Part 37
பாகம் 37
இது இனியாவிற்கு எட்டாவது மாதம்.
உறங்கிக் கொண்டிருந்த இனியாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவள் கண் விழிப்பதற்க்காக காத்திருந்தான் பாரி. இது, அவள் வழக்கமாக கண்விழிக்கும் நேரம். இப்பொழுதெல்லாம் அவளுக்கு அதிகமாக பசிக்கிறது. சிறிது நேரத்தில் அவள் கண்விழித்து விடுவாள்.
அப்போது அவளுடைய வயிற்றில் அசைவு தென்பட்டது. அவன் மெதுவாய் தொட்ட பொழுது, தன் கைகளுக்கு அடியில் சிற்றலை புரள்வதுபோல் அவன் உணர்ந்தான். அந்த பரவச உணர்வு, அவன் முகத்தில் புன்னகையை பூக்க செய்தது.
அவள் வயிற்றின் அருகே குனிந்து, அவள் வயிற்றில் கை வைத்த படி, மெல்லிய குரலில் பேசினான் பாரி.
" நீ இன்னும் தூங்கலையா? இல்ல சாப்பிடுவதற்காக கண்விழிச்சியா? "
கையை அவள் வயிற்றிலிருந்து அகற்றாமல், சிறிது நேரம் காத்திருந்தான் பாரி.
" ஒருவேளை என்கிட்ட பேசுவதற்காக கண்விழிச்சியா?"
இப்பொழுது, அவன் மீண்டும் அசைவை உணர்ந்தான். அந்த நிமிடம் அவன் கண்கள் கலங்கி போயின. பிறக்காத அவன் குழந்தை, அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறதே...
அசைவு தென்பட்ட இடத்தில், அவன் கன்னத்தை வைத்து காத்திருந்தான். ஏதும் அசைவு ஏழாதிருக்கவே, அசைவு தென்பட்ட இடத்தை முத்தமிட்டுவிட்டு மீண்டும் கன்னத்தை வைத்தான். இப்பொழுது அவன் மீண்டும் அசைவை உணர்ந்தான். அது வெறும் அசைவில்லை, அவன் குழந்தையின் முத்தம். கண்களை மூடி, பரவசநிலையை உணர்ந்தான் பாரி.
" நான் யாருன்னு உனக்கு தெரியுமா? நான்தான் உன்னோட அப்பா. நானும், உங்க அம்மாவும், உன்னுடைய வருகைக்காக தான் காத்திருக்கோம்."
சற்றே தாமதித்தவன்,
" நீ ரொம்ப நல்ல பொண்ணு. நீ எல்லாத்தையும் சரியா புரிஞ்சுக்குவ. நான் சொல்றத கவனமா கேளு, உங்க அம்மா, நம்ம ரெண்டு பேரையும் மாதிரி திடமானவ இல்லை. அவ ரொம்ப மென்மையானவ. நீ அவளுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கணும். அவளை ரொம்ப கஷ்டப் படுத்தாம அப்பாகிட்ட வந்துடு. அவளால் வலி பொறுக்க முடியாது. ( அவனுக்கு தொண்டையை அடைத்தது) நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதா?"
இந்த முறை அவன் மிக அதிகப்படியான அசைவை உணர்ந்தான்.
வயிற்றில் இருக்கும் பொழுதே, அப்பாவும் மகளும் ராசியாகி போனார்கள்.
