5
தன்னிடம் சண்டையிட்டு சபித்துவிட்டு கண்களைக் கசக்கிக்கொண்டு செல்லும் மஞ்சள் சேலையை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மாறன். கோபம், குழப்பம், பயம், ஆர்வம் என சம்பந்தமே இல்லாத உணர்வுகளெல்லாம் ஒன்றாய்க் கலந்து மையம் கொண்டன மனதில்.
"யாருடா அவ?" என்றான் அருகிலிருந்த மாணவனிடம்.
"ஈசிஈ பொண்ணுடா.. செகண்ட் இயர் தான்.. அவங்க க்ளாஸ் பசங்க ஏதோ ப்ராங்க் பண்ணிட்டாங்கனு நினைக்கறேன்.."
"அதுக்கு எதுக்குடா என்கிட்ட சாபம் விட்டுட்டுப் போறா..?"
நண்பர்கள் சிரித்தனர். "பாவம் ஆசையா பேச வந்தவளை நோஸ்கட் பண்ணினா, சாபம் விடாம என்னடா பண்ணுவா? சரி சரி, போயி சட்டைய மாத்து.. சார் வர்ற டைம் ஆச்சு!"
வகுப்பில் இருக்கப் பிடிக்காது புத்தகப்பையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பி பைக்கை அடைந்தபோது, எதிர்க் கட்டிடத்தில் இரண்டாமாண்டு ஈசிஈ வகுப்பறையை அனிச்சையாகப் பார்க்க நேர்ந்தது. சுடிதாரும் ஜீன்ஸும் அணிந்திருந்த பெண்களுக்கிடையே, சோகமே உருவாக சேலையில் அமர்ந்திருந்தவளும் தென்பட்டாள். பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், கோபத்தின் ஈரம் இன்னும் காயாமலிருக்க, முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் வழியில் விரைந்தான் அவன்.
அடுத்த சில நாட்கள் கல்லூரியில் அவளைத் தவிர்க்கவென முயற்சிகள் செய்தான். ஆனால் அவளை அதற்குப்பின் எங்குமே காணவில்லை அவன். கண்ணை விட்டு மறைந்தாலும், மனதில் ஏதோவொரு வருத்தம் ஒட்டிக்கொண்டிருந்தது, அவள் விட்டுச்சென்ற மல்லிகை வாசத்தைப்போல. 'நாம் என்ன தவறு செய்தோம்' என மூளை நியாயம்கேட்டு சண்டையிட்டாலும், மனதுக்குப் புரிந்தது, அவளை அம்மாதிரிப் பேசி அழவைத்தது தவறென. வலியச் சென்று மன்னிப்புக் கேட்கவெல்லாம் இசையாமல், தானாக எங்கேனும் சந்தித்தால் சாரி கேட்டுக்கொள்ளலாம் என நினைத்து விட்டுவிட்டான் அவனும். விதியோ வினையோ, அதன்பின் ஒருநாள்கூட அவளை கல்லூரி வளாகத்தில் சந்திக்கவேயில்லை.
***
யோசனையுடன் நின்றவனை மகதி உலுக்கினாள்.
"என்ன அண்ணா.. நீயா அதையெல்லாம் செஞ்ச? நீ யாருகிட்டவும் சத்தமா கூட பேசமாட்டியே.. இவங்ககிட்ட சண்டையெல்லாம் போட்டயா நீ? ஏன்? எப்படி நடந்தது?"
"தெரில குட்டி.. ஆனா நான் அதையெல்லாம் மறந்து வருஷக்கணக்கா ஆகுது.."
"ப்ச்.. கோடரி மறந்துடும்; மரம் மறக்காதுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?"
கேட்டுவிட்டுக் காத்திராமல் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு அவள் சென்றுவிட, மாறனுக்கு ஏனோ வருத்தமாக இருந்தது.
