47 நீ தான் அவள்

47 நீ தான் அவள்

"நீங்க வேற ஒரு பெண்ணை காதலிக்கிறது எனக்கு தெரியும். வேற ஒருத்தருக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை அபகரிக்க நான் விரும்பல."

"என்ன்ன்ன?"

"ஆமாம், தருண் பாட்டிகிட்ட அதை பத்தி  சொல்லிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன்"

"உனக்கு தருணை பத்தி தெரியாதா? நீ அவனை நம்புறியா?"

"நான் நிச்சயமா நம்பியிருக்க மாட்டேன்... ஆனா, மனோஜும், அருணும் கூட, தருண் அவங்ககிட்ட கேட்டப்போ, அதை ஒத்துக்கிட்டாங்க."

"மனோஜும், அருணும் ஒத்துக்கிட்டாங்களா?" என்றான் நம்ப முடியாமல்.

ஆமாம் என்று தலையசைத்தாள். தன் கண்களை சுழற்றினான் அஸ்வின். அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, அப்படி என்ன தான் நடந்திருக்க கூடும் என்று. ஆனால், ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. அந்த இரண்டு மடையர்களும் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை.

"நேரடியா நீ அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் இதைப் பத்தி கேட்கலயா?"

"எதுக்காக கேட்கணும்? எனக்கு தான் ஏற்கனவே எல்லாம் தெரியுமே...?"

"அப்படி இல்ல, ஒருத்தரோட ஆட்டிடியூட், அவங்க முன்னாடி இருக்கிற ஆளைப் பொறுத்து மாறும். நீ அவங்ககிட்ட நேரடியா கேட்டிருந்தா, அவங்க உண்மையை சொல்லியிருப்பாங்க."

"உண்மையா?"

ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின், தன் கைகளை கட்டிக்கொண்டு.

"ஓகே, ஃபைன்... எதுக்காக குழப்பிக்கணும்...? அருண்கிட்ட கேளு. அவன் வீட்ல தான் இருக்கான். போ... போயி கேட்டு தெரிஞ்சுக்கோ..."

அவன் முகத்தில் இழையோடிய கள்ளப் புன்னகை, அவளை மேலும் குழப்பியது. சரி என்று தலையசைத்துவிட்டு, அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தாள். அருணின் அறைக்குள் புயலைப் போல் நுழைந்தாள் அபிநயா. அவள் அப்படி உள்ளே நுழைந்ததை பார்த்து,

"என்னங்க அண்ணி...? ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

"முதல்ல, நீங்க என்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன், உண்மையை மட்டும் தான் சொல்லுவேன்னு சத்தியம் பண்ணுங்க"

"கண்டிப்பா நான் உண்மையை சொல்றேன். ஆனா, எந்த உண்மையை பத்தி நீங்க கேக்குறீங்க?"

"அஸ்வினுடைய கேர்ள் ஃபிரண்ட்டை பத்தின உண்மை..."

அருணுடைய கண்கள் அபிநயாவின் முகத்தில் வேரூன்றி நின்றது. அஸ்வினுடைய கேர்ள் ஃபிரண்டா? அப்படி என்றால், அபிநயாவுக்கு அஸ்வின் அவளை  காதலிப்பது பற்றி தெரியாதா? டேம்மிட்... இந்த ஆவினை என்ன செய்தால் தகும்...? எப்படி அவன் அபிநயாவிடம் எதையும் சொல்லாமல் இருக்கிறான்...?

"சொல்லுங்க அண்ணி, நீங்க என்ன தெரிஞ்சுக்கணும்?"

"எங்க கல்யாணத்துக்கு முன்னாடி, அஸ்வின் ஒரு பொண்ணை காதலிச்சது உண்மை தானே...?"

"ஆமாம். உண்மை தான்" என்றான், முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல்.

ஆனால், அபிநயாவின் முகம் வெளிறிப் போனது. பொங்கி வந்த கண்ணீரை, தன் உதடு கடித்து அடக்கிக் கொண்டாள்.

"யாரு.... யாரு அந்த பொண்ணு?"

