Part 32
பகுதி 32
சேதுரமன் இல்லம்
இனியா மெதுவாக கண்களைத் திறந்தாள். அவள் பிறந்தகத்தில், தன்னுடைய அறையில், தன்னுடைய கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள்.
சேதுராமன், சீதா, சத்யா ஆகியோரின் உரத்த குரல்களை அவளால் கேட்க முடிந்தது. நிலைமை சூடேறி கொண்டிருந்தது. அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
"என்னை கலந்தாலோசிக்காம இந்த கல்யாணத்துக்கு நீங்க எப்படி ஒத்துக்கிட்டீங்க? நல்லவன் மாதிரி வேஷம் போட்டு, எவ்வளவு அழகா நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டான் அந்த பாரி. அவனுடைய நடிப்பு உண்மைன்னு நீங்களும் நம்புறீங்க."
" இப்போ கூட அவர்தான் இனியவை கடத்தினார்ன்னு என்னால நம்ப முடியல" என்றார் சீதா.
" என்னாலயும் உண்மையில் நம்ப முடியல." என்றார் சேதுராமன்.
"அப்படின்னா, கடத்தப்பட்ட போது, அவள் தவறவிட்ட அவளுடைய கொலுசு அவனுக்கு எப்படி கிடைத்தது? " என்று மடக்கினான் சத்யா.
"எனக்கு அது எப்படின்னு புரியலை" என்றார் சேதுராமன்.
" ஒருவேளை, யாராவது கொடுத்திருக்கலாம்." என்றார் சீதா தயங்கியபடி.
" இப்படி எல்லாம் முட்டாள் தனமா யோசிக்காதீங்க. இது அனுமானத்தை அடிப்படையா வச்சு முடிவெடுக்கிற விஷயம் இல்லை. இனியாவோட வாழ்க்கை. அவன் உண்மையிலேயே எந்த தப்பும் செய்யலைன்னா, அவன் அதை நிரூபிச்சி காட்டட்டும். அவன், அதை செய்யாத வரைக்கும், ஒரு கடத்தல்காரனோட என் தங்கையை இருக்க நான் அனுமதிக்க மாட்டேன்."
" ஆனால் அதை நம்ம தீர்மானிக்க முடியாது. அந்த முடிவை எடுக்க வேண்டியவள் இனியாதான். அவள் விரும்புவதை தீர்மானிக்க அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு." என்றார் சேதுராமன் திடமாக.
" அப்போ, ஊர் ஜனங்களுக்கு முன்னாடி, நமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு என்ன பதில்? நம்ம எப்படி தலை குனிஞ்சி நின்னோம்னு மறந்துட்டீங்களா?"
"கடந்த காலம் கடந்து போயிடுச்சு. அந்த இதயமற்ற ராதிகாகிட்ட இருந்து அவ தப்பிச்சதில் எனக்கு சந்தோஷம் தான்." என்றார் சீதா.
"உங்களுக்கு பைத்தியமா? ஒரு கடத்தல்காரனை எப்படி நம்புவது? கடத்த தயங்காதவன், வேற என்ன செய்ய தயங்குவான்? அவன் அவளை வேற ஏதாவது செஞ்சிட்டா என்ன செய்வீங்க? "
"அவர் அப்படி எல்லாம் செய்யமாட்டார். நான் அவரை நம்புறேன். இந்த விஷயத்தில் நாம தலையிடாமல் இருப்பது நல்லதுன்னு நினைக்கிறேன்." என்றார் சேதுராமன்.
"என்னால உங்கள மாதிரி இருக்க முடியாது. இதுக்கப்புறம், எனக்கு எதிராக ஏதாவது செய்ய நினைச்சா, நீங்க என்ன உயிரோட பார்க்க மாட்டீங்க. புரிஞ்சுதா?"
"முட்டாளாடா நீ?" என்று கத்தினாள் சீதா.
"நான் முட்டாளா இருந்தேன் ... ஆனால் இனிமே இருக்கப்போறதில்லை."
