Part 31
பாகம் 31
பாரியின் பிறந்தநாள்
குளியலறையிலிருந்து வெளியே வந்த இனியா, பாரி தூக்கத்திலிருந்து எழுந்து விட்டதை கண்டு, அவனை நோக்கி ஓடினாள்.
" ஹாப்பி பர்த்டே ஒன்ஸ் அகைன்" என்றாள் அவனை அணைத்துக் கொண்டு.
"தேங்க்யூ" என்றான் பாரி.
" அவ்வளவுதானா?" என்றாள் இனியா, தன் கன்னத்தை காட்டியபடி.
சிரித்து விட்டு அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் பாரி.
" நான் உங்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்."
" முக்கியமான விஷயமா, என்ன அது?"
" உனக்கு சத்தியம் பண்ணி கொடுத்தது மாதிரி, இனிமே நான் உங்கிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்."
" நீங்க என்ன சொல்ல வரீங்க?" என்றாள்.
" ரிலாக்ஸ் நம்ம இதைப்பற்றி சாயந்திரம் பேசலாம்."
" சரி. இப்ப என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போங்க. "
" பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வரேன்"
அவன் கூறியது போலவே, பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்தான் பாரி. இனியாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்று, அவளை கோவில் வாசலில் இறக்கி விட்டான்.
" நீங்க வரலையா? "
என்று கேட்டவளை,
" உனக்கு தெரியாதா?" என்பதுபோல பார்த்தான்.
" எனக்காக கூட வர மாட்டீங்களா? "
அதைக்கேட்டு, உதடு கடித்து சிரித்தான் பாரி. அதன் பிறகு, கோவிலுக்கு வர மாட்டேன் என்று கூற, அவனுக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ன? இனியாவிற்காக கோவிலுக்குள் சென்றான் பாரி.
" யார் பெயரில் அர்ச்சனை செய்யணும்? " என்று அர்ச்சகர் கேட்டபோது,
இனியாவின் பெயரை பாரியும், பாரியின் பெயரை இனியாவும் கூறினார்கள்.
" இன்னைக்கு உங்களுடைய பர்த்டே. அதனால உங்க பேரில் தான் அர்ச்சனை செய்யணும்" என்றாள் இனியா.
" நீ நல்லா இருந்தா, நான் நல்லா இருப்பேன்." என்றான் பாரி.
அதைக் கேட்டு புன்னகை புரிந்த அர்ச்சகர்,
"எந்த பிரச்சனையும் இல்ல. இரண்டு பேருடைய பெயர்லயும் பேஷா அர்ச்சனை செஞ்சிடலாம்"
என்று கூறிவிட்டு, மந்திரம் ஜபிக்க தொடங்கினார். பாரியும், இனியாவும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். பூஜையை முடித்து, அவர்களிடம் பிரசாதத்தை வழங்கினார் அர்ச்சகர். இருவரும் சற்று நேரம் கோவிலில் அமர்ந்தார்கள். அப்போது, அர்ச்சகர், யாரோ ஒரு பெண்மணியை நலம் விசாரிப்பதை, அவர்கள் கவனித்தார்கள். அந்தப் பெண்மணி, மிகவும் ஏழ்மையானவர் என்று தெரிந்தது.
" எப்படி இருக்கமா? உன் பையன் எப்படி படிக்கிறான்? " என்றார் அர்ச்சகர்.
" ரொம்ப நல்லா படிக்கிறான். ஆனா, கணக்கு ஒன்னு தான் அவனுக்கு பிரச்சனை. அவனை டியூஷன் அனுப்புற அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அவங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம், எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை அவன் தான். இந்த வருஷம் அவன் 12ஆவது. நல்ல மார்க் எடுத்தா தான் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். அத நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு." என்றார் கவலையாக.
இனியாவின் முகம் போன போக்கை பார்த்து, பாரிக்கு புரிந்தது, அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பது. அவள் தோளை மெல்ல தொட்டு, உனக்கு தோன்றுவதை செய் என செய்கை செய்தான். இனியாவின் முகம் சந்தோஷத்தில் சட்டென மலர்ந்தது. அந்த பெண்மணியின் அருகில் சென்றாள்.
" என் பெயர் இனியா. நான் ஒரு மேத்ஸ் டீச்சர். நான் உங்க பையனுக்கு மேத்ஸ் சொல்லி தரேன். இது என்னுடைய கார்ட். அவனை எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்."
" உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல" என்றாள் தழுதழுத்த குரலில், அந்தப் பெண்மணி.
அந்தப் பெண்மணியின் கலங்கிய கண்களை பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு போனாள் இனியா. பாரியோ, தன் மனைவியின் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை இனியா. கோவிலில் பார்த்த அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலை, அவளை பாதித்தது என்பதை புரிந்து கொண்டான் பாரி. அவள்தான், ஆசிரியப்பணியை சேவையாக செய்பவள் ஆயிற்றே.
" இனியா... "
"ம்ம்ம்ம்"
" நீ ஏன் கவர்மெண்ட் வேலையில் சேர்ந்து, கஷ்டப்படுற ஏழை பிள்ளைகளுக்கு உதவ கூடாது?"
இனியா அதிர்ச்சியில் உறைந்து போனாள். எப்படித்தான் இவனுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோன்றுகிறது?
" என்ன ஆச்சு, ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற? "
" என்னோட பிரச்சனைக்கு நீங்க சொலுஷன் மட்டும் கொடுக்கல, என்னுடைய கரியருக்கு ஒரு அர்த்தத்தையும் கொடுத்திருக்கீங்க. என் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சிகிறீங்க?"
" நீதானே சொல்லுவ, இது வேலை இல்ல சேவைன்னு.. "
" நீங்க எனக்கு கிடைத்த பொக்கிஷம்." அவன் கண்ணத்தை கிள்ளினாள்.
" அது சரி....உன்னுடைய வேலையில் இவ்வளவு ஆர்வத்தோடு இருக்குற நீ, இதையெல்லாம் எப்படி முன்னாடியே யோசிக்காம விட்ட?"
"ஏன்னா, அழகா இருந்த ஒரு சிடுமூஞ்சிய, எப்படி மடிக்கிறதுன்னு, என்னுடைய மூளை தீவிரமா யோசிகிட்டு இருந்தது. அந்த மனுஷன், வேற எதையுமே என்னை யோசிக்க விடல."
களுக் என்று சிரித்தபடி அவளை இழுத்து இறுக அணைத்தான்,
" க்ரேசி வுமன்" என்று கூறியபடி.
மாலை
ஏதோ, அவளுக்குத்தான் பிறந்த நாள் என்பது போல, சிவப்பு சேலையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் இனியா. சும்மாவே அவளைப் பார்த்து மயங்கி போகும் பாரி, சொக்கித் தான் போனான். அவனை பார்த்து சிரித்த இனியாவின் முகம், சட்டென்று மாறியது.
" நீங்க எதோ டென்ஷன்ல இருக்கிற மாதிரியே ஏன் எனக்கு தோணுது?"
" நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்ல."
அவனை சோபாவில் அமர வைத்தாள் இனியா.
" இங்க பாருங்க, நான் உங்க வைஃப். நீங்க எதற்காகவும் டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம். ஒருவேளை எங்கிட்ட சொல்றதுல உங்களுக்கு பிரச்சனைனா, நீங்க என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்க இப்படி டென்ஷன் ஆகாதீங்க. உங்களை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு."
" ஆனா, நான் உனக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கேன், உங்கிட்ட எதையும் மறைக்குறதில்லைன்னு. நான் உங்கிட்ட எதையும் மறைக்க விரும்பல. உங்கிட்ட மறைச்சு வைக்கிறது எனக்கு உறுத்தலா இருக்கு."
" நீங்க ஃப்ரீயா இருக்கணும்னு தான், நீங்க எல்லாத்தையும் என்கிட்ட சொல்லணும் நான் கேட்டேன். ஆனால் அதுவே உங்க டென்ஷனுக்கு காரணமாயிருந்தா, நீங்க எங்கிட்ட எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா நீங்க என்கிட்ட ஏதாவது ஒரு விஷயத்தை மறச்சா, அதற்கு நிச்சயம் ஒரு நியாயமான காரணம் இருக்கும். காரணம் இல்லாமல் நீங்கள் எதையும் என்கிட்ட மறக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். நான் உங்களை நம்புறேன்."
அவளுடைய நம்பிக்கை, அவனை உணர்ச்சிவசப்பட வைத்தது. அவளை ஆரத் தழுவிக் கொண்டான்.
" நீங்க என்னை நம்பலையா?"