இனியா கண் விழிப்பதை பார்த்தான் பாரி. அவள் இன்று சாப்பிட என்ன கேட்க போகிறாளோ என்ற பதட்டம் அவனுக்கு ஏற்பட்டது. அவளுக்கு பிடித்த இனிப்பு வகையை அவன் தயாராக வைத்து இருந்தால், தனக்கு காரமாக ஏதாவது வேண்டும் என்று கேட்பாள். நேற்று தான் அவள் காரமாக கேட்டாளே என்று அவன் இன்று காரத்தை தயாராக வைத்திருந்தால், தனக்கு காரம் சாப்பிட பிடிக்கவில்லை என்பாள். ஆரம்ப காலகட்டத்தில், அவளுடைய கர்ப்பகால விருப்பங்களை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இப்போது, அவளை கையாள்வதில் அவன் அனுபவசாலி ஆகிவிட்டான். புத்திசாலித்தனமாக கையாளவும் பழகி விட்டான். வேண்டியவற்றை தயாராக வைத்துக் கொண்டிருக்கும் சாதுரியம் அவனுக்கு இருந்தது.
" பசிக்குதா? "
ஆமாம் என்று தலையசைத்தாள் இனியா.
" ஜாங்கிரி இருக்கு, சாப்பிடறியா?"
" அய்யய்யோ ஜாங்கிரியா அது பெயரையே சொல்லாதீங்க எனக்கு வாந்தியா வருது..."
அதைக்கேட்டு கண்களை சுழற்றியபடி சிரித்தான் பாரி. அன்று மாலைதான், அவள் கால் கிலோ ஜாங்கிரியை சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
"ஃப்ரூட்ஸ்?"
" வேணாங்க..."
" வேற என்ன வேணும்? "
" ராத்திரி செஞ்ச சப்பாத்தி மிச்சம் இருக்கு அது போதும் எனக்கு."
" சரி இரு, எடுத்துட்டு வரேன்."
சப்பாத்தியையும், சன்னா மசாலாவையும் சப்புக்கொட்டி சாப்பிட்டாள் இனியா.
" அப்பாடா... நல்லா இருந்தது." என்று கூறிவிட்டு, அப்படியே படுக்க போனவளை, தடுத்து நிறுத்தினான் பாரி.
" சாப்பிட்ட உடனே படுக்காதே கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு..."
" தூக்கமா வருதுங்க..."
" ஒரு பத்து நிமிஷம் டிவி பார்த்துட்டு அப்புறமா தூங்கு..."
அவர்களுடைய படுக்கை அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சோனி பிராவியா டிவி ஒளிர்ந்தது. மேகா படத்தில் வரும், இளையராஜாவின் புத்தம் புது காலை மனதை வருடியது. அதைக் கேட்டுக் கொண்டு, பாரியின் தோளில் சாய்ந்து, கண்களை மூடிக்கொண்டாள் இனியா. கேட்கவா வேண்டும்? அவள் அப்படியே உறங்கி தான் போனாள். அவளை தன் மடியில் கிடத்திக் கொண்டு, அமர்ந்தபடியே சோபாவில் கண்ணயர்ந்தான் பாரி.
ஒரு மாதத்திற்கு பின்
ஒரு காலைப்பொழுதில், பாரி தன் தோட்டத்தில், செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தான். இனியா, தோட்டத்தின் புல்தரையில், மெல்லக் உலவிக் கொண்டிருந்தாள். சட்டென்று அவள் இடையின் பகுதியில் ஒரு வித்தியாசம் ஏற்பட்டது. அவள் இடுப்பு எலும்பில் ஒரு கூரிய வலியை உணர்ந்தாள் இனியா.
"என்னங்க..." என்ற அவளுடைய கூக்குரலைக் கேட்டு, கையிலிருந்த தண்ணீர் குழாயை வீசி எறிந்து விட்டு அவளை நோக்கி ஓடினான் பாரி. இனியாவின் கலங்கிய கண்களை பார்த்து, பதறி விட்டான் அவன். ஒரு நொடி பொழுதையும் தாமதிக்காமல், அவளை தன் கையில் அள்ளிக்கொண்டு சென்று காரில் அமர வைத்தான். அடுத்த அரை மணி நேரத்தில், அவர்கள் மருத்துவமனையை அடைந்தார்கள்.
