பாகம் 5
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தனது வீட்டின் தோட்டத்தில், அவனுக்கு பிடித்தமான, தோட்ட வேலையை செய்துக்கொண்டிருந்தான் பாரி. அப்பொழுது, அவனுக்கு மிகவும் பரிச்சயமான குரல்கள், அவன் வீட்டின் வெளியில் இருந்து கேட்டது. அந்த குரலுக்கு சொந்தக்காரன் ஒருவன் ராஜா . மற்றொரு குரல், இனியாவுடையது. அவனுக்கு ஏதோ தவறாக பட்டது. காலம் தாழ்த்தாமல், வெளியே ஓடி சென்றான்.
இனியாவின் இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்தது. ராஜா , இனியாவை வழிமறித்து நின்றிருந்தான். இனியா, பதட்டத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன், பாரி அவளை நோக்கி வருவதை பார்த்து பிரமித்து நின்றாள். அவன் ஒரு சாம்பல் நிற கையற்ற பனியனையும், முக்கால் கால்சட்டையும் அணிந்து இருந்தான். அவன் உடல் வியற்வையால் நனைந்திருந்தது. அவனுடைய தலை முடி, வழக்கத்திற்கு மாறாக, சீவப்படாமல் இருந்தது.
அவனை பார்க்கும் போதே தெரிந்தது, அவன் ஏதோ ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது.
இனியாவிற்கும், ராஜாவுக்கும் இடையில் பாரி வந்து நின்றதும், அவனை பார்த்து முகம் சுருக்கினான் ராஜா.
" என் வீட்டுக்குள்ள, போங்க இனியா" என்று ராஜாவின் முகத்தில் இருந்து பார்வையை அகற்றாமல் கூறினான் பாரி.
" பாரி, இது உனக்கு சம்பந்தமில்லாத விஷயம்" என்று எச்சரித்தான் ராஜா.
" இது 100% எனக்கு சம்மந்தம் இருக்கிற விஷயம் தான்"
" உனக்கு தெரியாது, அவளோட அண்ணன் என்ன செஞ்சான்னு"
" அப்படின்னா, நீ அவ அண்ணன் கிட்ட தான் இதை டீல் பண்ணனும்"
" பாரி, இதுவரைக்கும், நம்ம ஒருத்தரோட பாதையில் இன்னொருத்தர் கிராஸ் பண்ணது இல்ல. இதுக்கு அப்புறமும் அதே மாதிரி இருந்துட்டா, நமக்குள்ள எந்த பிரச்சினையும் வராது"
" இதுவரைக்கும், நான் உன் பாதையில் குறுக்கிடாமல் இருந்ததற்கு காரணம், இதுவரைக்கும் நீயும், நான் சம்பந்தப்பட்ட எதையும் தொடாமல் இருந்ததுதான்"
பாரியின் வார்த்தைகளைக் கேட்டு ராஜா அசந்தே போனான். அவனுடைய பேச்சில், *தனக்கு* என்ற எண்ணம் வெளிப்படையாக தெரிந்தது. பாரியும் ராஜாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒருவருடன் ஒருவர் அதிகமாக பேசிக் கொண்டது கிடையாது. ஆனாலும், அவர்கள் மற்றொருவரை பற்றி தெரிந்து தான் வைத்திருந்தார்கள், பாரி பெரும்பாலும், யாருடைய விஷயத்திலும் தலையிடவே மாட்டான். இன்று, அவன் நடந்து கொண்ட விதம், மிகவும் புத்தம் புதிதாக இருந்தது.
" என் தங்கச்சி, வீட்டை விட்டு ஓடிப்போக, அவன் உதவி செஞ்சிருக்கான், அத நான் மறக்க மாட்டேன்" என்றான் ராஜா .
" உன் தங்கச்சி அவன்கிட்ட ஹெல்ப் கேட்டதனால், அவன் செய்திருப்பான். அப்படியே இருந்தா கூட, அதை பத்தி பேச வேண்டியது சத்யா கிட்ட தான். அதை நீ இனியாகிட்ட செய்யணும்னு நினைச்சா, அதுக்கு பாரிய தாண்டிதான் போகனும் அப்படிங்கறத மறந்துடாத."