உருண்டோடும் கண்ணீருடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. சத்யா, விரைந்து சென்று, அவள் கையை எடுத்து, வழக்கம் போல் தன் தலையில் வைத்துகொண்டான்.
" அண்ணா, தயவுசெய்து ஒரு முறை என் பேச்சைக் கேளுங்க" என்று கெஞ்சினாள் இனியா.
"நான் சொல்லும் வரை நீ இந்த வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. இது என் மேல சத்தியம்." என்றான் அவள் பேச்சை வெட்டி விட்டு.
" என்னடா செய்ற நீ?" என்று அவன் காலரைப் பிடித்துக் கொண்டு கத்திய சீதாவை, இனியாவின் திடமான குரல் தன் பக்கம் திருப்பியது.
"கவலைப்படாதிங்கம்மா பாரி தன்னை நிரூபிப்பார்."
தன் தலையை உயர்த்தி, கம்பீரமாக சொன்னாள் இனியா. அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் சத்யா. தனது சட்டை காலரில் இருந்து சீதாவின் கைகளை விடுவித்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டு ஆத்திரத்துடன் வெளியேறினான், சத்தியா, சேதுராமனின் அழைப்பிற்கு செவிசாய்க்காமல். இதைப் பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை அவன்.
" சத்யா, சொல்றத கேளு போகாத நில்லு. சத்யா..."
இனியாவின் கண்களில் இருந்து கட்டுப்பாடில்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
"நீ அவனுடைய சத்தியத்தை கடைப்பிடிக்கத் தேவையில்லை. வா, நான் உன்னை உன் வீட்டில் விட்டுடு வரேன். " என்றார் சேதுராமன்.
இல்லை என்று தலையசைத்தாள் இனியா.
" இதெல்லாம் என்ன இனியா? என்ன நடக்குது இங்க?" என்றார் சீதா.
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலம்மா. பாரி என்னை ரொம்ப நேசிக்கிறார். என்னைக் கடத்தினது அவரா இருக்கவே முடியாது."
" இது சம்பந்தமா, பாரி உன்கிட்ட ஏதாவது சொல்லியிருக்கிறாரா?"
அவசரமாக இல்லை என்று தலை அசைத்தாள் இனியா.
"இல்லப்பா. அவர் எதையும் சொல்றதுக்கு முன்னால, அண்ணன் அவரை அடிச்சிட்டார். அண்ணன் அடிச்சதுல அவருக்கு ரத்தமே வந்துடுச்சு. அவர் எப்படி இருக்கார்ன்னு தெரியல. எனக்கு அவரோட பேசணும் போல இருக்கு. " என்று கூறிவிட்டு ஓவென்று அழுதாள் இனியா.
" சரி அவர் கூட ஃபோன்ல பேசு. "
" அண்ணன் அவரை ரூமுக்குள்ள தள்ளி பூட்டிடார். அந்த ரூம்ல ஃபோன் இல்ல." அழுது கொண்டே கூறினாள் இனியா.
" சரி, நான் போய் அவரை பாத்துட்டு வரேன். என்னை சத்யா என்ன செய்கிறான்னு பாக்குறேன்."
பாரியை சந்திக்க, அவன் இல்லம் நோக்கி புறப்பட்டு சென்ற சேதுராமன், அங்கு பாரியை காணாமல் குழம்பினார். அவன் வீடு திறந்து கிடந்தது. சத்தியா, பாரியை வைத்து பூட்டிய அறையின் கதவு உடைந்து கிடந்ததை சேதுராமன் கண்டார். தன் வீட்டிற்கு திரும்பி வந்து, தான் பார்த்ததைக் கூறினார்.
