Part 18

பாகம் 18

பாரிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, அவனுடைய சித்தி சுதாவிடம் இருந்து.

" எப்படி இருக்கீங்க சித்தி? "

" நான் நல்லா இருக்கேன்பா.. ரொம்ப சாரி,  உன்னை  அப்படியே விட்டுட்டு வந்துட்டோம். "

" பரவாயில்லை சித்தி,  எனக்கு தெரியாதா,  நீங்க என்னோட கல்யாணத்துக்கு எப்படி வந்தீங்கன்னு?"

" அதுதான் உண்மை.... என் மருமகள் எப்படி இருக்கா?"

" நீங்க அவங்ககிட்ட பேசணுமா?"

" பின்னே... அதுக்காகத் தானே கேட்டேன்... "

பாரி சமையல் அறையை நோக்கி சென்றான். அங்கு, இனியா,  சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.

" சித்தி,  உங்க கிட்ட பேசணும்ன்னு சொல்றாங்க" என்றான் போனின் முனையை மூடிக்கொண்டு.

அவள் மாவால் நிறப்பபட்டிருந்த,  தனது கையை காட்டி,  ஒரு நிமிடம் பொறுக்குமாறு சைகை செய்தாள். அவள்  தனது கைகளை கழுவுவதற்கு முன், அவளைத் தடுத்து நிறுத்தினான். அவனை கேள்விக்குறியோடு இனியா பார்க்க,  அவளின் நெற்றியின் மேல் வந்து விழுந்த குழல் கற்றை ஒதுக்கிவிட்டு, அவள் காதில் போனை வைத்தான் பாரி. ஒரு நிமிடம் அவனை திகைப்புடன் பார்த்தவளை,  பேச சொல்லி சைகை செய்தான் பாரி.

" எப்படிமா இருக்க மருமகளே? " என்றாள் சுதா.

" நான் நல்லா இருக்கேன் அத்தை"

" நீயும் பாரியும் கிளம்பி எங்க வீட்டுக்கு வாங்க. "

" நிச்சயமா வறோம் ஆன்ட்டி. "

" இன்னிக்கு... "

" இன்னைக்கேவா? "

" ஆமாம்,  ஏதாவது பிரச்சனையா? "

*அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?*  என்பதை போல,  பாரியைப் பார்த்தாள்  இனியா. *உன் விருப்பம்* என்பது போல் தோள்களைக் குலுக்கினான் பாரி.

" சரிங்க அத்தை,  நாங்க வறோம்."

" நாங்க காத்திருக்கோம்".

" எதுக்காக இந்த விஷயத்தில் நான் முடிவெடுக்கணும் நெனச்சீங்க?" என்று பாரியை பார்த்துக் கேட்டாள் இனியா.

" ஏன்னா,  இது உங்களுடைய குடும்பம். இதோட எல்லா நல்லது கெட்டதுக்கும் நீங்கள்தான் பொறுப்பு"

" அப்ப நீங்க என்ன செய்வீங்க?  எல்லா முடிவையும் நானே எடுத்துட்டா,  எல்லா நல்லது கெட்டதுக்கும் நானே பொறுப்பேத்துகிட்டா, நீங்க என்ன செய்யப் போறீங்க?  உங்களுக்கு இந்த குடும்பத்தில் எந்த பொறுப்பும் இல்லையா?"

" நான் உங்க பக்கத்தில்  தான் இருப்பேன். உங்களுக்கு தேவைப்படும் போது,  ஆறுதலும் ஆலோசனையும் சொல்லுவேன். நீங்க தடுமாறும்போது பக்கபலமாக இருந்து,  உங்களை வழி நடத்துவேன்."

