Part 4
பாகம் 4
*நட்பு* என்னும் சொல் பாரியையும் இனியாவையும் பிணைத்து வைத்திருந்தது. ஒவ்வொரு நாளும், பாரிக்கு, இனியா ஏதோ ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிக் கொண்டே இருந்தாள். அவளுடைய காலை வணக்கத்துடன் பாரியின் நாள் விடிந்தது. அவளுடைய இரவு வணக்கத்துடன் படுக்கைக்கு செல்வது அவனுக்கு வழக்கமாகி போனது. சுவாரசியமான செய்திகள் அவர்களுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அவளுக்கு உபயோகமான, கணிதம் சம்பந்தப்பட்ட, குறுஞ்செய்திகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் பாரி. பாரியை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அவனுக்கு நகைசுவையான செய்திகளை அனுப்பினாள் இனியா. ஆனால், அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, அவளிடம் இருந்து வரும் எந்த செய்தியும், அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்து விடும் என்பதை. அவர்கள் பெரும்பாலும் சந்தித்துக் கொள்வது இல்லை என்றாலும், கோவிலுக்கு வரும் நாட்களில் எல்லாம், இனியா அவன் புத்தகக் கடைக்கு வர தவறியதில்லை.
அன்றும், அவள் கோவிலுக்குள் செல்வதை பார்த்த பொழுது, பாரியின் முகம் மலர்ந்தது. அவன், தனது கடையின் போன் மூலமாக சில கேக்குகளும், டீயும் ஆர்டர் செய்தான். ஏனெனில், எப்படியும் இனியா, அவன் கடைக்கு வராமல் போக மாட்டாள். ஆனால், அவனுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, அன்று இனியா அவன் கடைக்கு வர முடியாமல் போனது. அவள் கோவிலை விட்டு வெளியே வந்த பொழுது, ஒருவன், அவள் முன் இரு சக்கர வாகனத்தில் வந்து நின்று, அவளை அமருமாறு பணித்தான். வேறு வழியின்றி, அவனுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து, பாரியை பார்த்து கையசைத்துவிட்டு சென்றாள் இனியா. அவளுடைய வண்டியை, வேறு ஒருவன் ஓட்டிச் சென்றான். அவளை அழைத்துச் சென்றவன் வேறு யாருமல்ல, அவளுடைய அண்ணன் சத்யா. முரட்டு சுபாவத்திற்கு பெயர் போனவன். நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்திருப்பவன். அனைத்தும், அவனுடைய நண்பர்களுக்காக தான். அவனுடைய நண்பர்களுக்கு ஏதாவது ஒரு உதவி தேவை என்றால், விளைவுகளை பற்றி சிறிதும் சிந்திக்காமல், முதல் ஆளாக சென்று நிற்பான் சத்யா. இன்றும், அதே போல், ஏதோ ஒரு பிரச்சினையை அவன் விலை கொடுத்து வாங்கி இருக்க வேண்டும். அதனால்தான், தனது தங்கைக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அவளை அங்கிருந்து அவசரமாக அழைத்துச் செல்கிறான்.
சத்யாவை பற்றி, ஏற்கனவே பாரி அறிந்து வைத்திருந்தான். சொல்லப்போனால், சத்யாவை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு, சில பேர், இருசக்கர வாகனங்களில், விரைந்து செல்வதை பார்த்தான் பாரி. அவர்கள் சத்யா வைத்தான் தேடி வந்திருந்தார்கள். அதைப்பார்த்து, பாரிக்கு பதட்டமாகிப்போனது. இனியாவிற்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது. அவள் நல்லபடியாக வீடு சென்று சேர்ந்து இருப்பாளா என்று அவனுக்கு அடித்துக்கொண்டது. அவளுக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஆனால், அவள், அவளுடைய அண்ணனுடன் இருக்கிறாள். பெரும்பாலும், மற்றவருடைய விஷயத்தில் பாரி தலையிடுவது இல்லை. ஆனால் இன்று, என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அவனுக்கு மனம் பதைத்தது.
அவன் ஆர்டர் செய்திருந்த கேக்கையும், தேனீரையும் எடுத்துக்கொண்டு, அடுத்த கடையில் வேலை பார்க்கும் இளம் வயது பையன் அவன் கடைக்கு வந்தான். தேநீரையும், கேக்கையும் மேஜையின் மீது வைத்துவிட்டு அதற்குரிய பில்லை பாரிடம் நீட்டினான்.
" பாரி அண்ணா, சீக்கிரமா கடையை சாத்திட்டு வீட்டுக்கு போங்க. ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போலிருக்கு" என்றான் அவன்.
" என்ன அசம்பாவிதம்?" என்றான் பாரி.
