Part12
பாகம் 12
ப்ளூ மூன் பப்
ஒரு முழு பாட்டிலையும், *பாட்டம் சிப்* அடித்து முடிக்க, முயற்சி செய்து கொண்டிருந்த சுபாஷை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா. யாராலும் விவரிக்க முடியாத அளவிற்கு, மிகவும் கோபமாக காணப்பட்டான் சுபாஷ்.
" போதும் நிறுத்து, சுபாஷ். நீ ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்க". என்று அவனை தடுக்க முயற்சித்தான் சத்யா.
" என்னை வேற என்ன செய்ய சொல்ற? என்னோட வாழ்க்கையே ஓவராக போகுது. என்னுடைய காதல்... என்னுடைய வாழ்க்கை... எல்லாமே முடிய போகுது. என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு, என் முகத்துக்கு நேரா இனியா சொல்லிட்டா.
அவன் மறுபடியும் குடிக்கத் தொடங்க, அவன் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கினான் சத்யா.
" இப்படி நீ கண்ணு மண்ணு தெரியாம குடிக்கிறதுனால எதுவும் மாறப்போறதில்லை, உன்னுடைய உடம்பு தான் கெட்டுப் போகும். இந்த முட்டாள்தனத்தை நிறுத்து."
" இது எல்லாத்துக்கும் அந்த பாரி தான் காரணம். அவன் தான் இனியாவுடைய மனசை மாத்திட்டான். அவனை நான் சும்மா விடமாட்டேன். என்னுடைய இனியவை என்கிட்ட இருந்து பறிச்சிட்டான். "
" அமைதியாய் இரு, சுபாஷ்."
" முடியாது... நீ எனக்காக எதுவும் செய்ய போறதில்லையா? இனியாவுக்கு புரியவைக்க போறதில்லையா?"
" நீ நிதானத்துல இல்ல. நம்ம இத பத்தி அப்புறம் பேசலாம். முதல்ல வா வீட்டுக்கு போகலாம்".
" இனியவை எனக்கு கல்யாணம் பண்ண வைக்கிறேன்னு நீ சொல்ற வரைக்கும் நான் இங்க இருந்து வர மாட்டேன்".
" சுபாஷ் சொல்றதை புரிஞ்சுக்கோ. இந்த விஷயம் என் கையை விட்டு போயிருச்சு"
" தயவு செய்து அப்படி சொல்லாத. உனக்கு தெரியும்ல நான் அவளை எவ்வளவு காதலிக்கிறேன்னு"
" அதை, அன்னிக்கு, கல்யாண மண்டபத்தில், இக்கட்டான சூழ்நிலையில் நீ நிறுபிச்சிருக்கணும். அப்ப விட்டுட்டு, இப்ப வந்து புலம்புறதுல எந்த பிரயோஜனமும் இல்லை".
" நான் ஒத்துக்குறேன். நான் தப்பு செஞ்சுட்டேன். ஆனா, அதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காத"
அமைதியாக நின்றான் சத்யா. அவன் எப்படி சுபாஷுக்கு புரிய வைப்பான், அவனுடைய சொந்த குடும்பமே இப்பொழுது அவனை எள்ளளவும் நம்பும் நிலையில் இல்லை என்பதை? அவர்களிடம் சுபாஷை பற்றி பேச கூட அவனுக்கு தைரியம் இல்லை. சுபாஷின் அம்மா அனைத்தையும் சுக்குநூறாக உடைத்து தள்ளிவிட்டார். ராதிகா எந்த அளவிற்கு அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க கூடியவர் என்பது சத்யா அறிந்திருந்தது தான். ஆனால், அந்தப் பெண்மணி, தனது தங்கையை இந்த அளவிற்கு மக்களின் முன்னிலையில் அவமானப்படுத்த துணிவாள் என்பதை அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
அவனாலேயே அந்த அவமானத்தை மறக்க முடியாமல் இருக்கும் பொழுது, அவனுடைய பெற்றோரும், அதை நேரடியாக எதிர் கொண்ட அவனது தங்கையும், அதை மறந்துவிட வேண்டும் என்று அவன் எதிர் பார்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. இவ்வளவு தூரம் நடந்த பிறகு, ராதிகா, இனியாவை நல்லபடியாக வாழ விடுவாள் என்பதிலும் அவனுக்கு துளியும் நம்பிக்கை இல்லை.
