9
வார இறுதியில் சனிக்கிழமையில் ஏதோ விடுமுறை வர, வெள்ளிக்கிழமை மாலையே காஞ்சிபுரம் கிளம்பிவிட்டாள் கீர்த்தி. ஞாயிறன்று அம்மா சொன்ன திருமண விழாவிற்குச் சென்றுவந்ததால் திங்கட்கிழமை காலையில் தான் சென்னைக்குத் திரும்ப பஸ் ஏறினாள்.
அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லியிருந்ததால் வீட்டில் தளர்வாக ஒரு கோப்பை பழரசத்துடன் சோபாவில் சுருண்டு அமர்ந்துவிட்டாள் அவள், மடிக்கணினியில் ஆங்கிலத் தொடர் ஒன்றை பார்க்க.
மதியம் அவசரமின்றி ஆற அமர தனக்காக சமைத்த பாஸ்தாவை தட்டில் எடுத்துக்கொண்டு, அதன் அழகை மெச்சி கைபேசியில் ஏழெட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருந்தவளை, வாசல் அழைப்புமணி இடைவெட்டி அழைத்தது. கதவைத் திறந்தபோது மகதி நின்றிருந்தாள், பள்ளிச் சீருடையுடன்.
"ஸ்கூல் பாதி நாள்தான் இருந்தது. தாண்டிப் போறப்ப உள்ள சத்தம் கேக்குதேன்னு வந்தேன்.. வேலைக்குப் போகலையா கீர்த்தி?"
"ம்ம்.. இல்ல, உள்ள வர்றியா?"
"ம்ம், ஏன் திடீர்னு லீவு?"
"அதுவா, ஊர்ல இருந்து காலைல வர்றதுக்கு லேட்டாகிடுச்சு, ஸோ எதுக்கு லேட்டா போயி திட்டு வாங்கறதுன்னு, உடம்பு சரியில்லனு லீவு சொல்லிட்டேன்! சம்பளத்தோட விடுமுறை! சூப்பர்ல??"
கண்ணடித்து அவள் கேட்க, மகதி சோகமாகப் பார்த்தாள்.
"ஏன் மகதி? என்னாச்சு?"
"இல்ல.. எங்கண்ணா ஓயாம உழைச்சாலும் அரைநாள் கூட அவனுக்கு லீவு தரமாட்டேங்கறாங்க.. அவனோட சம்பளமும் மாசக்கடைசிக்குள்ள கரைஞ்சு போயிடும்.. உன்னைப் பாத்துட்டு, அண்ணாவுக்கும் இதே மாதிரி நல்ல வேலை கிடைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன். அப்படி கிடைக்காம போனது என் தப்புதான்.."
அவளது குழந்தைக் குரலில் இத்தனை சோகம் தொனிக்க அவள் பேச, கீர்த்தியின் நெஞ்சம் கனத்தது.
"ஏன் மகதி.. நீ என்ன பண்ணின?"
"நான் ஒருத்தி இருக்கறதால தானே அண்ணாவால மேல படிக்க முடியல? என்னை விட்டுட்டு எங்கயுமே போக முடியல? என்னைப் பாத்துக்கணும்னு தானே அவனோட கனவையெல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டான் அவன்.."
"ஐயோ.. மகதி.. இதையெல்லாம் யார் உனக்குச் சொன்னது?? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.. கண்டதை நினைச்சு குழம்பாத நீ!"
அவளைத் தோளோடு அணைத்துகொண்டு ஆறுதல் மொழிகள் கூறிட, மகதியும் கொஞ்சம் சமாதானமாக, அவளை வற்புறுத்தி அழைத்து சாப்பிட வைத்து வீட்டுப்பாடங்கள் செய்ய வைத்தாள் கீர்த்தி.
மாலை மாறன் வந்ததும் அவனைத் தனியே மாடிக்கு அழைத்துப்போனாள் அவள்.
"ஹேய்.. கீர்த்தி.. என்னாச்சு? ஏன் மாடிக்கு கூட்டிட்டு வந்த?"
