்து மறைத்தானா என்பது விளங்கவில்லை. அவனுக்குள்  என்னதான் நடக்கிறது? அவள் அறையை விட்டு அவசரமாக வெளியேறினான். அவன் ஏதேனும் பைத்தியக்காரத்தனமாக செய்து தொலைத்து விட்டால் என்ன செய்வது? அந்த அளவிற்கு அவன் மயங்கி கிடந்தான்.

அதன் பிறகு இனியாவின் பக்கம் திரும்பாமல் இருக்க,  தன்னால் ஆனமட்டும் அனைத்து முயற்சிகளையும் செய்தான். ஒரு விதத்தில் அவன் வெற்றி பெற்றான் என்று தான் கூற வேண்டும்... ஆனாலும் முழுமையாக அல்ல... அவனை நினைத்தால் அவனுக்கே பயமாக இருந்தது. அவன் இந்த அளவிற்கா பலவீனம் அடைந்து இருக்கிறான்? எப்படித்தான் வரும் நாட்களில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கப்போகிறானோ... நல்ல வேளை இந்த ஒரு நிகழ்வு,  அவனுக்குள் இருந்த மறைபொருளை வெளியே கொண்டு வந்து,  அவனுக்கு அடிக் கோடிட்டு காட்டி விட்டது. இதன் பிறகு அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனியா தன்னை,  இந்த உறவில்  பொருத்திக் கொள்ளும் வரையிலாவது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top