Part 15

பாகம் 15


இனியா மற்றும் பாரியின் நட்பு வட்டாரங்களில் அவர்களுடைய கல்யாண பேச்சுதான் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.

"எனக்கு அப்பவே தெரியும், அவர்களுக்குள் ஏதோ இருக்குன்னு", என்று இனியாவின் தோழிகள் பேசிக்கொண்டார்கள்.

"என்னது...பாரிக்கு கல்யாணமா?" என்று ஆச்சரியப்பட்டார்கள் பாரியின் நண்பர்கள்.

சத்யா மற்றும் சுபாஷின் நட்பு வட்டாரம் ஒன்று தான் என்பதால், அவர்களுடைய நண்பர்கள், அந்த திருமணத்தை பற்றி அவர்கள் முன்னிலையில் பேசுவதற்கு தயங்கினார்கள். சத்யாவின் நிலைதான் மிகவும் சங்கடமாக இருந்தது. சுபாஷுடன் நடக்கவிருந்த, இனியாவின் திருமணம் நின்று போனதை பற்றி, அவர்களுடைய நண்பர்கள் கூட பெரிதாக கவலைப்படவில்லை என்பதை பற்றி அறிந்திருந்தான் சத்யா. ஏனென்றால், அந்த திருமணத்தின் பொழுது ராதிகா நடந்துகொண்ட விதம், அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த விஷயம்தான் சுபாஷை கொல்லாமல் கொன்றது. தனது சொந்த நண்பர்களே தனக்கு ஆதரவாக இல்லை என்பதை நினைத்து அவன் மிகவும் சோர்ந்து போனான்.

சிறிது நாட்களில் எல்லாம் சரியாகிவிடும், வேறு எந்த வழியும் இல்லாமல் இனியாவை தனக்கு தனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருந்தான் சுபாஷ். அவனுக்கு தெரியாதா என்ன... இந்த சமுதாயம் எப்படி பேசும் என்று...? தன்னை நிராகரித்ததற்காக, இனியாவின் குடும்பம் வருத்தப்படும் என்று அவன் தவறாக கணித்து வைத்திருந்தான். ஆனால் அவன் கனவிலும் நினைக்கவில்லை, இனியா, தன்னைவிட எல்லா வகையிலும் சிறந்த ஒருவனை மணாளனாக அடைந்து விடுவாள் என்று. ஆம், அவனுக்குத் தெரிந்திருந்தது, பாரி தன்னை விட சிறந்தவன் என்று. பாரியை திருமணம் செய்து கொண்டால், அவள் சுதந்திரமாக வாழ்வாள். முக்கியமாக, ராதிகா போன்ற இரக்கமற்ற ஒரு மாமியார் அவளுக்கு இருக்க மாட்டார். இனியா தன்னை நிராகரித்துவிட்டாள் என்பதை விட, அவளுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து விட்டது என்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுடைய ஆணாதிக்க மனம், அவள் வெல்வதை தாங்கவில்லை.

உண்மையில் சொல்லப்போனால், இந்த திருப்பத்தை ராதிகாவே எதிர்பார்த்திருக்கவில்லை. இனியாவை விட சிறந்த ஒரு மருமகள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பதை அறிந்திருந்தார் ராதிகா. இருந்தாலும், தான் என்ற அகங்காரம் அவளை அதை ஒப்புக்கொள்ள விடவில்லை. அதற்குமேலும், சுபாஷ் அவளுக்காக உருகுவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. திருமணத்திற்கு பிறகு அவன் நிச்சயம் மாறி விடுவான் என்று அவர் நம்பினார். இனியாவின் நல்ல குணத்தால், நிச்சயம் சுபாஷ் தன்னை விட தன் மனைவியின் மீது அன்பைப் பொழிய துவங்குவான் என்பது அவள் புரிந்திருந்தார். அதனால் இனியாவின் அனைத்து செயல்களிலும், அவர் ஏதோ ஒரு குறையை தேடத் துவங்கினார்.

ஆனால், இப்பொழுது சுபாஷ் எதிலும் பிடிப்பில்லாமல் காணப்பட்டான். அனைவரிடமும் பேசுவதைத் தவிர்த்து தனிமையை விரும்பினான். ராதிகாவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த ஊரை விட்டே செல்ல தீர்மானித்து விட்டான். இனியா, வேறு ஒருவருடன் சந்தோஷமாக வாழ்வதை பார்க்க அவன் விரும்பவில்லை.