"மாறா.. இன்னிக்கு மகதி என்ன சொன்னா தெரியுமா? அவளாலதான் உன் கனவெல்லாம் நடக்காம போயிடுச்சுன்னு சொன்னா. ஏன் அவ அப்படி பேசினா? நீ கோவத்துல.. எதாவது..?"
மாறன் பெருமூச்சு விட்டான்.
"அப்பாவும் அம்மாவும் எங்களை விட்டுப் போனபோது, மகதி சின்னக் குழந்தை. ஆனா ஒருநாள், அம்மாவும் அப்பாவும் இல்லாதப்ப நாம மட்டும் ஏன் இருக்கோம்னு கேட்டா என்கிட்ட. அன்னைக்கு நான் செத்துட்டேன் உள்ளுக்குள்ள. அவளை விட்டு ஒரு நிமிஷம் பிரிஞ்சாலும் என்னால நிம்மதியா இருக்க முடியல. அவளைப் பாத்துக்கணும்னு காலேஜை விட்டேன். அவளை மாமா வீட்டுல தனியா விட்டுட்டு வர்றதுக்கு மனசு கேக்கல. அதான், அவளையும் கூட கூட்டிட்டு சென்னைக்கே வந்துட்டேன்.
எனக்கு அவளும், அவளுக்கு நானும்தான் உலகம். வாழ்றதே அவளுக்காக தான்ங்கறப்போ, என் கனவுக்கு அவ எப்படி தடையாவா கீர்த்தி? எப்படி நான் அவகிட்ட அப்படியெல்லாம் சொல்வேன்? அதெல்லாம் அவளா நினைச்சுக்கிட்டது.. இன்னிக்கு மட்டும் இல்ல, என்னிக்குமே மகதிதான் எனக்கு ஃபர்ஸ்ட். மத்தது எதுவா இருந்தாலும் அவளுக்கு அடுத்துதான். அது எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும்."
கீர்த்தி சற்றே துணுக்குற்றாலும், மகதியின் மனநிலையைப் புரிந்துகொண்டதில் பாரமாகிப் போனாள். பச்சிளங் குழந்தைக்குக்கூட பாவம் பார்க்காத விதி நினைத்து ஆயாசமாக இருந்தது. சோகமும் பரிதாபமும் மனதில் பிறந்தாலும், மாறனுக்கு வருத்தம் தருமென்பதால் சலனமின்றித் தலையசைத்தாள் அவள்.
"மகதிக்கு உன்னை மாதிரி ஒரு அண்ணன் இருக்கறதே போதும் மாறா. அம்மாவா, அப்பாவா, எல்லாமாவும் நீயே இருக்கியே... அதுவே போதும்."
***
சனிக்கிழமை மதியம் தங்கள் வீட்டு அழைப்புமணி பொறுமையின்றி நான்கைந்து முறை அடிக்க, குழப்பத்தோடு வந்து கதவைத் திறந்தான் மாறன். கையில் மடிக்கணினியை விரித்துப் பிடித்திருந்தபடியே அவனைத் தாண்டிக்கொண்டு உள்ளே வேகமாக வந்தவள் நேராகச் சென்று கிச்சனில் இருந்த காபி ஃபில்டரை எடுத்து டிகாஷனை வடிகட்டிடத் தொடங்க, மாறன் எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாக நின்றான். காய்ச்சிய பாலில் காபி கலந்து எடுத்துக்கொண்டு, அவர்கள் வீட்டு சோபாவிலேயே அமர்ந்து கணினியில் பரபரவெனத் தட்டச்சு செய்தாள் அவள்.
மகதி உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்து, கீர்த்தியின் தீவிரமான முகத்தைக் கண்டு அமைதியாகி, சைகையில் மாறனிடம் என்னவென வினவிட, அதற்குள் கீர்த்தியே, "நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது எனக்கே கேட்குது! ஒண்ணும் இல்ல, காபிக்காக தான் வந்தேன். ப்ராஜெக்ட் வேலையை வீக்கெண்ட் அசைன்மெண்ட்டா குடுத்து தள்ளிட்டாங்க" என்றாள் கணினியிலிருந்து கண்ணெடுக்காமல். மகதி சிரிப்புடன் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மாறன் எங்கும் செல்ல விரும்பவில்லை. காபியை உறிஞ்சியபடி அவள் மடிக்கணினியில் எதையோ தட்டிக்கொண்டிருக்க, "லஞ்ச் டைம் ஆச்சே? காபி...?" என்றவாறு சோபாவில் அமர்ந்தான் அவனும்.
