Part 34

பாகம் 34

அடுத்த வாய்தா

பாரி சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டான். இனியாவை பரிசோதித்த மருத்துவர், அழைக்கப்பட்டு, அவனுக்கு எதிர் கூண்டில் நிறுத்தப்பட்டார்.

" டாக்டர் அனுசுயா, திருமதி பாரியின் உடல்நிலை குறித்த உங்களின் அறிக்கை என்னவென்று கூற முடியுமா? " என்று நீதிபதி கேட்டார்.

" திருமதி பாரியை பரிசோதித்து பார்த்ததில்,  அவர் சரியாக சாப்பிடுவதில்லை என்று தெரிகிறது. அவர் மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறார். *இந்த நிலையில்* அவர் சாப்பிடாமல் இருப்பது நல்லதல்ல."

" எந்த நிலை பற்றி குறிப்பிடுகிறீர்கள்?"

" அவர் கர்ப்பம் தரித்திருக்கிறார்"

அதைக்கேட்டு அதிர்ச்சியுடன் பாரியின் முகத்தை ஏறிட்டாள் இனியா. பாரியோ,  நம்பமுடியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இனியா கர்ப்பமாக இருக்கிறாளா?

அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை இனியா கிண்டலாக கூறியது, அவர்களின் நினைவுக்கு வந்தது.

* நான் பிரக்னென்டா இருக்கேன்னு சொல்லும்போது,  உங்க முகம் போற போக்கை நான் பாக்கணும்*

தங்கள் வாழ்க்கையின் மிக இனிமையான... மிக  முக்கியமான ஒரு தருணம்,  இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொள்ள நேரிட்டு விட்ட,  தங்களுடைய பரிதாபகரமான நிலையை எண்ணி,  அவர்களுடைய முகம் வேதனை பூண்டது.

குழந்தை பெற்றுக்கொள்வதற்கு, பாரி தடை சொன்ன அந்த நாளில்,  தான் செய்த குழந்தைத்தனமான காரியத்தை இனியாவால்  நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. குடும்பக்கட்டுப்பாட்டு சாதனத்தை, குண்டூசி கொண்டு துளையிட்டு வைத்தது அவள் தானே... பாரி பேச்சிழந்து நிற்கும் அந்த தருணத்தில்,  கைகொட்டி சிரித்து,  அவனை கேலி செய்யவல்லவா அவள் அப்படி செய்து வைத்தாள். ஆனால் இன்றோ, அவளும் அல்லவா பாரியோடு சேர்ந்து பேச்சிழந்து நிற்கிறாள்...

ஆனால் இனியவே சற்றும் எதிர்பாராத விதத்தில்,  பாரியின் முகம்,  மகிழ்ச்சியில் மலர்ந்தது. அப்பாவாகப்போகும் மகிழ்ச்சி,  இல்லாமலா போய்விடும்?

அங்கு சட்டென்று எழுந்த,  காட்டுத்தனமான கத்தலில்,  அவர்களுடைய கவனம் சிதறியது.

" எங்களுக்கு இந்த குழந்தை வேண்டாம். தயவு செய்து அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய எங்களுக்கு அனுமதி கொடுங்கள்" என்று கத்திய சத்யாவை அறைய வேண்டுமென்று தோன்றியது பாரிக்கு.

சத்யாவின் அதிர்ச்சி எல்லை கடந்தது. அன்று ஒரு நாள்,  இனியா,  சீதாவிடம் *நல்ல செய்தியை* பற்றி பேசிக்கொண்டிருந்ததை தான் அவன் கேட்டானே. அடுத்த 5 ஆண்டுகளுக்கு,  அதை பற்றி பேசக்கூடாது என்றல்லவா அவள் கூறினாள்....? பிறகு எப்படி இது சாத்தியமானது.

" நீங்கள் கூற விரும்புவதை சாட்சி கூண்டில் நின்று கூறலாம்". என்று சத்யாவிற்கு அனுமதி அளித்தார் நீதிபதி.

சாட்சி கூண்டில் நின்றிருந்த மருத்துவர், சத்யாவிற்கு இடமளித்து,  அங்கிருந்து விலகிச் சென்றார்.