*திருமண நாள்*

இந்த முறை, கண்கொத்தி பாம்பாக அனைவரும் கவனத்துடன் செயல் பட்டார்கள். சத்யாவின் நண்பர்களே கூட இனியாவை சுற்றி சுற்றி வந்தார்கள். ப்ரீதியும் தனது நட்பு வட்டங்களுடன், இனியாவை ஒரு நிமிடமும் விட்டுப் பிரியாமல், அவளுடனேயே இருந்தாள். பாரியின் மனமும் திக் திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது, திருமண மேடைக்கு இனியா வந்து சேரும்வரை.

அதோ இனியா, மேடையை நோக்கி வந்துகொண்டிருக்கிறாள். அவள் வந்து பாரின் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் கரங்கள் நடுங்கிக் கொண்டிருப்பதை கவனிக்க தவறவில்லை, பாரி. ஐயர் தாலியை எடுத்து அவன் முன் நீட்ட, அதை வாங்கி இனியாவின் கழுத்தில் கட்டி, அவளை நிரந்தரமாக தன்னுடையவளாகக்கிக் கொண்டான் பாரி. தனக்கு மட்டுமே உரியவள் என்று பறைசாற்ற, குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் நிரப்பினான். கடவுள் சாட்சியாக, அக்னிசாட்சியாக, அங்கு குழுமியிருந்த மக்களின் சாட்சியாக, அவர்கள் இருவரும் கணவன்-மனைவியாக, திருமண பந்தத்திற்குள் அடியெடுத்து வைத்தார்கள்.

" இதுதான் கடவுளுடைய விருப்பம் போல் இருக்கு" என்று அந்த திருமணத்திற்கு வந்திருந்த மக்கள் வெளிப்படையாக கூறுவதை பாரியும் இனியாவின் குடும்பத்தினரும், காதுபட கேட்டார்கள். அது புதுமணத் தம்பதியரின் முகங்களை பிரகாசிக்கச் செய்தது. சேதுராமனின் குடும்பத்தினருக்கு மன அமைதியைத் தந்தது.


சேதுராமன் இல்லம்

ஆலம் கரைத்து புதுமண தம்பதிகளை வரவேற்றார் சீதா. பாலும் பழமும் புதுமண தம்பதிகளுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. தாங்கள் இருவரும், மற்றொருவரின் இணைபிரியாத பாதி என்பதை உணர்த்தும் விதத்தில், பாலையும் பழத்தையும் ஆளுக்கு பாதியாக உண்டார்கள்.

சிறிது நேரம் தனது மாமனாருடனும், மைத்துனனுடனும் பேசி பொழுதை கழித்தான் பாரி. மாலையில் அங்கிருந்து புறப்பட்டு, பாரி இல்லம் வந்தடைந்தார்கள்.

கண்ணீருடன் தங்கள் மகளை வழியனுப்பி வைத்தார்கள் சேதுராமனின் குடும்பத்தினர். ஆனால் அந்த கண்ணீர் ஆனந்தக் கண்ணீர்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில், சிறிது நாட்களுக்கு முன்பு வரை, இனியாவின் வாழ்க்கை என்னவாகுமோ என்று பரிதவித்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அல்லவா இந்த திருமணம்...

அன்றைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார் சுதா.

இனியாவும் பாரியும், பாரியின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் வேறு ஒரு அறையில் தனது உடைகளை மாற்றிக் கொண்டார்கள். இரவு உணவிற்குப் பிறகு பாரியும் இனியாவும் பாரின் அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அந்த நிமிடத்திலிருந்து இனியா மற்றும் பாரியின் வாழ்க்கை பயணம் இனிதே துவங்கியது. அலங்கரிக்கப்பட்டிருந்த தனது கட்டிலை பார்த்து சற்றே சங்கடப்பட்டான் பாரி. அவனைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள் அதில் அமர்ந்திருந்த இனியா. அந்த புன்னகை பார்த்து ஆச்சரியப்பட்டான் பாரி. அவளுக்கு இருந்த பதற்றம் இப்பொழுது காணப்படவில்லை. அவளை சகஜ நிலைக்கு கொண்டுவர, படாதபாடு பட வேண்டி இருக்குமோ என்று பயந்து இருந்தான். காலை மணமேடையில் பார்த்த பொழுது அவளுக்கு இருந்த நடுக்கம் இப்பொழுது இல்லாதது இருந்ததைக் கண்டு அவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். ஒருவேளை அவள் நின்றபோன திருமணத்தை பற்றி நினைத்துக்கொண்டு இருந்திருக்கலாம்.

அவனுக்கு எப்படித் துவங்குவது என்றே தெரியவில்லை. எப்படி அவளிடம் பழகுவது நண்பனாகவா? அல்லது கணவனாகவா? அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ. மெதுவாய் பேச்சை துவங்கினான்.