என்று கூறிவிட்டு சிரித்தபடி அங்கிருந்து சென்றான் பாரி. அவனைப் பார்த்தபடியே மெய்மறந்து நின்றாள் இனியா. இதற்குமுன்,  எப்போதும் அவள் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க அனுமதிக்க பட்டதேயில்லை,  அவள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது உட்பட. ஒரு பெண்,  முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறுவது என்பது மிகச்சிறந்த கவுரவம். அதை முதன்முறையாக பெற்றபோது, அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. அந்த சந்தோஷத்துடன்,  அன்றைய சிற்றுண்டியை அன்பு கலந்து,  பாரிக்கு பரிமாறினாள் என்றால்,  அவன் அதை விரும்ப தானே செய்வான்?

" இன்னைக்கு உங்களுக்கு ஏதாவது நல்லதா சாப்பாடு சமைத்து கொடுக்கலாம்ன்னு  நினைச்சேன். அதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிடுச்சு"

" பரவாயில்லை இனியா, அதை,  நீங்க தானே எப்போதுமே செய்யப் போறீங்க. சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஃபிரியா இருந்துக்கோங்க. இதெல்லாம் கொஞ்ச நாள் தான். அதுக்கப்புறம்,  இவங்க யாரும் நம்மல கண்டுக்கவே மாட்டாங்க." என்று சொல்லிவிட்டு சிரித்தான்.

" நீ சொல்றதும் சரிதான்"

" சரி சீக்கிரம் ரெடியாகுங்க"

" இல்லை நான் ரெடியாக போறதில்லை"

என்று கூறிய இனியாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் பாரி.

" ஆனா ஏன்? "

" கட்டின பொண்டாட்டியை,  நீங்க வாங்க போங்கன்னு  நீங்க கூப்பிடுவதை பார்த்தா உங்க சித்தி சித்தப்பா என்ன நினைப்பாங்க? நான் வரலை"

என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள். தனது கண்களை சுழற்றியபடி சிரித்தான் பாரி.

" கிளம்பு இனியா" என்றான் சிரித்தபடி.

அதைக்கேட்டு சோபாவில் இருந்து துள்ளி குதித்து எழுந்தாள் இனியா,  சிரித்தபடியே வெற்றி பெற்றுவிட்ட சந்தோஷத்தில்.

" ஒரு நிமிஷம்" என்றவனை திரும்பி பார்த்தாள்.

" என்னையும், நீ  உன்  விருப்பப்படி எப்படி வேணாலும் கூப்பிடலாம்"

" அப்படி எல்லாம் சொன்னீங்கன்னா,  ரொம்ப வருத்தப்படுவீங்க. சமயத்துல நான் வாடா போடான்னு கூட கூப்பிடுவேன்" என்று வாய்விட்டு சிரித்தாள் இனியா.

ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற பாரி,  தன்னை சமாளித்துக் கொண்டான்.

" அதனால் என்ன?  பரவாயில்லை... " என்றான்.

" சரிடா பாரி"

என்று கூறிவிட்டு,  தங்கள்  அறையை நோக்கி சிரித்தபடி ஓடினாள், சுதாவின் வீட்டிற்கு செல்ல தயாராவதற்கு. பாரி தன் கண்களை மூடி,  உதட்டை கடித்து சிரித்தான்.

சில நிமிடங்களில் இருவரும் தயாரானார்கள். இந்த முறை,  காரில் செல்ல தீர்மானித்தான்,  பாரி.

" நம்ம ஏன்  பைக்ல போகலை?" என்றாள்  இனியா.

" அவ்வளவு தூரம் பைக்ல போனா,  நீ பார்க்க ரொம்ப டல்லா தெரிவ" என்றான்.

" நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க"

" இருக்கலாம்"

" எங்க அப்பா அம்மாவுக்கு,  வாங்கிக் கொடுத்த மாதிரி,  அவங்களுக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கி கொண்டு போகலாம்"

" பின்சீட்டில் இருக்கு பாரு" என்றான்.