"இந்த கேள்வியை நீங்க ஆவின்கிட்டயே கேட்கலாமே?" என்றான் சர்வ சகஜமாக.

"அவர் ஒத்துக்க மாட்டேங்கிறார். இந்த குடும்பத்துக்காக, எங்க உறவை மேம்படுத்த நினைக்கிறார். அவர் காதலை மறக்க அவர் தயாராயிட்டார்."

"அவனுடைய காதலை, அவன் மறந்துட்டான்னு உங்களுக்கு யார் சொன்னது?" என்றான் தன் தோள்களில் குலுக்கியபடி.

"நீங்க என்ன சொல்றீங்க?"

"இன்னும் அவங்களை அவன் காதலிச்சிகிட்டு தான் இருக்கான்... ரொம்ப ரொம்ப அதிகமா..."

"நீங்க... நீங்க சொல்றது உண்மையா...?" தடுமாறினாள் அவள்.

"ஆமாம், அவங்களுடைய போட்டோவை கூட, அவன் மொபைல் கேலரில வச்சிருக்கான்."

"நிஜமாவா?"

"ஆமாம். அவனுடைய காதலை அவன் ஒத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. அவன் ஃபோன்ல இருக்கிற அவங்களுடைய போட்டோ தான் அவனுடைய காதலுக்கு ஆதாரம்."

அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என்ற அபிநயாவின் ஆர்வம் அதிகமானது. அவளுடைய அஸ்வினின் இதயத்தை கொள்ளை கொண்ட அந்த பெண், எப்படித் தான் இருக்கிறாள் என்று பார்த்துவிட வேண்டும். அங்கிருந்து வெளியேற எண்ணி அவள் திரும்ப,

"அவங்களோட ஆவின் சந்தோஷமா வாழணும்ங்கிறது தான் என்னுடைய விருப்பம்" என்றான் அருண்.

அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள் அபிநயா. *அந்தப் பெண்* அஸ்வினுடன் வாழ வேண்டும் என்று அருண் எண்ணுகிறான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவனுக்கு, உண்மையிலேயே இந்த விஷயத்தின் தீவிரம் புரிந்து தான் இருக்கிறதா?  அந்த பெண் அஸ்வினுடன் வாழ்ந்தால், அபிநயா அஸ்வினின் வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்பது அவனுக்கு புரியவில்லையா?

தன் கண்ணில் வழிந்த கண்ணீரை கட்டுப்படுத்த இயலாமல், ஏமாற்றத்துடன் தன் அறையை நோக்கி ஓடினாள், அருண் புன்னகையுடன் நின்றிருந்ததை கவனிக்காமல்.

அபிநயாவால் படாரென்று திறக்கபட்ட கதவு, அஸ்வினின் கவனத்தை ஈர்த்தது. அவன் நீச்சல் குளத்தின் அருகில் நின்று, நீரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அபிநயாவின் முகத்தைப் பார்த்தவுடனேயே அவனுக்கு புரிந்து போனது, அருண் அவளிடம் உண்மையை கூற வில்லை என்பது. அவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது.

தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான், அருண் ஆடிய நாடகம் என்னவென்பதை அறிந்து கொள்ள.

"அருண் என்ன சொன்னான்?" என்றான்.

அவன் முகத்தைப் பார்க்காமல், எங்கோ பார்த்தபடி,

"உங்க ஃபோனை கொடுங்க" என்றாள் உரிமையுடன்.

"ஏன்?"

"அதுல நான் முக்கியமான ஒன்ன பாக்கணும்"

அஸ்வினுக்கு புரிந்து போனது, அருண் என்ன கூறி அவளை அனுப்பியிருக்கிறான் என்று.

"என்னோட ஃபோன்ல ஏதாவது பாக்கணும்னா, நீ என்னோட வைஃப் அப்படிங்கிறதை ஒத்துக்கணும். சும்மாவே எப்படி நான் என்னுடைய ஃபோனை உன்கிட்ட கொடுக்க முடியும்?"

"நம்ம அதப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்"

"நீ என்னை புருஷன்னு ஏத்துக்காம, நான் என் ஃபோனை கொடுக்க மாட்டேன்"

"எதுக்காக இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க அஸ்வின்?"

