இறுதி பாகம்

இறுதி பாகம்

சில மாதங்களுக்குப் பிறகு

அருணும், மனோஜும், அபிநயாவை அவள் அறையிலிருந்து, சமையலறையை நோக்கி, இரண்டு பக்கமும், அவள் கைகளை பிடித்து இழுத்து வந்தார்கள்.

"என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?" என்று கத்தினாள் அபிநயா.

"ஷ்ஷ்ஷ்... ப்ளீஸ் கத்தாதீங்க" என்று கெஞ்சினான் மனோஜ்.

"என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க?" என்றாள் இரகசியமாக. 

சமையலறைக்கு வந்தவுடன், அவள் முன் மண்டியிட்டான் மனோஜ். அதை பார்த்து அபிநயா ஒரு அடி பின்னால் நகர்ந்தாள். அருணோ விழுந்து விழுந்து சிரித்தான்.

"என்ன பன்றீங்க நீங்க?"

"எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணணும்" என்றான் அவளை கும்பிட்டபடி மனோஜ்.
 
"என்ன ஹெல்ப்?"

"மறுக்க மாட்டேன்னு சொல்லுங்க"

சிரித்துக் கொண்டு நின்றிருந்த அருணை விசித்திரமாய் பார்த்தாள் அபிநயா.

"என்ன விஷயம்னு தெரியாம என்னால ப்ராமிஸ் பண்ண முடியாது. என்னால முடியாம போனா என்ன பண்றது?"

"நிச்சயம் உங்களால முடியும்... உங்களால் மட்டும் தான் முடியும்" என்றான் மனோஜ்.

தன் கைகளை கட்டிக்கொண்டு நின்றாள் அபிநயா.

"விஷயத்தை சொல்லுங்க"

"அண்ணி, இவன் உங்க ஃபிரென்ட் ப்ரீத்தியை மடக்க உங்க ஹெல்ப் வேணுமாம்..."

"என்னது ப்ரீத்தியா?" என்றாள்
அதிர்ச்சியாக.

"ஆமாம். நம்ம ஹீரோ அவங்களை காதலிக்கிறான். ஆனா, அவங்க சாரை கண்டுக்கவே மாட்டேங்குறாங்க..." என்று சிரித்தான் அருண்.

"அவளை உங்களுக்கு எப்படி தெரியும்?"

"உங்க கல்யாணத்துல தான் பார்த்தேன். எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு"

"அதுலயிருந்து, நம்ம ஹீரோ அவங்க பின்னாடி சுத்தோ சுத்துன்னு சுத்திக்கிட்டு இருக்கான்" அருண்.

"ஆமாம்... ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க"

"நீங்க அவகிட்ட பேச முயற்சி பண்ணலையா?"

"நான் ட்ரை பண்ணேன். ஆனா அவங்க எனக்கு பிடி கொடுக்கவே இல்ல"

"அப்ப சரி. நான் அவ பேரன்ட்ஸ்கிட்ட  பேசுறேன்."

"என்னது, பேரன்ஸ்கிட்ட பேச போறிங்களா?"

"ஆமாம்... நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்க போறீங்க தானே?"

"நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். ஆனா, அந்த கல்யாணம், காதல் கல்யாணமா இருக்கணும்னு ஆசைப்படறேன்."

"ஏன்?"

"நம்ம வாழுறது ஒரே ஒரு வாழ்க்கை... அதுல காதலிக்க இருக்கிறது ஒரே ஒரு சந்தர்ப்பம் தான்... கல்யாணம் ஆயிட்டா, அவங்க எப்படி இருந்தாலும் என்னை காதலிச்சு தான் ஆகணும். அதுல என்ன ஒரு திரில் இருக்கு?"

தன் கைகளை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு, அவனை ஒரு வினோத பார்வை பார்த்த அபிநயா,

"ஓ... உங்களுக்கு என்னோட ரெகமெண்டேஷன் வேணுமா?" என்றாள்.

"இல்ல... அதெல்லாம் ஒன்னும் வேணாம்"

"வேற என்ன செய்யணும்?" என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.