" உன்னை நம்பாமல் நான் வேற யாரை நம்ப போறேன்? நீ என்னை புரிந்து வைச்சிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னமோ தெரியல, காலையிலிருந்து, என் மனசுல ஏதோ தப்பு நடக்க போறதாவே தோணுது."
" சொல்லனும்னு தோனுச்சுன்னா சொல்லுங்க. எதுவாயிருந்தாலும், நான் உங்கள தப்பா நினைக்க மாட்டேன். "
ஆழ்ந்த பெருமூச்சு விட்டான் பாரி.
"நான் உன்னை எப்போதிலிருந்து காதலிக்கிறேன்னு உனக்கு தெரியுமா?"
என்று, அன்று அவள் கேட்ட அதே கேள்வியை கேட்ட பாரியை, எந்த பதிலும் அளிக்காமல், கண்ணிமைக்காமல், அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் இனியா. எதிர்பாராத, அவளுக்கு தெரியாத ஒன்று வெளிப்படப்போவதை அவள் உணர்ந்தாள்.
" உன்னை முதல் முதலா, நம்ம கடையில் பார்த்தபோதே நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சிடேன். நீ, இண்டெகரேஷன் இன் மேத்தமேட்டிக்கல் எஜூக்கேஷன் புக்குக்காக அங்க வந்த, அந்த நாளுக்கு முன்னாடியே கூட இருக்கலாம். காதல் மேல எல்லாம், எனக்கு நம்பிக்கை இருந்ததே இல்ல. ஆனா, உன்னை பார்த்ததுக்கப்புறம், என்னுடைய மனசை என்னால கட்டுகுள்ள வைக்கவே முடியல. நான் என் மனசைக் கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கல. உன்னுடைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை நான் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன். என்னுடைய ஃபிரண்ட் அல்லாத வேற ஒருத்தரை நான் ஃபிரண்டா ஏத்துகிட்டது அது தான் முதல் தடவை. நீ என் பிறந்தநாளுக்கு என்னை விஷ் பண்ணப்போ, இந்த உலகமே என் காலடியில் இருக்கா மாதிரி நான் உணர்ந்தேன். உனக்காக காத்திருக்கிறது எனக்கு பழக்கமாகிபோனது. உன்னை பாக்கணும், உன்கிட்ட பேசணும், உன் கூட இருக்கனும்னு, எனக்கு தோணும். உனக்கான என்னுடைய ஏக்கம், நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருந்தது. உன்னை பார்க்காத நாளெல்லாம், என்னுடைய வாழ்க்கையோட வீணான நாட்களா தோணுச்சு. உன்னோட செலவழிச்ச ஒவ்வொரு நிமிஷமும், வழ்வதற்கான காரணத்தை எனக்கு கொடுத்தது. எனக்குள்ள ஒரு தனி உலகத்தை, உருவாக்க ஆரம்பிச்சேன். அந்த உலகத்துல உன்னையும் என்னையும் தவிர வேற யாருக்கும் இடமில்லை. ஆனால், நட்புங்கிற ஒரு கோடு, என்னை உங்கிட்ட நெருங்க விடாமல் தடுத்து கிட்டு இருந்துச்சு. நான் உங்கிட்ட நெருங்க பயந்தேன். ஏன்னா, உன்கிட்ட நான் பேசுறதுக்கு ஒரே காரணமா இருந்த, நம்ம பிரெண்ட்ஷிப்பை கெடுத்துக்க நான் விரும்பல. உன்கிட்ட என்னுடைய காதலை சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்காக நான் காத்திருந்தேன். அப்பதான், திடீர்னு ஒரு நாள் நீ என்கிட்ட பேசறதை நிறுத்திட்ட. நீ ஆன்லைன்ல கூட வரல. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. உன்னை பார்க்காத, அந்தக் காலகட்டம்தான், என் வாழ்க்கையில் உன்னோட முக்கியத்துவத்தை எனக்கு புரிய வச்சிது. நீ இல்லாம என்னால வாழ முடியாதுங்கறதை நான் புரிஞ்சுகிட்டேன். உன்னைப் பார்க்கிறதுக்காக உன்னுடைய ஸ்கூலுக்கு வந்தேன். அப்போ நீ வேலையை ராஜினாமா செஞ்சிட்டதா சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ஏன்னா, டீச்சர் வேலை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு, எனக்குத்தான் தெரியுமே. அதுக்கு அப்புறம் தான் நான் உன் வீட்டுக்கு வந்தேன். அங்க எனக்கு மிகப்பெரிய அடி காத்திருந்தது. உனக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அன்னைக்கு இந்த உலகமே என்னுடைய காலடியிலிருந்து நழுவி போற மாதிரி நான் உணர்ந்தேன். அன்னைக்கு, எப்படி என்னுடைய உயிர் பிரியாமல் இருந்துச்சின்னு, இன்னிக்கு வரைக்கும் எனக்கு புரியல."