அந்த விஷயத்தைப் பற்றி பாரிக்கு எதுவும் தெரியாது என தெரிந்தவுடன், அந்த பையன், அதைப்பற்றி சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்தான்.
"ராஜா அண்ணனோட தங்கச்சி, யாரையோ லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அவங்க, அந்தப் பையன் கூட, வீட்டை விட்டு ஓடுவதற்கு சத்யா அண்ணன் ஹெல்ப் பண்ணி, அவங்க ரெண்டு பேரையும் ஊரைவிட்டு ஓட வச்சுட்டாரு. அதனால, ராஜா அண்ணன், சத்யா அண்ணனை கோபமா தேடிக்கிட்டிருக்கிறார். நீங்க பார்க்கல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சத்யா அண்ணன், அவரு தங்கச்சிய கூட்டிட்டு போனதை?" என்றான்.
அவனுக்கு பதில் ஏதும் கூறாமல், அவனுக்கு உரிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, அவன் இனியாவிற்கு போன் செய்ய, அவள் அதற்கு பதில் அளிக்கவில்லை. அந்தப் பையன் சொன்னது போல, ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பது அவனுக்கு உறுதியாகி விட்டதால், கடையை சாத்திவிட்டு, வீடு நோக்கி அவனது இரு சக்கர வாகனத்தை முடுக்கினான்.
வீடு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக, அவன் இனியாவிற்கு போன் செய்ய, இந்த முறை, அவள் பேசினாள்.
" நீங்க நல்லபடியா வீட்டுக்கு போய் சேர்ந்துட்டீங்க இல்ல? எந்த பிரச்சினையும் இல்லையே?" என்றான்.
"இல்லை" என்றாள்.
" உங்களை, உங்க அண்ணன் கூட்டிட்டு போனதுக்கு அப்புறம்... "
" சிலபேரு, எங்க அண்ணனை தேடி வந்தாங்களா?"
"ம்ம்ம்?"
" எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா இருக்கேன்"
" ஓகே. டேக் கேர்"
போனை துண்டிக்க நினைத்தவன்,
"பாரி... "
என்று இனியா அழைக்க, நின்றான்.
" நீங்க இவ்வளவு அக்கறையா விசாரிக்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு தேங்க்யூ" என்றாள்.
" ஆல்வேஸ்"
அவள் நன்றாக இருக்கிறாள் என்ற சந்தோஷத்துடன் போனை துண்டித்தான்.
*லக்ஷ்மி நாராயணன் பள்ளி*
பாரியைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த, லட்சுமி நாராயணன் பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் சிலர், அவனை அங்கு பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.
அவன் யாருக்காகவோ காத்திருக்கிறான் என்பது அவர்களுக்குப் புரிந்தது. அதில் சிலர், அவன், யாருக்காக காத்திருக்கிறான் என்பதையும் அறிந்து வைத்திருந்தார்கள்.
அவன் யாருக்காக காத்திருந்தானோ, அந்த நபரை பார்த்தவுடன், அவன் முகம் பிரகாசமானது. அவன் அங்கு நிற்பதை பார்த்த உடன், தனது இரு சக்கர வாகனத்தை அவன் பக்கமாக திருப்பினாள் இனியா.
" என்னை பார்க்கிறதுக்காகவா இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்றாள்.
" நான் உங்களுக்காக தான் காத்திருக்கேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்."
" கடவுளே, யாராவது என்னை கொஞ்சம் பிடிச்சுக்கோங்களேன்... எனக்கு மயக்கம் வருது" தனது தலையை பிடித்துக் கொண்டு மயங்குவது போல பாவனை செய்தாள்.
அவளுக்கு ஏதும் பதில் சொல்லாமல், அவளுடைய சேட்டையை பார்த்து, சிரித்துக் கொண்டே நின்றான் பாரி.
"மிஸ்டர் கேர்ள்ஸ் ஸ்பெஷல் இங்க என்ன பண்றாரு?" என்றாள்.
அவளை நோக்கி, வண்ண காகிதம் சுற்றப்பட்ட ஒரு சிறிய டப்பாவையும், ஒரு ரோஜா பூவையும் நீட்டியபடி,
" ஹாப்பி பர்த்டே" என்றான்.
தங்களை சுற்றி, தன் கண்களை ஓடவிட்டாள் இனியா. அவளுடன் பணிபுரியும், மற்ற ஆசிரியர்கள், அவர்களை கவனிப்பதை பார்த்து, களுக்கென்று சிரித்தபடி, அதை பாரியிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.
" இன்னிக்கி என்ன நடக்கப் போகுதுன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றாள்.
தன் புருவத்தை உயர்த்தியபடி,
"என்ன?" என்றான் பாரி.
