Part 33
பாகம் 33
மாலை நேரம், சேதுராமன் இல்லம்
இருட்டு சூழ்ந்துகொண்டிருக்கும், வேலையில் மாடியில் அமர்ந்து கொண்டிருந்தாள் இனியா.
அவளுடைய கண்கள் மூடியிருந்த பொழுதும், அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அதே நேரம், அவளது உதடுகள், அழகான புன்னகையை உதிர்த்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தை உரசிய மெல்லிய தென்றல், பாரியுடனான *ஊஞ்சல்* நினைவுகளில், அவளை மூழ்கடித்தது. அவள் விதியை நினைத்து அழுத அதே நேரத்தில், அந்த பரவச தருணத்தை நினைக்கும் போது, ஏற்பட்ட புன்னகையை அவளால் தடுக்க முடியவில்லை.
அவள் தோளை யாரோ தொடுவதை உணர்ந்து, திரும்பி பார்த்த பொழுது, சீதா அவளை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். தன் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீரை அவசரமாக துடைத்துவிட்டு, அவளைப் பார்த்து சிரித்தாள், இனியா. சீதா அவள் அருகில் அமர்ந்தாள்.
"நீ மாப்பிள்ளையைப் பற்றி தானே நினைச்சுக்கிட்டு இருக்க?"
ஆம் என்று தலையசைத்தாள் இனியா.
" என்னோட பாரியும் இந்த மெல்லிய தென்றல் போலத் தான், இனிமையா, மனசுக்கு நிறைவா இருப்பார்."
" நீ ஏன் இங்க இருந்து கஷ்டப்பட்டுகிட்டிருக்க? நீ உன்னோட வீட்டுக்கு கிளம்பி போகலாம்."
" நான்தான் சத்தியம் செய்து கொடுத்திருக்கேனே?... "
" உன் விருப்பம் இல்லாம, சத்யா கட்டாயப்படுத்தி தானே அதை செய்ய வச்சான்? அவன்கிட்ட நீ பாரியை பற்றி சொல்லி, புரிய வைக்க முயற்சி செய்யலாமே? "
" அவர் நம்ப மாட்டார். பாரி என்னை மூளைச்சலவை செஞ்சிட்டதாக அண்ணன் நினைக்கிறார். அதனால, அவராகவே பாரியை பற்றி தெரிஞ்சுக்கட்டும். "
" அவன் எப்படி பாரியை புரிஞ்சுக்குவான்னு நீ நினைக்கிற?"
" உங்களுக்கு பாரியைப் பற்றி தெரிஞ்சது வெறும் ஒரு சதவிகிதம் தான். அவர் எந்த அளவிற்கு போவார்ன்னு உங்களுக்கு தெரியாது. என்னை மறுபடி வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறதுக்காக அவர் எதையும் செய்வார். "
" ஒருவேளை அவரால் அதை செய்யும் முடியலன்னா என்ன செய்கிறது? "
அதைக் கேட்டு மெலிதாய் புன்முறுவல் பூத்தாள் இனியா.
" நிச்சயம் செய்வார். எக்காரணத்தைக் கொண்டும் அவர் என்னை விட்டுக் கொடுக்கமாட்டார்."
" என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா... "
" அவர் தன் உயிரை விட்டாலும் விடுவாறே தவிர, என்னை விடமாட்டார். நான் தான்மா அவருடைய சுவாசம். நான் இல்லாம அவரால் வாழவே முடியாது. "
." ஆனா சத்யா, விவாகரத்து தாக்கல் பண்ணி இருக்கான்னு உனக்கு தெரியாதா? "
" அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். பாரி தான் ஜெயிக்க போறார்." அவள் தலையை உயர்த்தி பெருமையுடன் சொன்னாள்.
" ஆனால்... "
"அவர் என்னைக் கடத்தி இருப்பார்ன்னு நினைக்கிறீங்களா?"
இனியாவின் கையை இறுகப் பற்றினார் சீதா.
" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உண்மையிலேயே, உன்னை கடத்தியது பாரியா இருந்தா, நான் அதை பற்றி கவலை பட போவதில்லை. ஏன்னா, சுபாஷும் அவனுடைய அம்மாவும், இந்த விஷயத்தை வேற ரீதியில் என்னை பார்க்க வச்சுட்டாங்க. அவர்களுடைய மோசமான நடத்தையை பார்த்ததுக்கப்புறம், அந்த கல்யாணம் நின்னது தான் சரின்னு எனக்கு தோணுது. முக்கியமா, பாரியை பத்தி சொல்லனும்னா, நாங்க ரொம்ப திருப்தியாய் இருந்தோம். "
" இப்போ இல்லையா? " என்றாள் இனியா, சீதாவின் பேச்சை வெட்டிய படி.
" நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. நடந்து முடிஞ்சது பத்தி யோசிச்சு என்ன பிரயோஜனம் இருக்கு? நீ பாரி கூட சந்தோஷமா இருக்கேன்னு தெரிந்த பிறகு, நடந்ததைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு எனக்கு தோணுது."
" தேங்க்ஸ் மா"
" அதனாலதான் சொல்றேன் நீ பாரிகிட்ட போயிடுன்னு... "
"கவலைப்படாதிங்க அம்மா. இது ஒரு சின்ன சூறாவளி. எங்கள் வேர்கள் வலுவாக இருக்கும்போது, நான் ஏன் கவலைப்படனும்?"
" உன் மனசுல, நீ என்ன நினைக்கிறேன்னு என்னால புரிஞ்சுக்க முடியல."
" என் மனசுல பாரியை தவிர வேறு எதுவுமே இல்லை." என்று கூறிவிட்டு, மெலிதாய் சிரித்தாள் இனியா.
சீதா தனது கைப்பேசியை இனியாவிடம் கொடுத்தார்.
" பாரி உன் கூட பேசணும்னு சொன்னாரு."
சீதாவின் கையிலிருந்த கைபேசியை பறித்து, பாரியின் எண்களை சுழற்றினாள் இனியா. அவளின் அழைப்பிற்காகவே காத்திருந்ததைப் போல, முதல் மணியிலேயே பேசினான் பாரி.
" இனியா... "
"பாரி... "
" நீ சரியா சாப்பிடுறது இல்லன்னு அத்தை சொன்னாங்க. "
சீதாவைப் பார்த்து இனியா முறைக்க, அங்கிருந்து நழுவி சென்றார் சீதா.
" ஏன் இனியா? நீ சாப்பிடாம இருக்கறதுனால ஏதாவது மாறிட போகுதா? உன்னுடைய உடம்பு கெட்டுப் போவது தான் மிச்சம்... "
பதிலேதும் கூறாமல், அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் இனியா.
" என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? "
" உங்களை நம்புரேனா இல்லையா அப்படிங்கிற விஷயம் எல்லாம், இங்க தேவையே இல்ல. நீங்க என்ன செய்யப் போறீங்க அப்படிங்கறது பற்றியும் நான் கவலைப்படல. நான் என்ன செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன்."
" என்ன செய்யப் போற? "
" நாளைக்கு கோர்ட்ல எல்லாத்தையும் நான் சொல்ல போறேன். "
" நெஜமாதான் சொல்றியா? "
" என்ன கேள்வி இது? ஆமாம் நான் எல்லாத்தையும் சொல்ல போறேன்"
" நமக்குள்ள நடந்த *எல்லாத்தையுமே* சொல்லிட போறியா? "
இனியாவின் கன்னம் வெட்கத்தால் சிவந்து போனது. அதை பாரியும் அறிவான்.
" இனியா... "
"ம்ம்ம்... "
" ரிலாக்ஸா இரு. பிரச்சனையுடைய தீர்வு, உன் கையிலேயே இருக்கும் போது, எதுக்காக நீ இவ்வளவு டென்ஷனா சாப்பிடாம இருக்க? "
" நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்... எனக்கு உங்கள பாக்கணும் போல இருக்கு. " என்று கூறிவிட்டு, ஓவென்று அழுதாள் இனியா, பாரின் கண்களையும் குளமாக்கி.
