7 அவள் தான் இவள்
7 அவள் தான் இவள்
தனது அறையின் மூலையில், வெறுப்புடனும், கோபத்துடனும் அமர்ந்திருந்தாள் அபிநயா. அவளுக்கு வேறு யார் மீதும் கோபம் அல்ல, தன் மீதே தான்.
"உன்னால எந்த ஒரு வேலையையும் ஒழுங்காக செய்ய முடியாதா? அவன் இன்னும் சாகல. அவன் இன்னும் உயிரோட தான் இருக்கான்... உன்னை உயிரோட கொல்றதுக்காக...! ஏன் அவனை இன்னும் நாலு குத்து குத்தாமவிட்ட? என்ன பொண்ணு நீ? ஒரு பொறுக்கிய கொல்றதுக்கு சந்தர்ப்பம் கிடச்சும் கூட, அதை ஒழுங்கா செய்யாம விட்டுட்டு வந்து, இப்போ அழுதுகிட்டு இருக்கியே... நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பதில், ஜெயிலுக்கே போகலாம்." என்று தன்னைத் தானே வைது கொண்டாள்.
அவனைக் கொல்லாமல் விட்டதற்காக, தன்னைத் தானே கடிந்து கொண்டாள். அவனுடைய பாட்டி, 24 மணி நேரம் கெடு கொடுத்திருக்கிறார். நரகத்தில் கூட வாழ்ந்து விடலாம். ஆனால், தருணை போன்ற ஒரு கேடுகெட்டவனுடன் வாழ முடியாது. அவனுடைய பாட்டி, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவர் கொடுத்த நேரம் முடியப்போகிறது. முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் அபிநயா.
....
அலுவலகத்தில், முக்கியமான கணக்கு வழக்குகளை மனோஜுடன் சரி பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அப்பொழுது அவனுடைய கைபேசி, பாட்டியின் பெயருடன் ஒளிர்ந்தது. அதை பார்த்தவுடனேயே, தன் முஷ்டியை மடக்கி எரிச்சலை கட்டுப் படுத்திக் கொண்டான். தருணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சுபத்ராவின் எண்ணம், அவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. அவரும் அவருடைய எண்ணங்களும்.....
அவனுடைய எரிச்சலடைந்த முகத்தை கவனித்த மனோஜ், அழைப்பை ஏற்குமாறு ஜாடை செய்தான். அஸ்வின், அழைப்பிற்கு பதில் அளிக்க தயாரானான்.
"சொல்லுங்க, பாட்டி"
"நான் அந்த பொண்ணு வீட்டுக்கு போறேன். நான் அவங்களுக்கு கொடுத்த 24 மணி நேர கெடு முடிய போகுது"
"அதனால?" என்றான் எந்த ஒட்டுதலும் இன்றி.
"தருணுடைய அண்ணன்கள் அப்படிங்கிறதால, நீயும் அருணும் என்னோட வரணும்."
"சாரி பாட்டி. எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல."
"உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா இல்லயா அப்படிங்கிறது இங்க முக்கியமில்ல. குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைகளை, பிடிச்சாலும் பிடிக்கலனாலும் நம்ம செஞ்சு தான் ஆகணும். உன் தம்பி, வாழ்க்கைல சந்தோஷமா இருக்கிறத நீ பார்க்க விரும்பலயா?"
"சரி நான் வரேன்" என்று அவரை மேலும் பேச விடாமல் துண்டித்தான்.
"நீங்க ரெண்டு பேரும் நேரா திருவான்மியூர் வந்துடுங்க. நான் அங்க வெயிட் பண்றேன்."
"சரி" என்று அழைப்பை துண்டித்தான் அஸ்வின்.
"என்ன ஆச்சி?"
"நாங்க ரெண்டு பேரும் மூத்தவங்கங்கிறதால, அந்த பொண்ணு வீட்டுக்கு, நாங்க ரெண்டு பேரும் அவங்க கூட வரணுமாம்."
"இரண்டு அண்ணன்களை விட்டுட்டு, சின்னவனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க... குடும்பத்தோட கடமைகளை மட்டும் நீங்க சரியா செய்யணுமாமாம்?" என்றான் மனோஜ்.
"கல்யாணமா? எனக்கா? எனக்கு அந்த ஐடியாவே இல்ல..." என்றான் அஸ்வின்.
"ஆமாம் ஆமாம்... ஒரு குறிப்பிட்ட சிக்னலை கிராஸ் பண்ணும் போது மட்டும், அந்த ஐடியா வெளியே எட்டிப்பாக்குது..." என்றான் மனோஜ் கிண்டலாக.