****
அன்று மாலையில் படிக்கட்டுக்கு அருகே அவளுக்காகக் காத்திருந்ததுபோல நின்றிருந்தான் மாறன். அவளோ அவனை ஏறிட்டும் பாராமல் மறுபுறம் திரும்பிக்கொண்டு படியேறிச் செல்ல, அவன் ஆயாசமாகக் கண்களை சுழற்றினான் ஒருமுறை.
"கீர்த்தி, ஒரு நிமிஷம்!"
அவள் நிற்கவில்லை.
"ஒரு நிமிஷம் நில்லு..."
ஓடிச்சென்று அவளுக்கு இரு படிகள் முன்னால் நின்று மறித்தான் அவன்.
"ஒரே நிமிஷம்.. ப்ளீஸ்.."
"ப்ச், என்ன?"
"நான்.. உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டிருக்க கூடாது…"
"ம்ம், அதுக்கு என்னவாம் இப்ப?"
"அதாவது, நான் என்ன சொல்ல வர்றேன்னா.. I really was a jerk at college. And I'm ashamed of what I did. எனக்கு உன்னைப்போல யாருகிட்டவும் தானா வலிய போயி பேசற பழக்கமில்ல. அப்படி வந்து பேசினாலும் பதில்பேச தெரியாது. ஸ்கூல்ல இருந்த அதே ஃப்ரெண்ட்சோட தான் காலேஜ்லயும் இருந்தேன். புதுசா யாருகிட்டவும் பேச தேவை ஏற்படல அப்போ. ஸோ, முதல்முதலா உன்கிட்ட பேசினப்ப.. கொஞ்சம்.. ரூடா.. நடக்க.. வேண்டியதா.."
கீர்த்தி வெறுமையாக சிரித்தாள்.
"கொஞ்சம் ரூடாவா? என் கேரக்டரை கேவலப்படுத்தி பேசின நீ!! எனக்கு டீசன்சி இல்லன்னு சொன்ன!! ஞாபகமிருக்கா?"
மாறன் தலையசைத்தான் தாழ்ந்த பார்வையுடன்.
"அதான், ஐம் ரியலி சாரி. எனக்கு அப்பவே ரொம்ப வருத்தமா தான் இருந்துச்சு. இத்தனை வருஷமாகிடுச்சு, ஸோ.. நடந்ததை மறந்துட்டு, நாம ஃப்ரெண்ட்ஸா இருப்போமே..?"
"உன் ஃப்ரெண்ட்ஷிப் எனக்குத் தேவையில்ல. இனி எப்பவும் என் வழியில நீ குறுக்க வராம இருந்தாலே போதும்!"
அமிலம் தெறிக்கச் சொல்லிவிட்டு அவள் நகர, செல்பவளை ஒரு பெருமூச்சோடு பார்த்தவாறு நின்றிருந்தான் மாறன்.
***
மறுநாள் அவசரமாக அலுவலகம் செல்லக் கிளம்பி வந்தபோது, ஸ்கூட்டியின் அருகில் நின்றிருந்தான் மாறன்.
"நீலாங்கரை ஹைவேஸ் ஃபுல்லா ப்ளாக் பண்ணியிருக்காங்க. ஏதோ ட்ரக்கு கவுந்திருச்சாம். நீ சோழிங்கநல்லூர் ரூட்டை யூஸ் பண்ணு."
கீர்த்தி மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு அவனை முறைத்தாள்.
"ரொம்ப நல்லவன் மாதிரி ஆக்ட் பண்ணாத, சரியா? எங்களுக்குத் தெரியும், எப்படிப் போகணும்னு!"
அவனை பதில்பேச விடாமல் கைகாட்டித் தடுத்தவள், இறுக்கமான முகத்துடனே வண்டியில் கிளம்பினாள். தெருமுனை தாண்டும் முன்னரே கைபேசியில் அலுவலக நண்பர் ஒருவர் அழைத்தார்.