பேச்சை நிறுத்திவிட்டு இனியவை பார்த்தான் பாரி. அவன், மேலே என்ன கூற போகிறானோ என்று, ஒரு உதரலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா.
" நீங்க சொல்ல வந்தது இவ்வளவு தானா?"
" இல்ல... உங்கிட்ட சொல்ல வேண்டியது இன்னொன்னும் இருக்கு. அதை சொன்னா உனக்கு நிச்சயமா அதிர்ச்சியாகத்தான் இருக்கும். கோவம் வரும். அதனால் தான் அதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லலை."
" நீங்க சொல்றத எல்லாம் பார்த்தா, எனக்கு இப்பவே அதை தெரிஞ்சுக்கணும்னு தோணுது."
" அதுக்கு முன்னாடி, நீ எனக்கு ஒரு சத்தியம் செய்யணும். இத பத்தி நீ யார்கிட்டயும் பேசக்கூடாது. முக்கியமா சத்யா கிட்ட."
" சத்தியமா? எதுக்காக?"
" ஏன்னா நீ என்ன செய்வேன்னு எனக்கு நல்லா தெரியும் அதுக்காக."
" சரி... சத்தியமா நான் இத பத்தி யார்கிட்டயும் பேச மாட்டேன்."
" உன்கிட்ட அதை பத்தி சொல்றதுக்கு முன்னாடி, உனக்கு நான் ஒன்னு கொடுக்கணும்."
அவளை சோபாவில் அமர வைத்து, அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தான். தனது சட்டைப்பையிலிருந்து, அவளுடைய கொலுசை வெளியில் எடுத்தான். அதைப் பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போனாள் இனியா. பேயடிதார் போல், இருந்த அவளுடைய முகத்தைப் பார்த்தவுடன், அவள் மன ஓட்டத்தை புரிந்து கொண்டான் பாரி. மெல்ல அதை அவள் காலில் அணிவித்தான்.
" இது என்னுடைய கொலுசு. நான் கடத்தப்பட்டப்போ தொலைந்துபோனது. இது எப்படி உங்க கையில கிடைச்சுது?"
பாரி அவளுக்கு பதில் கூறும் முன்,
" அவளைக் கடத்தினது நீதானா?"
என்று கோபமாய் கத்திய சத்யாவை, இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். பாரியின் பிறந்தநாளுக்கு, இனிப்பு வழங்க வந்த சத்தியா, அவர்கள் பேசியதைக் கேட்டு, கோபாவேசமாக வாசலில் நின்று கொண்டிருந்தான். நம்பிக்கையின்மையின் ரேகைகள் அவன் முகத்தில் படர்ந்திருந்தது. சீதா கொடுத்தனுப்பியிருந்த இனிப்பு டப்பாவை தூக்கி எறிந்தான் சத்யா. அதிலிருந்த இனிப்பு அந்த அறை முழுவதும் சிதறியது.
அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பாராத இனியாவும் பாரியும் விக்கித்து நின்றார்கள். எதுவும் கேட்க தயாராக இல்லாத சத்யா, பாரின் முகத்தில் ஓங்கி குத்த துவங்கினான். அவனிடமிருந்து அப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்த்திராத பாரி, தடுமாறி விட்டான்.
" நான் சொல்றதை கேளுங்க சத்யா"
என்ற பாரின் வார்த்தைகளை கேட்க சத்யா தயாராக இல்லை. அவன் குத்திய குத்தில், பாரியின் உதடு கிழிந்து ரத்தம் பெருகியது. தன் கணவனின் முகத்தில் ரத்தத்தை பார்த்த இனியாவிற்கு, தலை கிறுகிறுத்தது.
பக்கத்தில் இருந்த அறையில், பாரியை தள்ளி, கதவை பூட்டினான் சத்யா. இந்த கலவரத்தை கண்டு, மயங்கி விழப்போன இனியாவை தாங்கி பிடித்த சத்யா, அவளை தூக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான், பாரியின் கத்தல்களுக்கு சிறிதும் செவிமடுக்காமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top