2
மாலை ஆறு மணியளவில் கதவு மீண்டும் தட்டப்பட்டது. கூடவே, "கீர்த்தி!! மகதி வந்திருக்கேன், உங்களை கூட்டிட்டுப் போக. வாங்க சீக்கரம்!" என்றொரு குழந்தைக் குரலும் கதவைத் தாண்டிக் கேட்டது.
மடிக்கணினியில் ஆங்கில ஹாரர் படம் பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தி பெருமூச்சு விட்டாள்.
'நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை கீர்த்தி. எல்லாமே நடந்து முடிந்து ஐந்து ஆண்டுகளாகின்றன. உன் முகம் கூட அவனுக்குக் கிட்டத்தட்ட மறந்துவிட்டதல்லவா? இனிமேல் உன் வாழ்க்கையில் அவன் வரமாட்டான். அவன் யாரோ நீ யாரோ. இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..'
எத்தனை சமாதானங்கள் சொன்னாலும் மனது ஒத்துழைக்க மறுத்தது. எனினும், காலையில் சந்தித்த சின்னப் பெண்ணின் முகமும் மனதிலிருந்து அகல மறுத்தது. விருப்பமே இல்லாவிட்டாலும், அக்குழந்தைக்காக, அதன் தூய்மையான விகற்பற்ற பேச்சிற்காக, தான் அணிந்திருந்த பழைய சுடிதாரின்மீது ஒரு காட்டன் துப்பட்டாவை மட்டும் மாட்டிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே நடந்தாள் கீர்த்தி.
"ஹ்ம்ம்.. வந்துட்டேன், போலாம்.."
நினைத்தது போலவே பெரிதாக ஆட்கள் யாரும் வராமல் வெறுமையாகத்தான் இருந்தது அவர்களது வீடு. பொருட்கள் அளவாகத் தான் இருந்தன.
இரண்டு நாற்காலிகள், மூலையில் சின்ன மேசை; அதில் ஓரிரு வார இதழ்கள். ஓரமாக ஒரு மர ஸ்டூல்.
சுவரில் புகைப்படங்களோ ஓவியங்களோ கடிகாரமோ எதுவுமே இல்லை. முன்பிருந்த ஆட்கள் விட்டுச்சென்ற ஆணிகள் மட்டும் ஆங்காங்கே தெரிந்தன. காலண்டர் மாட்டியிருந்ததன் அடையாளமாக சுவரில் ஓரிடம் வெளுப்பாக இருந்தது.
சமையலறையில் ஒற்றை பர்னர் கொண்ட சின்ன அடுப்பும், சிற்சில பாத்திரங்களும் தெரிந்தன. பெரியவர்கள் யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அவள் அழைப்பதாகச் சொன்ன விருந்தினர்களும் யாரும் இல்லை.
மின்தூக்கிகள் இல்லாத நான்கு மாடிக் குடியிருப்பு அவர்களது. குடியிருப்பு என்பதை விட, ஒண்டுக் குடித்தனம் என்றால் பொருத்தமாக இருக்கும். தரைத்தளத்தில் ஓனரும், அவரது சகாக்களான சில வயதானவர்களும் இருந்தனர். மற்ற வீடுகளில் சில தம்பதியர்கள், வறுமைக் கோட்டின் அருகில் வசித்தனர். ஓரிரு போர்ஷன்களில் கீர்த்தியைப் போல வேலைக்காக வீட்டிலிருந்து வந்து தங்கியிருந்த இளைஞர்கள் இருந்தனர். அதில் பாதிப்பேரை இன்று வரை பார்த்ததில்லை கீர்த்தி, வேலை நேர வித்தியாசங்களால். எதிர்வீட்டில் ஒரு வடநாட்டுக் குடும்பம் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவர்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் காலியாகத் தான் இருந்தது.
வாடகை அதிகமில்லை என்பதாலும், இங்கிருந்து நீலாங்கரை ஆபிஸ் பக்கம் என்பதாலும் நான்கு குறுக்குச் சந்துகளைத் தாண்டி வந்து இந்தக் குடியிருப்பில் தங்கியிருந்தாள் அவள். பெரிதாகத் தேவைகள் இல்லாததால் அந்த சின்ன போர்ஷனே போதுமானதாக இருந்தது அவளுக்கு. ஆனால் தற்சமயம் எதிர்வீட்டிற்கு வந்திருந்தவனுக்கு அந்த வீடு பொருந்துமெனத் தோன்றவில்லை.
இதுபோன்ற இடத்தில் அவனுக்கு என்ன வேலை? இவன்தான் பரம்பரை பணக்காரனாயிற்றே? பின் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? ஏன் தங்கையுடன்? என்ன காரணம்?