"உங்களுடைய ஃபஸ்ட் வெட்டிங் ஆனிவர்சரி ஃபங்ஷனுக்கு அவங்களையும் கூப்பிடுங்க. அது போதும்"

"அதுல உங்களால என்ன செய்ய முடியும்?"

"உங்க அனிவர்சரி பங்க்ஷன்ல, உங்களுக்கும் அஸ்வினுக்கும் அடுத்ததா, நான் சென்டர் ஃபிகரா இருப்பேன். அவர்களுடைய கவனத்தை ஈசியா என் பக்கம் இழுத்திடுவேன்."

"அது போதுமா?"

"அவங்க என்னை பத்தி கேட்டா, நல்லதா நாலு வார்த்தை சொல்லி வைங்க..."

"அவ கேப்பாளா?"

"சந்தேகமில்லாம கேப்பாங்க"

மனோஜ், அருணை ஒரு பார்வை பார்க்க,

"எங்களுக்கு தெரியாதா, இந்தப் பொண்ணுங்களை பத்தி... அவங்களுக்கு எல்லாம் தெரியும். யாரெல்லாம் அவங்கள கவனிக்கிறாங்கன்னும் நல்லாவே தெரியும். ஆனா, ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி நடந்துக்குவாங்க..." என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.

"அப்படியா?" என்று சிரித்தாள் அபிநயா.

"ஆனா, நீங்க மட்டும் விதிவிலக்கு..." என்றான் மனோஜ்.

"உண்மை தான்... உங்களை பைத்தியக்காரத்தனமா காதலிச்ச ஆவினையே நீங்க புரிஞ்சுக்கலயே" என்று அவள் காலை வாரினான் அருண்.

அதை கேட்டு வாயைப் பிளந்த அபிநயா, அவர்களை அடிக்க தன் கையை ஓங்கினாள். சமையலறையை விட்டு அவர்கள் சிரித்தபடி வெளியே ஓடினார்கள். அபிநயா அவர்களை துரத்திக் கொண்டு வெளியே ஓடி வர, அஸ்வின் மீது மோதி நின்றாள்.

"எதுக்காக இப்படி ஓடி வர?" என்றான் அஸ்வின்.

"பாருங்க அஸ்வின், இவங்க ரெண்டு பேரும் என்னை எப்படி கிண்டல் பண்றாங்கன்னு..."

"எவ்வளவு தைரியம் டா உங்களுக்கு?"

"அவங்க உன்னோட காதலை புரிஞ்சுக்காம எவ்வளவு மொக்கையாக இருந்தாங்கன்னு ஞாபகப்படுத்தினோம்" என்று
மனோஜ் சொல்ல,

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் அஸ்வின்.

"அதை நான் கூட அடிக்கடி செய்யிறதுண்டு" என்றான்.

"அது உங்களுடைய தப்பு தான். நீங்க தான் எதையும் நேரடியாக சொல்லாம என்கிட்ட மறைச்சிங்க" என்றாள் அபிநயா.

"அவங்க சொல்றதும் சரி தான்" என்றார்கள் இருவரும்.

"நான் அவளுக்கு புரிய வைக்க நிறைய க்ளு கொடுத்தேன். ஆனா அப்போ கூட, அவ நீங்க ரெண்டு பேரும் சொன்னதையே புடிச்சுகிட்டு நின்னா."

"சோ ஸாட்" என்றார்கள் இருவரும்.

"நீங்க ரெண்டு பேரும், ஒத்து ஊதுறதை நிறுத்த போறீங்களா இல்லயா? இல்லனா எங்க அனிவர்சரி பங்ஷனுக்கு நான் ப்ரீத்தியை கூப்பிட மாட்டேன்" என்றாள்.

"ப்ரீத்தியா?" என்றான் அஸ்வின்.

"ஆமாம்... என் கொழுந்தனார், ப்ரீத்தியை காதலிக்கிறாராம்..."

"யாரு?" என்று அவன் அருணையும், மனோஜையும் மாறி மாறி பார்த்தான் அஸ்வின்.

"அது நான் இல்லப்பா" என்று தன் இரண்டு கைகளையும் உயர்த்தினான் அருண்.