*எனக்கும் கூட இப்படி வாழ்வது நரகமாக தான் இருக்கிறது* என்று கூற வேண்டும் என்று தோன்றியது பாரிக்கு. ஆனால், அவன் அவளுடன் பேச நினைப்பது, அவளுக்கு ஆறுதல் அளிக்கவே தவிர, அவளை மேலும் பலவீனமடையச் செய்வதற்கு இல்லை.
" எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்" என்றான் தனது வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
"ம்ம்ம்... " என்றாள் தனது அழுகையை அடக்கிக்கொண்டு.
" அழக்கூடாது... "
" ஐ லவ் யூ... " என்றாள் விம்மியபடி.
" எனக்கு தெரியும்டா... "
அவர்கள் தொலைபேசி அழைப்பை துண்டிக்கவில்லை... அவர்களால் துண்டிக்க முடியவில்லை...
மறுநாள்
தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்திற்கு வந்தாள் இனியா. சுபாஷும் அவர்களுடன் இருந்தான். இன்னும் நீதிமன்றத்திற்கு வந்து சேராத, அந்த ஒருவனுக்காக, இனியாவின் கண்கள் அலைபாய்ந்தன. .
சத்யாவின் வழக்கறிஞர், ராமதாஸ் அவனை நோக்கி பதட்டத்துடன் வந்தார்.
" ஏதாவது பிரச்சனையா? " என்றான் சத்யா.
ஆமாம் என்று தலையசைத்தார் ராமதாஸ்.
" என்ன பிரச்சனை?"
" ஜட்ஜ் தான்... "
" ஏன் அப்படி சொல்றீங்க? "
" அந்தம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். தேசம், பாரம்பரியம், கலாச்சாரம்ன்னு பாக்குறவங்க. எல்லா கேசையும் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிச்சிடுவாங்க."
" அப்ப அது நமக்கு சாதகமான விஷயம் தானே?"
"ஆமாம், ஆனால் அவங்க சட்டத்தை விட உண்மைக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. அதுவும் டைவர்ஸ் கேஸ்ன்னா, பெரும்பாலும் விவாகரத்தை தவிர்க்க தான் முயற்சி செய்வாங்க. தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க சந்தர்ப்பம் கொடுப்பாங்க. "
" அந்தம்மா ஜட்ஜா, இல்ல சமூக சேவகியா? அவங்கள நம்மளால மாற்ற முடியாதா?" என்றான் வெறுப்புடன்.
" நம்ம அவங்கள மாத்த முயற்சி செய்ற, அந்த நேரத்துல, அந்தம்மா கேஸையே முடிச்சிட்டு போய்டுவாங்க. இந்த கேசோட முடிவு, உங்க தங்கச்சி கைல தான் இருக்கு. அவங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் பரிசீலிக்கப்படும்."
"நீங்க கவலைப்பட வேண்டாம். அவள் உண்மையைச் சொல்வாள்."
" மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன். நம்ம தான் ஜெயிப்போம்." நம்பிக்கையுடன் சிரித்தார் ராமதாஸ்.
அவர்களின் எண் அழைக்கப்பட்டது. பாரியை காணாமல் பரிதவித்துக் கொண்டிருந்தாள் இனியா. பாரியைப் பார்த்தவுடன் அவள் கண்கள், அவன் மீது நிலைபெற்று நின்றன. அவள் தன்னை தேடுவதை பார்த்து புன்னகை புரிந்தான் பாரி. நிம்மதிப் பெருமூச்சு விட்டு, நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்தாள் இனியா. பாரி அவளைப் பின்தொடர்ந்தான்.
சத்யா சுபாஷுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த பொழுது, அவனுக்கு ரத்தம் சூடானது. ஏனோ இந்த சுபாஷ் பார்த்தாலே அவனுக்கு பொறுப்பதில்லை. அவனுடைய கவனம், நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து கொண்டிருந்த, நீதிபதியின் மீது சென்றது.