" தயவு செய்து இந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய எங்களுக்கு அனுமதி கொடுங்கள். "

" ஏன்? " எந்த பதட்டமும் இல்லாமல் கேட்டார் நீதிபதி.

" நான் என் தங்கையை என் நண்பனுக்கு மறுமணம் முடிக்க முடிவெடுத்துள்ளேன். இந்த குழந்தை அவர்களுடைய திருமணத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கும்."

அவன் பேசியதை இனியாவாள் நம்பவே முடியவில்லை. இன்னுமா அவன் அவளை, சுபாஷிற்கு மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளான்? *விட்டால் அவனை கொன்றுவிடுவேன்* எனும் தொணியில் அவனையே முறைத்துக் கொண்டிருந்த,  பாரியின் மீது அவளது பார்வை சென்றது.

" உங்கள் தங்கையின் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? இந்த வழக்கு மேலும் சிக்கல் அடைந்துள்ளது. ஏனென்றால்,  இது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. பிறக்கப்போகும் குழந்தையை பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. அக்குழந்தையின் பெற்றோரின் எண்ணத்தை அறிய விரும்புகிறேன். திரு பாரி,  உங்களுடைய முடிவு என்ன?"

" என் குழந்தை மட்டுமல்ல என் மனைவியுடனும் நான் வாழ விரும்புகிறேன்."

அடுத்ததாக இனியா அழைக்கப்பட்டாள்.

" நீங்கள் இந்த குழந்தையை கருக்கலைப்பு செய்து விட்டு,  வேறு ஒருவரை திருமணம் முடிக்க நினைக்கிறீர்களா? "

" இல்லை... நிச்சயமாக இல்லை. இந்தக் குழந்தையை கருகலைப்பு செய்வது பற்றி நினைத்து பார்க்க  கூட நான் தயாராக இல்லை. இது என்னுடைய குழந்தை. "

" நீங்கள் விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்து இருக்கிறீர்களே? நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் உங்கள் சகோதரருக்கு துளியும் விருப்பம் இருப்பதாக தெரியவில்லையே?  நீங்கள் அவருடன் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? "

" இல்லை... எனக்கு விவாகரத்து வேண்டாம். நான் என் கணவருடன் வாழவே  விரும்பு கிறேன். "

அவளுடைய பதில்,  சத்யாவிற்கு ஏமாற்றத்தையும்,  பாரிக்கு மகிழ்ச்சியையும் அளித்தது என்பதை கூற வேண்டிய அவசியம் இல்லை.

" நீங்கள் கர்ப்பமாக இருப்பதால் ஏற்பட்ட மன மாற்றமா இது? "

" இல்லை... நான் எப்பொழுதுமே விவாகரத்து வேண்டும் என்று நினைக்கவில்லை... என் கணவர் என்னை கடத்தி இருந்தாலும் கூட, நான் அவருடன் வாழவே விரும்புகிறேன். "

" ஏன்? "

" அவர் என்னை மிகவும் அன்பாக நடத்தினார். என்னை ஒருபோதும் எதற்காகவும் அவர் கடிந்து கொண்டது கிடையாது. தூய்மையான அன்பை நான் அவரிடம் கண்டேன். அவரைப் போன்ற ஒரு கணவன் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்."

" அப்படியென்றால் எதற்காக விவாகரத்து வழக்கு தொடர்ந்தீர்கள்? "

பாரியின் வழக்கறிஞர் ரமணன் எழுந்து நின்றார்.

" எக்ஸ்க்யூஸ் மீ யுவர் ஹானர்... விவாகரத்து வழக்கு தொடர்ந்தது திருமதி பாரி அல்ல. விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் இட்டதும் அவரல்ல. "

" அப்படி என்றால்,  அவருக்கு பதிலாக வேறு யாரோ கையொப்பமிட்டதாக கூறுகிறீர்களா?"

" ஆமாம் யுவர் ஹானர். நீங்கள் இந்த காகிதங்களை பார்வையிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."