அவன் மீது இருந்த தன் கண்களை, மனோஜ் பக்கம் திருப்பிய அஸ்வினை நோக்கி,*நான் தான்* என்று தலையசைத்தான் மனோஜ்.

"அப்போ போய் அவகிட்ட சொல்ல வேண்டியது தானே?" என்றான் அஸ்வின்.

"இதோ பாருடா... அதை யார் சொல்றதுன்னு..." என்றான் அருண் கிண்டலாக.

"நான் ட்ரை பண்ணிட்டேன்... அவங்க முன்னாடி போனாலே, என்னுடைய நாக்கு, வாயோடு ஒட்டிக்கிது" என்றான் மனோஜ் பரிதாபமாக.

"அபிமா, ப்ரீத்திக்கு கால் பண்ணுடா" என்றான் அஸ்வின்.

"என்ன அஸ்வின் சொல்றீங்க?"

"அவளுக்கு கால் பண்ணி சாதாரணமா பேசு. மனோவை பத்தி கேக்குறாளான்னு பார்ப்போம்"

"குட் ஐடியா" என்றான் அருண்.

சரி என்று தலையசைத்துவிட்டு ப்ரீத்திக்கு ஃபோன் செய்தாள் அபிநயா.

"ப்ளீஸ், ப்ளீஸ், ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்களேன்" என்று கெஞ்சினான் மனோஜ்.

அபிநயா ஸ்பீக்கரை ஆன் செய்ய, ப்ரீத்தி அந்த அழப்பை ஏற்றாள்.

"எப்படி இருக்க, பிரீத்தி?"

"பரவாயில்லயே... உனக்கு என்னோட பேச நேரம் எல்லாம் கிடைக்குதா?" என்றாள் பிரீத்தி.

"சாரிப்பா... நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன்"

"அப்படி என்ன பிஸியோ...?"

"என்னோட மச்சினன்களுக்கு, கல்யாணத்துக்கு  பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கேன்"

"உனக்கு இருக்கிறது ஒரே ஒரு மச்சினன் தானே?"

"உனக்கு மனோஜ் தெரியுமா? அஸ்வினோட ஃப்ரண்ட்... அவரும் எனக்கு மச்சினன் தான்"

"உங்க கல்யாணத்தப்ப அஸ்வின் அண்ணன் கூடவே இருந்தாரே அவரா?"

"அவரே தான்"

"நீ அவருக்கு பொண்ணு பாக்குற விஷயம் அவருக்கு தெரியுமா?"

"தெரியாது. நான் அவருக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு இருக்கேன். நான் அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முயற்சி எடுக்கிறதை நினைச்சா அவர் சந்தோஷப்படுவார்"

"எனக்கு என்னமோ அவர் சந்தோஷப்படுவாருன்னு தோணல"

"ஏன் அப்படி சொல்ற?"

"அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார் "

ஆர்வத்துடன் நின்றிருந்த மனோஜை பார்த்து சிரித்தாள் அபிநயா.

"யாரது?"

"நான் தான். அவர் என்னை தான் காதலிக்குறார்"

"நிஜமாவா?"

"ஆமாம்... அவர் என் பின்னாடி தான் சுத்திகிட்டிருக்கார்"

"அதனால என்ன...? உனக்கும் பிடிச்சா தானே நம்ம மேற்கொண்டு யோசிக்கணும்...?"

ப்ரீத்தி அமைதியாக இருந்தாள்.

"உனக்கு அவரை பிடிக்கல இல்லயா?"

"நான் என்ன சொல்ல வர்றேன்னா..."

"என்ன சொல்ல வர?"

"எனக்கும் அவரை பிடிச்சிருக்கு"

மனோஜ் சந்தோஷத்தில் கத்த வயிடுக்க, அவன் வாயை பொத்தினான் அருண்.

"நெஜமாத் தான் சொல்றியா?" என்றாள் அபிநயா.

"ஆமாம்...  அவரை பார்க்காத போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்"

"ஓ... அப்போ அவர்கிட்ட சொல்லிட வேண்டியது தானே?" என்றாள் மனோஜை பார்த்தபடி.