பிரசவ நேரத்தில், பிரசவ அறையில், தன் மனைவியுடன் இருப்பதற்கான அனுமதியை பாரி ஏற்கனவே பெற்று விட்டிருந்ததால், அவன் பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அவன் அங்கு இருப்பதை இனியா விரும்பவில்லை. எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளக்கூடிய அவன், அவளுடைய வலியை மட்டும் பொறுக்க மாட்டான் அல்லவா...?
" நீங்க வெளிய போய்டுங்களேன்."
" இல்ல நான் உன் கூட தான் இருப்பேன்."
" சொல்றதைக் கேளுங்க..." என்றாள் அந்த கொலைகார வலியை பொறுத்துக்கொண்டு.
" என்னைப்பற்றி யோசிக்காதே... இந்த நிலைமையில உன்னை தனியா விட்டுட்டு நிச்சயம் நான் போக மாட்டேன்."
" என்னைத் தவிர நம்மை சுற்றி நடக்கிற எதையும் நீங்க பார்காதிங்க"
" சரி... நம்மள சுத்தி நடக்குற எதையும் நான் பாக்க மாட்டேன். என் கையைப் பிடிச்சிக்க."
இனியா அவன் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். தன் கண்களில் திரண்ட கண்ணீரை அடக்க பெரும்பாடு பட்டான் பாரி. இப்படிப்பட்ட ஒரு நிலையில் அவன் இனியாவை பார்த்ததேயில்லை... இதன் பிறகு, அவளை இப்படி பார்க்கவும் அவன் விரும்பவில்லை.
சரியான உடற்பயிற்சிகளின் மூலம், இனியா தன்னை நன்றாக தயார் செய்துகொண்டு விட்டிருந்ததால், வெகு சீக்கிரமே சுகப்பிரசவம் ஆனது. வேறொன்றையும் நாம் மறந்துவிடக்கூடாது. பாரியின் அறிவுரையின்படி, குழந்தையும், அவள் அம்மாவை தொந்தரவு செய்யாமல், அவள் அப்பாவிடம் வந்து சேர்ந்து விட்டாள். பிரசவம் முடிந்த உடன், அவளை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதான் பாரி. இனியாவோ, அவன் தோளில் சாய்ந்தபடி புன்னகை புரிந்தாள்.
அதன்பிறகு, அங்கு இருக்க பாரி அனுமதிக்கப்படவில்லை. அரை மனதாய் அந்த அறையை விட்டு வெளியேறினான் அவன்.
சிறிது நேரம் கழித்து, செவிலி ஒருத்தி, அவர்கள் அன்பின் ஆதாரத்தை... பொம்மை போல் இருந்த பதுமையை...பூ துவாலையில் சுற்றி அவன் கையில் கொடுத்தாள். சற்று நேரத்திற்கு முன்பு வரை, தன் மனைவியின் வேதனையை பொறுக்க மாட்டாமல், கண்ணீர் சிந்திய அவன் கண்கள், இப்பொழுது ஆனந்த துளிகளை சொரிந்தன.
இனியாவின் இதயம் கவர்ந்து பெற்ற பெண் என்பதால், அவளுக்கு இதயா என்று பெயரிட்டான் பாரி.
தனது பெற்றோரின் உலகமாகிப் போனாள் இதயா. அவளுடைய சீரான வளர்ச்சி அவர்களின் எதிர்பார்ப்பை அதிகமாகியது. அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டே இருந்தார்கள்.
அவள் தவழ்ந்தாள்... நின்றாள்... நடந்தாள்... இறுதியில், அப்பா என்று அழைத்து பாரியை வீழ்த்தினாள். அன்று, இனியாவின் தனி வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினான் பாரி.
ஆம், அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி இனியா வசதியற்ற ஏழை பிள்ளைகளுக்கு கணிதம் கற்பிக்க தொடங்கியிருந்தாள். படிக்கும் ஆர்வம் உள்ள அனைத்து ஏழை பிள்ளைகளுக்கும் அவர்கள் வீடு ஒரு திறந்தவெளி மைதானம் ஆனது. ஆர்வமிக்க நமது ஆசிரியையும் தனது பணியை மிகச் சிறப்பாகவே செய்து வந்தார்.