ரங்கநாயகி; முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாமல் திடமாய் காணப்பட்டார் அந்த நீதிபதி. இப்போது தான் கோவிலில் பூஜையை முடித்துக் கொண்டு வருபவர் போல, கை நிறைய வளையல்களும், நெற்றி நிறைய குங்குமமாய், பாடகி உஷா உதுப்பை நினைவுபடுத்தினார் அவர்.
சத்யாவும், சுபாஷும் முகத்தை சுருக்கி, ஒருவரை ஒருவர் வினோதமாய் பார்த்துக் கொண்டார்கள்.
" வழக்கை தொடங்கலாம்" என்றார் நீதிபதி.
" திரு பாரி அவர்களை விசாரிக்க விரும்புகிறேன்." என்றார் ராமதாஸ்.
பாரியின் பெயர் "மூன்று முறை" கூறி அழைக்கப்பட்டது. நமது கதாநாயகன் சாட்சி கூண்டில் வந்து நின்றான். அவன் செய்த முதல் விஷயம் என்னவென்றால், பதற்றத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த,
இனியவை பார்த்து புன்னகைத்தது தான்.
" நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்" என்பது போல, அவளை நோக்கி கண்களை மூடி சைகை செய்தான். இனியாவும், கலங்கிய கண்களுடன் தலையசைத்து புன்னகை புரிந்தாள்.
இது என்ன? விவாகரத்து பெருவதற்காகவா இவர்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறார்கள்? வழக்கமாக விவாகரத்து பெற விரும்பும் தம்பதிகள், ஒருவருக்கொருவரின் முகத்தைப் பார்க்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தாலும் கூட, அவர்களின் முகத்தில் வெறுப்பு இருக்கும். ஆனால் இவர்களோ, பார்வையின் மூலம் ஆறுதலை அல்லவா பரிமாறிக் கொள்கிறார்கள்? நம்பமுடியவில்லையே... அவர்களின் ஜாடை பேச்சை கவனித்த நீதிபதி, ஆச்சரியதுடன், தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டார்.
"மை லார்ட், பாரி என்னும் இந்த மனிதர், இனியவை அவரது திருமண நாளன்று, கடத்திச் சென்று அவரது குடும்பத்தை அவமானப்படுத்தியுள்ளார். சமுதாயத்தில் அவர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டிருப்பார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. அவரது திருமணம் நிறுத்தப்பட்டது. வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டத்தை, இந்த பாரியினால் இனியாவின் குடும்பம் சந்தித்திருந்தது. அப்போது, இவர் இனியாவிடம் அனுதாபம் காட்டுவது போல் நடித்து, அவர் மேலிருந்த இச்சையை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு, அவரை திருமணம் செய்துகொள்ள நினைத்திருக்கிறார்.( ராமதாஸ் கூறியதைக் கேட்டு, ஆத்திரத்தில் பல்லை நறநறவென்று கடித்தான் பாரி. ) இனியாவின் பெற்றோர்களும் வேறுவழியின்றி திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்கள். இவருடைய நாடகம் பற்றி இனியாவிற்கு தெரிய வந்த பொழுது, அவர் உடைந்து போனார். இந்த ஏமாற்றுக்காரரிடமிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறார். தட்ஸ் ஆல். மை லாட்."
"திரு. பாரி, இதைப் பற்றி நீங்கள் எதுவும் கூற விரும்புகிறீர்களா?" என நீதிபதி கேட்க,
"நான் என் மனைவியைக் கடத்தவில்லை..."
" அப்படி என்றால், இனியா கடத்தப்பட்ட நேரத்தில், அவர் தவறவிட்ட கால் கொலுசு, இவருக்கு எப்படி கிடைத்தது?" என்றார் ராமதாஸ்.
"நான் தான் அவருக்குக் கொடுத்தேன்" என்ற வார்த்தைகளைக் கேட்டு எல்லோரும் திரும்பி பார்க்க, அங்கே ராஜா நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து, பாரி புன்னகைக்கையில், சத்யா கோபத்தில் பல்லை கடித்தான்
"நீங்கள் யார்?" என்றார் நீதிபதி.