"கீர்த்தி மேடம்.. நீலாங்கரைல ட்ராபிக் ஜாம். வண்டிகளை போகவே விடமாட்டேங்கறாங்க. நான் நடுவுல மாட்டிட்டேன், முன்னவும் போகமுடியாம, பின்னாலயும் வரமுடியாம! எனக்காக கொஞ்சம் பர்மிஷன் சொல்லிடுங்க ஹெச்.ஆர். கிட்ட"
கீர்த்தி அமைதியாக உம்கொட்டிவிட்டு அழைப்பை வைத்தாள்.
நெடிய பெருமூச்சை விட்டவள், மாற்றுச் சாலையை நோக்கி வண்டியை செலுத்தினாள்.
***
வியாழனன்று மாலை வீட்டில் மேகி பாக்கெட்டுகள் தீர்ந்திருப்பதைக் கண்டு, மளிகை சாமான் லிஸ்ட் ஒன்றை எழுதிக்கொண்டு பக்கத்துத் தெருவில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றாள் கீர்த்தி.
"உப்பு... ம்ம்.. எடுத்தாச்சு.. சிப்ஸ் எடுத்தாச்சு.. மேகி வாங்கியாச்சு.. பால் பாக்கெட்.. எடுக்கலையே.. எங்கே..." எனத் தனக்குள் முணுமுணுத்தவாறே அவள் பொருட்கள் எடுத்துக்கொண்டிருக்க, பால் பாக்கெட்டுகள் வைத்திருந்த குளிர்பதன பெட்டி அருகே நெடியதொரு உருவத்தைப் பார்த்தாள்.
அது யாரென முகத்தைப் பாராமலேயே தனக்குத் தெரிந்திருப்பதை எண்ணி எரிச்சலானவள், அவன் சென்றபிறகு அங்கே செல்லலாமென ஓரமாக ஒதுங்கி நின்றாள்.
அவன் இப்போது நகர்வதாகத் தெரியவில்லை. கைபேசியில் யாரிடமே பேசிக்கொண்டே குளிர்பதனப் பெட்டியின் கைப்பிடியைத் திருகி விளையாடிக் கொண்டிருந்தான் அவன். பொறுமையிழந்த கீர்த்தி, வேகமாகச் சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பில் செக்சனுக்கு நடக்க, அவளைக் கவனித்துவிட்டவன் கைபேசியை இறக்கிவிட்டுக் கைகாட்டினான் அவளுக்கு.
கண்டுகொள்ளாமல் கணக்காளரிடம் பொருட்களை எடுத்துவைத்தாள் அவள். அவனே அதற்குள் நடந்து வந்தான்.
"ஹாய்.. ஒரே வீட்டுல இருக்கோம், இப்டி வெளிய பார்த்தாக்கூட பார்க்காத மாதிரி இருந்தா என்ன அர்த்தம்? இந்த ஊர்லயே எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான். நீயும் இப்டி உர்ருனு இருந்தா நான் என்ன பண்ணுவேன்?"
"அது உன் ப்ராப்ளம். அப்பறம், ஒரே வீடுன்னெல்லாம் வெளிய சொல்லாத. எதிர்வீடு, அவ்ளோதான். கெட் லாஸ்ட்!"
"மேடம்.. ஐநூத்துப் பன்னெண்டு ரூபா பில்" என அழைத்தார் கணக்காளர். கீர்த்தி தனது டெபிட் கார்டை நீட்ட, அவரோ, "சாரி மேடம்.. மிசின் வேலை செய்யல.. கேஷ் தாங்க" என்றார்.
கீர்த்தி துணுக்குற்றாள். பையில் பணம் எடுத்துவந்ததாக நினைவில்லை.
அவள் தயங்கி நிற்பதைப் பார்த்தவன் தனது சட்டைப்பையில் கைவிட, அதற்குள் நினைவுவந்து தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் அவளே.