" உங்க பொறுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? தப்பித்தவறி இதையெல்லாம் என்கிட்ட எதிர்பாக்காதிங்க. நான் இந்த விஷயத்துல பூஜ்ஜியம்"

என்றாள்  வெளிறிய முகத்துடன்.

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. போக போக கத்துக்கலாம்"

என்று கூறிவிட்டு கார் எஞ்சினை உயிர்ப்பித்தான்.

...

ராஜுவும் சுதாவும் அவர்களை சந்தோஷமாய் வரவேற்றார்கள். அவர்கள் வருவதால்,  சுதா ஏற்கனவே அனைத்து வேலைகளையும் முடித்து வைத்திருந்தார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சகஜமாக பேசத் துவங்கினார்கள்.

பாரி அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருட்களை, எடுத்துக் கொடுக்கும்படி சைகை செய்தான். இனியா அவற்றை அவர்களுக்கு கொடுக்க அவர்களுக்கு அவை மிகவும் பிடித்திருந்தது.

சுதா,  தனக்காக கொடுக்கப்பட்ட புடவையை பிரித்து பார்த்து,

" எனக்கு பிடிச்ச மாதிரியே இருக்கு" என்று சந்தோசமாய் கூறினார்.

பாரி தான் வாங்கிட்டு வந்தாரு என்று இனியா  கூறுவதற்கு முன்,

" அது இனியாவுடைய செலக்ஷன்" என்றான் பாரி, இனியாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி.

" நெஜமாவா, ரொம்ப நல்ல செலக்சன். "

என்ற சுதாவை பார்த்து சங்கடமாய் சிரித்தாள்  இனியா.

" இனியா,  நீ சித்திகிட்ட,  அவர்களுடைய யாத்திரையைப் பற்றி கேட்டு தெரிஞ்சுக்கணும்னு சொன்ன இல்ல?" என்று கூறிவிட்டு புருவத்தை உயர்த்தி,  அவர்களுடன் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தான்.

" ஆமாம்...  உங்க யாத்திரை எல்லாம் எப்படி இருந்தது, அத்தை?" என்றாள்.

" ரொம்ப அற்புதமா இருந்தது மா... துவாரகை ஒரு சக்தி வாய்ந்த தலம். நான் பாரிக்காக வேண்டிகிட்டேன். பாரு,  அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு." என்றாள் சுதா.

" அடுத்த முறை எப்பம்மா துவாரகைக்கு போறீங்க" என்றான் பாலா.

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் இனியா.

" நீங்க கல்யாணத்துக்கு அவசரப்படுறதை பார்த்தால்,  யாரையோ பார்த்து வெச்சிருக்கா மாதிரி தெரியுது?" என்றாள்.

" நீங்க வேற அண்ணி, உங்கள மாதிரி நல்ல பொண்ணு கிடைக்க,  நான் பாரி அளவுக்கு அதிர்ஷ்டமானவன் இல்லை"

இனியாவின் பார்வை அனிச்சையாக பாரியின் பக்கம் திரும்பியது. அவன் சிரித்தவரே அவளை பார்த்து *ஆமாம், நான்  அதிர்ஷ்டசாலிதான்* என்பதுபோல தலையசைத்தான். அடக்க மாட்டாத தன் வெட்கபுன்னகையை, உதிர்த்துவிட்டு,  மீண்டும் சுதாவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்  இனியா.

"நீங்க யாத்திரைக்கு போவது,  இதுதான் முதல் தடவையா?"

" இல்லம்மா,  நாங்க வருஷாவருஷம்,  ஒவ்வொரு ஊருக்கு போறது வழக்கம். போன வருஷம்,  அமர்நாத் போயிருந்தோம்"

" வாவ் நிஜமாவா?  பனிலிங்கத்தை பாத்துட்டு வந்தீங்களா? "

" ஆமாம்.ஆனா,  அந்த வழியெல்லாம் எப்படி இருந்ததுன்னு தெரியுமா?  ஆயிரத்து ஐநூறு மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கு... பார்க்கவே பயமாக இருந்தது. இப்ப நினைச்சாலும் கொலை நடுங்குது."