"அவரே என்கிட்ட சொல்லாத போது, நான் எப்படி சொல்றது?"

ஸ்பீக்கரை ஆஃப் செய்து விட்டு, ஃபோனை மனோஜிடம் கொடுத்தாள் அபிநயா. ப்ரீத்திக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது, அந்த பக்கத்தில் இருந்து,

"ஐ லவ் யூ" என்று மனோஜ் கூறிய போது.

"நான் சொல்லிட்டேன்...  இப்போ உங்க விருப்பத்தை சொல்ல  உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என்றான்.

அந்த பக்கத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை மனோஜுக்கு. ப்ரீத்தி அதிர்ச்சியில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும்.

"நான் உங்ககிட்ட அப்புறமா பேசுறேன். நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க. பை" அழைப்பை துண்டித்த மனோஜ், அங்கிருந்த தனக்கு பிரியமானவர்களின் மீது தன் கண்களை ஓட்டினான்.

எதைப் பற்றியும் யோசிக்காமல், அதீத சந்தோஷத்துடன் அபிநயாவை கட்டி அணைத்தான்.

"தேங்க்யூ சோ மச் அண்ணி... ஐ லவ் யூ சோ மச்..." என்றான்.

அதை பார்த்த அஸ்வினின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அபிநயாவிடம் இருந்து அவனை இழுத்தான் அஸ்வின்.

"மடையா, அதைப் போய் பிரீத்திகிட்ட சொல்லு" என்றான்.

"நான் தான் சொல்லிட்டேனே..." என்று கூறிவிட்டு, அவனை கட்டிபிடித்து அவன் கண்ணத்தில் முத்தமிட்டான், அஸ்வினை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி.

"ஓ காட்... இவன் பைத்தியமாயிட்டான்" என்றான் அருண்.

அஸ்வினை விட்டுவிட்டு அருணை கட்டிப்பிடித்தான் மனோஜ். அருணின் கன்னத்தில் அவன் முத்தமிட முயல, அவன் வாயைப் பொத்தி,

"கொன்னுடுவேன் டா உன்னை" என்றான் அருண்.

மூச்சுவாங்க சோபாவில் அமர்ந்தான் மனோஜ், பைத்தியக்காரனைப் போல் சிரித்துக்கொண்டு.

"உங்க எல்லாருக்கும் நான் பாயசம் பண்ணிக் கொண்டு வரேன்" என்றாள் அபிநயா.

"வேண்டாம். நம்ம எல்லாருக்கும் இன்னைக்கு மனோஜ் ட்ரீட் கொடுக்கப் போறான்" என்றான் அஸ்வின்.

"சந்தோஷமா கொடுக்கிறேன்..." என்று சோபாவிலிருந்து எழுந்தவன்,

"எல்லாரும் சாயங்காலம் ஏழு மணிக்கு தாஜ் ஹோட்டலுக்கு வந்துடுங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அருணும் அவனை பின் தொடர்ந்து சென்றான்.

"என்ன ஒரு ஐடியா அஸ்வின்...! நீங்க கலக்கிட்டீங்க... உங்களால மனோஜ் விஷயம் ரொம்ப சீக்கிரமே ஸால்வ் ஆயிடுச்சு. நீங்க எல்லாரையும் சமாளிக்கிறதுல எக்ஸ்பர்ட் ஆயிட்டீங்க"

"நான் தான் உன்னையே சமாளிக்க கத்துக்கிட்டேனே... அப்புறம் மத்தவங்களை சுலபமா  சமாளிக்க முடியும் தானே...?"

"என்னது...? அதுக்கு என்ன அர்த்தம்...?"

"உன்னை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்னு அர்த்தம்" என்றான் சிரித்தபடி.

"உங்களை சமாளிக்கிறதைவிட, என்னை சமாளிக்குறது ஒன்னும் கஷ்டம் இல்ல"

"ஆனா, நீ தான் என்னை ஈசியா சமாளிக்கிறீயே" என்றான் புன்னகையுடன்.

