Part 10
பாகம் 10
சேதுரமனும் சீதாவும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். *என்ன நடந்தது* என்று தெரிந்து கொள்ள துடிக்கும் சுற்றத்தாரின் கேள்விகளாலும், அவர்களுடைய குத்தலான பேச்சுக்களாலும். இனியாவை பார்ப்பதற்கே வெட்கப்பட்டான் சத்யா. அவன் வீட்டிற்கு வருவதையே குறைத்துக் கொண்டான்.
இனியா, தனது விதியை நினைத்து, அழுத கோலமாக காணப்பட்டாள். என்ன வாழ்க்கை இது? என்ன ஒரு மனசாட்சியற்ற சமுதாயம் இது? அவளை நம்ப இங்கு யாருமே இல்லையா? இவ்வளவு நாள், அவள் வாழ்ந்து வந்த ஒழுக்கமான வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையா? அவள் மீது சுமத்தப்பட்ட, நிரூபிக்க முடியாத ஒரு தவறுக்காக, அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
அவளுடைய தோழி ப்ரீத்தி, அவளை விட்டு நகரவே இல்லை. இரவில் கூட அவளுடனேயே உறங்கினாள். திருமண மண்டபத்தில் நடைபெற்ற, அத்தனை நிகழ்வுகளையும், இனியா, ப்ரீத்தியின் மூலமாக தெரிந்து கொண்டாள். ஊர் மக்களின் முன்னிலையில், ராதிகா, இனியாவின் பெற்றோரை அவமானப்படுத்திய முறையைப் பற்றியும், இனியாவின் மீது நம்பிக்கையில்லாமல் சுபாஷ் பேசிய விதம் பற்றியும், எவ்வாறு அவளுடைய பெற்றோர்கள், கையாளாகாமல் நின்றார்கள் என்பது பற்றியும், பாரியின் கோபாவேச வெடிப்பு பற்றியும், அவன் எவ்வாறு இனியாவிற்காக வாதாடினான் என்பது பற்றியும் கூறினாள்.
இனியாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பாரியா அவ்வாறெல்லாம் பேசியது? சாதாரணமாக, பாரி அதிகம் பேசக் கூடியவன் அல்ல... எப்பொழுதும் அமைதி காப்பவன். அவனுடைய வார்த்தைகளும், அவனைப் போலவே மதிப்பு வாய்ந்தது. அவளுடைய பெற்றோர்களுக்கு ஆதரவாக, யாரோ ஒருவர் இருந்ததை நினைத்து அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
தனது கால்களைத் தொட்டபோது, இனியா பதற்றமடைந்தாள். பாரி, அவளுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்திருந்த கொலுசுகளில் ஒன்றை காணவில்லை. அவள் திருமணம் நின்று விட்டது என்பதை விட, பாரியின் கொலுசு தொலைந்து போனது, அவளுக்கு அதிக மன வேதனையைத் தந்தது.
*ஒரு வாரத்திற்குப் பிறகு*
சேதுராமனின் வீட்டிற்குள் நுழைய தயங்கிக் கொண்டு, வெளியே நின்றிருந்தான் பாரி. இனியாவை எதிர்கொள்வதை காட்டிலும், அவளுடைய கண்ணீரை எதிர்கொள்ளத்தான், அதிகம் கலங்கினான் பாரி. அப்போது, வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த சத்யா, அவனைப்பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்தான்.
" ஏன் வெளியிலேயே நிக்கிறீங்க? உள்ளவங்க பாரி"
உள்ளே பார்த்தபடி சேதுராமனை அழைத்தான்.
" அப்பா, பாரி வந்திருக்கார்..."
என்று கூறிவிட்டு,
" எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் வெளிய போகனும்." என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
சேதுராமன் வெளியே வந்து பாரியை உள்ளே வருமாறு அழைத்தார். பாரி வந்திருப்பதாக, சத்யா கூறியதைக் கேட்டு, சீதாவும் சமையலறையில் இருந்து வெளி வந்தார்.
சத்யா கூறியது, கட்டிலில் படுத்திருந்த இனியாவின் காதிலும் விழுந்தது. அவள் சட்டென எழுந்து அமர்ந்து, கண்ணீர் ரேகைகள் படர்ந்திருந்த, தனது முகத்தைத் துடைத்துக்கொண்டாள். பாரியும், மற்றவர்களும், பேசுவதை, அவளுடைய அறையில் இருந்து, அவளால் கேட்க முடிந்தது.
" இனியா எப்படி இருக்காங்க சார்?" என்றான் சேதுராமனிடம்.
அதை கேட்டு, தனது வாயை பொத்திக்கொண்டு, சத்தம் வெளியே கேட்காமல் அழுதாள் இனியா. பாரியின் குரலில் தெரிந்த வலி, அவளை மேலும் பலவீனமாக்கியது.
அவன் அப்படி கேட்டது, சீதாவையும் கலக்கியது.
