Part 19

பாகம் 19

சுதாவின் கைப்பக்குவம் இனியாவிற்கு மிகவும் பிடித்துப் போனது. அவள் சுதாவிடம் இருந்து பாரியைப் பற்றி நிறைய கேட்டு தெரிந்து கொண்டாள். அவனுக்கு என்ன பிடிக்கும்,  என்ன பிடிக்காது என்பதை பற்றி. உண்மையில் சொல்லப்போனால்,  பாரிக்கு பிடிக்காது என்று எதுவுமே இருக்கவில்லை... மிகவும் பிடித்தது என்றால்,  மீன் வறுவலை மிகவும் விரும்பி சாப்பிடுவான் என்று தெரிந்து கொண்டாள்.

பாலா எதை  பற்றியோ  மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்றைப்பற்றி நிச்சயமாக அறிய விரும்பினான்.

" அண்ணி நீங்க செஸ் விளையாடுவீங்களா?" என்று இனியாவிடம் கேட்டான்.

" ஓ... ஃபிரண்ட்ஸோட அடிக்கடி விளையாடுவேன்." என்றாள்.

" விளையாடலாம் வரீங்களா? "

" விளையாடலாமே... "

பாரியை தன்னந்தனியாக விட்டுவிட்டு,  அவர்கள் இருவரும் செஸ் விளையாட சென்றார்கள். எப்பொழுதுமே பாரி தான் பாலாவுடன் இணைந்து செஸ் விளையாடுவான். இன்று அவன்,  பாரிக்கு பதிலாக,  இனியவை தன்னுடன் விளையாட அழைத்தான். அது பாரியை கடுப்பில் ஆழ்த்தியது. எப்படி பாலா தன்னை நிராகரிக்கலாம்? இனியாவும்,  அவனுடைய அழைப்பை, உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டாளே. பாலா,  எல்லோரிடமும் எளிதில்  ஒட்டிக் கொள்ளக் கூடியவன். இப்பொழுதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அவன்,  பாலாவை நம்பவில்லை என்று அர்த்தமல்ல. அவனுடைய உறவுமுறையே இன்னும் ஸ்திரதன்மையை அடையாமல், இங்கு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது,  மற்றவரைப் பற்றி யோசிக்க அவனுக்கு நியாயமில்லை.

பாலா,  பாரியைப் பற்றி அக்குவேறு ஆணிவேராக நன்கறிவான். எப்படி, பாரி  அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டானோ,  அதே போல,  தன்னுடைய பொருளையும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான். சிறிய வயதில் இருந்தே அவன் அப்படித்தான், தன்னை சேர்ந்தவர்கள் தனக்கு மட்டும் தான்  என்ற எண்ணம் கொண்டவன். அவனுடைய பெற்றோர்களின் மரணத்திற்கு பிறகு, அவனுடைய அந்த குணம் வெளிப்பட்டதில்லை.

இப்பொழுது,  அவனுடைய ரத்தத்தில் ஊறிவிட்ட அந்த குணத்தை சோதிக்க நினைத்தான் பாலா. அதைப்பற்றி மெதுவாக இனியாவிடமும் சொல்ல துவங்கினான்.

" அண்ணி, நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ரொம்ப சீரியசான விஷயம்"

" சீரியசான விஷயமா?  யாரைப்பற்றி?"

" உங்க வீட்டுக்காரரை பத்தி தான்... நான் உங்ககிட்ட வேற என்ன சொல்ல போறேன்?"

" அவரைப்பற்றியா??  என்ன சொல்ல போறீங்க?" ஆர்வமானாள் இனியா.

" பாரி எவ்வளவு பொஸஸிவ்வானவன்னு  உங்களுக்கு தெரியுமா?"

" பொஸஸிவ்வா...?  பாரியா?  நிஜமாத்தான் சொல்றீங்களா?" நம்ப முடியாமல் கேட்டாள் இனியா.

" ஆமாம்,  பெரும்பாலும் அவனுக்கு கோபமே வராது... அவனுக்கு  சொந்தமானதை யாரும் தொடாத வரைக்கும். அவனுக்கு பிடிச்சவங்க,  அவனை விட்டுட்டு,  வேற யாருக்காவது முக்கியத்துவம் கொடுத்தால்,  அவனால்  தாங்கவே முடியாது. அப்படி நடந்தா,  அவனுடைய மோசமான பக்கத்தை நீங்க பாப்பீங்க. அப்படி ஒரு கோபம் வரும் அவனுக்கு"

" அப்படின்னா...?  பேய் கோபம் வருமா?" பயத்துடன் கேட்டாள்  இனியா.