ஆமாம் என்று தலையசைத்தாள் சிரித்தபடி.

"என்னோட மக்களை, உன்னுடையவங்களா நினைக்கிறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"அவங்க என்னுடைய மக்களும் தான்"

"நம்ம ஃபேமிலிய ஸ்டார்ட் பண்ணலாமா?" என்றான் குழைவாக.

"நம்ம ஏற்கனவே ஃபேமிலியா தானே இருக்கோம்?"

"உனக்கு சின்ன அபியை பார்க்க ஆசை இல்லயா?"

"இல்ல"

"ஏன்?"

"ஏன்னா, எனக்கு சின்ன அஸ்வினை பார்க்க தான் ஆசை"

"உன்னால ரெண்டு அஸ்வினை  சமாளிக்க முடியுமா?" என்றான் கிண்டலாக.

"நான் ஏன் சமாளிக்கணும்? அவனை நீங்க சமாளிங்க... என்னை டார்ச்சர் பண்றதுக்கு உங்களுக்கு அது தான் தண்டனை"

"ஓ அப்படியா...?"

"ஆமாம்..."

"நமக்கு ட்ரீடுக்கு போக நிறைய டைம் இருக்கு, வா உனக்கு டார்ச்சர்னா என்னனு காமிக்கிறேன்..."

"அஸ்வின்... ஒழுங்கா போயிடுங்க"

"எவ்வளவு தைரியம் இருந்தா, நான் டார்ச்சர் பண்றேன்னு சொல்லுவ?" என்று தங்கள் அறைக்கு அவளை இழுத்துச் சென்றான்.

"கடவுளே என்னை காப்பாத்து" என்ற அவளின் குரலுக்கு கடவுள் செவி சாய்கவில்லை.

ஒரு வருடத்திற்கு பிறகு

அன்று பாரத் பந்த் என்பதால், மனோஜ் தன் மனைவியுடன் அஸ்வின் இல்லம் வந்தான். வரவேற்பறையில் ஒருவரையும் காணோம். அஸ்வினுடைய குரல் சமையலறையில் இருந்து வந்ததால், சமையல் அறையை நோக்கி சென்றான் மனோஜ். மெதுவாக சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. அஸ்வின், குலாப் ஜாமுன் செய்து கொண்டிருந்தான்... இல்லை... குலாப் ஜாமுன் செய்கிறேன் என்ற பெயரில், *ஸ்டன்ட்* அடித்துக் கொண்டிருந்தான். அஸ்வினாவது... சமைப்பதாவது...! அபிநயா சமையல் மேடையின் மீது அமர்ந்து கொண்டு, தன் கணவன் சமைக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

இது இப்போதெல்லாம் அடிக்கடி அஸ்வின் இல்லத்தில் நடக்கிறது. கருவுற்றிருக்கும் தன் மனைவிக்காக, அஸ்வின் இதையெல்லாம் செய்ய பழகி விட்டான். ஆம்... அபிநயாவுக்கு இது ஐந்தாவது மாதம். கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு ஏற்படும் திடீர் திடீர் மனமாற்றம், எப்படிப்பட்டது என்பதை அறிந்து வியந்து போனான் அஸ்வின். தன் மனைவியை இந்த நேரத்தில் சமாளிப்பதைவிட, பத்து அலுவலகங்களை சுலபமாக கையாண்டு விடலாம் என்று தோன்றியது அவனுக்கு. பெரும்பாலும், அஸ்வின், பத்மாவின் துணையை நாடினான். ஏனென்றால், அபிநயா பெரும்பாலும் விரும்பியது அவள் அம்மாவின் சமையலை தான். இன்று, அவள் குலாப் ஜாமுன் சாப்பிட ஆசைப்பட்டதால், அஸ்வின் சமையலறைக்கு வந்துவிட்டான்.

தன் தோளில் யாரோ தட்டுவதை உணர்ந்து திரும்பினான் மனோஜ். அங்கு அருண் நின்றிருந்தான்.

"நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?"