" என் பெயர் ராஜா."
" இவருடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இல்லையா?" என்று நீதிபதி, பாரியின் வழக்கறிஞர் ரமணனைப் பார்த்து கேட்டார்.
" பதிவு செய்யப்பட்டிருக்கிறது யுவர் ஆனர்."
" எனில் நீங்கள் சாட்சிக் கூண்டில் நின்று கூற வேண்டியதை கூறலாம்." என்றார் நீதிபதி.
ராஜா சாட்சி கூண்டில் வந்து நின்றான்.
" இனியாவின் கொலுசை பாரியிடம் கொடுத்தது நீங்கள் தான் இல்லையா?"
" ஆமாம் நான் தான் கொடுத்தேன்."
" அப்படி என்றால் இனியாவை கடத்தியது நீங்கள் தானா?"
" இல்லை. இனியாவை நான் கடத்தவில்லை."
" பிறகு அவருடைய கொலுசுக்கு உங்களுக்கு எப்படி கிடைத்தது? "
"இனியா கடத்தப்பட்டபோது, எனக்கு கிடைத்தது. அது அவள் காலில் இருந்து விழுந்தது."
"அவர் கடத்தப்பட்டபோது நீங்கள் பார்த்தீர்களா?"
"ஆமாம். பார்த்தேன்"
"நீங்கள் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை?"
"நான் அவர்களை அடைவதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்கள்".
"நீங்கள் ஏன் அங்கு சென்றீர்கள்?"
" சத்யாவை பதற்றமடைய செய்ய வேண்டுமென்று சென்றேன்."
"ஏன்?"
"சத்யா, என் சகோதரியை தனது காதலனுடன், வீட்டை விட்டு வெளியேறி சென்று, திருமணம் செய்துகொள்ள உதவினார். அதற்கு பதிலாக நான் அவரை அச்சுறுத்த விரும்பினேன். எனவே நான் வேண்டுமென்றே முன்ஜாமீன் பெற்றுக் கொண்டு, யார் கண்ணிலும் படாமல், இரண்டு நாட்களுக்கு மாயமானேன். சத்யாவை அச்சுறுத்துவதற்காக, மறுபடி இனியாவின் திருமண நாளன்று ஊர் திரும்பினேன்."
" அது தவறு என்று உங்களுக்குத் தெரியாதா?"
"அவர் வலிமையானவராக இருந்தால், ஏன் பதட்டமடைய வேண்டும்?"
" இனியவை கடத்தியது யார் என்று உங்களுக்கு தெரியாதா?"
இல்லை என்று தலையசைத்தான், ராஜா.
" மை லார்ட், இவரது வாக்குமூலத்தின்படி, இவர் சத்யாவின் எதிரி என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதேநேரம், அவரது சாட்சியம், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவவில்லை. நான் சத்யாவை விசாரிக்க விரும்புகிறேன்."
" பர்மிஷன் கிராண்டட்."
சத்யா, அடுத்த காட்சியாக அழைக்கப்பட்டான்.
"திரு. சத்யா, இவர் சொன்னது உண்மைதானா?"
"எஸ் மை லார்ட். பாரியும் ராஜாவும் கல்லூரி தோழர்கள். பாரியை காப்பாற்ற, ராஜா பொய் சொல்கிறார். நான் அவரது சகோதரிக்கு உதவியதால் அவர் என்னை பழிவாங்க நினைக்கிறார்."
" என் சகோதரி, அவர் விருப்பம் போல் வாழ, இவர் என் சகோதரிக்கு உதவினார். அதேபோல், அவரது சகோதரிக்கும் அவர் உதவ ஏன் மறுக்கிறார்? அன்று இவர் எனக்கு அறிவுரை வழங்கினார், உன் தங்கை சந்தோஷமாக இருக்கும் பொழுது, நீயும் அதை நினைத்து சந்தோஷம் தான் படவேண்டும். ஒரு அண்ணனாக, அவள் சந்தோஷத்தை தவிர வேறு உனக்கு என்ன வேண்டும்? என்று, அன்று அவர் எனக்கு கூறியது அவருடைய சகோதரிக்கு பொருந்தாதா? எனக்கு மிக அழகாக புரிய வைத்தவர், இன்று ஏன் அதை செய்ய தவறுகிறார் என்று எனக்கு புரியவில்லை."