" எப்படி தம்பி அவளால நல்லா இருக்க முடியும்? அவ உயிரோட இருக்கா, அவ்வளவு தான். இவ்வளவு பெரிய சங்கடத்துக்கு அப்புறமா, அவளால நல்லா இருக்க முடியும்ன்னு நினைக்கிறீர்களா? அவளை எப்படி இந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வரப் போறோம்ன்னு எங்களுக்கு ஒண்ணுமே புரியல. கடவுள் எங்களை ஏன் இப்படி எல்லாம் சோதிக்கிறாரோ"என்று கதறினர்.
அவருடைய தோளில் தட்டி, அவரை சமாதானப்படுத்தினார் சேதுராமன்.
"இனியா எங்க இருக்காங்க?" என்றான் பாரி திடமாக.
இனியாவின் அறையை நோக்கி தனது பார்வையைத் திருப்பி, அவனுக்கு அவள் இருக்கும் இடத்தை உணர்த்தினார் சீதா. நேராக, அவள் அறையை நோக்கி சென்றான் பாரி. சுவற்றில் சாய்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டு, அழுது கொண்டு நின்ற இனியவை பார்த்த பொழுது, அவன் இதயத்தில் ரத்தம் வடிவது போல் வலித்தது அவனுக்கு. பொங்கி வந்த தனது உணர்வுகளை, பல்லை கடித்துக்கொண்டு கட்டுப்படுத்தினான் பாரி. மெல்ல அவள் கண்ணீரை அவன் துடைக்க, சட்டென்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு மனம் விட்டு அழுதாள் இனியா. அந்த நிமிடம், இனியவை சமாதானப்படுத்துவதை தவிர, வேறு எதுவும் அவன் மனதில் நிற்கவில்லை. அவனைக் கேள்வி கேட்கக் கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஓரமாக ஒதுக்கி விட்டு, அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
*உனக்காக நான் இருக்கிறேன்* என்று அவன் வார்த்தைகளால் கூற வில்லை, அவனுடைய செயல் கூறியது. ஆயிரம் வார்த்தைகளால், விவரிக்க முடியாத ஒன்றை, அவன் செயல் விவரித்தது.
தன்னை சுதாகரித்துக் கொண்டான் பாரி. அவளுடைய தோளை சுற்றி வளைத்த படி அவளை வெளியே அழைத்து வந்தான். அப்படி அவர்கள் வந்ததைப் பார்த்து, சேது ராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அவர்கள் அறிந்திருந்தது தான். ஆனால், இந்த அளவிற்கு அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் தோளிலிருந்து தனது கையை அகற்றாமல், அவளை ஆதரவாக பற்றிக் கொண்டு நின்றான் பாரி.
" நான் இனியாவை கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன் சார்"
என்று நெற்றி அடியாக விஷயத்திற்கு வந்து, அவர்களுக்கு வாழ்நாள் அதிர்ச்சியை கொடுத்தான் பாரி. அதுவரை அவனுடைய தோளில் சாய்ந்திருந்த இனியா, தனது தலையை உயர்த்தி, அதிர்ச்சியுடன், அவனை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.
" இனியாவுக்கு இதில் முழுசம்மதம்ன்னா மட்டும்தான்"
இனியவை திடமாக பார்த்தபடி, அதை அவன் உதிர்த்தான். இன்னும் அவனுடைய கைகள், இனியாவின் தோளை சுற்றிவளைத்து தான் இருந்தன. அவள் கண்ணில் இருந்து உருண்டு ஓடிய கண்ணீரை, மென்மையாக துடைத்து விட்டு, *வாழ்நாள் முழுவதும் அதை தான் செய்ய தயாராக இருப்பதை* தன் செயலால் உறுதி கூறினான் பாரி. சேதுராமனும், சீதாவும், அவனை, ஏதோ வானில் இருந்து இறங்கிய தேவனை போல், அதிசயமாகப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
" நான் அவங்க சாஞ்சிக்க, வாழ்நாள் முழுக்க என்னுடைய தோளை கொடுக்க நான் தயாரா இருக்கேன். யோசிச்சு சொல்லுங்க."
தன் கண்களை பாரியின் மீதிருந்து அகற்றாமல், அவனையே பார்த்துக்கொண்டிருந்த, இனியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பினான் பாரி. மெல்ல தனது கையை, அவளது தோளில் இருந்து அகற்றிவிட்டு, அங்கிருந்து விடை பெற்றான், அந்த மூவரையும் விவரிக்க முடியாத ஒரு நிலையில் விட்டுவிட்டு.