"நம்ம கட்டிடக்கலை நிபுணருடைய சமையல் கலையை ரசிச்சிகிட்டு இருக்கேன்"

அவன் கூறியதை கேட்டு சமையலறையில் இருந்த அஸ்வினை பார்த்து அருண் வாய்விட்டு சிரித்தான். அது அஸ்வினுடைய கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியது. தன்முன், அபாயகரமான இருவர் நிற்பதை பார்த்து தன் கண்களை சுழற்றினான் அஸ்வின். சமையலறைக்கு வந்து அவர்கள் அபிநயாவை பார்த்து புன்னகை புரிந்தார்கள். அஸ்வினோ அவர்களை கண்டு கொள்ளாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தான்.

"மனோ, நீ இந்த ஷேப்ல குலாப்ஜாமுனை பாத்திருக்கியா?" என்று கிண்டல் அடித்தான் அருண்.

"பார்த்ததே இல்லப்பா... இந்த டிசைனை நம்ம அஸ்வினால மட்டும் தான் செய்ய முடியும்" என்றான் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு மனோஜ்.

தன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள் அபிநயா.

"ஓ, அப்படியா...? இங்க வந்து செஞ்சு பாருங்க... அதுக்கப்புறம் உங்க வாயை திறங்க டா" என்றான் அஸ்வின்.

"நான் ஏன் செய்யணும்? என் ஒய்ஃப் குலாப் ஜமுன் கேட்டா, என் கையால செஞ்சு அவளுக்கு தண்டனை கொடுக்கிறதை விட, நான் கடையில வாங்கி கொடுத்துடுவேன்..." என்றான் மனோஜ் கேலியாக.

"ஸ்டிரைக் அன்னைக்கு எந்த கடை திறந்து இருக்கும் பா?" என்றான் அஸ்வின்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆமாம் என்று தலையை அசைத்தார்கள்.

"என்கிட்ட சொல்லியிருந்தா நான் செஞ்சு கொடுத்திருப்பேனே அண்ணா" என்றாள் ப்ரீத்தி.

"பரவாயில்லமா... என்னோட வைஃப்பை வெயிட் பண்ண வைக்க வேண்டாம்னு நினைச்சேன். ப்ரெக்னன்ட் ஆனதுக்கப்புறம் அவ குலாப் ஜாமுன் கேக்கவே இல்ல. இன்னிக்கி அவளுக்கு வேணும்னு கேட்டா, அதனால தான் ட்ரை பண்ணேன்."

"நல்லாயிருக்கு. டேஸ்ட் பண்ணி பாருங்க" என்று ஒன்றை வாயில் போட்டு ருசித்தாள் அபிநயா.

"என்ன விஷயம்...? சொல்லாம கொள்ளாம இங்கே வந்திருக்க...?" மனோஜை பார்த்து கேட்டான் அஸ்வின்.

"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்தேன்"

"என்ன விஷயம்?"

"ஒரு பொண்ணு, நம்ம அருணையே பைத்தியக்காரி மாதிரி சுத்தி சுத்தி வரா..."

"யாரவ?" என்றார்கள் அஸ்வினும் அபிநயாவும்.

அவன் மேலும் ஏதும் கூறுவதற்கு முன் அவன் வாயைப் பொத்தினான் அருண்.

"வாயை மூடு... வாய மூடுன்னு சொல்றேன்ல...?"

"ஏண்டா அவனை சொல்ல விட மாட்டேங்குற?" என்றான் அஸ்வின்.

"அவ நம்ம ஃபேமிலிக்கு சரிப்பட்டு வர மாட்டா, ஆவின்" என்றான் அருண்

"ஏன்?" என்றாள் அபிநயா.

"அவ ரொம்ப மார்டன், அண்ணி. எனக்கு அது அவ்வளவா பிடிக்கல"

அப்படியா? என்று அவனை நோக்கித் தலை அசைத்தாள்.

"நீங்க அவளை பாத்தா, அப்படி நினைக்க மாட்டீங்க" என்றான் மனோஜ்.

"யார் அந்த பொண்ணு?"

"லயா..."

"என்னது, லயாவா?" என்றான் அஸ்வின்.

