part 41

பாகம் 39

இனியாவும் பாரியும்,  இதயாவுடன் வீடு வந்து சேர்ந்தாகிவிட்டது.

இதயா, இனியாவின் கையை பற்றி, அவளைத் நிறுத்தினாள்.

" ஐயம் சாரி மா..."

"சாரியா? எதுக்கு?" என்றாள்  குழப்பத்துடன் இனியா.

"நீங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு புரிஞ்சுக்காம, உங்களை நான், ரொம்ப கிண்டல், கேலி எல்லாம் செஞ்சுட்டேன். இன்னைக்கு, இந்த ஊரே உங்களை கொண்டாடுறதை பார்க்கும்போதுதான்,  நான் செய்தது எவ்வளோ பெரிய தப்புன்னு எனக்கு புரிஞ்சுது. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ"

" அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா... உன் மேல எனக்கு என்னிக்குமே கோபம் வராது. "

"யூ ஆர் சோ ஸ்வீட், மா. நானும் மேத்ஸ் படிக்கிறதுன்னு தீர்மானிச்சிடேன். என் கூட ஒரு மேக்ஸ் ஜீனியஸ் இருக்கும்போது,, நான் எதுக்கு மத்தத படிக்கணும்?"

அதை கேட்டு களுக்கென்று சிரித்தாள் இனியா.

" அப்ப நம்ம புக்  ஷாப்பை யார் பாத்துக்கிறது?  நீதான சொன்ன, நான்தான் பாத்துக்க போறேன்னு...? "

"அதெல்லாம் அப்பா பாத்துக்குவார். இன்னைல இருந்து நான் உங்களுடைய ஃபேன்..."

அவள் அணிந்திருந்த டபுள் ஃபிரிள்ட் ஃபிரக்கை தனது இரண்டு கைகளால் விரித்து தலை குனிந்து இனியாவுக்கு மரியாதை செய்தாள்.

" இதயா, நேரமாயிடுச்சு... போய் படுத்து தூங்கு" என்றான் பாரி காட்டமாக.

" அப்பா நாளைக்கு சண்டே தான். கொஞ்சம் லேட்டா எழுந்துக்கலாம். நான் அம்மாகிட்ட நிறைய பேச வேண்டியிருக்கு. உங்களுக்கு தெரியுமா, அம்மாவபத்தி, என்கிட்ட என் பிரெண்ட்ஸ் என்னென்ன கேட்டாங்கன்னு...? இன்னைக்கு நான், அம்மாகிட்டயிருந்து எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்க போறேன். உங்களுக்கு தூக்கம் வந்தா, நீங்க போய் தூங்குங்களேன். நாங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கிறோம்."

அவள் அப்படி சொல்ல இனியாவுக்கு, எதுவோ உதைத்தது. பாரியின் முக மாற்றத்தை அவள் உணர்ந்து கொண்டாள். சுபாஷிடம் பேசியதை பற்றியே, இன்னும் அவள் பேசி தீர்த்த பாடில்லை... அதற்குள், இதயா புதியதாக எரியும் நெருப்பில் எண்ணையை வேறு ஊற்றிக் கொண்டிருக்கிறாளே...

" இதயா, நீ போய் தூங்கு. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நம்ம நாளைக்கு பேசிக்கலாம். " என்று நிலைமையை சமாளிக்க முயன்றாள் இனியா.

"அம்மா நான்  உங்ககூட தூங்கட்டுமா? ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் இதயா.

இனியாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. பாரி கண்களை சுருக்கிக் கொண்டு, அவளை முறைத்தபடி நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பொழுது, அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. அவள் தான்  பாரியை பற்றி நன்கு அறிந்தவள்  ஆயிற்றே.

" சொல்றத கேளு... நாளைக்கு நீ ஷட்டில் கிளாசுக்கு போகணும். ஞாபகம் இருக்கு இல்ல...? போய் தூங்கு. " என்று விடாப்பிடியாக அவளை கிளப்பினாள்  இனியா.

"சரி"
என்று சோகமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் இதயா.

"என்ன ஆச்சு உன் பொண்ணுக்கு இன்னைக்கு? திடீர்னு  *யூ* டர்ன் அடிச்சி உன் பக்கம் திரும்பிட்டா?"