"தலைவலி. காபி இல்லாம வேலை வராது."
அவன் லேசாக சாய்ந்து திரையை எட்டிப் பார்த்தான்.
"பேட்ச் வொர்க்?"
"ம்ம், கடைசி நேரத்துல கரெக்சன். நேத்துல இருந்து இழுத்துட்டு இருக்கு"
திரையில் ஒரு வரியைத் தொட்டுக் காட்டினான் மாறன்.
"அது பக்."
கீர்த்தி அதைக் கவனித்துப் பார்த்தாள்.
"இல்லையே.. ப்ரோக்ராம் ரன் பண்ணினப்போ பக் எதுவும் காட்டலையே?"
"காட்டாது. ஏன்னா நீங்க டெஸ்டிங் பண்றது எல்லாம் உங்க கம்பெனி டீஃபால்ட் மோட் வச்சு. யூஸர் இதை யூஸ் பண்ணும்போது சினாரியோ மாறும்."
"இதை மாத்தியெழுத இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகுமே.. கர்த்தரே!"
அவள் புலம்பியபடி பின்னால் தலையை சாய்க்க, மாறன் மடிக்கணினியை அவளிடமிருந்து வாங்கினான்.
"இதுக்கு என் கம்ப்யூட்டர்ல ஒரு 'டீ-பக்' சாஃப்ட்வேர் இருக்கு."
அவன் கணினியுடன் எழுந்து அவனது அறைக்குச் செல்ல, கீர்த்தியும் பின்தொடர்ந்தாள். அவனது அறை கிட்டத்தட்ட அவனைப்போலவே இருந்தது. தேவைக்குமேல் அதிகமாக எந்தப் பொருளும் இல்லை. அலமாரியில் வரிசைப்படி இருந்த புத்தகங்களும், சில சான்றிதழ்களும். மற்றபடி சுவர்களில் சிறு தூசிகூட இல்லாமல் பளிச்சென இருந்தன. கட்டிலில் நேர்த்தியாக அடுக்கியிருந்த தலையணையும், மடித்துவைத்த போர்வையும், தான் காலையில் கலைத்துப்போட்டுவந்த கட்டிலை நினைவுபடுத்தி அவளை வெட்க வைத்தன.
பால்கனியைப் பார்த்தபடி போட்டிருந்த மேசையருகே, ஒரு மர நாற்காலியை இழுத்துப்போட்டு அவன் அமர, அவளும் அருகில் மற்றொரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள்.
"இந்தமாதிரி அன்னோன் ரிஸோர்சை யூஸ் பண்ணினா, ப்ராப்ளம் எதுவும் வராதே?"
"கவலைப்படாத. இது நானே தனியா எழுதின 'டீ-பக்' சாஃப்ட்வேர்."
"வாவ்! நீயே உருவாக்கினதா?"
"ஹ்ம்ம். வேலைவெட்டி இல்லாம இருக்கறப்ப சும்மா எழுத ஆரம்பிச்சது. முடிச்சு கொஞ்சநாள் தான் ஆகுது. சில கரெக்சன்ஸ் மட்டும் செய்யணும், மத்தபடி பர்ஃபெக்டா வேலை செய்யும்."
இரண்டு கணினிகளையும் வயர்களால் இணைத்து, தகவல் பரிமாற்றங்களையும் தொழில்நுட்ப பிழைத்திருத்தையும் அவன் மும்முரமாகச் செய்ய, கீர்த்தி கைபேசியில் அவளது டீம்மேட்டுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
"ஹான்.. இன்னிக்குள்ள முடிச்சிரலாம்.. ப்ராமிஸ்.. நான் கண்டிப்பா நைட்டுக்குள்ள அனுப்பிடுவேன். ஹ்ம்ம். தேங்க்ஸ்."