" பேயாவது... அவனுக்கு கோபம் வந்தா பேய் கூட அவனை பார்த்து பயப்படும்" என்றான் சாதாரணமாக.

" என்ன சொல்றீங்க நீங்க? பயத்துடன் கேட்டாள்  இனியா.

"காட் ஃஆப் பொஸஸிவ்நஸ்ஸுன்னு  சொல்றேன்... பேயை விட மேல..."

"காட் ஃஆப் பொஸஸிவ்நஸ்ஸா? " என்று எச்சில் விழுங்கினாள் இனியா.

" நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா,  சாதாரணமா திரும்பி,  அவனை பாருங்க. அவன் பார்வையிலே பொறி பறந்துகிட்டு இருக்கு. விட்டால் என்னை உயிரோடு ஏரிச்சிடுவான்."

தனது கூந்தலை சரி செய்வது போல,  சகஜமாக திரும்பி பாரியை பார்த்தவள், விக்கித்துப் போனாள். பாலாவை நோக்கி சட்டென்று தன் முகத்தை திருப்பிவள்.

" ஏன், அவர் நம்மளை இப்படி பார்த்து முறைத்துக் கொண்டு இருக்காரு? " என்றாள்  ஒருவித நடுக்கத்துடன்.

அதைக் கேட்டு களுக் என்று சிரித்தான் பாலா.

" இதைத்தான் நான் சொன்னேன். அவன் ரொம்ப நல்லவன். எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பான். தன்னை சேர்ந்தவர்களை சந்தோஷப்படுத்த,  எல்லாம் செய்வான். ஆனால்,  தன்னுடைய இடத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான்."

" அவர்,  என்கிட்ட கூட,  அப்படித்தான் நடந்துக்குவார்ன்னு  சொல்றீங்களா? "

" என்ன அண்ணி,  இப்படி அர்த்தமில்லாத கேள்வி கேக்குறீங்க... அவன் சாதாரணமாவே  அப்படி தான்னு  சொல்றேன்... நீங்க அவனோட பொண்டாட்டி வேற... கேட்கணுமா?"

" என்னால இதை நம்பவே முடியல"

" நீங்க வேணா பாருங்க,  இன்னும் சில நிமிஷத்துல, ஒன்னு அவன் என் மேல கோபத்தை வெளிப்படுத்துவான்,  இல்லனா,  நீங்க அவனுக்கு எவ்வளவு முக்கியம்னு அவன் காட்டுவான்."

" உண்மையாவா சொல்றிங்க?"

" அதுக்கு முன்னாடி,  இங்க இருந்து உங்களை கூட்டிட்டு போக ஏதாவது ஒரு சாக்கை  கண்டுபிடிப்பான். இன்னும் சில நிமிஷத்துல அது நடக்குதா இல்லையானு பாருங்க."

இது பாரியின் மற்றொரு பக்கமா? கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறதே... தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று,  நம்மை பற்றி யாராவது நினைப்பதை விட ஒரு சிறப்பான விஷயம் என்ன இருந்து விட முடியும்? இனிவிற்கு ஆர்வம் தாங்க வில்லை. உண்மையிலேயே பாலா சொன்னது போல் நடக்கப் போகிறதா?

தனியாக வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து இருந்த பாரி,  சுதாவின் பக்கத்து வீட்டுக்காரர் பெண் மேகனா,  தன் பிள்ளைகளோடு, பாரியை பார்த்து சிரித்தபடி வருவதைப் பார்த்தான். அது போதும் அவனுக்கு. புயல் போல் இனியவை நோக்கிச் சென்றவன் அவள் கையைப் பிடித்து கொண்டு,

" வா என்னோட" என்றான்.

அவனை அதிசயமாய் பார்த்தாள்  இனியா.

"மேகனா அக்கா,  வந்திருக்காங்க நம்மள பார்க்க" என்றான்.

அவள் கையைப் பிடித்துக்கொண்டு,  மேனாவை நோக்கி,  நடக்கத் தொடங்கினான். இனியா தன் முகத்தை திருப்பி அவள் பாலாவை பார்க்க,

" நான் சொல்லவில்லையா?" என்பது போல்,  அவன் தனது தோள்கைகளை குலுக்கி சிரித்தான். இனியா,  தனது சந்தோஷ சிரிப்பை மறைக்க பெரும்பாடு பட்டாள்.