" எனக்கு தான் தெரியும்,  அவள் எப்படி பயந்தாள்ன்னு. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுன்னு சொல்லிட்டா." என்று அவர்கள் பேச்சுக்குள் வந்தார் ராஜு.

" அப்புறம்? " என்றாள்  இனியா ஆர்வமாக.

" நான் அவ கைய கெட்டியா பிடித்துக் கொண்டேன். கவலைப்படாதே,  நீ விழுந்தா,  நானும் உன்னோட சேர்ந்து குதிச்சிடுவேன்னு  சொன்னேன்"

" வாவ் சோ ஸ்வீட்" என்று கைகளைப் தட்டிய படி உற்சாகமாக சொன்னாள் இனியா.

அவள்,  பாரி தனது கண்களை சூழட்டுவதை கவனித்தாள். அவன் அப்படி செய்வதை பார்த்தபோது,  அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ராஜு சொன்னது அவனுக்கு பிடிக்கவில்லையா?

" அதுக்கு அப்புறமா தான்,  அவ மெதுவா நடக்க ஆரம்பிச்சா,  என் கையை பிடிச்சு கிட்டு"என்றார் ராஜு.

" இதிலிருந்து தெரியுது,  நீங்க அத்தை மேல  எவ்வளவு பிரியம்  வச்சிருக்கீங்கன்னு. அப்படித் தானே மாமா? பாருங்க,  அத்தையோட கண்ணம் சிவந்து போச்சு"

அவள் கூறியதைக் கேட்டு,  உண்மையிலேயே சுதாவின் கண்ணம் சிவந்து தான் போனது..அதைப் பார்த்து ராஜுவும் மனம் விட்டு சிரித்தார். இப்படி கலகலவென இனியா  பேசுவது அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

" நாங்க பாரியை பற்றி ரொம்ப கவலைப் பட்டுக் கொண்டே இருந்தோம். அவன் பொண்ணுங்கனாலே,  பிடிக்காதவனாக இருந்தான். அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டான்னு நாங்க நினைச்சோம். எங்களுக்கு ஒன்னுமே புரியல, நீ எப்படி தான் அவன் மனசை மாற்றினியோ" என்றார் சுதா

" உண்மைதான் மா அவனுடைய வாழ்க்கை இருளடைந்து போயிருந்தது. உன்னை எப்படி அதுல விளக்கேத்த விட்டான்னு எங்களுக்கு புரியவே இல்லை." என்று ராஜுவும் சுதாவை ஆமோதித்தார்.

" உண்மைய சொல்லப் போனா, அவர்தான் என்னோட... "

" இனியாவுடைய சிரிப்பு,  எப்படிப்பட்ட இருட்டையும் ஒட வச்சிடும்" என்றான் பாரி,  மேற்கொண்டு அவளை பேச விடாமல்.

அவளுடைய நின்றுபோன திருமணத்தை பற்றி,  அவள் ஏதும் பேசுவதில் அவனுக்கு விருப்பமில்லை. அதைப் புரிந்து கொண்டவளாய்,  அவனை நோக்கி ஒரு நன்றி புன்னகை வீசினாள் இனியா.

"சரி நேரமாச்சு,  சாப்பிடலாம்.  நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்." என்று கூறி விட்டு உள்ளே சென்றார் சுதா. ராஜூ அவளுக்கு உதவுவதற்காக அவளை பின்தொடர்ந்தார்.

" இன்னைக்கு அருமையான சாப்பாடு. ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதான்" என்று சந்தோஷமாக உள்ளே சென்றான் பாலா.

பாரியும் உள்ளே செல்ல எத்தனித்த போது அவனை நிறுத்தினாள்  இனியா.

