முதல் அடியாக
"ஏன்யா? அவ தான் ஒத்த கால்ல நிக்குறான்னா உனக்கு புத்தி இல்லையா? " என்று கூறும் பொஞ்சாதியை பார்த்து புன்னகைத்தார் கணேசன்.
"சரி நேரம் ஆகுது. நான் வரேன்" என்று மென்மையாய் கூறிவிட்டு கிளம்பினார்.
வெளியே வந்து அவரை வழியனுப்பியவர்.
சற்று சத்தமாக, "மணி ஒன்பாதாச்சு. உள்ள வாடி. எங்கயாவது உங்கப்பா மேல கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா பாரு? இந்நேரத்துக்கு வாட்ச்மேன் வேலைக்கு போறாரு. யாரால்? எல்லாம் உன்னால தான்" என்று அன்னை கத்திக்கொண்டிருக்க, அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் எழுந்து உள்ளே சென்றாள் அவர்களின் ஒரே மகள் காவியா.
புத்தகத்தை வைத்துவிட்டு நேராக தட்டில் சாதத்தை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
"எங்கயாவது கொஞ்சமாச்சும் உரைக்குதா? இவ்ளோ திட்றேனே கல்லு மாதிரி உட்கார்ந்து சாப்பிடற? " என்று கேட்டு கொண்டே போக, இதெல்லாம் பழகி விட்டது என்பது போல் மீண்டும் ஒரு மூலையில் விளக்கை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் காவியா.
"உன்கிட்ட பேசுறதுக்கு அந்த சுவதுகிட்ட பேசினா கூட மனசு இறங்கும்" என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
ஒரே அறைக்கொண்ட மின்வசதி இல்லாத, சிறிய ஓலை குடிசை அது. இவர்களை போல் ஐம்பது குடும்பங்கள் இருக்கின்றனர் இங்கே. எந்த வசதியும் இல்லாத ஒரு பகுதி.
தலைமுறை தலைமுறையாய் பள்ளிக்கூடத்தில் கால் பதியா குடும்பங்களில் இவள் குடும்பமும் ஒன்று.
இவர்கள் குடும்பத்தில் படிப்பின் வாசனையை முகர்ந்த முதல் ஜீவன் காவியா தான்.
பன்னிரெண்டாவத்தில் 1184 மதிப்பெண் பெற்றிருந்தாள்.
அவள் பள்ளியில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிட, படிப்பை பற்றி ஒன்றும் அறியாத பாமர மக்கள் அல்லவா? இவளின் பெருமை அறியாமல் எப்பொழுதும் போல் அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியர் கணேசனை கூப்பிட்டு, "இங்க பாருங்க இந்த பள்ளிக்கூடத்துல உங்க பொண்ணு தான் இரண்டாவது மார்கு வாங்கிருக்கா. அவ மேற்கொண்டு நல்லா படிக்கணும். பெண் பிள்ளைதானே படிப்பெதுக்குன்னு நிறுத்திடாதீங்க. என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க" என்று அனுப்பினார்.
"கவி குட்டி உனக்கு என்னடா படிக்கணும்?" என்றார் அவளின் அப்பா கணேசன்.
"அப்பா எனக்கு கலக்டர் ஆகணும் பா" என்றாள் விழிகளில் நிறைய ஏக்கம் தேக்கி.
அவளின் ஆசை மட்டுமல்ல அது கனவு லட்சியமாக கொண்டுள்ளாள் என்று புரிந்து கொண்டவர்.
"சரி டா. உனக்கு புடிச்சதை படிடா. அப்பா இருக்கேன்" என்றார் கணேசன்.
"அப்பா" என்றாள் இழுவையாக.
"நீ எதுக்கும் பயப்படாத நான் பார்த்துக்குறேன். நம்ம வம்சத்துக்கே குலசாமி ஆகுடா தங்கம்" என்று அணைத்து உச்சி முகர்ந்தார்.
தன் ஆசிரியரின் உதவியால் கல்லூரி ஒன்றில் சேர்ந்தாள்.
அவளின் அம்மாவிற்கு அவள் படிப்பது பிடிக்கவில்லை.
"இங்க ஒரு வேளை கஞ்சி குடிக்கவே திண்டாட்டமா இருக்கு. இதுல மேல படிக்க போறாளாம். அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒழுங்கா வீட்டு வேலையை முழுசா கத்துக்க. சீக்கிரமா ஒரு நல்ல வரனா பார்த்து உன்னை ஒருத்தன் கைல நல்லபடியா புடிச்சி கொடுக்குற வரைக்கும் என் வயதுள்ள நெருப்பை கட்டிக்கிட்டு இருகணும்." என்றார் காவ்யாவின் அம்மா.