விடையறியாத கேள்விகள் மூளைக்குள் மேகங்களாய் மிதக்க, உள்ளே சென்று அமைதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள் அவள், கண்களைத் தரையில் பதித்தபடி.
"இந்தாங்க கீர்த்தி.. சாப்பிடுங்க.."
ஒரு தட்டில் பிஸ்கட்டுகளும் பழத்துண்டுகளும் வைத்து மகதி நீட்ட, புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள் அவள். அப்போது உள்ளறையிலிருந்து வந்த மாறன் அவளைக் கண்டு புன்னகைக்க முயல, அவளோ முகத்தைத் திருப்பிக்கொண்டாள் வேறுபுறம். மாறன் இறுக்கமாக நிற்க, மகதி மாறனிடம் சென்றாள்.
"அண்ணா.. மத்த வீடுங்க எல்லாம் பூட்டியிருக்கு. தட்டினாலும் தொறக்கல, தொறந்தாலும் பேசல. பேசின ரெண்டு பேரும் கூட வரல.. கீர்த்தி மட்டும் தான் நான் கூப்பிட்டதும் வந்தாங்க.." என அவள் நேசத்துடன் கூற, கீர்த்தியை அவன் பார்க்க, அவளுக்கோ இதெல்லாம் இம்சையாக இருந்தது. அசவுகரியமாகத் தட்டிலிருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்து விரல்களில் அழுத்த, அதுவோ பட்டென உடைந்து தரையில் விழுந்தது. கீர்த்தி பதற்றமாய் எழுந்து அதை சுத்தம் செய்ய முயல்வதற்குள் மகதி ஓடி வந்து தடுத்தாள்.
"விடுங்க பரவால்ல கீர்த்தி.. நீங்க எங்களோட கெஸ்ட்டா வந்திருக்கீங்க, ஸோ நீங்க அதையெல்லாம் செய்யக் கூடாது... அதை நான் எடுத்துக்கறேன் கீர்த்தி, நீங்க சாப்பிடுங்க!"
அந்தக் குழந்தைப் பெண் ஏதோ முதிர்ந்த குடும்பப் பெண் போலப் பேச, கீர்த்திக்கு இப்போது கேள்விகள் தாளவில்லை.
"மகதி.. யாரும்மா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தாங்க?"
"எங்க மம்மி தான்! எப்பவும் வீட்டுக்கு வர்றவங்களை வாங்கனு கூப்பிடணும், சாப்பிட குடிக்க ஏதாவது குடுக்கணும், அவங்களை எந்த வேலையும் செய்ய சொல்லக் கூடாது, அவங்களை திருப்தியா பாத்துக்கணும், போகும்போது வாசல் வரை போயி அனுப்பி வைக்கணும். இதெல்லாம் எங்க மம்மி நான் குட்டிப் பாப்பாவா இருந்தப்பவே சொல்லிக் குடுத்தாங்க, தெரியுமா? அப்பறம் அண்ணாவும் அதை அடிக்கடி ஞாபகப் படுத்திட்டே இருப்பான்.. ஏன்னா, மம்மி அவனுக்கும் தானே சொல்லித் தந்திருக்காங்க?"
அழகாகக் கண்களை அசைத்து அவள் பேச, ஆதுரமாக அவள் கன்னத்தை வருடினாள் கீர்த்தி.
"சரி.. எங்கே உங்க மம்மி? ஏன் இங்க இல்ல? தனியா இங்கென்ன பண்றீங்க?"
மகதி சட்டெனக் கண் கலங்கினாள்.
"மம்மியும் டாடியும்... எங்களை விட்டுட்டு சாமி கிட்ட போயிட்டாங்க.."
கீர்த்தி அதிர்ச்சியானாள். மகதியின் கண்கள் மடைதிறக்க, மாறனும் இப்போது களையிழந்தான்.
"மகதி.. ஐம் ரியலி சாரிமா.. இங்க வா"
எழுந்து அவளை அன்போடு அணைத்துக்கொண்டாள் கீர்த்தி. மகதியும் அமைதியாக அதில் அமிழ்ந்துவிட, அறையோரம் நின்ற மாறனை அடைந்தன கீர்த்தியின் விழிகள்.
அமைதியாகவே நின்றிருந்தவன், மெதுவாக வந்து மகதியைத் தோளில் தட்டிக்கொடுத்து சமன்படுத்தினான்.
"குட்டி, வீட்டுக்கு வந்த கெஸ்ட் முன்னால அழக் கூடாதுன்னும் மம்மி சொல்லியிருக்காங்கள்ல? கண்ணைத் துடைச்சுக்கோ.. கீர்த்திக்கு உன் ஸ்டோரி புக்ஸை காட்டு போ.."