" அவருடைய சகோதரியின் காதலுக்கு நான் உதவினேன் என்பது உண்மைதான். ஆனால் இங்கு விஷயமே வேறு."
" அதை இவர் எப்படி கூற முடியும்? இனியவை அழைத்து கேட்டுப் பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும், இரண்டும் ஒன்றேதான் என்பது."
" திருமதி இனியா பாரியின் நிலைப்பாட்டை நான் அறிய விரும்புகிறேன்." என்றார் நீதிபதி.
அனைவரின் பார்வையும், எழுந்து நின்ற இனியாவின் பக்கம் திரும்பியது. அவள் சாட்சி கூண்டில் ஏறி நின்று, நீதிபதியை வணங்கினாள்.
" ரமணன், நீங்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கலாம்."
குனிந்து நின்று கொண்டிருந்த இனியாவிடம் வந்தார் ரமணன்.
" திருமதி பாரி, உங்கள் கணவர் உங்களை கடத்தியதாக நம்புகிறீர்களா?"
இனியா இல்லை என்று தலை அசைத்தாள்.
"அவர் உங்களுடன் எப்படி நடந்து கொண்டார்? ( அவரை திகைப்புடன் பார்த்து மறுபடியும் சிரம் தாழ்த்தினாள் இனியா. ) அதாவது, அவர் உங்களை கடுமையாக கையாண்டாரா? நீங்கள் விரும்பாத விஷயங்களைச் செய்ய, அவர் உங்களை கட்டாயப்படுத்தினாரா? அவர் பாலியல் ரீதியாக உங்களை சித்திரவதை செய்தாரா?"
குனிந்து நின்றிருந்தவள், தலையைத் உயர்த்தி, பாரியை பார்த்தாள். கட்டுப்பாடில்லாமல் சிந்திய கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. பாரியின் உதடுகள், வேதனையான புன்னகையை சிந்தின.
அவன் எப்படி எல்லாம் அவளை துதித்தான் என்று அவள் எவ்வாறு கூறமுடியும்? அவளை ஒரு ராணி போல் அல்லவா அவன் உணரச் செய்தான். அவளுடைய சிறிய ஆசைகளைக் கூட, அவள் கூறும் முன்பே செய்து முடித்தானே... பாரியின் மீதிருந்த தனது கண்களை அகற்றாமல், இல்லை என்று தலை அசைத்தாள் இனியா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாரியின் முகம், சட்டென்று மாறியது இனியா லேசாக தள்ளாடுவதை பார்த்தபோது. தான் நின்றிருப்பது நீதிமன்றம் என்பதையும் மறந்து, ஒரே தாவில் சாட்சி கூண்டை தாவிக்குதித்து,
" இனியா... "
என்று கத்தியபடி அவளை நோக்கி ஓடினான் பாரி. அவள் கீழே விழும் முன் அவளைத் தன் தோளில் தாங்கி பிடித்தான். அவனைப் பார்த்து இனியாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. அதே புன்னகையுடன் அவள் அவன் தோளில் மயங்கி சரிந்தாள்.
" நீதிமன்ற மருத்துவ குழு, இந்த பெண்ணை பரிசோதித்து, அவருடைய உடல்நிலை பற்றி தெரிவிக்க வேண்டும் என்று இந்த கோர்ட்டு உத்தரவிடுகிறது. இப்பொழுது கோர்ட் கலையலாம்."
சேதுராமனும், சீதாவும் மருத்துவர் அறையின் வெளியே காத்திருந்தார்கள்.
" இதை இன்னிக்கே செய்யணும்னு என்ன அவசியம்? என்றான் சத்யா.