" அத்தையோட புடவை,  என்னோட செலக்சன்னு,  ஏன் பொய் சொன்னீங்க? "

" இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான். வீட்டுக்கு வந்த மருமகள்,  தங்களுடைய சொந்த மகள் மாதிரி நடந்துக்கணும்னு, அந்த வீட்டை சேர்ந்தவங்க எதிர்பார்ப்பாங்க. அந்த பொண்ணும்,  தன்னை அவங்களோட சொந்த பெண்ணா நடத்தணும்னு எதிர்பார்ப்பாள். ஆனா,  ரெண்டு பேருமே முதலடியை எடுத்து வைக்க தயங்குவார்கள். அந்த முதல் அடியை எடுத்து வைக்க,  உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணினேன். அவளவுதான்."

" உண்மைய சொல்லனும்னா,  நீங்க ஒரு குடும்ப குத்துவிளக்கு" என்றாள் இனியா வியப்பாக.

" என் மனைவியை பற்றி,  மத்தவங்களை  பெருமையாக நினைக்க வைக்கிறது,  என்னுடைய கடமை. "

" நீங்க உண்மையிலேயே க்ரேட்டுங்க. உங்கள மாதிரி, எல்லா உறவுகளையும் பேலன்ஸ் பண்ணி போக தெரிஞ்சா,  எந்தக் குடும்பத்திலும் பிரச்சனைகளே இருக்காது. சரி ஒரு விஷயம் சொல்லுங்க, அமர்நாத்தில், மாமா அத்தை கிட்ட சொன்ன விஷயம்,  உங்களுக்கு பிடிக்கலையா?"

பிடிக்கவில்லை என்று தலையாட்டினான்.

" ஆனா ஏன்? அவர், அவங்க மேல வச்சிருக்கிற அன்பு அதில் தெரியலையா? "

" அன்பைக் காட்ட நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கு அமர்நாத் பள்ளத்தாக்கு அதற்கான இடமில்லை. அந்த இடத்தில், அவர் அவங்களுக்கு நம்பிக்கையை  தான் கொடுத்திருக்கனும். அவங்க விழுந்ததுக்கப்புறம்,  அவரும் கூட சேர்ந்து குதிக்கிறதுல என்ன பிரயோஜனம் இருக்கு? அது அவங்கள உயிரோடு வைக்குமா? இதுவா அன்பு? அன்புங்குறது நம்பிக்கை... அவர்,  அங்க அவங்களுக்கு அதைத்தான் கொடுத்து இருக்கணும்."

அவனுடைய பதில் இனியாவிற்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

" ஒருவேளை,  அவருடைய இடத்தில் நீங்க இருந்திருந்தால்,  என்ன சொல்லி இருப்பீங்க?"

அவள் கேட்ட கேள்வியை ரசித்தபடி,  அவளையும் ரசித்தான் பாரி.

" நான் உன்கூட இருக்கும்போது,  நீ எப்படி விழுவ?  நான் உயிரோடு இருக்கிற வரைக்கும்,  உன்னை விழவிடமாட்டேன்."

அவன் அதை உதிர்த்த போது,  அவன் பார்வையில் இருந்த ஆழம்,  அவள் உயிர்வரை ஊடுருவி, அவளது மூலாதாரத்தை தொட்டுப் பார்த்தது.

அவன் கூறிய பதில் தாய்க்கோழியின் சிறகுகுள் பாதுகாப்பாய் அமர்ந்திருப்பது போன்ற கதகதப்பை அவளுக்கு தந்தது. ஆம்,  அவன் கூறுவது உண்மைதான். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்,  தைரியம்தான் தேவையே தவிர அன்பை வெளிப்படுத்த வேண்டிய இடம் அதுவல்ல. ஒன்றாய் சாவதில் என்ன பெருமை இருக்கிறது?  ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிகையை கொடுத்து,  வாழ்வதில் தானே பெருமை இருக்கிறது..

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top