என்று கேட்ட பாரிக்கு, என்ன பதில் கூறுவது? பதில் கூறாமல் நின்ற இனியாவை, கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான் பாரி.

"நான் கேக்குறது காதுல  விழுந்துச்சா...?"

"வர்ற வழி முழுக்க நானும் உங்க கிட்ட நிறைய கேள்விகள் கேட்டுகிட்டு தான் வந்தேன்... நீங்க எந்த கேள்விக்காவது எனக்கு பதில் சொன்னீங்களா? நான் மட்டும் ஏன் உங்களுக்கு பதில் சொல்லணும்?"

"நான் ஏன் அப்படி இருந்தேன்னு காரணம் உனக்கே தெரியும்..."

"என்ன பெரிய காரணம்? எனக்கு சுபாஷ் வாழ்த்துக்கள் தான்  சொன்னான். அதுக்கு, நான் என்ன செய்ய முடியும்?"

" அவன் உன்கிட்ட என்ன பேசினான்ங்கறதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனா, நீ எதுக்கு அவனை பாத்து சிரிக்கனும்? "

அதைக்கேட்டு சலிப்புடன் ஒரு பெருமூச்சு விட்டாள் இனியா.

" அவனுடைய ஒய்ஃப் வேலைக்கு போறதா சொன்னான். அதைக் கேட்டப்போ எனக்கு உண்மையிலேயே சந்தோஷமா இருந்தது. அதனால... "

" அதனால...? "

"விடுங்க... நீங்க இதே மாதிரியே, மாறாம இருங்க." என்றாள்  அலுப்பாக.

" கண்டிப்பா...பாரி என்னைக்கும் பாரயாக  தான் இருப்பான். புரிஞ்சுதா? உன் பொண்ணுகிட்ட சொல்லி வை... அவ ரொம்ப ஓவரா  போனா, அவள போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிடுவேன்னு சொல்லு" என்றான் மிரட்டலாக.

அதைக் கேட்டு, இனியாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

" என்ன...? என் பொண்ண நீங்க போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிடுவிங்களா? உங்களால அவளை விட்டு இருக்க முடியுமா? அப்படி என்ன உங்களுக்கு அவ்வளவு பொஸஸ்வ்னஸ்? "

அவன் முகத்தில், ஒரு ஏளன சிரிப்பு மிளிர்ந்தது. அதை பார்த்த பொழுது, அவளுக்கு சொல்ல முடியாத அச்சம் தோன்றியது. ஏனெனில், அவனுடைய அந்த சிரிப்பிற்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது அவளுக்கு தெரியும்.

அப்போது, அவர்கள் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இனியா கதவைத் திறந்த பொழுது, இதயா இரவு உடையில் நின்றிருந்தாள். எதிர்பாராதவிதமாக, அவளை தள்ளிகொண்டு, இதயா உள்ளே நுழைந்தாள். அவளை, அயல்கிரக ஜந்துவை போல, பார்த்துக் கொண்டு நின்றான் பாரி.
"அம்மா, நான் இன்னைக்கு உங்க கூட தான் தூங்க போறேன்..."

இனியாவின் கண்கள், பாரியை நோக்கி திரும்பியது. அவனோ, இறுகிய முகத்துடன், கைகளை கட்டிக்கொண்டு, தன் மகளை பார்த்துக்கொண்டிருந்தான். இனியா, தன்னிச்சையாக கடவுளை வேண்டிக்கொண்டாள். போகிற போக்கை பார்த்தால், இதயா போர்டிங் ஸ்கூலுக்கு போவது உறுதியாகிவிடும் போல் தெரிகிறது...

" என்ன இது இதயா? இன்னைக்கி நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற? "

"அம்மா கூட தூங்கணும்ன்னு  நினைக்கிறது தப்பாம்மா?" என்றாள் இனியாவின் கண்ணத்தை தொட்டபடி பாவமாக.

"நான் டயர்டா இருக்கேன்னு சொன்னேன் இல்லையா?"