"உனக்கென்ன அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். அவ படிக்கட்டும் நீ எதுவும் சொல்லாத" என்றார் கணேசன் கண்டிப்பாய். அதற்குமேல் எதுவும் அவர்முன் சொல்வதில்லை.
மூன்று வருடங்கள் ஓடியது. பழைய புத்தகங்களை இலவசமாக பெற்று இரவு பகலாய் படித்தாள். அவளின் லட்சிய பாதையில் பணம் பெரும் தடையாய் மாறாமல் மூன்று வருடமும் ஸ்காலர் ஷிப் கிடைத்தது.
இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது அவளின் பரீட்சைக்கு.
என்ன தான் அவள் செலவை சுருக்க நினைத்தாலும் கொஞ்சமேனும் செலவழித்து தானே ஆக வேண்டும்.
மகளின் படிப்புக்காக பகலில் ஆட்டோ ஓட்டிய பின் மாலை சிறிது நேரம் ஓய்வு எடுத்து மீண்டும் இரவு காவலாளி வேலைக்கு சென்றார் கணேசன்.
முதலில் எப்பொழுதும் கோபப்பட்ட அம்மா அவளின் உறுதியும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்கும் கவியாவை கண்டு மனம் மாறினார்.
இரவு ஒரு மணி படித்து கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றவர்.
"இந்தா இந்த டீ யை குடிச்சிட்டு படி" என்று வைத்துவிட்டு சென்றுவிடுவார்.
அன்னையின் மாற்றத்தில் மகிழ்ந்தாலும் தன் குறிக்கோளில் மட்டும் கவனம் சிதறாமல் இருந்தாள்.
இதோ இன்று பரிச்சைக்கு கிளம்புகிறாள்.
"நல்லா எழுதிட்டு வாடா கண்ணு" என்று புன்னகைத்தார் அவளின் அப்பா.
"மா போய்ட்டு வரேன்" என்றாள் அம்மாவை பார்த்து.
"இரு வரேன்" என்றார் உள்ளே இருந்து.
மனம் பதட்டமாய் வெளியே நின்றிருந்தாள்.
"நல்லா எழுதிட்டு வா. " என்று நெற்றியில் குங்குமம் வைத்து அனுப்பினார்.
இது வரை மூளையில் ஏத்தி வைத்திருந்த அத்துணை விஷயங்களையும் ஒன்று திரட்டி திறம்பட எழுதினாள் காவ்யா.
இன்று, "வணக்கம் மேடம்" என்று முதியவர் வணக்கம் வைக்க கரம்கூப்பி வணங்கியவள்.
தன் லட்சிய கனவான கலெக்டராக பொறுப்பேற்கிறாள்.
அவளின் பகுதி மக்களோடு மக்களாக ஆனந்த கண்ணீரில் நனைந்தபடி நின்றிருந்தனர் அவளின் பெற்றோர்.
"நான் இன்னைக்கு ஐ. ஏ.எஸ். ஆகிருக்கேன். இது என்னோட பல வருஷ கனவு. இந்த கனவை நனவாக்க நான் என்னவோ படிக்க மட்டும் தான் செஞ்சேன். ஆனா, எனக்கு முழுசா உதவியது எங்க அம்மா, அப்பா தான். என்னை மாதிரி கஷ்ட பட்றவங்களுக்கு முன்னோடியா இருக்கணும். பெண்கள் நல்லா படிச்சு தன்னம்பிக்கையோடு இருக்கணும். அதான் என் ஆசை. பொது மக்களுக்கு என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சேவை செய்யணும். இந்த சந்தோஷமான தருணத்துல எங்க அம்மாவையும் அப்பாவையும் இந்த மேடைக்கு வரணும்னு கூப்பிடறேன். " என்றாள் காவ்யா கண்களில் கண்ணீரோடு.
வெட்கத்தோடும் பெருமையோடும் இருவரும் மேடையேறினர் காவியாவிடம்.
அவளின் சேவை தொடரட்டும்
தலைமுறை தலைமுறையாக
பள்ளிக்கூடத்தில் கால்பதியா
கூட்டமதில் முளைத்த
செந்தாமரையாய்,
வெறிகொண்டு
பல இன்னல்கள் தாண்டி,
பாதையே இல்லாத இடத்தில்
தன் பாதங்களை
வழிதடமாக முதலடி
எடுத்து வைத்து
லட்சியக்கனவை
எட்டி பிடித்தவளை,
தங்கள் வாழ்வின்
நம்பிக்கை ஒளிக்கீற்றாய்
எண்ணி பல குழந்தைகள்
அவள் பின்னே அடிவைக்க,
தொடர்ந்து மின்னி
கொண்டிருந்தாள் அவள்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top