பாரியை பற்றியும், சட்டென்று மாறிவிட்ட தன் வாழ்க்கையைப் பற்றியும், நினைத்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தாள் இனியா. அவள் சத்யாவின் மீது, கடுமையான கோபத்தில் இருந்தாள். பாரியிடம் என்னவென்று சரியாக விசாரிக்காமல், அவனை அடிப்பது எப்படி சரியாகும்? ஆனால், பாரிக்கு அவளுடைய தொலைந்து போன கொலுசு எப்படி கிடைத்தது? அது பற்றி அவன் கூறாத வரை, அவனை யார் நம்புவார்? பாரி, அவளை கடத்தி இருப்பான் என்று இனியா நம்பவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்தால், சத்யாவிடமும், மற்ற யாரிடமும் இதை பற்றி கூற வேண்டாம் என்று தன்னை அவன் ஏன் எச்சரிக்க வேண்டும்? ஒருவேளை அவளை கடத்தியது பாரியாக இருந்தால், அவள் அதைப்பற்றி ஏன் மற்றவர்களிடம் கூற போகிறாள்? குறிப்பாக சத்யாவிடம்...? அவளா சொல்வாள்? அப்படியென்றால், பாரிக்கு நன்றாக தெரிந்த யாரோ ஒருவர் தான் அதை செய்திருக்க வேண்டும். அப்படியெனில் இனியா எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பாரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்.
*ப்ளூ மூன் பப்*
" அவன் நடிக்கிறான்னு எனக்கு நல்லா தெரியும். எப்படி ஒருத்தன் இவ்வளவு நல்லவனா இருக்க முடியும்? அவன் இனியாவுக்காக ஆர்கிவ் பண்ணப்போ, அவன் ஒரு நல்ல ஃபிரண்டுன்னு நெனச்சேன். ஆனால் எல்லாமே நடிப்பு. அவன் இவ்வளவு இழிவானவனா இருப்பான்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல. நாம் அவனை எவ்வளவு முட்டாள்தனமா நம்பிட்டோம்... அவனோட நடிப்பு அவ்வளவு தத்ரூபமா இருந்தது..."
சத்யா, கோபத்தில் மூன்றாவது பெக்கைப் குடித்து முடித்தான்.
"அவன் செஞ்சத என்னால் நம்ப முடியல. அவன் ரொம்ப நல்லவன்னு நினைசேன். ஆனால், அவன் எங்க நம்பிக்கையை பயன்படுத்திக்கிட்டான்."
" நம்ம அவனை இனியா பக்கத்தில் நெருங்க விடக்கூடாது. அவன் அவள் மனதை மாத்திடுவான்."
" அவனால அது முடியாது. நான் வழக்கம்போல, இனியாகிட்ட சத்தியம் வாங்கிட்டேன்."
"இந்த முறையும் அவ உனக்குக் கட்டுப்பாடுவான்னு நினைக்கிறியா?"
" சந்தேகமில்லாமல்... அவர் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவ."
அதைக்கேட்டு வெற்றிப் புன்னகை புரிந்தான் சுபாஷ்.
" அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே அந்த குணம் தான். ஆனால், பாரி சும்மா இருப்பான்னு நீ நினைக்கிறாயா? "
" நிச்சயம் அவன் சும்மா இருக்கமாட்டான். அதுக்கு என்ன செய்யனும்னு எனக்கு நல்லா தெரியும். அவன் தன்னைச் சுதாகரித்துக்துக்குறதுக்கு முன்னாடி, அவன் நிலை குலைந்து போற அளவுக்கு, என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டேன்."
" என்ன செஞ்ச நீ?"
அவன் என்ன செய்தான் என்பதை சுபாஷிடம் கூறினான் சத்யா. அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு போனான் சுபாஷ்.
" ஆனால் இதை எப்படி இவ்வளவு சீக்கிரம் உன்னால செய்ய முடிஞ்சது?"
" குறுக்கு வழியை பயன்படுத்தி தான். இந்த முறை, அவனுக்கு எந்த ஒரு சாதகமான சந்தர்ப்பத்தையும் நான் கொடுக்கப் போவதில்லை."
"அருமை." என்று சிலாகித்தான் சுபாஷ்.
மறுநாள்
இனியாவின் கோபம், எல்லையை கடந்து கொண்டிருந்தது. பாரி வந்து, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வான் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். அவன்தான் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விட்டானே, பிறகு அவளை வந்து பார்க்க ஏன் தாமதம் செய்கிறான்? ஏன் இன்னும் அவளை தொலைபேசி மூலமாக கூட தொடர்பு கொள்ளவில்லை? அவனுடைய கை பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள, இனியா முயற்சி செய்த போது, அவனுடைய தொலைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. எங்குதான் சென்றுவிட்டான் அவன்?