"பன்னெண்டு ரூபா அப்பறமா எடுத்துட்டு வந்து தர்றேண்ணா"
அவரோ தயக்கமாகக் கழுத்தைத் தேய்த்தார்.
"மேடம்.. பில் அமவுண்ட் சரியா டேலி ஆகலைன்னா என் சம்பளத்துல கைவெச்சிருவாங்க..."
"ப்ச்.. இப்ப என்னண்ணா பண்றது.. கார்ட் ஸ்வைப் வேலை செய்யாதது என் தப்பா?"
மாறன் சில்லரை எடுத்துக் கவுண்ட்டரில் வைத்தான்.
"சார் உங்களுக்குச் தெரிஞ்சவரா மேடம்? நீங்க இவருக்கு அப்பறமா திருப்பிக் குடுத்துடுங்க--"
"ஒண்ணும் தேவையில்லை" என்றபடி தனது பொருட்களிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து வெளியே வைத்துவிட்டு, "இப்ப சரியா போச்சுல்ல" என்றவாறு பையுடன் வெளியேறினாள்.
வீட்டுக்கு வந்து பொருமலுடன் அமர்ந்திருந்தவளை வாசல் மணி அழைத்தது.
திறந்தால் மகதி நின்றிருந்தாள் வெளியே, கையில் அவள் விட்டுவந்த சாக்லேட்டுடன்.
"ஹாய் கீர்த்தி.. கடையில இதை நீங்க விட்டுட்டு வந்துட்டீங்களாமே? அண்ணன் குடுத்தான், இந்தாங்க"
அக்குழந்தையிடம் தனது கோபத்தைக் காட்ட மனசாட்சி தடுக்க, அமைதியாகத் தலையசைத்து அதை வாங்கிக்கொண்டாள் அவள். "தேங்க்ஸ்டா"
"இந்தச் சாக்லேட் உங்களுக்கும் பிடிக்குமா? அண்ணனுக்கும் இது ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? எனக்குதான் அதுல உள்ள கேராமல் ஃப்ளேவர் பிடிக்காது.."
"ஓ.."
"ஓகே கீர்த்தி, டாட்டா"
***
சனிக்கிழமை மாலை. அலுவலகப் பணி நேரம் முடிந்ததும், கல்லூரித் தோழிகளை சந்திப்பதாக வாக்களித்திருந்தாள் கீர்த்தி. வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், மாதம் ஒருமுறையேனும் சந்தித்துவிடும் அவர்களது நட்பு வட்டாரம். பொதுவாகவே மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமையை அவர்களுக்காக ஒதுக்கிவிடுவாள் கீர்த்தியும்.
அடையாரில் ஒரு மேல்தட்டுக் காபி கடையின் மாடியில் காற்றோட்டமான மூலையில் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த நான்கு யுவதிகள், கீர்த்தியைப் பார்த்ததும் மலர்ந்து கையசைத்தனர்.
பொதுவான விசாரிப்புகள் முடிந்து, உணவும் ஆர்டர் செய்துவிட்டு, அவரவர் வாழ்க்கையைப் டற்றியும் வேலையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க, கீர்த்தி ஏனோ அமைதியாக இருப்பதை மற்றவர்கள் கவனித்தனர்.
"என்னாச்சுடி கீர்த்தி? ஏதோ யோசனைல இருக்கற போல?"
"ம்ம்.. நான் சொன்னா நீ நம்பமாட்ட சஹானா.. என்னோட எதிர்வீட்டுல யார் குடிவந்திருக்கா தெரியுமா?"
"யாருடி? எவனாவது செம்ம பிகரா?"
கீர்த்தி திரும்பி அவளை பார்வையால் எரிக்க, அவள் ஈயென சிரித்தாள்.
"சும்மா! சரி சொல்லு, யாரு?"