தனது பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான் ராஜா. ஆனால், அதை செய்வதற்கு முன்னால், அவன் பார்வை இனியாவின் மீது நெருப்பைக் கக்க தவறவில்லை.
தன்னுடன் வருமாறு, இனியாவிற்கு சைகை செய்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான் பாரி.
" நல்லகாலம் நீங்க வந்திங்க. இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு தெரியல... "
அவள் குரலில் இருந்த நடுக்கத்தை பாரி நன்றாகவே உணர்ந்தான். பாரி எதுவும் கூறுவதற்கு முன், இனியாவின் முகம் மாற்றமடைந்தது. அவள் பேசுவதை நிறுத்திவிட்டு, பாரியின் வீட்டின் அழகில் மனதைப் பறிகொடுத்தாள்.
அவன் வீடு பார்ப்பதற்கு ஒரு சிறிய கோட்டை போல், யாரும் எளிதில் ஏறி குதிக்க முடியாத அளவிற்கு, உயர்ந்த மதில் சுவரை கொண்டிருந்தது. அந்த சுவர் அவனுடைய வீட்டின் தோட்டத்தையும், வண்ண மலர்களையும் பாதுகாப்பதற்கு என்றே கட்டியது போல் தோன்றியது. அந்த மலர்களின் நறுமணம் அவள் மனதை அள்ளியது. அவன் வீட்டின் முகப்பில், வண்ண வண்ண மலர் கொடிகள் படர்ந்து, முகப்பையே மறைத்து, வண்ண மலர்களால் அலங்காரபடுத்தப்பட்டு இருந்தது. அவன் வீட்டை சுற்றிலும், துளிகூட மண் தெரியாத வண்ணம் புல்தரை சூழ்ந்திருந்தது.
" பாரி இது உங்க வீடா? "
ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.
ராஜா செய்த கலவரத்தில், தான் எங்கு இருக்கிறோம் என்பதையே உணராமல் இருந்தாள் இனியா.
" இந்த வீட்டுக்குள்ள ஒரு நாளாவது வந்துட மாட்டமான்னு நான் எவ்வளவு ஆசை பட்டிருக்கேன் தெரியுமா? எனக்கு இந்த பூக்களோட வாசனை ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு தடவை உங்க வீட்டை கடந்து போகும் போதும், இரண்டு நிமிஷம் நின்னு அந்த வாசனையை ஸ்வாசிச்சிட்டு தான், நான் இங்கிருந்து போவேன். ஆனா, நான் இந்த வீட்டுக்குள்ள வருவேன்னு, ஒரு நாள் கூட நெனைச்சதே கிடையாது. உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு."
தனது செருப்பைக் கழட்டிவிட்டு, புல்தரையில் இங்கும் அங்கும் ஓடினாள், இனியா. அங்கு ஒரு மிகப் பெரிய மாமரம் இருந்தது.
" வாவ்... எவ்வளவு பெரிய மரம்... இந்த மரத்துக்கு என்ன வயசு?"
" இருபத்தி எட்டு"
" அப்படின்னா, இதுக்கு உங்க வயசா?"
" ஆமாம், நான் பிறந்தப்ப எங்க அப்பா இந்த மரத்தை வச்சாராம்"
" கேட்கவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. ஆனா, எனக்கு இந்த மாதிரி எந்த கதையும் இல்லை"
என்று அவள் உதட்டை பிதுக்கி, வருத்தத்துடன் கூற, களுக்கென்று சிரித்தான் பாரி.
" இந்த செடி, கொடி, மரம், இதையெல்லாம் காப்பாத்த தான், இவ்வளவு பெரிய காம்பவுண்ட் போட்டு இருக்கீங்களா?"
ஆமாம் என்று தலையசைத்தவன்,
" எனக்கு அமைதியா இருக்குறதும் ரொம்ப பிடிக்கும்" என்றான்.