ரமணன் சில காகிதங்களை வழங்கினார்.

" இவை கையெழுத்து வல்லுநரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. விவாகரத்து பத்திரங்களில் இருக்கும் கையெழுத்து திருமதி பாரிடையது அல்ல. மோசடி செய்யப்பட்ட கையெழுத்தாகும். அதற்கான சான்றிதழ் இதோ. "

" இது உண்மைதானா, திருமதி பாரி? விவாகரத்து பத்திரங்கள் நீங்கள் கையப்பமிட வில்லையா?"

இனியா இல்லை என்று தலை அசைத்தாள்.

" என் அண்ணன்  கையப்பமிட்டு இருக்க வேண்டும்."

சத்யா மறுபடியும் அழைக்கப்பட்டான்.

" திரு சத்யா, இவர்கள் கூறுவது உண்மையா? "

தயக்கத்துடன் பேச தொடங்கினான்  சத்யா.

" ஆமாம் யுவர் ஆனர். என் தங்கையின் வாழ்க்கையை சிக்கலில் மாட்டிவிட நான் விரும்பவில்லை. ஒரு கடத்தல்காரர்களுடன் வாழ, நான் எப்படி அவளை அனுமதிக்க முடியும்?  அதனால் தான் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தேன். "

" ஆனால்,  விவாகரத்து என்பது, ஒரு மூன்றாம்  மனிதனால் தீர்மானிக்க படக்கூடிய விஷயம் அல்ல. அது முழுக்க முழுக்க தம்பதிகளை மட்டுமே சார்ந்த விஷயம். தனக்கு இந்த விவகாரத்தில் துளியும் சம்மதமில்லை என்று உங்கள் சகோதரி மிகத் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டார். அதற்கு நீங்கள் என்ன கூறப் போகிறீர்கள்? "

" அவள் ஒரு அரியா பெண் யுவர் ஆனர். அவளுக்கு ஒன்றுமே தெரியாது"

" இந்த நீதிமன்றத்தை பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் திரு சத்தியா? இங்கு உங்களால் முன்வைக்கப்படும் அத்தனை விவாதங்களும் ஆராயமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைத்தீர்களா? உங்கள் சகோதரி ஒரு ஆசிரியை. பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது கூறுமளவிற்கு புத்திசாலியானவர். ஆனால் நீங்களோ, அவர் அரியா பெண் என்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு மேஜர். அதை மட்டும்தான் இந்த கோர்ட் கருத்தில் எடுத்துக் கொள்ளும். தனக்கு இந்த விவாகரத்தில் உடன்பாடில்லை என்பதை அவர் தெளிவாக கூறிவிட்டார். நீங்கள் விவாகரத்து பத்திரத்தில்,  உங்கள் தங்கைக்கு பதிலாக கையொப்பம் இட்டதை பாரியும் நிருபித்து விட்டார். இப்பொழுது அவர்,  உங்களுக்கு எதிராக மோசடி வழக்கு தொடர முடியும். அப்போது நீங்கள் கூற முடியாது, என் தங்கை கையெழுத்து கூட போட தெரியாத அப்பாவி பெண்,  அதனால் தான் அவள் கையெழுத்தை நான் இட்டேன்  என்று. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் திரு பாரி? "

" எனக்கு என் மனைவி வேண்டும் யுவர் ஹானர். நான் இவர் மீது எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்யப்போவதில்லை. ஏனெனில்,  அவர் என் மனைவியின் அண்ணன்." என்றான் பாரி சத்யாவின் மீது பார்வையை பறித்த படி.

" எனில் என் தங்கையை கடத்தியவனுக்கு எந்த தண்டனையும் கிடையாதா? என் குடும்பத்தை அவமானப்படுத்தியவனை அப்படியே விட்டுவிட வேண்டியது தானா? " என்றான் சத்தியா.

அப்பொழுது,

" இனியாவை கடத்தியது நான்தான்" என்ற குரல் கேட்டு, அனைவரும் திரும்பிப் பார்க்க,  அங்கு சத்யா கனவிலும் எதிர்பாராத ஒரு நபர் நின்று கொண்டிருந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top