Part 21
பாகம் 21
குளியல் அறையின் கதவில், ஒரு சீட்டு ஒட்டப்பட்டிருப்பதை உற்று நோக்கினாள் இனியா.
* தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டாம்*
என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்துவிட்டு, முகத்தை சுருக்கினாள் இனியா. *அந்த நாட்களில்* தலைக்கு குளிப்பது தான் அவளுடைய வழக்கம். ஏன் பாரி இப்படி எழுதி வைத்திருக்கிறான்? ஏதாவது ஒரு, சரியான காரணம், நிச்சயம் இருக்கும் என்று எண்ணியபடி குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தவளுக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. காலை சிற்றுண்டியை, பாரி அவளுக்காக சமைத்திருந்தான். இட்லி சாம்பார், தேங்காய் சட்னி என உணவு மேடை கமகமத்தது.
" நீங்க சமைச்சீங்களா? ஏன் பாரி? ரொம்ப பசிக்குதா?"
" சும்மா தான்." என்றான்.
அவன் *சும்மா தான்* என்று கூறியது, சும்மாவாக இருக்க முடியாது என்று நினைத்தாள் இனியா. காலை சிற்றுண்டி மிகவும் அருமையாக இருந்தது.
" நீங்க ரொம்ப பிரமாதமா சமைக்கிறீங்க. ஆனா, தயவு செய்து அடுத்த முறை சமைக்காதிங்க" என்றாள்.
" ஏன்?" என்றான் குழப்பத்துடன்.
" அப்புறம், சமைக்கிற வேலையை, உங்க தலையிலேயே கட்டிடுவேன்" என்றாள் கேலியாக, சிரித்தபடி.
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் பாரி.
நேரம் ஆகிக் கொண்டிருந்தது. ஆனால் பாரியோ, கடைக்கு செல்ல தயாராகாமல், அமர்ந்திருந்தான். அது அவளுக்கு மேலும் சந்தேகத்தை எழுப்பியது.
" உங்களுக்கு நேரம் ஆகிக்கிட்டிருக்கு. நீங்க இன்னைக்கு ஷாப்புக்கு போகலையா? "
" ம்ம்...நான் இன்னைக்கு லீவ். "
" ஆனா ஏன்?" என்றாள் ஆச்சரியத்துடன்.
" பாலா, கடையில இருக்கான். அவன் கொஞ்சம் வேலை கத்துக்கட்டும்னு நினைக்கிறேன். அதனால தான்."
" அவன் கூறிய பதில் அவளுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், அவனை மேற்கொண்டு எதுவும் கேட்காமல், தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த பாடலை ரசிக்க தொடங்கினாள்.
சிறிது நேரம் கழித்து, சமையல் அறைக்கு சென்று, சமையலை துவங்கலாம் என்று அவள் எழுந்தபோது, பாரி அவளை தடுத்து நிறுத்தினான்.
" நான் தான் வீட்ல இருக்கேனே, இன்னைக்கு நான் சமைக்கிறேன்" என்று கூறி விட்டு சமையல் அறையை நோக்கி செல்ல நினைத்த போது, அவன் முன் வந்து நின்று வழியை மறைத்துக் கொண்டு, தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை உற்று நோக்கினாள் இனியா.
" இதெல்லாம் என்ன, பாரி? "
" என்ன?" என்றான் சாதாரணமாக.
" உங்க தலைக்குள்ள என்ன வெந்துகிட்டு இருக்கு?"
" எதுவும் இல்லையே... "
" ஆனா, எனக்கு ஏதோ இருக்குறா மாதிரி தோணுதே"
" ரிலாக்ஸ் இனியா... "
" நீங்க உண்மையை சொல்லப் போறீங்களா, இல்லையா?"
" ஓகே கூல்... இன்னைக்கு உனக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்னு நெனச்சேன். வேற ஒன்னும் இல்ல."
" எனக்கு ரெஸ்ட்டா? எதுக்கு?" என்றாள் குழப்பமாக.
" நீ தானே சொன்னே, இது உன்னுடைய, *அந்த மூன்று நாட்கள்ன்னு*" என்றான் தயங்கியபடி.