என் ஃபிரண்ட்ஸ், என்னோட பிறந்த நாள் அன்னைக்கு, நீங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்களான்னு கேக்க போறாங்க"
"அதுக்கு நீங்க என்ன சொல்லப்போறீங்க?" என்றான்.
"நான் என்ன சொல்வேன்னு நீங்க நினைக்கிறீங்க?"
"உண்மையை சொல்லுங்க" என்றான்.
"என்ன உண்மை?" என்றாள் அவள் கிண்டலாக.
"எனக்கு தெரியலையே" என்றான் சிரித்தபடி.
இதுதான் முதல்முறை, அவர்கள் நட்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பேசிக்கொள்வது. தனது தலைக்கவசத்தை அணிந்து கொண்டு,
" பை" என்று அவன் சொல்ல,
" பை ஹீரோ" என்றாள் இனியா.
*ஹீரோ* என்று சொன்னதை கேட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்த பாரியால் முடியவில்லை. அங்கிருந்து சிரித்தபடி விடைபெற்றான்.
இனியா பள்ளிக்குள் நுழைந்தது தான் தாமதம், அவளுடைய சக ஆசிரியர்கள் அவளை சூழ்ந்துகொண்டு, பாரியின் பிறந்தநாள் பரிஸை திறந்து பார்க்க சொன்னார்கள். இனியா அதைத் திறந்தபோது, அதில் ஒரு அழகான வெள்ளிக்கொலுசு இருந்தது. அவளுக்கு அது மிகவும் பிடித்தும் இருந்தது. அவளுடைய சக ஆசிரியர்கள் அவளை கேலி செய்யத் துவங்கினார்கள்.
"இதையெல்லாம் பாக்கும் போது, அவர் உன்னை காதலிக்கிறார் போல தெரியுது." என்றாள் ஒருத்தி
"அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றாள் இன்னொருத்தி.
"பின்ன என்னவாம், அவரு எந்த பொண்ணுகிட்டயும் பேச மாட்டாராம், ஆனால், இனியாவுக்கு மட்டும் கொலுசு பிரசெண்ட் பண்ணுவாராம். அப்ப இதுக்கு பேரு என்னவாம்?" என்றாள் இன்னொருத்தி.
" நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. கூட பழகுற பொண்ணுகிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிறவர் இல்ல பாரி. அவரு நீங்க பேசுறதெல்லாம் கேட்டார் வருத்தப்படுவார். நான் அவருடனான நட்பை கெடுத்துக்க விரும்பல. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க" என்றாள் இனியா.
அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதேநேரம் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனென்றால், அவர்களுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா. பாரியைப் போல, அழகான, பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத, ஒருவன் எளிதில் கிடைத்து விடுவானா என்ன?
............
இனியாவின் போனுக்காக காத்திருந்தான் பாரி. அவனுக்கு தெரியும், அவள் எப்படியும் இன்று அவனை கூப்பிடுவாள் என்று. அவன் எதிர்பார்த்தது போலவே, இனியாவும் அவனை அழைத்தாள். அவனுடைய போன், இனியாவின் சிரித்த புகைப்படத்துடன் ஒளிர்ந்து, பாரியின் முகத்தை ஒளிரச் செய்தது. மூன்று மணி அடிக்கும் வரை காத்திருந்தான். அவன் அவளுடைய அழைப்புக்காக காத்திருக்கிறான் என்று, அவளுக்கு புரிந்துவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான்.
"ஹாய்"
"ஹாய் பாரி"
"உங்க பர்த்டே எப்படி போச்சு?"
"வழக்கம் போல நிறைய பரிசுகளோடவும், வாழ்த்துக்களுடனும்... உங்களுடைய நாள் எப்படி போச்சு?"
"வழக்கம் போலத்தான்... " என்றவன்,
சற்றே தயக்கத்துடன்...
"இனியா...."
"சொல்லுங்கள்" என்றாள்.
" உங்களுக்கு என்னுடைய கிஃப்ட் பிடிக்கலையா?" என்றான்.
"ஏன் அப்படி கேட்கிறீங்க?" என்றாள்.
"நீங்கதான் அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே?" என்றான்.
"எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, அதுக்காக நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்த்திருந்தீங்கன்னா அது நடக்காது" என்றாள்.
" ஏன்? நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டிங்களா?"
" மாட்டேன். ஏன்னா, நான் சொல்ல போற தேங்க்ஸ்காக, நீங்க அத எனக்கு கிஃப்டா கொடுக்கலைன்னு எனக்கு தெரியும். சரிதானே?"
" சரிதான்"
" முக்கியமா, நண்பர்களுக்கு இடையில் நன்றி சொல்வது அவசியம் இல்லை. சரிதானே?"
" சரி...தான்" என்று சலிப்புடன் இழுத்தான் பாரி.