மேகனாவை பார்த்து இரு கரம் கூப்பி,

"வணக்கம்" என்றாள்.

" வணக்கம்மா... (அவளுடைய மகன்  விமலை சுட்டிகாட்டி) இவன் காலையிலிருந்து பாரியைப் பாக்கனும்னு அடம் பிடித்துக் கொண்டே இருந்தான். பாரியும் அவனும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். இங்க வரும்போதெல்லாம்,  பாரி அவனுக்கு ஏதாவது புத்தகத்தை கொடுத்து உற்சாகப்படுத்துவார்." என்றாள்  மேகனா.

" ஆமாம்,  எனக்கு புக்கு படிக்க ரொம்ப பிடிக்கும். எங்க ஸ்கூல்ல,  இந்த புத்தகத்தில் கிடைக்கிற நாலேட்ஜை வச்சி,  எல்லார்கிட்டயும் நான் பாராட்டு வாங்கிவிடுவேன்."

என்று உற்சாகமாக சொன்னான் விமல்.

" ஆமாம், அவனுக்கு பள்ளிக்கூட புத்தகத்தை படிப்பதற்கு சுத்தமா பிடிக்காது. ஹோம் ஒர்க் செய்யவும் பிடிக்காது. இந்த மாதிரி புத்தகத்தை படித்துதான்,  அவன் ஸ்கூல்ல தன்னுடைய நாளை ஓட்டிக் கிட்டு இருக்கான்."

இந்த முறையும் அவனுக்கு ஒரு சிறிய புத்தகத்தை வழங்கினான் பாரி. அதைப் பார்த்து விமல் வழக்கம்போல் உற்சாகமானான்.

" வாவ் *இன்க்ரிடபிள் ஃபக்ட்ஸ்* தேங்க்ஸ் அண்ணா..."

என்று கூறி,  நிறுத்தி விட்டு,  இனியாவின் பக்கம் தன் கையை காட்டி,

" இவங்க யாரு?" என்றான்.

" நானா?  நான் இனியா... " என்று சிரித்தபடி இனியா கூற,

" இனியா பாரி" என்றான் பாரி.

அதைக்கேட்டு, இனியா அவன் பக்கம் திரும்ப, தனது புருவத்தை உயர்த்தி சிரித்தான் பாரி.

அவன் கூறியதை கேட்டு, கிண்டலாய் இனியாவைப பார்த்து  இரும்பினான் பாலா. இனியாவிற்க்கு வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும் போல தோன்றியது.

" ஆமாம்...நான் பாரியோட வைஃப்" என்றாள்.

விமல்,  பாரியை பார்க்க,  அவன் ஆமாம் என்று தலையசைத்தான். மேகனா  கையில் வைத்திருந்த,  அவளுடைய ஒரு வயது குழந்தையை,  தன் கையில் எடுத்துக் கொண்டாள் இனியா.

" உங்க பேர் என்ன?" என்று குழந்தை தனத்துடன் கேட்டாள்.

" ஷாலினி. " என்று மேகனா பதிலளித்தாள்.  ஏனென்றால்,  இன்னும் ஷாலினி பேச  தொடங்கவில்லை.

" சோ ஸ்வீட்" என்று கூறிவிட்டு ஷாலினியின் கன்னத்தில் முத்தமிட்டாள்  இனியா.

தனது துப்பட்டாவை யாரோ பிடித்து இழுப்பது போல உணர்ந்தாள், இனியா. கீழே  பார்த்த பொழுது, விமல் அவளுடைய துப்பட்டாவை பற்றி இருந்தான்.

" நான் ஸ்வீட் இல்லையா?  என்றான்.

" நீயும் ஸ்வீட் தான்" என்றாள்  இனியா.

" ஆனா,  நீங்க என் தங்கச்சிக்கு மட்டும் தானே முத்தம் கொடுத்தீங்க? " என்றான் சோகமாக.

அந்த நேரம்,  மேகனாவை "வாருங்கள்" என்று சுதா  அழைக்க, ஷாலினியை இனியாவிடமிருந்து பெற்றுக் கொண்டு,  உள்ளே சென்றாள்  மேகனா.

விமல் அருகில் முழங்காலிட்டு அமர்ந்து,  அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்  இனியா.

" சந்தோஷமா? "

அவள் விமலை பார்த்து கேட்க,  அவன் *ஆம்* என்று தலையசைத்துவிட்டு,  அவனும் இனியாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அவளை  வியப்பில் ஆழ்த்தினான்.

" நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க தெரியுமா?" என்றான்.

சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு,

" எனக்கு தெரியாது. இதுவரைக்கும் யாரும் என்கிட்ட அப்படி சொல்லல" என்றாள்.

" நிஜமாகவா? " என்று உண்மையிலேயே சீரியஸாய் கேட்டான் விமல்.

அவனுக்கு இனியா பதில் சொல்வதற்கு முன்,

" ஆமாம். இதுவரைக்கும் யாரும் அப்படி சொன்னதில்லை. ஏன்னா,  அவங்க டீச்சர்" என்றான் பாரி.

அவளை அதிர்ச்சியாய் விமல் பார்க்க,  ஆமாம் என்று தலையசைத்தாள் இனியா.

" நீங்க டீச்சரா?  நிஜமாவா?" என்றான் லேசான பயத்துடன்.

" ஆமாம். இப்ப அவங்க உன்னை உக்கார வச்சு,  ஹோம் ஒர்க்  செய்ய வைக்க போறாரங்க. முக்கியமா கணக்கு பாடம்... அதனாலதான்,  அவங்க இங்க வந்திருக்காங்க" என்றான் பாரி.

மெதுவாய் பின்னோக்கி நகர ஆரம்பித்தான் விமல்.

" இல்ல... நான் ஹோம்வொர்க் செய்ய மாட்டேன். நான் விளையாட போறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிப்போனான்.

அவன் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து இனியா விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் பாரி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த பொழுது,  பேச்சிழுந்து போனாள். அவள் மனதில் ஏதோ ஒன்று பட்டது. இதுவும் கூட பொசசிவ்னஸ்ஸின் ஒருவகை தானா? ஒரு சின்னப் பையனிடம் கூட அது சாத்தியமா?

" பாவம் அந்தப் பையன். நீங்க அவனை இப்படி மிரட்டி இருக்கக் கூடாது. "

"ரொம்ப ஓவரா பேசுறான்" என்றான் சலிப்புடன்.

" அவன் எவ்வளவு க்யூட்டா பேசிக் கொண்டிருந்தான்..." என்றாள்  வேண்டுமென்றே.

தன் கண்களை சூழ விட்டான் பாரி. இனியா அங்கிருந்து உள்ளே செல்ல எத்தனித்த பொழுது, பாரியின் வார்த்தைகளைக் கேட்டு சிலையாகிப் போனாள்.

" நான் ஸ்வீட் இல்லையா? " என்று,  விமல் கேட்ட அதே கேள்வியை,  அவனும் கேட்டான். இனியாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விடும் போல் இருந்தது. அவன் அதை  விளையாட்டுக்காக கூறுகிறானா,  இல்லை உண்மையிலேயே சீரியசாக சொல்கிறானா,  என்று தெரிந்துகொள்ள விரும்பினாள். அவளுடைய மூச்சு,  அவள் நுரையீரலை விட்டு வெளியேற மறுத்தது, அவனுடைய கூரிய பார்வையை,  பார்த்த பொழுது. அந்த பார்வையில்,  *விளையாட்டு* என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதை பார்த்து,  அவள் சற்றே பின் வாங்கினாலும்,  இந்த ஒரு சந்தர்ப்பத்தை எப்படி அவள் சுலபமாக விட்டுவிடுவது?

" அவன் ஒரு குழந்தை." என்று சம்பந்தமில்லாமல் பேசினாள், ஏதோ பாரி கூறியது அவள் காதில் விழாதது போல.

" ஆமாம்,  குழந்தைகள் எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். அவங்க நினைகிறதை,  எங்க வேணா,  எப்ப வேணா செய்யலாம்" என்றான்.

இங்கே வந்ததல்லவா,  அவளுக்கு ஒரு சந்தர்ப்பம்,  அவனை சீண்டிப்பார்க்க.

" அவங்க அதிர்ஷ்டசாலிகள் மட்டுமில்ல, தைரியசாலிகளும் கூட."

கூறிவிட்டு அங்கு நிற்காமல் நேரடியாக உள்ளே சென்றாள், புருவம் உயர்த்தி நின்ற பாரியை தனியாக விட்டுவிட்டு. அப்படியென்றால்,  அவனுக்கு தைரியம் இல்லை என்று நினைக்கிறாராளா என்ன?

உள்ளே சென்ற இனியா, சுதா மற்றும் மோகனாவின் பேச்சில் கலந்து கொண்டாள். சற்று நேரத்திலேயே அவளுக்கு மிகவும் வெறுப்பாகி போனது,  அவர்கள் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி பேசத் துவங்கிய போது.