" நிச்சயமா, அது என்கிட்ட இருந்து உங்களுக்கு கிடைக்காது" என்று சிரித்தாள் இனியா.
" அமைதியாய் இருக்கிறது, உங்களுக்கு பொருந்தவும் பொருந்தாது" என்றான் சிரித்தபடி.
" உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு. உங்களுக்கு வரப்போற வைஃப் ரொம்ப கொடுத்து வச்சவங்க"
என்று கூறி விட்டு சற்றே நிறுத்தி
" ஆனா, உங்களுக்கு ஒய்ஃப்பா ஆக போறதால, அவங்க அதிர்ஷ்டசாலி தான்னு என்னால சொல்ல முடியாது" என்று அவன் காலை வாரிவிட்டு, கலகலவென சிரித்தாள்.
" உள்ள போலாமா? " என்றான் அவள் கேளியைப் பொருட்படுத்தாமல்.
" இவ்வளவு பெரிய மாமரத்துல, ஒரு ஊஞ்சல் இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றாள் ஆவலுடன்.
தன் தலையைத் திருப்பி, அந்த மாமரத்தை நோட்டமிட்டுக் கொண்டே உள்ளே சென்றான் பாரி. அவனுடைய வீட்டை கண்டு வாயடைத்து நின்றாள் இனியா. சிறிதும் இல்லாமல், பெரிதும் அல்லாமல், நடுத்தர அளவுடன் மிக அற்புதமான கலைநயத்துடன், பராமரிக்கப்பட்டிருந்தது அவனுடைய வீடு. மரங்களால் சூழப்பட்டிருந்த அவனுடைய வீடு, காற்றோட்டமாகவும் ஜில்லென்று இருந்தது.
" உங்கள் வீடு ரொம்ப பிரமாதமா இருக்கு. யாரு இதை மெய்ன்டேன் பண்றது?"
" நான்தான்"
" யார் கூட சேர்ந்து செய்வீங்க?"
" நான் மட்டும் தனியா தான் செய்வேன்"
" உங்க ஃபேமிலில, வேற யாரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?"
" எங்க பேமிலில என்னை தவிர வேற யாருமே இல்லை"
" என்ன சொல்றீங்க நீங்க?"
பாரி, அவள் நின்றிருந்த பக்கத்து அறையின் உள்ளே பார்க்க சொன்னான். அவள் உள்ளே எட்டிப்பார்க்க, அவனுடைய பெற்றோரின் புகைப்படம், மாலையுடன் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது.
" என்னுடைய அம்மா அப்பா. ஒரு ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டாங்க. எனக்கு வேற யாரும் இல்லை" என்றான்.
அதைக் கேட்டவுடன், இனியாவின் கண்கள் கலங்கின. யாருமே இல்லாமல், தனியாக வாழ்வது என்பது எவ்வளவு கொடுமையானது. தன்னுடைய வேதனையை, பாரி தனது முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், இனியா அவனுடைய கரத்தைப் பற்றி,
" ஐ அம் ரியலி சாரி. எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. அதனாலதான், உங்க கிட்ட சகஜமா கேட்டுட்டேன்" என்றாள்.
எதுவும் கூறாமல் அவள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். இனியாவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை, அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று. அவள் தன்னை அறியாமல், பாரின் மனதில் துளிர் விட்டிருந்த செடிக்கு, நீர் விட்டுக் கொண்டிருக்கிறாள்.
அவள் பற்றியிருந்த, தன் கரத்தை, அவள் விட்டுவிடக் கூடாது என்று நினைத்தான் பாரி. அது அவன் மனதுக்கு, நிம்மதியையும், ஆறுதலையும் தந்தது. தன் வாழ்க்கை முழுவதும் அது தனக்கு வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது. அவனுடைய கரத்தைப் பற்றி இருந்த அவள் கரம், லேசாக தளர்ந்த போது, மீண்டும் அவள் கரத்தை இறுகப் பற்றினான் பாரி. அவனை குழப்பத்துடனும், கேள்விக்குறியுடனும் இனியா பார்த்த பார்வை, அவன் மனதில் அலாரத்தை அடித்தது. அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவள் கரத்தை விட்டான்.
" நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்" என்று கூறிவிட்டு, சமையலறையை நோக்கி சென்ற பாரியை தொடர்ந்து சென்றாள் இனியா.
" நீங்க இருங்க, உங்களுக்கு நான் காபி போட்டு தரேன்" என்றாள்.
" பரவாயில்லை, இப்பதான் நீங்க முதல் தடவை வந்து இருக்கீங்க. *நீங்க இங்க வரும்போது* போட்டுக்கலாம்" என்றான்.
அவன் *அடுத்த முறை* நீங்கள் வரும்போது என்று கூறவில்லை.
சமையலறை மேடையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, அவன் காபி போடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. அந்த ஒவ்வொரு நொடியையும், உள்ளுக்குள் ரசித்து கொண்டிருந்தான் பாரி. இந்த அனுபவம் மிகவும் அலாதியானது. அவன் காபி போடும் போது, அவள், அவன் பக்கத்தில், அவனுடைய சமையல் அறையில் அமர்ந்து, அவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்... இதுவே நிரந்தரமானால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பொழுது அவன், இனியா சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டான்.
" நீங்க கொஞ்சம் கூட லாயக்கு இல்லாதவர்"
" எதுக்கு?" என்றான் பதட்டமாக.
" நீங்க ஒரு பேச்சுலர்ன்னு சொல்லுறதுக்கு. உங்க வீட்ட பாருங்க, ஒரு அழுக்குத் துணி இல்ல, ஒரு குப்பை கூளம் இல்ல. என்ன பேச்சுலர் நீங்க? பேச்சிலருக்கான இலக்கணத்தையே நீங்க கெடுத்துட்டீங்க."
அதைக்கேட்டு, களுக்கென்று சிரித்தான் பாரி.
" அப்படியா? அப்படின்னா, நீங்க உங்களையும் பாருங்களேன். நீங்க ஒரு டீச்சர்னு யாராவது நம்புவாங்களா? சின்னப்பிள்ளை மாதிரி நடந்துக்குரீங்க"
" என்ன செய்றது? இது தான் நான். உங்களுக்கு தெரியுமா, டீச்சர் மாதிரி நடந்துக்குறது எவ்வளவு கஷ்டம்னு... கடவுளே... "
" ஆனா உங்களுக்கு டீச்சிங் ரொம்ப பிடிக்கும் இல்ல?"
" ரொம்ம்ம்ப... பசங்க கூட இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன பசங்க கூட பழகும்போது, நானும் சின்ன பிள்ளையாக மாறிடுவேன்"
" பசங்க கூட இருக்கும் போது மட்டும் தானா?" என்று சிரித்தான்.
அதை கேட்டு அவளும் சிரித்தாள்.
" அதோட மட்டும் இல்லாம, ஒவ்வொரு தடவையும், நான் பாடம் நடத்தி முடிக்கும் போது, இந்த சமுதாயத்திற்கு ஏதோ செய்த மாதிரி ஒரு திருப்தி"
அவளை நோக்கி காபி கோப்பையை நீட்டினான் பாரி. அதை ஒரு வாய் குடித்தவள்,
" உண்மையா சொல்லனும்னா, உங்களுக்கு வரப் போற ஒய்ஃப்பை பார்த்து, நான் ரொம்ப பொறாமை படுறேன். உங்களோட காஃபி செம சூப்பர்" என்று கண்களை மூடி அதை ரசித்துக் குடித்தாள்.
அப்படினா என்னை நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கூறிவிடலாம் என்று எண்ணினான் பாரி. அப்பொழுது, இனியாவின் போன் ஒலித்தது. அதைப்பார்த்து, இனியாவின் முகம் மாறியது. அந்த அழைப்பு, அவளுடைய அண்ணன், சத்யாவிடம் இருந்து வந்திருந்தது. அவள் பேசுவதை கவனமாகவும், அமைதியாகவும் கேட்டான்
பாரி.
" சொல்லுங்க அண்ணா..... ஆமாம்..... இல்ல, இல்ல, எதுவும் சீரியஸா நடக்கல.... அவரு என்னோட பிரண்ட்....