சேது ராமனும் சீதையும் ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். அவர்கள் பாரியுடன் அதிகம் பழகியதில்லை என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும், அவனுடைய நிலைப்பாடு அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இனியா, தனது வேலையை ராஜினாமா செய்ததை பற்றி, அவன் சுபாஷிடம் கேள்வி கேட்ட விதமாகட்டும், திருமண மண்டபத்தில் இனியாவிற்காக அவன் வாதாடியதாகட்டும், அந்த நிகழ்வுகள், அவன் மீது ஒரு நல்ல மரியாதையை, ஏற்கனவே இனியாவின் பெற்றோரின் மனதில் உருவாக்கி இருந்தது. ஆனாலும் அவர்கள் சற்று தயங்கினார்கள். ஏனெனில், இனியாவின் திருமணம் நின்று சில நாட்கள் தான் ஆகியிருந்தது. இனியாவை மேலும் சங்கடப்படுத்தவோ, கட்டாயப்படுத்தவோ, அவர்களுக்கு மனமில்லை. அதேநேரம், பாரியுடன் இனியாவின் திருமணம் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். பாரியைப் போன்று, ஒரு நல்ல புரிதல் உள்ள மாப்பிள்ளையை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. ஆனால் இந்த முறை, முழுக்க முழுக்க, இனியா சுயமாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
இனியா முடிவெடுக்கட்டும் என்று அவர்கள் காத்திருந்தார்கள். அவளுடைய நடவடிக்கைகளை கவனிப்பது மட்டும் தான் அவர்களுடைய வேலையாக இருந்தது. இனியாவும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அவளுடைய மனதில், புழுதிப்புயல் அடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு எதுவுமே சரியாகப் புலப்படவில்லை. இறுதியாக, அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தாள்.
.......
தனது எண்ணத்தை தைரியமாக வெளிப்படுத்திவிட்டாலும், பாரியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. *பதற்றம்* அவன் தலையில் அமர்ந்து கொண்டு, அவனை படுத்தி வைத்தது. வழக்கத்திற்கு மாறாக, சற்று முன்னதாகவே, தனது கடையை பூட்டி விட்டு, வீடு வந்து சேர்ந்தான்.
ஒருவேளை இனியா அவனை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டால் என்ன செய்வது? ஒருவேளை அவளுடைய பெற்றோருக்கு இவனை பிடிக்காவிட்டால் என்ன ஆகும்? அவனுக்கு பசிக்கவுமில்லை தூக்கமும் வரவில்லை. இனியாவை திருமணம் செய்துகொள்ள, அவனுக்கிருக்கும் கடைசி சந்தர்ப்பம் இதுதான். இனியா இனியாவாக மட்டுமே இருக்க போகிறாளா, அல்லது இனியாபாரியாக போகிறாளா?
அவனுடைய வீட்டின் போன் மணி அடித்து, அவனுடைய யோசனையை கலைத்தது. யாராவது புத்தகம் கேட்டு அழைப்பார்கள் என்று நினைத்து, ஆர்வமில்லாமல் எடுத்து பேசினான்.
" ஹலோ"
அந்த பக்கத்தில் இருந்து, எந்த பதிலும் வராமல் போகவே, சற்று நிதானித்தான். ஏதோ அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு உணர்வு தோன்றியது. அவனுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மென்று முழுங்கியவன், மெல்லிய குரலில்,
" இனியா..." என்றான்.
அமைதி....
" இனியா நான் பேசறது உங்களுக்கு கேக்குதா? "
அவளுடைய சீரான மூச்சு சத்தம் தெளிவாய்க் கேட்டது.
" இனியா நீங்க எதை நிச்சயப்படுத்திக் விரும்புரீங்கன்னு எனக்கு தெரியும். சத்தியமா, உங்க மேல பரிதாபபட்டு உங்கள நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கல. என்னை நம்புங்க."
" தயவுசெய்து ஒரு தடவை நிதானமா யோசிச்சு பாருங்க பாரி. ஏன்னா, அவசரத்துல எடுக்கிற முடிவுகளை நம்மளால மாற்றவே முடியாது. ஒருவேளை எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட வேண்டி வரலாம்."
" இது அவசரத்தில் எடுத்த முடிவு இல்லை. இந்த முடிவை எடுத்ததற்காக நான் வருத்தப்படவும் மாட்டேன், இதை மாற்றவும் நான் தயாராக இல்லை."
" நீங்க உறுதியா தான் சொல்றீங்களா?" என்று அவள் தடுமாறினாள்.
" இருநூறு சதவிகிதம் உறுதியா சொல்றேன். நிம்மதியா தூங்குங்க. உங்களுடைய மனசுக்கும் இதயத்திற்கும் ஓய்வு தேவை. தயவுசெய்து அழாதீங்க." அவன் கூறிய பொழுது, அவன் குரலில் வலி தெரிந்தது.
" குட் நைட்"
கூறிவிட்டு, அந்த அழைப்பை துண்டித்தான் பாரி. அவன் சொல்வது சரிதான். சில சந்தர்ப்பங்களில் *தூக்கம்* மிக அருமையான மருந்து. அது ரணமான மனதை ஆற்றி, அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதிற்கு அமைதியைத் தர வல்லது. வெகு நாட்களுக்கு பிறகு, கண்ணீர் இல்லாத, நிம்மதியான தூக்கத்தை தூங்கினாள் இனியா... பாரி கேட்டுக் கொண்டதைப் போல.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top