அதைக் கேட்ட அஸ்வின், பிரமித்துப் போனான். அவனால், நீல சிலுவை சங்கத்தின் பெண்ணை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனை அறியாமல் அவன் முகத்தில் புன்னகை பூத்தது. அது மனோஜை வியப்பில் ஆழ்த்தியது.
அஸ்வின் தன்னை சுதாகரித்துக் கொண்டு,
"நீ என்ன சொல்ற?" என்றான் ஏதும் தெரியாதவன் போல.
"அந்த ப்ளூகிராஸ் பொண்ணை நீ பார்த்தியே, அந்த சிக்னலை பத்தி தான் பேசுறேன்."
"அது ஜஸ்ட் கோ- இன்ஸிடன்ஸ்"
அதைக் கேட்டு மனோஜ் மேலும் ஆச்சரியமடைந்தான். அவன், "எந்தப் பெண்ணைப் பற்றி பேசுகிறாய்?" என அஸ்வின் கேட்பான் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவன் அப்படி பூசி மழுப்பாமல், அந்த பெண்ணுடன் ஏற்பட்ட சந்திப்பை ஒப்புக் கொண்டுவிட்டான்.
"கோ- இன்ஸிடெண்ஸை தான் விதின்னு சொல்லுவாங்க. ஒருவேளை, அந்த பொண்ணு உன்னுடைய விதியில எழுதப்பட்டிருந்தா, நிறைய கோ-இன்ஸிடன்ஸை நீ சந்திக்க வேண்டி வரும்."
"நான் கிளம்புறேன்" என்று சிரித்தபடி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அஸ்வின்.
மனோஜுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் சுத்தமாக விடுபட்டது. தன் நண்பனை ஒரு பெண் சிரிக்க வைத்ததுவிட்டதை எண்ணி அவன் சந்தோஷம் அடைந்தான். ஆனால், அவர்களுக்கு முன்னால் தருணால் வைக்கப்பட்டிருந்த பிரச்சனையை எண்ணிய பொழுது, அவன் மனம் தடுமாறியது. அவனுக்கு இன்னும் அபிநயா ராமநாதனை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. அவளைப் பற்றிய விவரம் அறிய, அவன் அணுகிய நபர், இன்று மதியம் வரை காத்திருக்க சொல்லியிருக்கிறார். அதற்காகத் தான் மனோஜ் காத்திருக்கிறான். அஸ்வின் முகத்தை அலங்கரிக்கும் இந்த புன்னகை நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் அவனுடைய ஆசை.
ஆனால், அந்த புன்னகை மிக விரைவில் மறைய போகிறது என்பதை அவன் எவ்வாறு அறிவான்?
.....
திருவன்மியூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அஸ்வினால், மனோஜ் குறிப்பிட்ட சிக்னலை கடந்த பொழுது, அபிநயாவை நினைத்து புன்னகை புரியாமல் இருக்க முடியவில்லை. அந்த பெண்ணை ஏன் அவன் தேடி கண்டு பிடிக்க கூடாது? தருணின் பிரச்சனைகள் முடியட்டும், என்று எண்ணிக்கொண்டு காரை செலுத்தி சென்றான்.
அஸ்வினும், அருணும், திருவான்மியூரை அடைந்தார்கள். சுபத்ராவால் குறிப்பிடப்பட்ட அந்த வீட்டின் முன், அவருடைய கார் நின்றுகொண்டிருந்தது. அவர்கள் அங்கேயே காரை நிறுத்திவிட்டு, அந்த வீட்டை நோக்கி நடந்து சென்றார்கள். அந்த வீட்டிற்குள் இருந்து வந்த விவாதத்தை கேட்டு, அவர்கள் இருவரும் வெளியிலேயே ஸ்தம்பித்து நின்றார்கள். அந்த விவாதத்தை கேட்ட பொழுதே அவர்களுக்கு புரிந்து போனது, அந்த பெண்ணின் வீட்டாருக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை என்பது, முக்கியமாக தருணை கத்தியால் குத்திய அந்த பெண்ணுக்கு...!
அந்த விவாதம் மூன்று பெண்களுக்கிடையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருத்தி தருணை கத்தியால் குத்திய பெண், மற்ற இருவரும் யார் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.
வீட்டினுள்...
"நான் சொல்றத புரிஞ்சிக்க அபி, அவங்க, இந்த சமுதாயத்துல பெரிய அந்தஸ்தில் இருக்கிறவங்க, அவங்ககிட்ட நாம எந்த கருணையும் எதிர்பார்க்க முடியாது."