" உங்களுக்கு, சாரி கம்ஃபர்ட்டபுல்லா இல்லன்னா, நைட்டிய சேஞ்ச் பண்ணிக்கோங்களேன். "

சரி என்று தலையசைத்துவிட்டு, நைட்டியுடன் குளியல் அறையை நோக்கி சென்றாள் இனியா. *அப்பாடா* என்று, அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலின் மீது சற்றே சாய்ந்தான்பாரி. தனது முகத்தை ஒரு பக்கமாக திருப்பியவன், அங்கு இனியாவின் பொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்டான். அவள் அவனுடைய இல்லத்திற்கு வந்துவிட்டாள். இப்போதிலிருந்து அவளுக்கும் இதுதான் இல்லம். அதை நினைத்தபோது அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. குளியலறையிலிருந்து வெளியே வந்த இனிய அவன் புன்னகைப் அதைப்பார்த்தாள். அவளைப் பார்த்து, சட்டென்று எழுந்து, கட்டிலின் மீது அமர்ந்தான் பாரி.

" இந்த அளவுக்கு நீங்க எனக்கு மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை. ஏன்னா, நான் உங்க கூட வாழ்க்கை முழுக்க இருக்க போறேன். அதனால இந்த மரியாதை கொடுக்கிற விஷயம் எல்லாம் சரிப்பட்டு வராது." என்றாள் இனியா.

அது பாரிய முகத்தை மிளிர வைத்தது.

" ஒருவேளை, வரப்போகும் நாட்கள்ல, என்னுடைய செயல்பாடுகள் மாறலாம். ஆனால், அதற்காக நான் உங்க மேல வச்சிருக்குற மரியாதை குறைஞ்சிடுச்சின்னு அர்த்தம் இல்லை." என்று பதிலளித்தான் பாரி.

" கேக்க ரொம்ப நல்லாதான் இருக்கு... பார்க்கலாம்" என்றாள் சிரித்தபடி.

கட்டிலின் மீது இருந்த போர்வையை எடுத்துக்கொண்டு, சோபாவை நோக்கி நகர்ந்தான் பாரி. அவன் அப்படி செய்வதை பார்த்து, தனது புருவத்தை உயர்த்தினாள் இனியா.

" எங்க போறீங்க? "

" சோபாவுக்கு தான்" என்று தயங்கினான் பாரி.

" ஏன்?"

" நீங்க கொஞ்சம் ஃப்ரீயா இருங்க"

" நீங்க கட்டில்ல தூங்கினா, நான் ஃபிரியா இருக்க மாட்டேன்னு யார் சொன்னது?"

"ஆனா... "

" நம்புங்க பாரி, நான் உங்கள முழங்கிட மாட்டேன். இன்னிக்கு எனக்கு வயிறு ஃபுல்லா இருக்கு." என்று கிண்டலடித்தாள் இனியா.

" அப்போ, நாளைக்கு என்னை முழுங்கிடுவீங்களா?" என்றான் சிரித்தபடி.

" அது என்னுடைய மூடை பொறுத்தது. இப்போ ஒழுங்கா வந்து கட்டில்ல படுங்க. இல்லனா, நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன்"

என்று தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, அவனை மிரட்டினாள் இனியா. அவள் அம்மா வீட்டிற்கு போகிறேன் என்று சொன்னதை கேட்டவுடன், அதிர்ச்சியானான் பாரி. அவன் முகம் மாறியவுடன், களுக்கென்று சிரித்தாள் இனியா.

" நண்பனா இருந்து, நீங்க, வாங்க, போங்கன்னு கூப்பிட்டதெல்லாம் போதும். இது கணவனா மாற வேண்டிய நேரம்".

கூறிவிட்டு, இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள். அவள் கூறியதைக் கேட்டு சிலைபோல் நின்று கொண்டிருந்தான் பாரி. அவன் என்றுமே அவளை தோழியாக நினைத்ததில்லை என்று அவனால் கூறிவிட முடியுமா என்ன?

பாரியால் நம்பவே முடியவில்லை, அவன் மனதார காதலித்த அதே பெண்ணை, தனது மனைவியாக அடைந்து விட்டான் என்பதை. அவனை, அனைத்தையும் மறந்து விடச் செய்யும், அவளுடைய மயக்கும் சிரிப்புக்கு இவன் சொந்தக்காரன் ஆகிவிட்டான். விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்வதை விட ஒரு சொர்க்கம் பூமியில் இருந்து விட முடியுமா என்ன? அழகான புன்னகையுடன், கட்டிலில் படுத்துக் கொண்டான் பாரி, நேற்றுவரை தோழியாக இருந்து, இன்று தன் மனைவியாக மாறிவிட்ட இனியவை பார்த்தபடி.

தொடரும்...



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top