"நானும் ரொம்ப டயர்டா இருக்கேன்மா... அதனால டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. வாங்க தூங்கலாம்..." என்றாள்  அவள் அப்பாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

" நான் சொல்றதை கேளு... "

"அவ இங்கேயே தூங்கட்டும்."

என்ற பாரியை, இதயாவை விட கூடுதல் ஆச்சரியத்துடன் பார்த்தாள்  இனியா.

*அந்த மூன்று நாட்களில்* கூட, தனியாக தூங்க பிடிக்காமல், மஞ்சளை பற்றி அவன் எவ்வளவு ஆராய்ந்தான் என்பது அவளுக்கு தானே தெரியும்... அவன் இதயாவை இங்கு தூங்க சொல்லிவிட்டானே தவிர, வரப்போகும் விளைவு, அவள் அறிந்திருந்ததே. அவன் மனதில் என்னதான் இருக்கிறதோ? இப்பொழுதெல்லாம் அவனை யூகிக்கவே  முடிவதில்லை. அம்மாவும் மகளும், அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

" என்ன இருந்தாலும், அவ நம்ம குழந்தை இல்லையா... அவ உன்னோடவே  தூங்கட்டும். நான் ஹால்ல படுத்துக்கிறேன். "

அதைக்கேட்டு இதயாவின் முகம் வாடிப்போனது. அவள் நினைத்தபடி, அவள் அப்பாவை, அவளால் பொறாமை கொள்ள செய்யமுடியவில்லை. அவள் அப்பாவை வெறுப்பேற்றி, காலம் கழிக்கலாம் என்ற அவளது எண்ணம் ஈடேறவில்லை.  அவளுக்கு ச்சே என்றானது. ஆனால் அதே நேரம், அவள் அப்பாவிற்கு அவள் மீது எந்த பொறாமையும் ஏற்படவில்லை. அப்படி என்றால், அவள் அப்பாவிற்கு எப்பொழுதுமே அவள்  செல்ல மகள் தானே, என்ற எண்ணம் மகிழ்ச்சியைத் தந்தது.

ஆனால் இனியாவோ, மயங்கி விழாத குறைதான். என்னதான் நடக்கிறது இங்கே? சற்று நேரத்திற்கு முன், தன் மகளை, போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பி விடுவேன் என்று கூறிய பாரியா  இது?

"அப்பா, நீங்க ஒன்னும் ஹால்ல போய் தூங்க வேண்டாம். நீங்க இங்கேயே இருங்க. நான் என்னோட ரூமுக்கு போறேன்..."

" ஏண்டா? நீ தானே உங்க அம்மா கூட இருக்கணும்னு நினைச்ச...?"

" பரவாயில்லப்பா... நீங்க சோஃபாவுல தூங்கினா, உங்களுக்கு முதுகு வலிக்கும். "

கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றாள்  இதயா.

நம்ப முடியாத பார்வையை, அவன் மீது வீசிக்கொண்டிருந்த இனியாவை பார்த்து, புன்னகை புரிந்தான் பாரி.

"ஏன், என்னை அப்படி பார்த்துகிட்டு இருக்க?"

"எப்படி நீங்க அவளை இங்க இருக்க சொன்னீங்க?"

"அவ இருந்தாளா?" என்றான் மாறாத புன்னகையுடன்.

" அப்படின்னா? "

"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவ எப்பவுமே உன்ன வெறுப்பு ஏத்துற மாதிரி, என்னையும் வெறுப்பேற்றி பார்க்க நினைச்சா. ஒருவேளை, நான் அவளை இங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லி இருந்தா, அவ வேணும்ணே அடம்பிடிச்சிருப்பா. அதனால, அவ சுட்ட தோசையை, நான் திருப்பி போட்டுட்டேன்..." என தன் தோள்களைக் குலுக்கியபடி கூலாக...

" ஒருவேளை, அவ சரின்னு சொல்லி இருந்தா, என்ன செஞ்சு இருப்பீங்க?"

"சான்சே இல்ல... நம்ம சுபாஷை பத்தி பேசிக்கிட்டிருந்ததை, அவ கேட்டதை நான் பாத்தேன்."