அப்போது சீதாவின் கைப்பேசி ஒலித்தது. அது சந்தேகமில்லாமல் பாரியின் அழைப்பு தான். அவன் பெயரைப் பார்த்து சீதா முகத்தில் புன்னகை மலர்ந்தது. இனியாவின் அறைக்கு செல்ல அவள் எத்தனித்த பொழுது, சத்யா வீட்டிற்குள் நுழைவதைக் கண்டாள். அவள் பச்சை பொத்தானை அழுத்தி பாரிக்கு, சத்யாவின் இருப்பை உணர்த்தினாள்.
"அம்மா, எனக்கு காபி கொடுங்க." என்று கேட்ட சத்யாவின் குரலை கேட்டு, அவன் வீட்டில் இருப்பதை புரிந்துகொண்ட பாரி, அந்த அழைப்பை துண்டித்தான்.
சூழ்நிலையை, சத்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதை உணர அவனுக்கு அவ்வளவு கடினமாக இல்லை. சத்யா ஒரு முரட்டு மூடன் என்பதை நன்கறிவான் பாரி.
சீதா இரண்டு கப் காபி தயார் செய்தார். ஒரு கோப்பை சத்யாவிடம் கொடுத்துவிட்டு, மற்றொரு கோப்பையுடன் இனியாவின் அறைக்கு சென்றார்.
தன் முழங்கால்களைக் கட்டிப்பிடித்துகொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தாள் இனியா.
" இனியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, பாரி எனக்கு கால் பண்ணி இருந்தார். ஆனால், சத்யா இங்கே இருக்குறதால என்னால பேச முடியல."
இனியாவின் முகம் பிரகாசமடைந்தது. சீதாவின் கைபேசியை அவள் கையிலிருந்து பறித்து, பாரியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டாள். முதல் மணியிலேயே அதற்கு பதில் அளித்தான் பாரி.
அந்த அறையைவிட்டு அமைதியாய் வெளியேறினார் சீதா.
"பாரி.... " துக்கம் தொண்டையை அடைக்க அவனது பெயரை உச்சரித்தாள் இனியா.
அவளுடைய உடைந்த குரலைக் கேட்டு உடைந்து போனான் பாரி.
" இனியா, ப்ளீஸ் அழாதே. நீ தைரியமா இருக்கணும். நான் உன்னை கடத்தி... "
" என்னை யாரு கடத்தினதுன்னு எனக்கு கவலை இல்லை. ஐ ஜஸ்ட் டோன்ட் கேர்"
" நீ என்னை நம்புறல்ல? "
அவனுக்கு பதில் கூறும் முன் கதவு தட்டும் ஓசை கேட்டது.
" நான் உங்க கிட்ட அப்புறம் பேசுறேன். " என்று கூறிவிட்டு, அழைப்பை துண்டித்து, கைபேசியை தலையணையின் அடியில் ஒளித்து வைத்தாள் இனியா. முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவை திறந்த போது, சத்யா நின்று கொண்டிருந்தான்.
" அம்மா சொன்னாங்க, நேத்துல இருந்து நீ எதுவுமே சாப்பிடலையாமே. ( அவனுக்கு ஏதும் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தாள் இனியா) நீ ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்க. இப்படி இருக்கிறது உன்னோட உடம்புக்கு நல்லதில்லை. ஏதாவது சாப்பிடு."
மேஜையின் மீது, சீதா வைத்து சென்ற காஃபி கோப்பையை எடுத்து, அதில் இருந்த காஃபியை ஒரே மடக்கில் குடித்து முடித்தாள். அதை பார்த்து, சிரித்தபடி அங்கிருந்து சென்றான் சத்யா. அவன் செல்லும் வரை காத்திருந்துவிட்டு, அவசரமாக ஓடி சென்று கைபேசியை எடுத்தவள், மறுபடியும் பாரியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அது மீண்டும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தது. அது அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மறுநாள்
" இனி....யா... " என்று வெளியில் இருந்தபடி, அவளைத் கத்தி அழைத்தான் பாரி.