அதைக் கேட்டு இனியா, விக்கித்து நின்றாள். இதையெல்லாம் அவன் இதற்காகத்தான் செய்து கொண்டிருக்கிறானா?
அவளுடைய முக பாவனையை பார்த்து, சிரித்தபடி சமையலறைக்குள் சென்றான் பாரி. இனியா அவனைத் தொடர்ந்து சென்றாள்.
" இதுக்காக நீங்க, இதை எல்லாம் செய்யணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. நான் வேலைக்கு போய்கிட்டு இருந்தவ, என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும்."
" அப்போ நீயே ஒத்துக்கிற, இது சாதாரணமான சூழ்நிலை இல்லை, சமாளிக்க வேண்டிய சூழ்நிலை தான்னு... "
" நீங்க ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்றீங்க? "
" நான் இருக்கும் போது, நீ தனியா எதையும் சமாளிக்க வேண்டாம்னு தான் சொல்றேன். புரிஞ்சுதா?"
" நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் இது ஒன்னும் சீரியஸான விஷயம் இல்லை. இதுக்காக நீங்க லீவெல்லாம் போட வேண்டாம்."
" பாலா இல்லன்னா, நான் லீவு போடுறதை பற்றி யோசிக்க மாட்டேன். இப்பதான் கடையை கவனிச்சுக்க அவன் இருக்கானே. சோ ரிலாக்ஸ்"
" ஆனா பாரி... "
" நான் வீட்ல இருக்குறது உனக்கு பிடிக்கலையா? " என்றான் அமைதியாக, இனியாவின் வாயை மூடுவதற்கு, இதுதான் சிறந்த வழி என்று அறிந்து கொண்டு.
அதைக்கேட்டு இனியாவின் முகம் மாறிப் போனது.
" சமைக்கிற சாப்பாடு, டேஸ்டா இல்லன்னா, நான் செம்ம காண்டாயிடுவேன்" என்றாள்.
அதைக்கேட்டு, களுக்கென்று சிரித்தான் பாரி.
" நான் வெஜிடபிள் சாலடுக்கு காய்கறியாவது கட் பண்றேனே" என்றாள் இனியா.
"ம்ம்ம்... ஓகே... ஆனா வெள்ளரிக்காய் சேர்த்துக்க வேண்டாம்"
"என்னது...? வெள்ளரிக்காய் இல்லாமல், வெஜிடபிள் சாலட்டா...? எனக்கு வெள்ளரிக்காயை ரொம்ப பிடிக்குமே... "
" இந்த நாட்கள்ல, நீ வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது"
" நிஜமாவா? இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?"
" கூகுள்... " சர்வசாதாரணமாய் தன் தோளை குலுக்கினான்.
" இதைத்தான், நேத்து ராத்திரி ஸர்ச் பண்ணிட்டு இருக்கீங்களா?"
ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.
" தலைக்கு குளிக்க கூடாதுங்கறதும், உங்கள் தேடலில் கிடைச்சது தானா?"
" ஆமாம்"
" ஆனா, ஏன் தலைக்கு குளிக்க கூடாது? "
" இந்த நாட்களில் உடம்பு அதிகமாக சூடாகும். அப்படி சூடாகும் போது, தலையில் இருக்கிற, கண்ணுக்கு தெரியாத நுண்ணிய துளைகள் விரிவடையும். அந்த நேரத்துல தண்ணி ஊத்தினா, அது தலைக்குள்ள போய், தலைவலி மாதிரி நிறைய பிரச்சனைகளை கொடுக்கும்"
" இதெல்லாம் எனக்கு தெரியாதே" என்றாள் நகத்தைக் கடித்தபடி.
" உனக்கு என்ன சொல்லப்பட்டதோ, அதை நீ செஞ்சுகிட்டு இருக்க. இந்த சிரமங்களை எல்லாம் மனசுல வச்சி தான், அந்த காலத்தில், பெண்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் தனியா இறுத்தி வைக்கப்பட்டார்கள்."
" அப்போ நீங்களும் என்னை, ரெஸ்டில் வைக்கப் போறீங்களா? "
" ஆமாம். நீயும் இந்த மாதிரியான சிரமங்களுக்கெல்லாம் ஆளாக வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்."