இனியா நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்பாவிற்கும், மகளுக்கும், இடையில், எங்கே தான் மாட்டிக்கொண்டு விழி பிதுங்க வேண்டியிருக்குமோ, என்று நினைத்தவளுக்கு, அப்பாடா என்றிருந்தது. அந்த ஒரு சூழ்நிலை தான், அவள் எப்பொழுதும் எதிர்கொள்ள விரும்பாதது.  நல்லவேளையாக பாரி அதை திறமையாக கையாண்டுவிட்டான்.

"இதயாவுக்கு தெரிஞ்சதனாலதான், நீங்க சுபாஷ் விஷயத்தை பத்தி, நான் கேட்டதுக்கு எதுவும் பதில் சொல்லாமல் இருந்தீங்களா...?"

" பைத்தியக்காரி... நம்ம வாழ்க்கையில ரொம்ப தூரம் கடந்து வந்துட்டோம்.  இந்த காலகட்டத்தில் நாம் புரிஞ்சிகிட்டது நிறைய... "

அவனை, அகன்ற விழிகளுடன், பார்த்துக்கொண்டிருந்தாள் இனியா.

" நீ தானே சொன்னே, நான் ரொம்ப மாறிட்டேன்னு... அதான் ஒரு சின்ன சாம்பிள் காட்டினேன்...எப்படி இருந்தது? " என்று கண்ணடித்தான்...

" என்னது...? அப்படின்னா உண்மையிலேயே உங்களுக்கு என் மேல பொஸ்ஸஸிவ்நெஸ்  இல்லையா...? அப்போ நீங்க என்னை ஏமாத்திட்டீங்க... "என்றாள்  பொய் கோபத்துடன்...

"ஆமாம் ஆமாம்... நான் தான் பார்த்தேனே, உன் முகம் போன போக்கை...நான் முறைச்சதை பார்த்து  உன் முகம் வெளுத்துப் போனதை..." என்றான் நக்கலாக.

" உண்மையிலேயே நான் பயந்துட்டேன் தெரியுமா... எங்க, நீங்க அன்னைக்கு மாதிரியே, அப்செட் ஆயிடுவீங்களோன்னு பயந்துட்டேன்"

"அன்னைக்கு கூட நீ சுபாஷ்கிட்ட பேசினாதனால எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனா, நீ என்னனை அவனோட கம்பேர் பண்ணிப் பேசினதை தான் என்னால பொறுத்துக்க முடியல."

"கடவுள் காப்பாத்திட்டார்" என்று பெருமூச்சு விட்டாள்.

"நான் தான் உனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேனே, நான் என்னை எக்காரணத்தைக் கொண்டும் காயப்படுத்திக்க மாட்டேன்னு... மறந்துட்டியா?"

மறக்கவில்லை என்று தலையசைத்தாள் இனியா.

" நீங்க ரொம்ப மாறிட்டீங்க" என்றாள் அவன் கன்னத்தை கிள்ளியபடி.

"நீ கொஞ்சம் கூட மாறல. அதே இளமையுடன் அழகா இருக்க..."  என்றான் அவள் கன்னத்தில்  முத்தமிட்டபடி.

" ஆனா, நீங்க இந்த விஷயத்துல கொஞ்சம் கூட மாறல"

" எப்பவும் மாற மாட்டேன்..."

"நமக்கு வயசாகுது ஞாபகம் இருக்கா?"

"வயசு ஆகுதா யாருக்கு?" என்றான் இங்கும் அங்கும் பார்த்தபடி.

"நமக்கு தான்..."

" உடம்புக்கு தான் வயசெல்லாம்... மனசுக்கும் உணர்வுகளுக்கும் என்னைக்குமே வயசாகாது... "

" அப்படிப் பார்க்கப் போனால் நீங்க போகப்போக இளமையா ஆகிட்டு போறீங்க..."

" ஏன் ஆக மாட்டேன்? என் பொண்டாட்டி தான் என்னை எப்பவும் சந்தோஷமா வச்சிருக்காளே... டென்ஷன் ஆகறதுக்கோ  சோகமா இருக்குறதுக்கோ  எந்த சான்சும் இல்லாம இருந்தா எல்லாருமே இளமையா இருக்கலாம்... "
அவன் தோளில் சாய்ந்து, அவனை இறுக அணைத்துக் கொண்டாள் இனியா.

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top