"உங்களுக்கு அவளைத் தெரியுமா?" என்றாள் அபிநயா.

"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நம்ம ஆஃபீஸ்ல வேலைக்கு சேர்ந்தா" என்றான் அஸ்வின்.

"நீங்க அவளை பாக்கணுமா?" என்றான் மனோஜ்.

"நிச்சயமா" என்றாள் அபிநயா.

"லயா உள்ள வா" என்றான் மனோஜ்.

அதைக் கேட்டு அஸ்வினும் அபிநயாவும் ஆச்சரியம் அடைந்தார்கள், அருணோ அதிர்ச்சி அடைந்தான். அவர்கள் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு, தலை நிறைய மல்லிகை பூவுடன் லயா உள்ளே வருவதைப் பார்த்தார்கள். அவளை அப்படி பார்த்து அருண் வாயடைத்துப் போனான்.

"குட் மார்னிங் சார்" என்றாள் அஸ்வினை பார்த்து லயா.

தலையை இயல்பாய் அசைத்தான் அஸ்வின். அபிநயாவை பார்த்து
*வணக்கம்* என்றாள் தன் கைகளை கூப்பி லயா.

"நீங்க ரொம்ப மாடர்னா இருப்பீங்கன்னு அருண் சொன்னாரே" என்றாள் அபிநயா.

"என்னோட சொந்த ஊர் காஞ்சிபுரம். சென்னையில் மாடனா இருந்தா தான் மரியாதை கிடைக்கும்னு, அப்படி இருந்தேன். ஆனா எங்களோடது ரொம்ப கன்சர்வேட்டிவ் ஃபேமிலி."

"இப்போ உங்களுக்கு எந்தப் அப்ஜக்ஷனும் இல்லன்னு நினைக்கிறேன்" என்றான் மனோஜ்.

"அண்ணிக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்" என்றான் அருண்.

"நாங்க உங்க வீட்டுக்கு முறைப்படி வந்து பேசுறோம்" என்றாள் அபிநயா.

சரி என்று சந்தோஷமாக தலையசைத்தாள் லயா.

பரபரவென திருமண வேலைகளை ஆரம்பித்து, ஒரு மாதத்திற்குள் அருணையும் குடும்பஸ்தன் ஆக்கிவிட்டார்கள் அவனுடைய அன்பிற்குரியவர்கள். அவன் திருமணத்திற்கு வருகை தந்திருந்த சுபத்ரா, மறுநாளே ஆசிரமதிற்கு கிளம்பிவிட்டார்.

சில மாதங்களுக்குப் பின்

ஃபோனில், *காச்சு மூச்சு* என்று கத்திக் கொண்டிருந்த அஸ்வினை பார்த்து முகம் சுளித்தாள், அவனுக்கு காஃபி கொண்டு வந்த அபிநயா.

"எதுக்காக இப்ப என்னை ஆஃபீசுக்கு வர சொல்ற? நாளைக்கு அபிக்கு ட்யூ- டேட்டுன்னு உனக்கு தெரியாதா?"

"எனக்கு தெரியும் அஸ்வின். நம்மளுடைய புது கிளையன்ட் உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க. அவங்க ரொம்ப பெரிய இடம். நம்ம இதை மிஸ் பண்ண முடியாது. அதனால தான் உன்னை வர சொல்றேன்" என்றான் மனோஜ்.

"உன்னால இந்த சின்ன விஷயத்தைக் கூட ஹேண்டில் பண்ண முடியாதா?"

"நீ வெளியூர் போயிருக்கிறதா சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா, நீ ஊர்ல இருக்கிறதை கன்ஃபார்ம் பண்ணிகிட்டு தான் அவங்க வந்திருக்காங்க"

"நீங்க போயிட்டு வாங்க, அஸ்வின். எனக்கு ஒன்னும் ஆகாது" என்றாள் அபிநயா.

"டாக்டர் என்ன சொன்னாங்கன்னு நீ மறந்துட்டியா? நம்ம ஒரு வாரத்துக்கு முன்னாடியே ரெடியா இருக்கணும்னு சொன்னாங்க. உன்னுடைய ட்யூ-டேட் நாளைக்கு இருக்கும் போது நான் எப்படி போக முடியும்?"