அதைக் கேட்டு, அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்த இனியா, பாரி மிகுந்த கோபத்துடன்நின்றிருப்பதை கண்டாள். அவனை இவ்வளவு கோபப்படுத்தியது எது என்பது அவளுக்குப் புரியவில்லை. அதே கோபத்துடன் அவளை நெருங்கினான் பாரி. அவனை அப்படி பார்க்கவே இனியாவிற்கு பயமாக இருந்தது. இதற்கு முன், அவள் அவனை இப்படி பார்த்ததே இல்லை. அவன் கேட்ட கேள்வி, அவளை வாயடைக்கச் செய்தது.
" என்னை டிரைவர்ஸ் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டியா? "
ஏதும் புரியாமல், அவனையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்த இனியாவிடம் சில காகிதங்களை நீட்டினான் பாரி.
" என்ன இது? நான் இல்லாம வாழறதுன்னு முடிவுக்கே வந்துட்டியா? டெல் மீ டேமிட்" என்று சீறினான் பாரி.
அவன் கையிலிருந்த காகிதத்தை, அவனிடம் இருந்து பிடுங்கி, படித்து பார்த்த இனியா அதிர்ந்து போனாள். அது விவாகரத்து பத்திரம். அவளுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது என்னவென்றால், அவளுடைய கையப்பம், அதில் இருந்தது தான். அவள் கையப்பம், எப்படி இதில் வந்தது? அவள் தான் எதிலுமே கையொப்பம் இடவில்லையே. அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
" பதில் சொல்லு இனியா... "
அப்பொழுது, பின்னால் இருந்து சத்யாவின் குரல் கேட்டது.
" ஆமாம், அவளுக்கு உங்கிட்டயிருந்து விவாகரத்து வேணும்." கோபத்துடன் கூறினான் சத்யா.
" அதை சொல்ல நீ யாரு?" என்று பதிலுக்கு கத்தினான் பாரி.
" உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாம கோர்ட்ல சந்திக்கலாம்."
அவன் சட்டை காலரை எட்டிப்பிடித்தான் பாரி.
" நான் வரமாட்டேன்னு நினைக்கிறாயா? நிச்சயம் வருவேன். நிச்சயம் ஜெயிப்பேன்."
" நீ ஒரு கடத்தல்காரன் அப்படிங்கறத மறந்துடாத."
" ஓ அப்படியா? உன்ன பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு. இதுக்காக நீ ரொம்ப வருத்தப்பட போற. இப்போ, இனியா என்னுடைய மனைவிங்கறத நீ மறந்துடாத."
"நீ அவளைக் கடத்தினதால தான் அவ உனோட மனைவியானாள். நீ என் குடும்பத்துக்கு ஏற்படுத்திய அவமானத்தை நான் மன்னிக்கவே மாட்டேன்."
" ஓவர் கான்ஃபிடன்ஸ் நல்லதில்லை. உனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு பக்கம் இருக்கக்கூடும். நான் எப்படி என்னுடைய மனைவியை திரும்ப அடையறேன்னு நீ பாக்க தான் போறே. எல்லாத்துக்கும் மேல, நான் நெனச்சா, உன்னை ஜெயில்ல தூக்கி வைக்க முடியும். அதற்கான சரியான ஆதாரம் எனக்கு இப்பதான் கிடைச்சது."
அவன் சொன்னதைக் கேட்டு, குழப்பம் அடைந்தான் சத்யா.
அவனுக்கு என்ன பெரிய ஆதாரம் இங்கு கிடைத்திருக்க முடியும்? இனியா தான் அவனிடம் எதுவுமே சொல்லவில்லையே. அது என்னவாக இருக்கக்கூடும்?
அங்கிருந்து செல்வதற்கு முன், கட்டுப்பாடில்லாமல் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த இனியாவை திரும்பி பார்த்தான் பாரி. சில நொடி அவளை கண் இமைக்காமல் பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றான்.