" நான் தான் அவங்களை பத்தி முன்னாடியே சொன்னேனே. அவங்க அரசாங்கப் பணம், வீணாக செலவழியுறத விரும்ப மாட்டாங்க. அதனால எல்லா கேசையும் சீக்கிரம் முடிச்சிடு வாங்க."
அதைக்கேட்டு பெருமூச்சுவிட்டான் சாத்யா.
சேதுராமன் இல்லம்
இனியா மிகவும் தொய்வாக காணப்பட்டாள். இப்போதெல்லாம் அவள் தான் சரியாக சாப்பிடுவதே இல்லையே.
" அம்மா, அவளை நல்லா சாப்பிட வையுங்க. ஒருவேளை, இதுக்காகவே அந்த ஜட்ஜ் அம்மா, நமக்கு அகைன்ஸ்ட்டா தீர்ப்பு சொல்ல வாய்ப்பிருக்கு. அவ ஒரு அனிமிக் அப்படிங்கறத மறந்துடாதீங்க. மயங்கி விழறது ஒன்னும் அவளுக்குப் புதுசு இல்ல" என்றான் சத்யா.
" நான் பாத்துக்கறேன்" என்றார் சீதா.
இனியாவின் அறைக்கு சென்று அவளுக்கு ஆப்பிள் பழச்சாறை கொடுதர் சீதா.
" எனக்கு வேண்டாம்" என்றாள் இனியா.
" குழந்தை தனமா பிடிவாதம் பிடிக்காத" என்று கடிந்துகொண்டார் சீதா.
அவரிடமிருந்து பழச்சாறை பரித்து மடமடவென குடித்து முடித்தாள் இனியா.
" போதுமா? "
" எதுக்காக என் மேல கோவப்படுற? உன்னை நானா உன் அண்ணனுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு இங்கே இருக்க சொன்னேன்? உன் மனசுல நீ என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க? உன்னோட மோசமான உடல்நிலையால தான், நீ கோர்ட்ல மயங்கி விழுந்த. ஒருவேளை இன்னிக்கு நீ சரியாக இருந்திருந்தா, எல்லா விஷயத்தையும் ஜட்ஜ் கிட்ட சொல்லிஇருந்தால், இன்னைக்கே இந்த கேஸ் முடிஞ்சு போயிருந்திருக்கும்."
சீதாவை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் இனியா. அவள் முதுகை மெல்ல வருடிக் கொடுத்தார் சீதா. அவருக்கு தெரியாதா, இனியாவின் மனது என்னவென்று...
.....
இனியாவிற்கு மிகவும் பிடித்த, மாமர ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் பாரி. இனியாவின் உடல்நிலை குறித்து, அவன் மிகவும் வேதனைக்குள்ளாக்கி இருந்தான். அவள் ஏன் மயங்கி விழுந்தாள் என்பதை கணிப்பது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. அவள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவள் எவ்வளவு பலவீனமடைந்து போயிருக்கிறாள் என்பதை, நீதிமன்றத்தில் அவளை பார்த்த போதே அவன் புரிந்து கொண்டான். அவனைப் போலவே, அவளாலும் அவனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது என்பது அவனுக்கு தெரியும். ஊஞ்சலின் சங்கிலியை, தடவி கொடுத்து விட்டு, அதில் கண்ணை மூடி சாய்ந்தான் பாரி. இனியா பிரிந்து சென்ற நாளிலிருந்து, அவன் நிம்மதியாக உறங்குவது இல்லை. இனியாவின் நிலைமையும் அதுதான் என்பதும் அவனுக்கு தெரியும். இந்த பிரிவு தற்காலிகமானது தான் என்ற போதும்கூட, ஒவ்வொரு நாட்களையும் கடத்துவது ஒரு யுகமாக தோன்றியது பாரிக்கு.
அப்போது ராஜாவிடம் இருந்து அவன் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
" சொல்லு ராஜா... சரி... கிரேட்..... உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... தேங்க்ஸ்... "
அவன் அழகு முகத்தை அலங்கரித்த, வெற்றிப் புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான் பாரி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top