"ஏன்னா, நான் அஸ்வின்..."

"சரி உங்க ஃபோனை நீங்களே வச்சுக்கோங்க"

அங்கிருந்து செல்ல அவள் ஒரு அடி எடுத்து வைத்தாள். அஸ்வின் அவள் வழியை மறித்து நின்றான்.

"இவ்வளவு கோவம் நல்லதில்ல. அது உன்னுடைய லிவரை பாதிக்கும். அதனால, கூலா இரு."

முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு, வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அபிநயா.

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தன் ஃபோனை எடுத்து, அவளை நோக்கி நீட்டினான்.

"இந்தா... என்னை பத்தி நீ என்ன நினைக்கிறாயோ... ஆனா, என்னைப் பொறுத்தவரை நீ என்னுடைய வைஃப்."

அவள் கையை பிடித்து, அவன் ஃபோனை வைத்தான் சந்தோஷமாக. அவனுடைய காத்திருத்தல் முடிவிற்கு வந்துவிட்டதல்லாவா...

அவசர அவசரமாய், அவனுடைய கேலரியில் தேடத் தொடங்கினாள். புன்னகை மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டு அமைதியாய் நின்றான் அஸ்வின்.

ஒவ்வொரு புகைப்படமாக தள்ளிக் கொண்டே வந்தாள் அபிநயா. அவளுடைய கை அசையாமல் நின்றது, ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை பார்த்த பொழுது. அவள் அஸ்வின் தோளில் சாய்ந்து கொண்டிருந்த அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கு நிச்சயமாகத் தெரியும், அது அவர்களின் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. இது எப்பொழுது நடந்தது? குழப்பத்துடன் அஸ்வினை ஏறிட்டு பார்த்தாள். அப்பொழுது அவளுக்கு நினைவுக்கு வந்தது, அவள் அணிந்திருந்த அந்த உடை, அவள் தருணை கத்தியால் குத்திய அன்று அவள் அணிந்திருந்தது. அதன் பிறகு அந்த உடையை அவள் அணியவே இல்லை.

"நீங்க தான் என்னை ஹாஸ்பிடல்ல சேத்திங்களா?"  என்றாள் நம்ப முடியாமல்.

ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின்.

"ஆனா, அதைப் பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லயே?"

"உங்கிட்ட சொல்றதுக்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்ல"

அவள் மறுபடியும் ஒவ்வொரு புகைப்படமாக தேடத் தொடங்கிய போது அவனுக்கு வியப்பாக இருந்தது. அப்படி என்றால், அவள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. அவள் உண்மையிலேயே மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறாள் போல தெரிகிறது. அதனால் தான், அவளுடைய மூளை ஒழுங்காக வேலை செய்யவில்லை. அவனுடைய ஃபோனில், எந்த ஒரு பெண்ணின் புகைப்படமும் கிடைக்காமல் போகவே, அவள் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு சலிப்புடன் நின்றாள்.

"நீங்க உங்க லவ்வருடைய போட்டோவ டெலிட் பண்ணிட்டீங்களா?"

இல்லை என்று தலையசைத்தான் அஸ்வின். மறுபடியும் தேடத் தொடங்கினாள் அபிநயா... கவனிக்காமல் விட்டு விட்டாளோ...?

மறுபடியும் அவளுடைய புகைப்படத்தை பார்த்த பொழுது, அவள் ஒரு நிமிடம் நின்றாள். அப்போது, அவளுக்கு பொறி தட்டியது. தன் தலையை மெல்ல உயர்த்தி, தன்னை கிண்டலாய் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அஸ்வினை, அதிர்ச்சியாய் பார்த்தாள்.

*அந்தப் பெண் நானா?* என்பதைப் போல, அவனை நோக்கி மெல்ல தலையசைக்க, அவன் ஆம் என்று பதிலுக்கு தலை அசைத்தான்.

அந்தப் பெண் அவள் தானா? அவள் அவ்வளவு அதிர்ஷ்டசாலியா? அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், கன்னத்தில் உருண்டோடியது... அது அஸ்வினின் சிரிப்பை மறையச் செய்தது. அவன், அவள் கண்ணீரை, தன் கட்டை விரலால்  துடைத்து விட்டான்.