*பாரி இல்லம்*
அந்த நாள், பாரின் வாழ்வில் ஒரு பொன்னான நாள். அவனுடைய வாழ்வில் ஏற்பட்டிருந்த மாற்றம், அவனுடைய தினசரி வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆம், அனைத்தும் தலைகீழாக நடந்து கொண்டிருந்தது. அவனுக்கு முன்பு போலவே இப்போதும் பசிக்கவில்லை தான் , ஆனால் முன்பு இருந்தது போல் வருத்தத்தினால் அல்ல, சந்தோஷத்தினால். முன்பு போலவே இப்போதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை, ஆனால், அது மன உளைச்சலினால் அல்ல, திறந்த விழிகளுடன், இனியாவை பற்றி கனவு கண்டு கொண்டிருந்ததனால்.
ஒருவழியாக, விடியற்காலையில் தூங்கிப் போனான். மிகவும் தாமதமாகத் தூங்கியதால், விடிந்த பிறகும், தூக்கம் கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டு, தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தான். அவன் கடிகாரத்தை பார்த்த போதுதான் தெரிந்தது, அவன் வெகு நேரம் தூங்கி விட்டான் என்பது... மணி பத்தாக ஐந்து நிமிடங்களே இருந்தது. கட்டிலை விட்டு கீழே இறங்கி, தூக்கக் கலக்கத்துடன், சென்று கதவை திறந்தான். அவன் கண்ணில் இருந்த தூக்கம், ஒரு நொடிப்பொழுதில் பறந்து சென்றது.
வெகுநாட்களாக தொலைந்து போயிருந்த, இதமான புன்னகையை தன் முகத்தில் தேக்கிக் கொண்டு, சேதுராமன் நின்றிருந்தார். என்ன செய்வது என்பது புரியாமல், தனது கரங்களால் முகத்தை தேய்த்தான் பாரி.
சற்று நகர்ந்து சேதுராமனுக்கு உள்ளே நுழைய வழி விட்டபடி,
" உள்ள வாங்க சார்" என்று அவரை அழைத்தான்.
" உக்காருங்க சார், இதோ வந்துடறேன்" என்று கூறிவிட்டு, குளியல் அறையை நோக்கி ஓடினான்.
ஐந்தே நிமிடங்களை எடுத்துக் கொண்டு, முகத்தை கழுவி, தலை சீவிகொண்டு, சேதுராமனின் முன்னால் வந்து அமர்ந்தான், சேதுராமன் பேசத் துவங்குவார் என்று எதிர்பார்த்து. அவன் முகத்தில் தெரிந்த பதட்டத்தை, மெல்லிய சிரிப்புடன், அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தார் சேதுராமன். இறுதியாக, அவர்களுக்குள் இருந்த அமைதியை உடைத்து,
" உங்களை கல்யாணம் பண்ணிக்க இனியா சம்மதிச்சுட்டா" என்றார்.
தனது வாழ்நாளின் மிக முக்கியமான செய்தியை கேட்டு, திக்குமுக்காடிப் போனான் பாரி. அதுவரை சேதுராமனையே பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய பார்வையை, வேறு பக்கமாக தட்டுத்தடுமாறி திருப்பிய அவனுடைய முகபாவனையை பார்த்து, மெய் மறந்து போனார் சேதுராமன். இந்த திருமணத்தில் அவன் எந்த அளவிற்கு விருப்பம் கொண்டிருக்கிறான் என்பதை அவனுடைய முகமாற்றம் விளக்கியது.