" என்னடா பைத்தியக்காரத்தனம் இது? அவளை அவ புருஷன்கிட்டயிருந்து பிரிச்சு வச்சு, நீ என்னடா சாதிக்க போற?" என்று கண்ணை கசக்கினாள் சீதா.
" புருஷனா இருந்தா என்ன? அவன் இல்லாம அவளால வாழ முடியாதா?"
" ஏண்டா அவன் இல்லாம அவள் வாழனும்? "
" இந்த விஷயத்தில் நீங்க தலையிடாதீங்க. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது."
அப்பொழுது இனியாவின் கேள்வியால் திகைத்துப் போனான் சத்யா.
" ஒருவேளை பாரி, தான் நிரபராதின்னு நிரூபிச்சிட்டா என்ன செய்வீங்க? நான் கடத்தப்பட்டப்போ, நம்ம குடும்பம், பெரிய அவமானத்தைச் சந்தித்தது அப்படிங்கிறது உண்மைதான். அதை நானும் ஒத்துக்கறேன். அதனாலதான், நீங்க செஞ்சதை எல்லாம் பொறுத்துக்கிட்டு, நான் அமைதியா இருக்கேன். ஆனா, நீங்க செஞ்சது சரி இல்லை. நீங்க தான் பாரிக்கு பேசவே சந்தர்ப்பம் கொடுக்கலயே. அவர் பேச்சைக் கேட்காமல், அவரை அடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உங்க அனுமானம் தவறாக இருந்தா நீங்க என்ன செய்வீங்க? அவரது மரியாதையை எப்படி திருப்பி கொடுப்பிங்க?"
அவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா. அவனுடைய சகோதரி அவனுக்கு சவால் விடுகிறாள். பாரி நிரபராதியாக இருக்க முடியுமா? இனியாவின் கோபத்தை கண்டு அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது. பாரி, அவளை எவ்வளவு புத்திசாலித்தனமாக மாற்றிவிட்டிருக்கிறான்... அவன் இப்போது அவனுடைய தங்கைக்கு பதில் கூறியாக வேண்டும். அவனுக்கு தன் சகோதரியை எப்படி அமைதி அடைய செய்வது என்று தெரியும். வழக்கம்போல, அவளை உணர்ச்சி பூர்வமாய் வாயடைக்கச் செய்து கொள்ளலாம் என்று எண்ணமிட்டான் சத்யா.
"நான் என்ன செய்யனும்னு நினைக்கிற? நான் அவன் காலை தொட்டு மன்னிப்பு கேட்கனுமா?"
கண்ணீர் ததும்பிய இனியாவின் முகத்தில், வெற்றிப் புன்னகை மளர்ந்ததை கண்டு, திடுக்கிட்டான் சத்யா.
" நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை" என்று இனியா கூறுவாள் என்று அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மேலும் அவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில்,
" அதேதான். பாரி தன்னை நிரபராதின்னு, நிரூபிச்சா, நீங்க அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும்." என்று சற்றே நிறுத்தியவள்,
" நீங்க அப்படி செய்யும் பொழுது, நான் உங்கள தடுப்பேன்னு நினைக்காதீங்க."
தன் முன்னால் நின்று பேசிக் கொண்டிருப்பவள் தனது சகோதரி அல்ல, பாரியின் மனைவி என்பதை புரிந்து கொள்ள இது போதுமானதாக இருந்தது சத்யாவிற்கு. முதல் முறையாக, தவறு செய்து விட்டேமோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. இனியாவின் தொனியில் அவர் ஒருவித உறுதியை உணர்ந்தான். ஆனால், அவனது *தான்* என்ற எண்ணம், அவனை அதை ஒப்புக்கொள்ள அனுமதிக்கவில்லை.
" பாக்கலாம்". என்று கூறி அங்கிருந்து சென்றான் சத்யா.
"பாரி இல்லாமல் வாழ்வதா?" அவளால் அதைப் பற்றி யோசிக்கக்கூட முடியவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top