"நீ என்ன நினைச்ச? குடும்ப கவுரவத்தை காப்பாத்த, நான் காதலிச்ச பெண்ணை விட்டுட்டேன்னு நெனச்சியா? அந்த ஒரு பொண்ணுக்காக நான் எல்லாத்தையும் விட்டிருக்கேன். அந்தப் பொண்ணு வேற யாரும் இல்ல... நீ தான்."

அடுத்த நொடி, அவன் நெஞ்சில் தஞ்சமடைந்த அபிநயா, ஒவென கதறினாள். அவள் அவனை இறுக்கி பிடித்திருந்த பிடி கூறியது, எந்த அளவிற்கு, அவளுக்கு அவன் வேண்டும் என்பதை. அதே வேகத்துடன் ஆதரவாய் அவளை அணைத்துக் கொண்டான் அஸ்வின்.

"நான், உங்களை விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சேன்... நீங்க எனக்கு கிடைக்க மாட்டீங்கன்னு நெனச்சேன்... நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வாழ மாட்டோம்னு பயந்துட்டேன் அஸ்வின்..." என்றாள் அழுதபடி.

அவள் உணர்வுகளை வெளியில் கொட்டியதை கேட்டு, அசந்து போனான் அஸ்வின். அவளை அணைத்திருந்த தன் பிடியை இறுக்கிக் கொண்டான்.

"பைத்தியம்... அஸ்வினும், அபியும் எப்பவும் ஒன்னா இருக்க பிறந்தவங்க. அதை யாராலையும் மாத்த முடியாது."

"நீங்க என்னை காதலிக்கிறாதா ஏன் சொல்லல?"

"நான் சொல்லல...?"

"ஆனா, நான் நெனச்சேன்..."

"நான் வேற யாரையோ காதலிக்கிறேன்னு... பைத்தியக்காரி"

அவள் நாடியை பிடித்து, அவள் முகத்தை தன்னை நோக்கி உயர்த்தினான் அஸ்வின்.

"உனக்கு ஏதாவது கேட்கணும்னு தோணுச்சுன்னா, அதை நேரடியா என்கிட்ட கேளு. அதை உன் மனசுலேயே போட்டு வச்சு கஷ்டப்படாத"

"ம்ம்ம்"

அந்தக் காட்சியை வெளியிலிருந்து பார்த்த அருண், நிம்மதி பெருமூச்சு விட்டான். அங்கிருந்து சந்தோஷமாய் நகர்ந்து சென்றான்.

"நான் வேற ஒரு பெண்ணை காதலிச்சிருந்தா, என்னை விட்டுட்டு போயிடுவியா?" என்றான் அஸ்வின்.

"மாட்டேன்... நான் எதுக்காக போகணும்? நீங்க என்னோட புருஷன்."

"ஓ..."

"அந்த பொண்ணை கொன்னிருப்பேன். ஞாபகத்தில் வச்சுக்கங்க."

அதை கேட்டு களுக் என்று சிரித்தான் அஸ்வின்.

"என் வைஃப் மேல கையவச்ச, அவ்வளவு தான்..."  என்றான் சிரித்தபடி.

"இது எல்லாமே உங்களால தான். நீங்க முன்னாடியே எல்லாத்தையும் என்கிட்ட சொல்லி இருந்தா, நம்ம  சந்தோஷமாக இருந்திருக்கலாம்."

"அதை வேறொரு விதத்தில் உன்கிட்ட சொல்ல நினைச்சிருந்தேன். ஆனா..."
 
"நான் எவ்வளவு கவலையா இருந்தேன் தெரியுமா?"

"நான் எவ்வளவு கவலையா இருந்தேன் தெரியுமா?" என்று அவள் கேட்ட கேள்வியை அஸ்வினும் கேட்க,

இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். அவளை மீண்டும் அணைத்து கொண்டான் அஸ்வின்.

தொடரும்...
























Bạn đang đọc truyện trên: AzTruyen.Top