" சாயங்காலம் வீட்டுக்கு வாங்க. மேற்கொண்டு இதைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம். இந்த முறை எல்லாமே இனியாவோட முன்னிலையில் நடக்கணும்னு நான் நினைக்கிறேன், அவளோட விருப்பத்தோடும், திருப்தியோடும். நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். "
*புரிந்தது* என்று தலையசைத்தான் பாரி.
" ஆனா, உங்கள வீட்டுக்கு வர சொல்றதுக்காக மட்டும் நான் இங்க வரலை. மேற்கொண்டு இந்த கல்யாணத்த பத்தி பேசறதுக்கு முன்னாடி, நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுக்கணும்"
என்ன சத்தியம் என்று பாரி கேட்கவில்லை என்றாலும் அவனுடைய கண்கள் அல்லாடின. சேதுராமன் தொடர்ந்தார்.
" நீங்க, சொன்ன வார்த்தையை மீறமாட்டீங்கனு கேள்வி பட்டேன். அதே மாதிரி, இப்ப நீங்க எனக்கு செய்து கொடுக்கும் சத்தியத்தையும் மீற மாட்டிங்கனு நம்புகிறேன். எக்காரணத்தைக் கொண்டும், முறிஞ்சு போன அவளோட கல்யாணத்த பத்தி நீங்க குத்தி காட்டி பேச கூடாது. நீங்க அவள சந்தோஷமா பாத்துக்குவேன்னு எனக்கு வாக்கு கொடுக்கணும். ஏன்னா, தெரிஞ்சோ தெரியாமலோ, செய்யாத தப்புக்காக, என் பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. இதுக்கு மேல, எந்த விதத்திலும் அவ கஷ்டப்படக கூடாதுன்னு நான் நினைக்கிறேன். "
தனது கையை பாரியை நோக்கி நீட்டினார் சேதுராமன். எந்தவித யோசனையும் இன்றி, அவருடைய கையை இறுக பற்றினான் பாரி. அவனுடைய அந்த இறுக்கமான பிடி கூறியது, அவன் தனது சத்தியத்தில் எந்தளவு உறுதியாக இருக்கிறான் என்பதை.
" சரியா ஆறு மணிக்கு, நான் உங்க வீட்ல இருப்பேன் சார்". என்றான்.
" சார்ன்னு கூப்பிட்டதெல்லாம் போதும். நீங்க என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை. மாமான்னு கூப்பிடுங்க." என்றார் சிரித்தபடி.
அந்த வாக்கியம் பாரியின் முகத்தில், மெல்லிய வெட்க ரேகையை படர விட்டது. தன் புருவத்தை உயர்த்தி, உதட்டை கடித்து, அதை மறைக்க படாதபாடுபட்டான் பாரி.
" நாங்க உங்களுக்காக காத்திருப்போம்." என்று அவன் தோளை தட்டியபடி புன்னகைத்தார் சேதுராமன்.
பாரியை, ஆனந்த மழையில் நனையவிட்டு, அங்கிருந்து விடைபெற்று சென்றார் சேதுராமன்.
மாலை
*சேதுராமன் இல்லம்*
சேதுராமனும், சீதாவும், பாரியை முழுமனதுடன் வரவேற்றார்கள். சத்யாவும் வீட்டில்தான் இருந்தான். தனக்குக் கொடுக்கப்பட்ட காபியை பருகினான் பாரி. அவனுடைய கண்கள், சதா இங்குமங்கும் அலைந்து கொண்டே இருந்தன. அவைகள், ஒருவளுடைய வரவை, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. அனைத்து பேச்சுவார்த்தையும் இனியாவின் முன்புதான் நடைபெறும் என்று சேதுராமன் கூறியிருந்தாரல்லவா? எங்கே அவள்? சேதுராமன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.
" நாங்க உங்களுக்கு எதையும் புதுசா சொல்ல வேண்டியதில்லை. நடந்தது எல்லாம் உங்களுக்கே நல்லா தெரியும்."
இனியா இல்லாமலேயே, பேச்சுவார்த்தை தொடங்கியதை நினைத்து வருத்தமடைந்தான் பாரி. ஒருவேளை, அவள் தனது அறையில் இருந்தபடியே அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாளா? அப்படி என்றால், அவள் வெளியில் வர போவதில்லையா?