"காலேஜ்ல.. செகண்ட் இயர்ல என்னை அசிங்கப்படுத்தினான்ல.. நான்கூட முகத்துல தண்ணி ஊத்துனனே, மாறன்னு.. ஞாபகமிருக்கா?"
"ஏய்.. உன் க்ரஷ் ஆச்சே? ப்ச், நான் கரெக்டா தான கேட்டேன்..? ஓ மை காட்!! வாவ்!! உன் எதிர் வீட்டுல மாறனா? ஏன், எப்படி, எப்போ? சொல்லு கீர்த்தி!!"
இப்போது மற்றவர்களும் ஆர்வத்துடன் கேட்க, கீர்த்தி பெருமூச்சுடன் நடந்ததை ஒப்பித்தாள். அவள் முடித்தபின்னர் அனைவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, கீர்த்தியும் சந்தேகமாகப் பார்த்தாள்.
"என்ன, என்ன? ஏன் அப்டிப் பாக்குற?"
"கீர்த்தி, எனக்கென்னமோ அவன் மாறிட்டான்னு தோணுதுடி.. நம்ம காலேஜ்ல அவன் பேசினதே நாலு பேர்ட்ட தான். ஆனா இப்ப, உன்கூட இவ்ளோ கேஷுவலா பேசறான், பழகறான். ஏதோ ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் போலிருக்கு. போனாப் போகுதுன்னு மன்னிச்சு விட்டுடு கீர்த்திமா"
"எப்டி சஹா..? என்னை அவ்ளோ சீப்பா பேசினவனை... ப்ச்.."
"அந்த ப்ராங்க்கை பண்ணின நம்ம டிபார்ட்மெண்ட் பசங்களை அடுத்தநாளே திட்டி, வார்ன் பண்ணி, ஒரு வாரம் ஸஸ்பெண்டும் பண்ணவெச்சான் அவன். தெரியுமா?"
கீர்த்தி வியப்பாக நிமிர்ந்தாள். "அப்டியா?"
"ம்ம், உன்கிட்ட அவனைப் பத்திப் பேசினா நீ ஹர்ட் ஆவன்னு அந்த டாபிக்கையே நாங்க எடுக்கல. ஆனா உண்மைல அதுதான் நடந்தது. தனக்காக பண்ணானோ, உனக்காக பண்ணானோ.. தப்பு யார்மேலன்னு கண்டுபிடிச்சு ஆக்சன் எடுத்தான். அதுலயே அவன் நல்லவனா தான் தோணறான்."
"ஆமா கீர்த்தி, பேரண்ட்ஸ் இறந்துட்டாங்கனு வேற சொல்ற.. நம்ம வயசுதானே அவனுக்கும்..? இந்த சின்ன வயசுல ஏற்கனவே ஏகப்பட்ட கஷ்டம்.. இதுல நீ வேற ஏன் தினமும் அவன்மேல வெறுப்பைக் கொட்டணும்? மறப்போம் மன்னிப்போம்னு இருந்துடேன்"
கீர்த்தி குழப்பமாக அமர்ந்திருந்தாள். அவள் நிலையறிந்து பேச்சை மாற்றி வேறு ஏதேதொ பேசத்தொடங்கினர் தோழிகள். சிரிப்பும் கூத்துமாக இரவு உணவு முடிய, அவர்களிடம் விடைபெற்று வீட்டுக்குக் கிளம்பினாள் கீர்த்தி.
சுமார் இருபது நிமிடப் பயணத்திற்குப் பின்னர், வீட்டிற்கு இன்னும் நான்கைந்து தெருக்கள் இருந்தபோது, ஸ்கூட்டி கொஞ்சம் வினோதமாக சத்தமிட்டது. திக்கித் திணறி ஓடிய மோட்டார், இரு நொடிகளில் உயிரை விட்டது.
இருண்ட, ஆளற்ற தெருவில் தன்னந்தனியாக நின்றாள் கீர்த்தி.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top