"நீங்க ஏன் என்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க? அவன் ஒரு பொறுக்கி. நிறைய பெண்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி இருக்கான். அவன கல்யாணம் பண்ணிக்குறத்துக்கு பதில், சாகுறது எவ்வளவோ மேல்." என்று அழுதாள் அபிநயா.
"அப்படி சொல்லாத அபி, நம்மள மாதிரி சாதாரணமானவங்களுக்கு வேற வழி இல்ல"
"கல்யாணத்துக்கு அப்புறம், அவனை நான் கொலை செஞ்சிட்டா, என்ன செய்வீங்க?" என்று சீறினாள் கோபமாக.
அதைக் கேட்டு அஸ்வின் அதிர்ந்து போனான். பக்கத்தில் நின்றிருந்த அருணின் முகத்திலும் அதே அதிர்ச்சி தெரிந்தது.
"நான் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க. நீங்க என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா, நிச்சயமா அது நடக்கும். அவனுடைய எண்ணம் எப்பவுமே ஈடேறாது. அவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறத விட, ஜெயில்ல இருக்கிறது எவ்வளவோ சந்தோஷம்."
"சொல்றத புரிஞ்சுக்க முயற்சி பண்ணு, அபி..."
"ஆமாம் அபி, உங்க அப்பா ஒரு இதய நோயாளி, கை கால் விளங்காம படுத்த படுக்கையா இருக்கார். நீ ஜெயிலுக்கு போனா, அவன் உயிரோடவே இருக்க மாட்டான்" என்றார் மங்கை.
அதைக் கேட்ட பொழுது அஸ்வினுக்கும், அருணுக்கு வருத்தமாக இருந்தது.
"அவங்க பாட்டி கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க. நீ பேசறத எல்லாம் கேட்டா, அவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது" என்றார் பத்மா பாவமாக.
"பேரனை மாதிரியே தான் பாட்டியும், இரக்கம் இல்லாதவங்க. தருண் மட்டும் தான் ரட்சசன்னு நினைச்சேன்... ஆனா இல்ல... அந்த குடும்பமே அப்படித் தான். இதயம் இல்லாதவங்க... இரக்கம் இல்லாதவர்கள்... மனசாட்சியே இல்லாதவங்க... அவங்க குடும்பத்தையே நான் ஒட்டுமொத்தமா வெறுக்குறேன்." என்று அழுதபடி கூறினாள் அபிநயா.
இந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக தருணுக்கு திருமணம் செய்து வைத்து, அப்படி என்ன சாதித்து விடப் போகிறார் சுபத்ரா என்று வெறுப்புடன் எண்ணினான் அஸ்வின்.
"போதும் நிறுத்து அபி... உங்க அப்பாவுக்காக, நீ இதைக் கூடவா செய்ய மாட்ட?" என்றார் மங்கை.
"சரி... செய்றேன்.. நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா, அதுக்கு அப்புறம் அந்த வீட்ல எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, நான் இங்க வரவே மாட்டேன். நான் செத்தாலும், நீங்களும் அந்த வீட்டுக்கு வரக்கூடாது." என்று கூறி விட்டு, அழுதபடி உள்ளே ஓடிச் சென்றாள் அபிநயா.
தனது தலையில் அடித்துக் கொண்டான் அருண். முகம் தெரியாத அந்த பெண்ணிற்காக மிகவும் வருத்தப்பட்டான் அஸ்வின். அவன் பாட்டி மீது, அவனுக்கு இருந்த கோபம், பன்மடங்காக உயர்ந்தது. ஆனால் அவர் இங்கு இல்லையே... எங்கு சென்றார்?
அந்த சுற்றுவட்டாரத்தில், தனது கண்களை அலைய விட்டான் அஸ்வின். சற்று தொலைவில் இருந்த ஒரு சிறிய கோவிலில், பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் சுபத்ரா. அதை பார்த்து தன் கண்களை சுழற்றினான் அஸ்வின்.
"எல்லாரையும் நரகத்துல தள்ளிய இவங்களோட வேண்டுதலை எல்லாம் கடவுள் நிறைவேத்திடுவாரா என்ன?" என்றான் அருண் கோபமாக.
சிரித்த முகத்துடன், சுபத்திரா அவர்களை நோக்கி வந்தார்.
"எப்ப வந்தீங்க?" என்றார்
"இப்ப தான்" என்றான் அஸ்வின்.
சுபத்ரா கதவை தட்ட, மங்கை கதவைத் திறந்தார். அவர்கள் அழைக்கும் வரை காத்திராமல், தானாகவே உள்ளே நுழைந்த சுபத்ராவை, அஸ்வினும் அருணும் பின்தொடர்ந்தார்கள்.