" உங்களுக்கு தெரியுமா பாரி, நான் சொன்ன மாதிரியே, என்னோட வேலை செய்யுற டீச்சர்ஸ் எல்லாம், இன்னைக்கு என்ன பயங்கரமா கலாட்டா பண்ணிட்டாங்க"
அதைக்கேட்டு ஆர்வமானான் பாரி. ஆனால் அதை அவன் குரலில் காட்டிக்கொள்ளாமல்,
" எதுக்கு?" என்றான்.
" நீங்க என்னை காதலிக்கிறீங்களாம்" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள்.
அவள் சிரிப்பதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான் பாரி. அவனுக்கு *ஆமாம் நான் உன்னை காதலிக்கிறேன்* என்று கூற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால், இனியாவின் அடுத்த வார்த்தை அவன் நாக்கை கட்டிப் போட்டது.
" ஆனா, நான் அவங்க கிட்ட, நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ், அப்படின்னு புரிய வச்சுடேன். நீங்க அத பத்தி கவலைப்பட வேண்டியது இல்லை. எனக்கு தெரியாதா, நீங்க எப்படினு" என்றாள் களுக் என்று சிரித்தபடி.
அவள் கூறியதைக் கேட்டு மென்று முழுங்கினான் பாரி.
" ஆனா, அவங்க ஏன் அப்படி நினைச்சாங்க, பிறந்தநாள் பரிசு கொடுக்கிறது அவ்வளவு சந்தேகத்திற்குரியதா?"
என்று, மேலும் கிளறினான், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக.
" ஏன் சந்தேக பட மாட்டாங்க? நீங்களே சொல்லுங்க, நீங்க எல்லார்கிட்டேயும் சகஜமா பேசுரவரா இருந்தால், அங்கே சந்தேகப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனா, நீங்க என்கிட்ட மட்டும் தான் பேசுறீங்க. அதோட மட்டும் இல்லாம, நான் வேலை பார்க்கிற ஸ்கூலுக்கே வந்து, எனக்கு பர்த்டே கிஃப்ட் எல்லாம் கொடுக்குறீங்க. அப்போ, எல்லாருமே சந்தேகப் படுவாங்க தானே? அதுவுமில்லாம அவங்களுக்கு எல்லாம் தெரியும், எனக்கு வரப்போற ஹஸ்பண்ட் பத்தி என்னுடைய எதிர்பார்ப்பு என்னென்னனு. அதனால அவங்க சந்தேகப்படுவது சகஜம்தான்."
பாரியின் ஆர்வம் எல்லை கடந்தது.
" உங்களுக்கு வரப் போற ஹஸ்பன்ட்ட பத்தின உங்களுடைய எதிர்பார்ப்பார்பா?"
" ஆமாம்"
" நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?"
" தாராளமாக கேட்கலாம்"
" அது என்ன? வரப்போற ஹஸ்பண்ட் பற்றி உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?"
" எனக்கு வரப்போற ஹஸ்பண்ட், எனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்கனும் அப்படிங்கிறது தான் என்னுடைய எதிர்பார்ப்பு. அதனால அவங்க நம்ம ரெண்டு பேரையும் சந்தேகப் படுவாங்க தானே?"
" நிச்சயமா" என்றான்.
" ஆனா, நீங்க அவங்கள பத்தி எல்லாம் கவலைப் படாதீங்க. நான் அதை எல்லாம் பாத்துக்குறேன். உங்களுடைய கொலுசு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த சத்தத்தைக் கேட்கும் போதெல்லாம், நான் உங்களை நினைச்சுக்குவேன். குட் நைட்" என்று போனை துண்டித்தாள்.
மேகங்களுக்கு இடையில் தவழ்வது போல உணர்ந்தான் பாரி. அவள் அந்த கொலுசின் சத்தத்தை கேட்கும் போதெல்லாம், தன்னை நினைப்பாள் என்றால், அவள் எப்போதுமே அவனை தானே நினைத்துக் கொண்டிருப்பாள், என்ற எண்ணம் அவனுக்கு ஜில்லென்று இருந்தது. அதுவும் அவளுக்கு வரப்போகும் கணவன் அவளுடைய நல்ல நண்பனாக இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்திருக்கிறாள். ஏற்கனவே, அவன் அவளுக்கு நல்ல நண்பன். அவளுக்கு அவன் கணவன் ஆனாலும் நல்ல நண்பனாக தொடர்வது ஒன்றும் பெரிய பிரம்மப் பிரயத்தனமாக இருக்காது. தலையணையை அணைத்தபடி சுருண்டு படுத்தான் பாரி. எந்த தொந்தரவும் அற்ற கனவுலகில் இனியவை காண்பதற்காக.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top