*நூல்* புக் மார்ட்டோட ஓனர்.... நான் அவரோட கடையில்தான் புக்ஸ் வாங்குவேன்..... நான் அவரோட வீட்லதான் இருக்கேன்.... வேண்டாம்ண்ணா..
நானே வந்து விடுவேன்..
சரிரிரி..... "
எரிச்சலுடன் அழைப்பைத் துண்டித்தாள். அவள் கூறாமலேயே, சத்யா அவளிடம் என்ன கேட்டான் என்பதைப் புரிந்து கொண்டான் பாரி. சத்யா பாரியை பற்றித்தான் விசாரித்திருக்கிறான்.பாரிக்கு தெரியும், சத்யாவின் நட்பு வட்டாரம் மிகவும் பெரியது என்று. ஆனால், அவன் இவ்வளவு சீக்கிரம், ராஜா ஏற்படுத்திய பிரச்சனையை தெரிந்து கொண்டு விடுவான் என்றும், இனியா அவன் வீட்டிலிருப்பதை தெரிந்து கொண்டுவிடுவான் என்பதையும் பாரி எதிர்பார்த்திருக்கவில்லை.
" ஏதாவது பிரச்சனையா?"
" என்னோட அண்ணன் கிட்ட இருந்து கால். அவனால தான் நான் தினம் தினம் வேண்டாத பிரச்சினைகள் எல்லாம் ஃபேஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். இது முதல் தடவை இல்ல அவனுக்கு ஏகப்பட்ட பிரண்ட்ஸ். அதிலும் ஃப்ரெண்ட்ஸுக்கு எதனா ஒன்னுனா, இவன்தான் முன்னாடி போய் நிற்கிறான். நான் அதை தப்பு சொல்லல. ஆனா, அவன் செய்றது எல்லாமே சரியும் கிடையாது. அவனுடைய செயல்கள் எல்லாம் என்னை தான் பாதிக்குது. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை இருக்கிறதால, அடுத்த தெருவுல இருக்குற, என் பிரண்ட பார்க்கலாம்னு ஆசையா கிளம்பி வந்தேன். இப்போ, இந்த பிரச்சனையால, அவன் என்னை இங்கிருந்து கூட்டிட்டு போக வரேன்னு சொல்லிட்டான். எங்கேயும் நிம்மதியா என்னால போக கூட முடியல." அலுப்புடன் கூறி முடித்தாள் இனியா.
" நீங்க ஜாக்கிரதையா இருங்க. எங்க போனாலும் கவனமா இருங்க. நான் அவ்வளவு தான் சொல்ல விரும்புறேன்"
சரி என்று தலையசைத்தாள் இனியா.
" சரி வாங்க, வெளியே போலாம். உங்க அண்ணன் வர போறாரு" என்றான்.
" ஆமாம், நான் உங்களோட சமையலறையில இருக்கிறதை பார்த்தா, ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்" என்று அவள் கூறியதைக் கேட்டு கொஞ்சம் பதட்டமானான் பாரி.
அவர்கள் வெளியே வர, அங்கிருந்த செடியிலிருந்து, அழகான பூ ஒன்றை பறித்தாள் இனியா, பாரிடம் அனுமதி வாங்காமலேயே. சட்டென்று நான் செய்தது என்ன என்பதை உணர்ந்து, அவனை பார்த்து விழிகளால் மன்னிப்பு கேட்டாள்.
" பரவாயில்லை... உங்களுக்கு வேணும்னா, இன்னும் கூட எடுத்துக்கங்க" என்றான்.
" நெஜமாவா? நீங்க கோப பட மாட்டீங்களா?"
" நீங்க விதிவிலக்கு"
மற்றொருமொரு மலரைப் பறித்து அதற்கு முத்தமிட்டாள் இனியா. அதைப்பார்த்து, மென்று முழுங்கினான் பாரி. என்னவோ அவள் முத்தமிட்டது அந்த மலர்க்கு அல்ல, தனக்குத்தான் என்பதைப் போல.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top