" நாங்க இந்த கல்யாணத்த ரொம்ப விமரிசையாக நடத்த முடியாத நிலைமையில் இருக்கோம். ஏன்னா, நாங்க முறிஞ்சு போன கல்யாணத்தை பத்தி கவலைப்படாம, சந்தோஷமா இருக்குறதா எல்லோரும் நினைப்பாங்க.... "
இனியாவின் குரலைக் கேட்டு, பாதியிலேயே பேச்சை நிறுத்தினார் சேதுராமன்.
" அதனால என்னப்பா?"
என்று கூறிக்கொண்டு தனது அறையை விட்டு வெளியே வந்த இனியவை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள். அவள் ஒருவழியாக வெளியே வந்து விட்டதை நினைத்து சந்தோஷப்பட்டான் பாரி.
"உன்னுடைய கல்யாணம் நின்னு போயிடுச்சி இல்லையாமா..."
" அதனாலதான், இந்த கல்யாணம் நல்லா நடக்கணும்னு நான் நினைக்கிறேன். இந்த கல்யாணத்தை, நம்ம எளிமையாக நடத்தினாலும், மக்கள் அதையும் வேற மாதிரி தான் பேசுவாங்க... நீங்க அவசர அவசரமா என்னை இந்த வீட்டை விட்டு அனுப்புறதா அதையும் தவறா தான் பேசுவாங்க. நம்ம எதுக்காக அவங்கள பத்தியெல்லாம் கவலைப் படனும்? சுபாஷோட அம்மா என்னை அவமானப்படுத்தும் போது யாராவது உங்க உதவிக்கு வந்தங்களா? எல்லாரும் வேடிக்கைதானே பாத்தாங்க? மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு, நம்ம நெனச்சதெல்லாம் போதும்பா. எல்லாத்துக்கும் மேல, பாரிக்கும் அவருடைய கல்யாணத்தைப் பற்றி சில கனவுகள் இருக்கும் இல்லையா? நம்மளுடைய நிலைமைக்காக, அவர் ஏன் அதை எல்லாம் விட்டுக் கொடுக்கணும்?"
என்ற அவளை, இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள் சேதுராமனும் சீதாவும். இது உண்மையிலேயே அவர்களுடைய இனியா தானா? அவள் இப்படியெல்லாம் தெள்ளத்தெளிவாக பேசி, அவர்கள் பார்த்ததே இல்லை. அவளுக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள், அவளுக்கு இப்படிப்பட்ட பேசக்கூடிய திறமையை வளர்த்துக் விட்டிருக்கலாம். அனைவரை விடவும் மிகவும் அதிர்ச்சி அடைந்தது சத்யா தான். அவன் தன்னுடைய தங்கையின் அறியாத பக்கத்தை கண்டான். அவள் உள்ளிருந்து எழுந்த வார்த்தைகள், அவள் எந்த அளவிற்கு காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவனுக்கு விளக்கியது.
பாரியோ யாரைப்பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவன் இனியா, மக்களைப்பற்றி கொடுத்த விரிவுரையில் ஆழ்ந்திருந்தான். இதைத்தான் அவள் அன்று , சுபாஷிடம் செய்திருக்கவேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். அன்றே அவள் அதைச் செய்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சனைகளும், ஒருவேளை தவிர்க்கப் பட்டிருக்கலாம். ஆனால், அவளுக்கு இவ்வளவு தைரியம் திடீரென்று எங்கிருந்து வந்தது? அவன் ஆச்சரியப்பட்டான். அவன் அறிந்திருக்க நியாயமில்லை, அவள் அந்த தைரியத்தை அவனிடமிருந்து தான் பெற்றிருக்கிறாள் என்பதை. அவன் உடன் இருக்கிறான் என்ற தைரியம்தான், அவள் தன்னைஒளித்து வைத்திருந்த ஓட்டுக்குள் இருந்து வெளியே வர வைத்திருக்கிறது. ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைத்து விட்டது என்பதை விட, மிகப்பெரிய மனோதைரியம் ஒரு பெண்ணுக்கு என்ன இருந்து விட முடியும்?