"நான் நார்மலா தான் இருக்கேன். எனக்கு ஏதாவது வித்தியாசமா பட்டா நான் உடனே உங்களுக்கு ஃபோன் பண்றேன்."

"முடியாது. நான் போகமாட்டேன்"

"அஸ்வின்..." அபிநயாவின் முகபாவம் மாறியது. அவள் கண்கள் சட்டென்று கலங்கியது. அவள் தன் அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

"அபி, என்ன... என்ன ஆச்சு?"

"வலிக்குதுங்க"

"நீ பயப்படாம இருக்கணும் சரியா...?" என்று கூறியவன்,

"கட் த டேம் கால்" என்று ஃபோனில் மனோஜிடம் கத்திவிட்டு, ஃபோனை தன் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

மனோஜும், புது க்ளையன்டை மறந்து அலுவலகத்தை விட்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

அஸ்வின், அபிநயாவை தன் கையில் அள்ளிக்கொண்டு காரை நோக்கி விரைந்தான். அபிநயாவின் கதறல், அவனை காரின் வேகத்தை கூட்டச் செய்தது. அவனுடைய பதட்டம் உச்சியை தொட்டது. ஏனென்றால், அபிநயா சுமந்து கொண்டிருப்பது இரட்டை குழந்தைகளை.

அஸ்வினும், அபிநயாவும் வந்து சேர்வதற்கு முன்னால், மனோஜ் அங்கு வந்து அவர்களுக்காக காத்திருந்தான். சிறிது நேர போராட்டத்திற்கு பின், அழகான ஆண் குழந்தையையும், ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்தாள் அபிநயா.

தன் மொத்த சக்தியையும் இழந்துவிட்டிருந்த அபிநயாவின் பக்கத்தில் அமர்ந்தான் அஸ்வின்.

"ரொம்ப கஷ்டப்பட்டுட்ட இல்ல?"

"எப்பவும் இல்லாத அளவுக்கு"

அவள் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டான் அஸ்வின்.

"அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு அழகா இருக்காங்கன்னு தெரியுமா?"

"உங்களை மாதிரி சேட்டை பண்ணாம இருந்தா சரி" என்றாள்.

அதைக்கேட்டு சிரித்த அஸ்வின்,

"அந்த உத்தரவாதத்தை கொடுக்கிறது கஷ்டம் தான்" என்றான்.

அப்பொழுது ஒரு செவிலி குழந்தைகளை எடுத்து வந்து அவர்களிடம் ஒப்படைத்தார். ஆண் குழந்தை, பெண் குழந்தையின் விரலை இறுகப் பற்றிக் கொண்டிருந்ததை பார்த்து வியப்படைந்தான் அஸ்வின்.

"அஸ்வின் இங்க பாருங்களேன், எவ்வளவு அழகா அவன் தங்கையோட கையை பிடிச்சிருக்கான்னு..."

"அவங்க இருக்கிறதை பார்த்தா, சண்டையே போட மாட்டாங்க போலிருக்கே... செம்ம போர்..." என்றான் அஸ்வின்.

"மாட்டாங்க அவங்க ஒற்றுமையா தான் இருப்பாங்க"

"அப்படியா...?" என்று சிரித்தான் அஸ்வின்.

அவன் கையை மென்மையாய் பற்றிக் கொண்டாள் அபிநயா.

"ஏன்னா, அவங்க அஸ்வினுடைய பிள்ளைங்க. என்னை சரியான பாதையில் வழிநடத்துறா மாதிரி, நீங்க அவங்களையும் வழி நடத்துவீங்க. நீங்க சொல்ற படி நடந்து அவங்க உங்களுக்கு நல்ல பேர் எடுத்து கொடுப்பாங்க "

அவள் பற்றி இருந்த தன் கரத்தை உயர்த்தி, அவள் கையில் முத்தமிட்டான் அஸ்வின். அவன் நிச்சயம் அதை செய்வான் என்ற உறுதிமொழியை அளிப்பது போல.

முடிவுற்றது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top