அவள்,  அங்கு சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களை பார்வையிட தொடங்கினாள். அவற்றுள் சில,  பாரியின் சிறிய வயது புகைப்படங்கள். பக்கத்து அறையில், மேலும் சில பழைய புகைப்படங்கள் இருப்பதை பார்த்து உள்ளே நுழைந்தாள். அவற்றை சுவாரசியமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, யாரோ கதவை சாத்தும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பியவள்,  அங்கு பாரி  நிற்பதை பார்த்தாள். அவளுக்கு வியப்பாகி போனது... எதற்காக அவன் கதவை சாத்தினான்? அவன் அவளை நெருங்க ஆரம்பித்த பொழுது, அவள் குழப்பத்துடன் நின்றாள்.

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி,  என்ன சொன்னே?" என்றான்.

" என்ன சொன்னேன்? "

அவனைத் திருப்பி கேட்டாள்.

" அதிர்ஷ்டம்... தைரியம்ன்னு,  என்னென்னமோ சொன்னீயே... "

" குழந்தைகளை பற்றி சொன்னேன்" என்று மென்று முழுங்கினாள்.

" நீ,  என் முன்னாடி குழந்தைகளுடைய தைரியத்தை பற்றி புகழ்ந்து  பேசினா, நான்  என்னுடைய தைரியத்தை கட்ட நினைப்பேன். "

" அப்படின்னா? "

" அப்படின்னா, குழந்தைகள் செய்றதெல்லாம் என்னாலயும் செய்யமுடியும் என்று அர்த்தம்."

தனது கைகளைக் கட்டிக்கொண்டு,

" என்ன செய்வீங்க? சொல்லுங்க,  என்ன செய்வீங்க? நான் ஒரு டீச்சர் அப்படிங்கிறதை மறந்துடாதீங்க. எனக்கு தெரியும்,  குறும்பு செய்கிற பிள்ளைகளை எப்படி அடக்கி வைக்கனும்னு".

அவள்,  சுதாகரித்து கொள்வதற்கு முன் அவள் கன்னத்தில் பச்சென்று முத்தமிட்டான் பாரி, அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி.  செய்வதறியாமல், அப்படியே உறைந்து நின்றாள் இனியா.

" ஸ்டூடண்ட் ஸ்மார்ட்டா இருந்தா, டீச்சர் ஒன்னும் பண்ண முடியாது. அதை மறந்துடாதே. நேரமாச்சு,  வீட்டுக்கு கிளம்பலாம்" என்றான் புன்னகையுடன்.

நடந்ததை நம்ப முடியாமல்,  வெட்கத்தால் சிவந்த தன் கன்னத்தை தொட்டு தடவினாள் இனியா.

" நாங்க கிளம்புறோம் சித்தி". என்றான் சுதாவிடம் பாரி.

சுதா இனியா  வருவதைப் பார்த்து,

"நேரம் கிடைக்கும்போது வந்துட்டுப் போங்க" என்றாள்.

" நிச்சயம் வறோம் அத்தை" என்றாள்  இனியா.

" என்னம்மா,  உன்  கன்னம் இப்படி சிவந்து இருக்கு?" என்றாள் சுதா.

" எல்லாம் கடவுளின் கருணை" என்றான் பாலா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

" எதோ அலர்ஜின்னு  நினைக்கிறேன்" என்றாள்  இனியா,  தட்டுத்தடுமாறி தன்னை சமாளித்துக் கொண்டு.

" அலர்ஜியா?  அடக் கடவுளே..." என்று பதட்டமானால் சுதா.

" நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல சித்தி.  போகப் போக எல்லாம் சரியாயிடும்" என்ற பாரியை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் இனியா, விட்டால் வெளியே  வந்து விழுந்து விடுமோ என்று நினைக்குமளவுக்கு,  அவள் கண்களை பெரிதாக்கிக் கொண்டு.

அவளுடைய முகபாவனை பார்த்து,  வந்த சிரிப்பை,  உதட்டை கடித்து அடக்கிக் கொண்டான் பாரி.

"நாங்கள் கிளம்புகிறோம்" என்று அவர்களிடமிருந்து விடைபெற்றான் பாரி.

அமைதியாய் அவனை பின்தொடர்ந்தாள் இனியா,  பாரியுடனான,  வரப்போகும் தனது நாட்களை எண்ணியவாறு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top