ஒருவேளை, நாம் பாரியையும் இனியாவையும், ஒரு ஜாடியில் போட்டு நன்றாக குலுக்கினால், ஒரு கலவை கிடைக்கும் என்றால், அதுதான் இதயா. அவளுடைய அப்பா அம்மாவின் சரிவிகித கலவை அவள். அவள் தன் அப்பா அம்மாவிடம் இருந்து மிகச்சிறந்த குணங்களைப் பெற்றிருந்தாள். புத்தகங்களில் ஆர்வம், புரிந்து கொள்ளும் திறன், அழகிய முகம், இவை அனைத்தும் அவள் பாரியிடமிருந்து பெற்றிருந்தாள். கணிதத்தில் ஆர்வம், கேலிப் பேச்சு, சுறுசுறுப்பு, நீண்ட பட்டுப்போன்ற கூந்தல் ஆகியவற்றை அவள் இனியாவிடமிருந்து பெற்றிருந்தாள்.
அவளுடைய ஏழாவது வயதில், பத்தாம் வகுப்பு கணக்கிற்கான விடையைச் சொல்லி அனைவரையும் வாய்பிளக்க வைத்தாள்... இனியா பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் சமயங்களில், அவள் பக்கத்தில் அமர்ந்து அதை ஆர்வமாக கவனிக்கும் பழக்கம் இதயாவிற்கு இருந்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வமும் அவளுக்கு இருந்தது. அவளுடைய விடுமுறை நாட்களில், அவளை வீட்டில் பார்ப்பதை விட, அவள் அப்பாவுடைய புத்தகக் கடையில் மட்டுமே அவளை பார்க்க முடிந்தது. அதனால் இனியாவால் அவளுடைய வேலையை சிரமமில்லாமல் செய்ய முடிந்தது.
திட்டமிட்டபடியே, பாரி, இதயாவிடம் அதிக நெருக்கமாகி போனான். தன்னுடைய வேலையில், முழு கவனத்தையும் செலுத்த, இனியாவிற்கும் அது தேவைப்பட்டது. பாரியும் இதயாவும் ஒரு நல்ல பிணைப்புடன் இருந்ததால், அங்கு போட்டி பொறாமைக்கு இடமில்லாமல் போனது.
ஆம்... இப்பொழுதும் நமது கதாநாயகனுக்கு தன் மனைவியின் மீது இருந்த பொசெசிவ்நெஸ் சிறிதும் குறையவில்லை. எப்பொழுதும் குறையப் போவதுமில்லை. அது அவனுடைய இயற்கை குணம். தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்த இனியா தான் அவனுக்கு எல்லாமும்... அவள் அவனது வாழ்வாகிபோனவள்...
இதயா பாரின் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டாள் என்பதால், அவள் இனியாவின் இடத்தை பிடித்து விட்டாள் என்று அர்த்தமல்ல. அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் இருவரையும் நாம் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மனைவியும் மகளும் என்றும் சமமாக முடியாது.
இனியா மிகவும் நிம்மதியாக காணப்பட்டாள். பாரியின் பொசெசிவ்நெஸ்ஸிலிருந்து தான் அவள் தப்பிவிட்டாளே. ஆனால் இனியா, இனியா தான். பாரி மிகவும் மாறி விட்டதாக கூறி, அவனுடன் அவள் சண்டை பிடித்தாள். அவள் மீது அவனுக்கு இருந்த பொசெசிவ்நெஸ் குறைந்து விட்டதாக கூறி கோபித்துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை, பாரி என்றுமே பாரியாக தான் இருப்பான் என்று ... சரியான நேரம் வரும்போது அதை அவள் தெரிந்து கொள்வாய் என்று ...
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top