திருமணம் என்பது, உலகின் மிகவும் வலிமை வாய்ந்த சொல், அது உள்ளங்களை இணைக்கிறது... இனிமையான வாழ்க்கையை வழங்குகிறது... மனதை உறுதியாக்குகிறது. பற்றிய கரத்தை விடாமல் இருக்கும் ஒரு வாழ்க்கைத் துணை அமைந்து விட்டால், திருமணம் எனும் பந்தம், வாழும் போதே சொர்கத்தை காட்டிவிடுகிறது. அது அதீத மனோதைரியத்தையும் வழங்குகிறது. அப்படி ஒரு மனோ தைரியத்தை இனியா பாரிடமிருந்து பெற்றாள் என்றால், அதில் அதிசயம் ஏதுமில்லை. ஏனென்றால் பாரியைப் பற்றி அவள் நன்கு அறிந்தவள் தானே...
" இனியா சொல்றது சரிதான். இந்த கல்யாணத்துக்கான அத்தனை பொறுப்பையும் நான் எத்துக்கிறேன். நீங்க ஏற்கனவே நிறைய செலவு பண்ணிட்டீங்க..."
" இல்லங்க பாரி, பணம் ஒரு பிரச்சினையே இல்லை. இனியாவுக்கு அது சங்கடத்தைக் கொடுக்கும்ன்னு நெனச்சேன். அவளுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லன்னா, இந்த கல்யாணத்தை சிறப்பாகவும் சந்தோஷமாகவும் நான் செய்வேன்." என்றார் சேதுராமன்.
பாரியின் பார்வை, இனியாவின் பக்கம் திரும்பியது. அவளோ அவனை திரும்பிப் பார்க்கவே இல்லை. அவளுடைய மனோநிலை, அவனுக்கு புரிந்துதான் இருந்தது. அவள் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள் என்பதற்காக, அவள் சகஜமாக இருக்கிறாள் என்று அர்த்தம் அல்ல. அவளுக்கு கால அவகாசம் அவசியம். அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து வெளிவர, அவளுக்கு சில காலம் பிடிக்கலாம். அதுவரை காத்திருக்க அவனும் தயாராக தான் இருக்கிறான்.
இதில் அவர்கள் இருவரும் கடக்க வேண்டிய மிக கடினமான விஷயம் ஒன்று உள்ளது. அவர்களது *நட்பு*. ஒரே நாளில் அது மாறிவிடாது. இனியாவை போல், அந்த வலையில், பாரி முழுவதுமாக சிக்கிக் கொள்ளவில்லை என்றாலும், அதை அவளிடம் நேரடியாக அவனால் கூறி விட முடியுமா? முடியும் என்றாலும், அது அவ்வளவு சீக்கிரம் நடந்து விடுமா? இவை அனைத்திற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
" நான் ஐயர் கிட்ட கலந்துபேசி, கல்யாணத்துக்கான நாளை குறிச்சிட்டு உங்களுக்கு சொல்றேன்." என்று கூறினார் சேதுராமன்.
சரி என்று தலையசைத்தான் பாரி. அவனுடைய சந்தோஷத்திற்கு அளவுகோளே இல்லை. அவனுடைய திருமணம், இனியாவுடன் நடைபெறவிருக்கிறது, என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.
இனியா அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை என்பதுதான் அவனுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. அவன் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் என்பதை, அவள் பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால் அவள் அமைதியாக உள்ளே சென்று விட்டாள். என்ன கொடுமை இது?
யாரையாவது நன்றாக *வைத்து செய்ய வேண்டும்* என்று நினைத்தால், அவர்களிடம் காதலிக்கிறேன் என்று கூறிவிட்டு, பேசுவதை நிறுத்தி விட்டால் போதுமானது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top