Part 22
பாகம் 22
இனியா, மிகவும் சோர்வாக காணப்பட்டாள்... ஓய்வெடுத்து, ஓய்வெடுத்தே, அவள் சோர்ந்து போனாள். எவ்வளவு நேரம் தான், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதாம்? அவளுக்கு இருந்த ஒரே வேலை, அவள் கணவன் செய்த வேலைகளை, அவனுக்கு தெரியாமல் ரசித்துக் கொண்டிருப்பது.
இரவு
சோபாவில் படுக்கையை விரித்து, அதன் மீது அமர்ந்திருந்த இனியவை பார்த்ததும், மனம் தளர்ந்தான் பாரி. அவனிடமிருந்து வெளிப்பட போகும் எதிர்வினைக்காக காத்திருந்தாள் இனியா, அவனையே பார்த்துக்கொண்டு.
" நீ இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கல"
" நான் என்ன பாரி சென்சேன்?" என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு.
" உன்னை கட்டிலில் படுத்துக்க சொல்லி, நேத்து நான் சொல்லலையா? "
" ஆமாம், சொன்னிங்க."
" அப்புறம் எதுக்காக இப்ப சோபாவில் உட்காந்து இருக்கே?"
" ஏன்? நான் சோபாவில் உட்கார கூடாதா?"
"இனியா, தயவு செய்து என்னை வெறுப்பேத்தாதே"
அவனுக்கு ஏதும் பதில் சொல்லாமல், அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா
" எதுக்காக இப்படி என்னை பார்த்துகிட்டு இருக்கே?"
மெல்ல தன் நகத்தை கடித்தாள் இனியா.
" நேத்து என்னை தூக்கிக்கிட்டு போனா மாதிரி, இன்னிக்கும் தூக்கிட்டு போக மாட்டீங்களா?"
என்றாள் தன் புருவத்தை உயர்த்தி, அழகாய் தலை சாய்த்து.
அவள் கூறியதைக் கேட்டு, பேச்சிழந்து நின்றான் பாரி. அவளுக்கு இப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கக்கூடும் என்று அவன் நினைத்திருக்க வில்லை. புன்னகையுடன் அவளை நெருங்கியவன், அழகாய் அவளை கையில் வாங்கிக் கொண்டான். அவன் சட்டை காலரை கெட்டியாய் பற்றினாள் இனியா.
அவளுக்கு வியப்பை ஏற்படுத்தும் வண்ணம், கட்டிலை நோக்கி செல்லாமல், நேரே தோட்டத்தை நோக்கி நடந்தான்.
" என்னை எங்க தூக்கிட்டு போறீங்க?"
" உனக்கு, தூக்கிட்டு போறது பிடிச்சிருக்குன்னா, அதை செய்ய நான் கடமைப்பட்டவன்."
" நீங்க இதையெல்லாம், ஏதோ காரணத்தோடு செய்ற மாதிரி எனக்கு தோணுதே"
" என்ன காரணம்? " என்றான் சிரித்தபடி.
" என்னை, உங்க வலையில விழா வைக்கணும்னு தானே இதெல்லாம் செய்றீங்க? "
" நீ விழுந்துட்டியா? "
" நீங்க என்ன நினைக்கிறீங்க? "
" நான், என் மனசுல என்னெல்லாம் நினைக்கிறேன்னு சொன்னா, நீ பயந்துடுவ" என்றான் கள்ள புன்னகையுடன்.
" நான் பயப்பட மாட்டேன்"
" இவ்வளவு அப்பாவியா இருக்காதே... உனக்கு என்னுடைய மறுபக்கம் தெரியாது."
" நான் என்னோட சிடுமூஞ்சி ஃப்ரண்டுடைய இதமான பக்கத்தைப் பார்த்துகிட்டு தானே இருக்கேன்."
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்துவிட்டு,
" நான் உங்கிட்ட எப்பயுமே சிடுமூஞ்சியா இருந்ததில்லையே"
" அதுவும் சரிதான்... "
சற்றே நிறுத்தியவள்,
" உங்களுக்கு கை வலிக்கலையா? என்னை கீழே இறக்கி விடுங்க. நீங்க ஆல்ரெடி, வீட்டை சுற்றி ஒரு ரவுண்டு வந்துட்டீங்க."
" உன்னை அப்படியே தூங்க வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்"
அதைக் கேட்டு கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா.
" இப்படி என்னை முழுங்குவது மாதிரி பாத்துக்கிட்டு இருந்தா, நான் ஃப்ரண்டா தாக்குப் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்." என்றான் சிரித்தபடி.
" உங்களுக்கு தெரியுமா, இப்படி நீங்க தூக்கி வைத்திருக்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்க்குன்னு? இதெல்லாம் ரொம்ப புதுசு... இதெல்லாம் எனக்காக யாரும் செஞ்சதே இல்லை. முக்கியமா... எந்தப் ஃபிரண்டும் இதையெல்லாம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை உங்களை தவிர."