அவள் தலையசைத்துவிட்டு எழுந்து உள்ளே செல்ல, கீர்த்தி அசவுகரியமாக அமர்ந்திருந்தாள் கைகளைப் பிசைந்தபடி. எழுந்து சென்றுவிடலாம் என நினைத்தபோது, தண்மையாக "கீர்த்தி.." என அழைத்தான் மாறன்.
அவனது குரலில் தன் பெயரைக் கேட்டதும் உள்ளங்கால் வரை சிலிர்த்தது அவளுக்கு. தன் மனதைத் திட்டி அடக்கியவள், முகத்தை சமன்படுத்திக்கொண்டு நிமிர்ந்தாள்.
"உனக்கு நிறைய கேள்வி இருக்கும்னு தெரியும். ஆனா மகதிகிட்ட வேணாம், எங்கிட்ட கேளு"
இவனிடம் என்ன பேச்சு என்பதாக உதட்டை சுழித்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள் அவள். மாறனே கொஞ்சம் கனைத்துவிட்டுத் தொடர்ந்தான்.
"காலேஜ்ல கடைசி வருஷம் படிக்கும்போது, அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க... ஒரு ஃப்ளைட் ஆக்சிடென்ட். கேள்விப்பட்டிருப்பியே.. 2018ல, மும்பையில இருந்து கிளம்பின விமானம் ஒண்ணு என்ஜின் கோளாறு காரணமா வெடிச்சு விபத்தானது..? அதுலதான்.. ரெண்டு பேரும்.."
தன்னை சமன்படுத்திக்கொண்டவன் சோகமாகப் புன்னகைத்தான்.
"ஸோ.. இப்போதைக்கு நானும் மகதியும் மட்டும்தான்."
தலையை மட்டும் அசைத்தாள் அவள், அவனைப் பார்த்தும் பாராமல். கேட்க கஷ்டமாக இருந்தது. ஆனால் அவளது கோபத்தை மட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை அது.
உள்ளறையிலிருந்து வந்த மகதி தன் கதைப் புத்தகங்களை அவளுக்குக் காட்ட, மாறனைத் தவிர்த்துவிட்டு அதனிடம் அடைக்கலமாயின அவளது விழிகள். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர் அவளும் மகதியும். மகதியை ஏனோ மிகமிகப் பிடித்துப் போய்விட்டது அவளுக்கு. பல வருடங்கள் பழகிய நண்பர்களைப் போல இயல்பாக இயைந்து போயினர் இருவருமே.
மாறன் சிறிது நேரம் மட்டும் அங்கே அமர்ந்திருந்தான். கீர்த்தி அவனிடம் பேசப் போவதில்லை எனப் புரிந்ததும், அவனே நாசூக்காக எழுந்து உள்ளறைக்குச் சென்றுவிட, அவள் உள்ளூர பெருமூச்சு விட்டாள்.
இரவு எட்டு மணியளவில் வந்து, "மகதி, இங்கயே டின்னர் சாப்பிட சொல்லேன் உன் கெஸ்ட்டை.." என்க, மகதி ஏதும் சொல்ல வருமுன் வேகமாகத் தலையாட்டிவிட்டு, "இன்னொரு நாள் பாக்கலாம் மகதி.. நான் வரேன்" என மகதிக்கு மீண்டுமொரு அணைப்பைத் தந்து தலையசைத்து விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டாள் அவள், அவனைத் திரும்பியும் பாராமலேயே.
இரவு நேரம்வரை மடிக்கணினியில் படம் பார்த்துவிட்டு, அப்படியே இரண்டு நிமிட மேகியை செய்து சாப்பிட்டுவிட்டு, மறுநாள் அலுவலகம் செல்லத் தேவையானவற்றை எடுத்து வைத்து முடிக்கையில் மணி பத்தரை.
கட்டிலில் மண்டியிட்டு அமர்ந்து கைவிரல்களைப் பிணைத்துக் கண்மூடி ஒரு நிமிடம் பிரார்த்தித்துவிட்டு, கையால் தன்மீது ஒரு சிலுவையும் இட்டுக்கொண்டு விளக்கணைத்துவிட்டுப் படுத்தாள் கீர்த்தி.
"கர்த்தரே, தீங்கிழைத்தவரை மன்னிக்கற பெருந்தன்மையான மனதைத் தாரும். மன நிம்மதியைத் தாரும். மன தைரியத்தைத் தாரும்."
தன் பிரார்த்தனையை உதட்டுக்குள் முணுமுணுத்தவாறே இமைகளை மூடி உறக்கத்தை வரவழைக்க முயன்றாள் அவள்.
உறங்காத மனமோ ஐந்து வருடங்கள் பின்னால் சென்றது.....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top