இனியா தன் மணாளனின் வார்த்தைகளால் மெய் மறந்து போனாள். எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அவளுக்கு அமைந்திருக்கிறது. பெரும்பாலும், ஆண்கள் பெண்களின் வலியை உணர்வதில்லை. ஏனென்றால், அவர்களுக்குத்தான் அதைப் பற்றி தெரியாதே. அதையும் மீறி, ஒருவன் வலிய, அவற்றை எல்லாம் தெரிந்து கொள்கிறான் என்றால், அது சும்மாவா?
காய்கறிகளை நறுக்கி முடித்தப்பின், சமையலறை மேடையின் மீது அமர்ந்துகொண்டு, பாரியின் சமையல் நுணுக்கத்தை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இனியா. அவன் மிகச்சிறந்த சமையல் வல்லுநனும் அல்ல, அதே நேரம் கத்துக்குட்டியும் அல்ல. ஆனால், அவன் மிக நேர்த்தியானவன் என்பது, அவன் செய்த சிறு சிறு வேலைகளின் மூலம் தெளிவானது.
சிறிது நேரத்திற்கு பிறகு, சமையலை விட்டுவிட்டு, சமையல் செய்பவனை பின்தொடர்ந்தது இனியாவின் பார்வை. தனக்காக அவன் எடுத்துக்கொண்ட அக்கரை அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. புரிதலும், அன்பும், அக்கறையுமுடைய... இன்னொன்றையும் மறந்து விடக்கூடாது... காதல் ரசம் ததும்பும் ஒரு வாழ்க்கை துணை... ஊஞ்சல் நிகழ்வை மறந்து விட முடியுமா என்ன?
இனியா, தன்னுள் தொலைந்து விட்டதை உணர்ந்தான் பாரி.
" இப்படி கண்ணெடுக்காமல், நீ என்னையே கவனிச்சுக்கிட்டு இருந்தா, நான் எப்படி சமையலை கவனிக்கிறது?"
அவன் கேட்ட கேள்விக்கு, இனியாவிடமிருந்து எந்த எதிர்வினையும் எதிர் படவில்லை. அவள் தோளைப் பிடித்து, லேசாக அசைத்தான் பாரி.
"ம்ம்ம்ம்?"
" உன்னுடைய கவனம் இங்க இல்லைன்னு நினைக்கிறேன்?" என்றான் மெல்லிய சிரிப்புடன்.
" என் கவனம் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா?" என்றாள் கனவில் மிதப்பது போல.
இல்லை என்று தலை அசைத்தான் பாரி தனது தோள்களைக் குலுக்கியபடி.
" நீங்க நல்லா சமைக்கமட்டும்தான் செய்வீங்கன்னு நினைச்சேன். ஆனா, நீங்க நல்லா நடிக்கவும் செய்றீங்க" என்றாள்.
" போய் ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றான் தனது உதட்டோர சிரிப்பை உதிர்த்தபடி.
" நான் ஏற்கனவே ரெஸ்ட்டுல தான் இருக்கேன். நீங்க என்னை சோம்பேறி ஆக்குறீங்க. இப்படி செய்யாதீங்க. நீங்க எனக்கு கொடுக்கிற சலுகைகளை, நான் என்னுடைய உரிமையாய் எடுத்துக்குவேன்" என்று அவனை எச்சரித்தாள்.
" அதை உரிமையா எடுத்துகக்கூடிய, எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. எந்த ஒரு உறவும் உரிமை இல்லாமல் உறுதியாக இருக்க முடியாது."
" நீங்க ரொம்ப சாதாரண விஷயத்தை பெருசாக்குறிங்க. பெண்களுடைய வாழ்க்கையில், இந்த நாட்களை கையாள்வது ரொம்ப சர்வ சாதாரணமான விஷயம். அதெல்லாம் எங்களுக்கு பழகிப்போன விஷயம்."
" வாழ்க்கையோட இந்தப் பக்கத்தையும் பழகிக்கோ."
" நான் என்ன சின்ன பிள்ளையா, நீங்க இப்படி பொத்தி பாதுகாக்க?"