"நீங்க, நல்ல முடிவா எடுத்திருப்பீங்கன்னு நம்பறேன்." என சுபத்ரா சொல்ல,
அவருக்கு பதில் அளிக்காமல் நின்றார் மங்கை. அவருக்கு இந்த கொடுமைக்கார பெண்மணியுடன் பேச விருப்பமில்லை.
"நாங்க கல்யாணத்துக்கு தயார்" என்றார் பத்மா.
அவர் மென்று விழுங்குவதை கவனிக்க தவறவில்லை அஸ்வின். அவருடைய கலங்கிய கண்கள் அவன் உள்ளத்தை முள் கொண்டு குத்தியது. சுபத்ராவின் முகமோ ஒளிர்ந்தது. அவருடைய தந்திரம் தான் பலித்துவிட்டதே.
"எனக்கு ரொம்ப சந்தோஷம். நேத்து நான் உங்ககிட்ட ரூடா நடந்துகிட்டதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன். சில சமயம், நம்ம குடும்பத்தோட நலனுக்காக, இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு. என் குடும்பமும், என் பேரன்களும் தான் எனக்கு எல்லாமும். நம்ம எல்லாரும் ஒரே குடும்பமாக போறோம். அதனால நமக்குள்ள எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லாம இருக்கணும்னு நான் விரும்புறேன்"
மங்கையும், பத்மாவும் மட்டுமல்ல, அஸ்வின் கூட சுபத்ராவின் கனிவான பேச்சில் சிறிது திருப்தி அடைந்தான். ஆனால் அருணோ, முகத்தில் எந்தவித பாவத்தையும் வெளிப்படுத்தாமல் கல் போல் நின்றிருந்தான்.
"இவன் என்னுடைய பெரிய பேரன் அஸ்வின். இவன் அருண்" என்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தார் சுபத்ரா.
"வணக்கம்" என்றான் அஸ்வின்.
அவர்களும் பதிலுக்கு அவனுக்கு வணக்கத்தை தெரிவித்தனர்.
அவர்களுக்கு முகமன் தெரிவிக்காமல், எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்த அருணை ஏமாற்றத்துடன் நோக்கினார் சுபத்ரா.
தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து, ஒரு ஜோடி தங்க வளையல்களை வெளியில் எடுத்தார்.
"இது எங்களுடைய குடும்ப வளையல். இதை, எங்க வீட்டுக்கு வர போற மருமகளுக்கு கொடுக்கணும்னு நான் விரும்புறேன். கொஞ்சம் அபிநயாவை கூப்பிடுறீங்களா?" என்றார் சுபத்திரா.
சரி என்று தலையசைத்து விட்டு உள்ளே சென்றார் பத்மா. அஸ்வினுக்கு தருணை கத்தியால் குத்திய, அந்த தைரியசாலியான பெண்ணை பார்க்கும் ஆவல் அதிகரித்தது.
"அபி..." என்று பத்மா அழைக்க, தன் கையை காட்டி அவரை நிறுத்தினாள் அபிநயா.
"நான் எல்லாத்தையும் கேட்டுகிட்டு தான் இருந்தேன்" என்றவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவளை பார்த்த அஸ்வினுக்கு, தான் மலை முகட்டில் இருந்து, அதல பாதாளத்தில் விழுவது போல இருந்தது. அவளது சிவந்து வீங்கிய கண்களையும், வெளுத்துப்போன முகத்தையும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். அருணோ, அஸ்வினின் பேயறைந்த முகத்தை, பார்த்து செய்வதறியாமல் திகைத்து நின்றான்.
"என்னை மன்னிச்சிடு மா. நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்" என்றார் சுபத்ரா.
ஆனால், அவருடைய வார்த்தைகள், அபிநயாவின் மனதில் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அவள் சுபத்ராவை ஏறெடுத்து பார்க்கவும் இல்லை. அவர் கூறியதற்கு எந்த பதிலும் கூறவும் இல்லை. அவள் கையில், அந்த வளையல்களை அணிவித்தார் சுபத்ரா.
"இன்னைல இருந்து, நீ எங்க வீட்டு மருமக."
தன் கைகளை உயர்த்தி அந்த வளையல்களை கண்கொட்டாமல் பார்த்த அபிநயாவின் கண்களிலிருந்து சிந்திய கண்ணீர், அந்த வலைகளில் பட்டு தெறித்தது. அது, தருணின் கத்தி குத்து காயத்தை விட, ஆழமாக அஸ்வினின் இதயத்தில் காயத்தை ஏற்படுத்தியது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top