*நீ எனக்கு நண்பன் மட்டும் இல்லை* என்பதை மறைமுகமாக உணர்த்தினாள் இனியா.
" நீ உன்னுடைய ஃபிரண்டை விட, ஹஸ்பண்டை ரொம்ப அதிகமா விரும்ப ஆரம்பிச்சிட்டா மாதிரி தெரியுது?"
" என் ஹஸ்பண்ட்க்குள்ள இருக்கிற ஃபிரண்டை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், என் ஹஸ்பன்டை விட அதிகமா இல்ல... "
அதைக்கேட்டு, அப்படியே அசையாமல் நின்றான் பாரி. அவன் கையில் இருந்து இறங்க முற்பட்டாள் இனியா. ஆனால், அவளைப் பற்றியிருந்த பாரியின் கரம் இறுகியது. பாரியின் முகபாவனையை படிக்க, நிலவொளியே போதுமானதாக இருந்தது. அந்த நிமிடம், அவன் முகத்தில் தெரிந்தது, நிச்சயமாக நட்பல்ல. ஆழ்ந்த, உணர்ச்சி ததும்பும் பார்வை அது... அவளை, நிலத்தை நோக்கி, தலை தாழ்த்த செய்யும் வல்லமை கொண்ட பார்வை அது... மெல்ல தனது இமைகளை உயர்த்தி, அவன் முகத்தை பார்த்த பொழுது, அவள் வயிற்றை கிளறியது. அவள் முகத்தில், அவன் அப்படி என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறான்? சற்று நேரத்திற்கு முன்பு வரை, அவன் கையில் இருப்பதை, மிகவும் வலிமையாக உணர்ந்த அவள், இப்பொழுது அவன் பார்வையால் துவண்டு போனாள். அனிச்சையாக அவள் இமைகள் தாழ்ந்தன.
அவன் அவளை அழைப்பது காதில் விழுந்தது... என்றுமில்லாத விதமாய், அவன்
" இனியா" என்று அவன் குழைவுடன் அழைத்தது, அவள் உயிரணுக்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவன் சட்டை காலரை பற்றியிருந்த அவள் கரம், இருகியது. அதை கவனிக்க தவறவில்லை பாரி. அவன் ஏன் வழக்கம்போல் அவளை அழைக்காமல், இப்படி வித்தியாசமாக அழைத்து உயிர் பறிக்கிறான்? அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவளை கையில் ஏந்தியவாறு ஊஞ்சலை நோக்கி திரும்பினான் பாரி. தன் மனைவியை மடியில் ஏந்தியவாறு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். அவன் தோளில் சாய்ந்து கொண்டு, ஊஞ்சலாட்டத்திற்கு தயாரானாள் இனியா. தன் கால் விரல் நுனியால் ஊஞ்சலை தள்ளத் தொடங்கினான் பாரி.
அமைதியான இரவு, ஒளிவீசும் முழுநிலவு, இதமான தென்றல், இவைகள் எல்லாம் போதாதா ஒரு மனிதன் தன்னிலையை முழுமையாய் இழக்க? மெதுவாய் அவள் முகத்தை உயர்த்தி, வெதுவெதுப்பான தன் இதழ்களின் கதகதப்பை, அவள் கண்ணத்திற்கு கடத்தினான் பாரி. பாரியின் கண்கள், அழகாய் ஓவியம் போல் வரையப்பட்டிருந்த அவளுடைய இதழ்களால் கவரப்பட்டன. நேற்று தொட முடியாமல் விடுபட்டுப் போன அந்த செயல் இன்று முழுமை பெற்றது. நட்பு என்னும் கூட்டை உடைத்துக்கொண்டு பாரியும் இனியாவும் வெளியேறினர், தாம்பத்தியம் என்ற அழகிய மாளிகையின் அடித்தளத்தை முத்தத்தால் அமைத்துக் கொண்டு. இது ஒரு மென்மையான, கவித்துவம் நிறைந்த கூடல். அது வெறும் முத்தம் தான் என்றாலும், அது அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் சொல்லில் அடங்காதது. அந்த வித்தியாசமான உணர்வில் இருந்து வெளியேற அவர்களுக்கு விருப்பமே இருக்கவில்லை. அது அவர்கள் இருவரையும் தனக்குள் இருத்திக் கொண்டது. அந்த கொல்லும் உணர்விலிருந்து முதலில் வெளியே வந்தவன் பாரி தான். உடைந்து விட்ட இணைப்பை உணர்ந்து கண் விழித்தாள் இனியா. அவளுடைய முக பாவனையை தவிப்புடன் படித்தான் பாரி. அவனது மடியிலிருந்து கீழே இறங்கியவள் வெட்கம் தாங்காமல் வீட்டினுள் ஓடினாள். அவனது வெட்கப் புன்னகையை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான் பாரி. வெட்கம் என்பது அவள் அவனை ஏற்றுக்கொண்டு விட்டதற்கான முதல் சமிங்கை.