" அதுல என்ன சந்தேகம்?"
" நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்."
"தெரிஞ்சோ, தெரியாமலோ நான் இந்த விஷயங்களைப் பற்றி தெரிஞ்சுகிட்டேன். அப்படி இருக்கும் போது, நான் எப்படி உன்னை வேலை செய்ய விட்டு வேடிக்கை பார்க்கிறது? நான் என்ன அவ்வளவு இதயம் இல்லாதவனா?"
" நீங்க சொல்றத பார்த்தா, உங்க ஒருத்தருக்கு மட்டும் தான் இதயம் இருக்கா? ஏன்னா, இங்க இருக்கற எல்லா ஆம்பளைங்களும், தங்களுடைய மனைவிகளை வேலை செய்யவிட்டு தான் வேடிக்கை பார்க்கிறாங்க. எங்க அப்பாவையும் சேர்த்துதான் சொல்றேன்."
" மத்தவங்கள பத்தி நான் ஏன் யோசிக்கனும்? நான் என் மனைவியைப் பற்றி கவலைப் படுறேன். அவ்வளவுதான்."
அவன் அங்கிருந்து செல்ல முற்பட்ட பொழுது, அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் இனியா.
" உங்களுக்கு இதயம் இருக்கு அப்படிங்கறதுக்காக இதெல்லாம் செய்றீங்களா? இல்ல உங்க இதயத்துல *நான்* இருக்கேன் அப்படிங்கறதுக்காக செய்றீங்களா?"
" என்னுடைய இதயம் ரொம்ப சின்னது. உன்னை தேக்கி வைக்க நெனச்சா, என் உடம்பில் இருக்க ஒவ்வொரு ரத்த செல்லும் கூட பத்தாது. "
அதைக் கேட்டு, இனியா உணர்ச்சிவசப்பட்டு போனாள்.
" எனக்கு வரப்போற கணவன், எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன்னு உங்களுக்கு தெரியும் இல்ல?"
" உனக்கு ஒரு நல்ல நண்பனா இருக்கணும்னு ஆசைப்பட்ட. "
" அப்படி டூ-இன்-ஒன் மனுஷன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்னு நெனச்சேன்..."
அந்த வாக்கியத்தை நிறைவு செய்யாமல், அவள் அங்கிருந்து ஒரு அடி எடுத்து வைத்த பொழுது, பாரி அவளை வழிமறித்தான்.
" அப்புறம்?"
" அப்புறம் என்ன?"
" நான் உனக்கு நண்பனா மட்டும் இருந்துட்டா போதுமா? "
இனியாவின் கன்னங்கள் சட்டென்று சிவந்து போயின.
" அது உங்க இஷ்டம்"
என்று கூறிவிட்டு, அவனை பிடித்து தள்ளி விட்டு, ஓடிப் போனாள், பாரியின் முகத்தில் புன்னகையை வரவழைத்துவிட்டு.
அந்த நாள், இனியாவின் வாழ்வில் ஒரு நம்ப முடியாத நாளாக அமைந்தது. ஒரு ஆணால், பெண் படும் துயரங்களை இந்த அளவிற்கு ஆழமாக உணர முடியும் என்பதை அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. பாரியை போன்ற ஒரு கணவன் கிடைக்க வரம் பெற்று வந்திருக்க வேண்டும் என்று உணரத் தொடங்கினாள். அவனுக்கு இருக்கக்கூடிய பண்புகள் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. அது இயற்கையாகவே ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு அருமையான மனிதன் பாரி. பெரும்பாலும், எல்லாப் பெண்களும் அனுபவிக்கும் பொதுவான விஷயம் என்பதால், பெண்களின் பிரச்சனைகளை ஆண்கள் பெரிதுபடுத்துவதில்லை. *இது அனைத்து பெண்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தானே* என்ற பொதுவான எண்ணம் தான் காரணம். பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண் வர்கத்தின் மத்தியில், தனித்து தெளிந்தான் பாரி. தன்னை சுற்றி இருக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்களை மங்கச் செய்து விட்டு ஒளிரும் சூரியனைப் போல பிரகாசித்தான் பாரி... இனியாவின் கண்களில்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top