முடித்துவிட்டு மாறனிடம் திரும்ப, அவனும், "இப்ப ரன் பண்ணு" என்றிட, அவள் கணினியை இயக்கி மென்பொருளை சோதித்தாள்.
"பேட்ச் சக்ஸெஸ்ஃபுல்! வாவ்!! ரொம்ப தேங்க்ஸ் மாறா..! நேத்துல இருந்து இதோட ரோதனை. இவ்ளோ ஈஸியா முடியும்னு நினைக்கல. என்னோட 'ஆன்-சைட்' ப்ராஜெக்ட் இதுதான். க்ளேய்டன் கம்பெனி தெரியும்தான.. அவங்களோட கமிஷன் ப்ராஜெக்ட். அமெரிக்கா கனவெல்லாம் இத்தோட தலைமுழுகணுமோன்னு பயந்துட்டேன்!"
அவள் நன்றியோடு மொழிய, அவன் தலையசைத்தான் புன்னகையோடு.
"க்ரியேட்டிவான ப்ராஜெக்ட் இது. ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் இன் மார்க்கெட்டிங். ஸ்கோப் இருக்கு."
"ஹேய், படிச்சதும் புரிஞ்சுக்கிட்டயே.. தேங்க்ஸ்! என்னோட சொந்த ஐடியா இது. க்ரெடிட் கார்ட் கம்பெனியில இருந்து, சூப்பர்மார்க்கெட் வரையிலும் யூஸ் பண்ணலாம். இப்போதைக்கு அமெரிக்காவுல காஸ்ட்கோ செயின்ல இதை டெஸ்ட் பண்ணப் போறாங்க.."
"கன்ஸ்யூமர் இன்ட்ரெஸ்ட்ல இது ஒரு நல்ல ஸ்டெப். தேவையில்லாத விளம்பரங்கள் மக்களைச் சேராது. அத்தோட, தேவையானதை மட்டும் தர்றதால கம்பெனியோட பேரும் வளரும்."
"எக்ஸாக்ட்லி! ஆனா கோடிங் தெரிஞ்ச ஆள் யாராச்சும் என் டீம்ல இருந்தா நல்லா இருக்கும். ஒவ்வொரு தடவையும் டெவலப்பிங் டீமை கூப்பிட்டு கூப்பிட்டு டவுட் கேட்க வேண்டியதா இருக்கு"
"ஹ்ம்.."
"ஆமா, இவ்ளோ திறமைய வெச்சுக்கிட்டு, ஏன் போயும் போயும் ஒரு எடுபிடி வேலைல சேர்ந்த நீ.. ஏன் கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைக்கல உனக்கு?"
மாறன் சோர்வாக சிரித்தான்.
"மகதிக்கு அப்ப பத்து வயசு. நடந்ததைப் புரிஞ்சுக்கற பக்குவமும் இல்ல; நடந்தது எதுவுமே தெரியாத குழந்தையும் இல்ல. அம்மாவைக் கேட்டு விடாம அழுவா; அப்பறம் செவத்தை வெறிச்சுப் பாத்து அமைதியா உக்காந்திருப்பா. அவளைத் தனியா விடவே எனக்கு மனசு வரல. அதனால காலேஜுக்கும் வரல. அரியர் வச்சு, அதை வருஷக்கணக்குல எழுதி, எப்படியோ கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் டிகிரியை வாங்கினேனே தவிர, ஒரு நல்ல இன்ஜினியரா ஆகல. அது எனக்கே தெரிஞ்சுது. அதான், கேம்பஸ் இன்டர்வியூவுக்கும் வரல"
தரையைப் பார்த்தபடி அவன் தன் வலிகளை நினைவுகூர, அவளும் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தாள் சோகத்துடன்.
சட்டென ஒரு யோசனை வந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
"என்ன?"
"ஒண்ணுமில்ல.. வரேன்.. தேங்க்ஸ்."
விடைபெற்றுத் தனது அறைக்கு வந்தவள், தங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறைக்கு நீளமான மின்னஞ்சல் ஒன்றை இயற்றத் தொடங்கினாள்.
***
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top