அவன் தங்கள் அறைக்குள் நுழைந்த பொழுது, இனியா தன்னை முழுமையாக போர்வையால் போர்த்திக்கொண்டு, படுத்து விட்டிருந்தாள். பாரிக்கு தெரியும் அவள் இன்னும் உறங்கவில்லை என்று. அவன் நினைத்தது சரிதான். உண்மையில் சொல்லப்போனால், இனியா உறங்கவில்லை, போர்வைக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு இருந்தாள், தன் கணவனை நேருக்கு நேர் சந்திக்கும் த்ராணி இல்லாததால்.
அவர்களை சூழ்ந்திருந்த கண்ணுக்குத்தெரியாத தடைகளை உடைக்க, *இருட்டு* அவளுக்கு உதவியது. ஆனால், அது வெளிச்சத்தில் சாத்தியம் இல்லை அல்லவே. வந்த சிரிப்பை உதடு கடித்து அடக்கிக் கொண்டான் பாரி. சோபாவிற்கு சென்று படுத்துக் கொண்டு, வர வாய்ப்பில்லாத தூக்கத்தை வரவழைக்க முயன்றான் அவன். இன்றைய இனிய நிகழ்வு அவனை தூங்க விட்டு விடுமா என்ன?
மறுநாள் காலை
இனியா கண் விழித்த பொழுது, அங்கு பாரி காணப்படவில்லை. நேற்றை போலவே, அவன் இன்றும் சமையலறையில் எதையாவது சமைத்துக் கொண்டிருக்கிறானா என்ன? அவசரமாய் குளியல் அறைக்குள் நுழைந்தவள், வேகமாய் குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள். பாரியை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் இல்லாவிட்டாலும், அவனை சமைக்க விட்டுவிட்டு, அவள் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது இல்லையா?
சமையலறையை நோக்கி சென்றார்வள், சுவற்றின் பின் மறைந்து கொண்டு, மெல்ல உள்ளே எட்டி பார்த்தாள். ஆம், பாரி சமைத்துக் கொண்டு தான் இருந்தான். அவனை பார்த்தவுடனேயே அவளுக்கு ஒரு பதட்டம் ஏற்பட்டது. வெடுக்கென அவள் தலையை இழுத்துக் கொண்டாள். மறுபடியும் அதையே செய்தாள்.
சுவற்றில் சாய்ந்த படி கண்களை மூடிக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றாள்.
" கடவுளே என்னை காப்பாத்து"
என்று கூறியபடியே கண்களைத் திறந்த பொழுது, அவள் முன் நின்று, அழகாய் சிரித்துக் கொண்டிருந்தான் பாரி.
" என்ன விளையாட்டு இது?" என்றான்.
" அது... வந்து..."என்று இழுத்தாள்.
" நான் அப்படி என்ன செயதுட்டேன்னு, நீ இப்படியெல்லாம் ரியாக்ட் பண்றே?" என்றான் புன்னகைத்தபடி.
அவனை விழி விரிய பார்த்தாள் இனியா. அவன் என்ன செய்தான் என்று அவனுக்கு தெரியாதா என்ன? அவள் அங்கிருந்து செல்ல முற்பட்ட பொழுது, தன் கைகளை சுவற்றில் வைத்து அவளை தடுத்து நிறுத்தினான்.
" நான் என்ன வில்லனா? என்கிட்ட இருந்து ஏன் தப்பித்து ஓட பார்க்கிற?"
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
" ஆமாம் நீங்க வில்லன்தான்." என்றாள் தலையை நிமிர்த்திய படி.
அதைக் கேட்டு அவன் முகம் மாறியது. அவன் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சுவற்றில் ஊன்றியிருந்த தனது கையை விடுவித்துக் கொண்டு, அவளுக்கு வழி விட்டான். அங்கிருந்து சில அடிகள் சென்றவள், திரும்பி பாரியை பார்த்து,
" நீங்க ஒரு மோசமான வில்லன், புருஷன் என்கிற பேர்ல, என்னோட ஃபிரண்ட்டை காணம அடிச்சுட்டீங்க"
உதட்டை மடித்து சிரித்த படி தங்களுடைய அறையை நோக்கி ஓடிச் சென்றாள் இனியா, பாரியை சந்தோஷ கடலில் மிதக்க விட்டு.
அதற்கு பிறகு அவர்கள் இருவரும் எந்த கண்ணாமூச்சி ஆட்டமும் ஆட வில்லை. சகஜமாக, தங்களுக்குள் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள், நல்ல நண்பர்களைப் போல.
நண்பர்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகள், தம்பதிகளாக மாற இன்னும் வெகு நாட்கள் இல்லை. வெகு விரைவில் அவர்களுக்கு இடையில் இருக்கும் அத்தனை தடைகளும் தவிடுபொடியாகும்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top